வாத்தின் இறகுகள், நபா குமாரின் பட்டறை முழுக்க சிதறிக் கிடக்கிறது. சுத்தமான இறகுகள், அழுக்கான இறகுகள், வெட்டப்பட்ட இற்றகுகள், பல வடிவங்களிலான இறகுகள், வெள்ளை நிறத்தின் பல வண்ண இறகுகள் கிடக்கின்றன. திறந்து கிடக்கும் ஜன்னலின் வழியாக வரும் தென்றல் காற்றில், அந்த இறகுகள் எழும்பி, சற்று சுற்றி கீழே விழுகின்றன.
உலுபெரியாவில் இருக்கும் நபா குமாரின் மூன்று மாடி வீட்டில் நாம் தரைத்தளத்தில் இருக்கிறோம். பட்டறையில் நிரம்பியிருக்கும் காற்றில் கத்திரிக்கோல்கள் வெட்டும் சப்தங்கள் நிரம்பியிருக்கின்றன. இங்குதான் இந்தியாவின் பூப்பந்தாட்ட இறகுப்பந்துகள் செய்யப்படுகின்றன. “வெள்ளை வாத்து இறகுகள், செயற்கை அல்லது மரத்திலான அரைக்கோள மூடியின் அடித்தளங்கள், பசையும் பருத்திநூலும் சேர்ந்த நைலானும்தான் இறகுப்பந்து செய்ய தேவையானவை,” என அவர் விளக்குகிறார், ஒன்றை எடுத்துக் காட்டி.
ஆகஸ்ட் 2023ல் ஒரு திங்கட்கிழமையின் வெயிலான காலை எட்டு மணி அது. ஐந்து வாரம் கழித்து, இந்திய இறகுப் பந்தாட்ட வீரர்கள் தென்கொரிய வீரர்களை 21-18; 21-16 என்ற புள்ளியில் வீழ்த்தி முதல் தங்கக் கோப்பை ஆசிய விளையாட்டுகளில் பெறவிருந்தனர்.
உலுபெரியாவில் கைவினைஞர்களில் செருப்புகளும் சைக்கிள்களும் தயாரிப்பு ஆலைக்கு வெளியே அணிவகுத்திருக்கின்றன. இஸ்திரி போட்ட பழுப்பு சிவப்பு சட்டை மற்றும் காற்சட்டைகளை அணிந்து நபா குமாரும் தயாராக இருக்கிறார்.
“பூப்பந்தாட்ட பந்துகளை 12 வயதாக இருக்கும்போது பானிபன் கிராமத்திலிருக்கும் பட்டறையில் நான் வாத்து இறகுகள் கொண்டு செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் 61 வயது நிறைந்த அவர். இத்துறையில் தன் பணியை அவர் இறகு வடிவமைப்பாளராக தொடங்கினார். கையில் கத்திரிக்கோல் பிடித்து, மூன்று அங்குல நீள இறகுகளை அவர் வடிவமைத்தார். இறகுப்பந்துகளை கைவினைஞர்கள் பந்துகள் எனக் குறிப்பிடுகின்றன்ர.
“ ஜெ.போஸ் அண்ட் கம்பெனிதான் (வங்கத்தில்) முதல் ஆலை. பிர்புர் கிராமத்தில் 1920களில் உருவானது. படிப்படியாக ஜெ.போஸின் பணியாளர்கள் தத்தம் சொந்த ஆலைகளை அவரவர் கிராமங்களில் உருவாக்கினர். அத்தகைய ஓர் ஆலையில்தான் இக்கலையை நான் கற்றுக் கொண்டேன்,” என கூறுகிறார்.
1986ம் ஆண்டில் நபா குமார் சொந்தமாக ஓர் ஆலையை உலுபெரியாவின் பானிபன் கிராமத்திலுள்ள ஹத்தாலாவின் தொடங்கினார். 1997ம் ஆண்டில் தற்போதைய பட்டறை - வீட்டை ஜதுர்பெரியா பகுதியில் கட்டி குடியெறினார். இங்கு அவர் உற்பத்தியை மேற்பார்வை செய்து மூலப்பொருட்களை கையாண்டு விற்பனையையும் ஒருங்கிணைக்கிறார். இறகுகளை வகைப்படுத்தும் பணியை அவரே செய்கிறார்.
பானிபன் ஜக்தீஷ்பூர், பிருந்தாபன்பூர், உத்தர் பிர்புர் மற்றும் பானிபன் மற்றும் உலுபெரியா நகராட்சி மற்றும் ஹவுரா மாவட்டத்தின் வளர்ச்சி எட்டாத பகுதிகளிலும் (கணக்கெடுப்பு 2011) தயாரிக்கப்படும் மூன்று முக்கியமான பொருட்களில் ஒன்று இறகுப் பந்துகள் ஆகும்.
“2000மாம் வருடங்களில் உலுபெரியாவில் கிட்டத்தட்ட 100 ஆலைகள் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 50 மட்டும்தான் இருக்கின்றன. அதிலும் 10 என்னுடைய பட்டறை போன்றவை. ஒவ்வொன்றும் 10-12 கைவினைஞர்களுடன் இயங்கும்,” என்கிறார் நபா குமார்.
*****
நபா குமாரின் பட்டறைக்கு முன் ஒரு சிமெண்ட் வெளி இருக்கிறது. ஒரு கைக்குழாய், மண் அடுப்பு, இரண்டு பானைகள் அங்கு இருக்கின்றன. “இறகுப் பந்து தயாரிப்பின் முதல் கட்டமான இறகுகளை கழுவுதல் இங்குதான் நடக்கும்,” என்கிறார் அவர்.
இங்கு பணிபுரியும் கைவினைஞரான ரஞ்சித் மண்டல், 10,000 வாத்து இறகுகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார். 32 வயதாகும் அவர், “வடக்கு வங்காளத்தின் கூச் பெஹார், முர்ஷிதாபாத் மற்றும் மாய்தா ஆகிய இடங்களில்தான் இறகுகள் விற்குமிடங்கள் இருக்கின்றன. உள்ளூரிலும் சிலர் இருக்கின்றனர். ஆனால் விலை மிகவும் அதிகம்,” என்கிறார். 15 வருடங்களாக பணிபுரியும் அவர்தான் உற்பத்திக்கான சூப்பர்வைசர்.
1,000 இறகுகள் கொண்ட கட்டுகளாக விற்கப்படும் அவற்றின் விலை தரத்தை சார்ந்து மாறுகிறது. “சிறந்த இறகுகளின் இன்றைய விலை ரூ.1,200. அதாவது ஓர் இறகு ஒரு ரூபாய் இருபது பைசா,” என்னும் ரஞ்சித், ஒரு கை இறகுகளை கழுவவென ஒரு பானை சுடுநீரில் நனைத்து எடுத்தபடி.
சர்ஃப் எக்செல் தூளை அவர் நடுத்தர அளவுள்ள பானை நீரில் கலக்கி, விறகடுப்பில் சுட வைக்கிறார். “இறகுப்பந்தில் இருக்கும் இறகுகள் அப்பழுக்கற்ற வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். சோப் கலந்த சுடுநீரில் கழுவுகையில் அவற்றின் அழுக்கு போய்விடும்,” என்கிறார் அவர். “அதிக நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க முடியாது. கெட்டுப் போய்விடும்.”
இறகுகளை சுத்தப்படுத்தி விட்டு, ஒவ்வொரு கத்தையையும் ஒரு மூங்கில் கூடையில் வைக்கிறார். அதிலிருந்து சோப்பு நீர் வடிந்ததும் மீண்டும் அலசி, இன்னொரு பானையில் போடுவார். “கழுவும் பணிக்கு மட்டும் இரண்டு மணி நேரங்கள் ஆகும்,” என்னும் ரஞ்சித் 10,000 இறகுகளை காய வைக்க மொட்டை மாடிக்கு எடுத்து செல்கிறார்.
“பெரும்பாலான இறகுகள், கறிக்காக வெட்டப்படும் வாத்துகளிலிருந்தும் வாத்து பண்ணைகளிலிருந்தும் வருகின்றன. ஆனால் பல கிராமப்புறக் குடும்பங்கள், அவர்கள் வளர்க்கும் வாத்துகளிலிருந்து இயற்கையாக உதிரும் இறகுகளை சேகரித்தும் வணிகர்களிடம் விற்கின்றனர்,” என்கிறார் அவர்.
மொட்டை மாடியில் ஒரு கறுப்பு சதுர தார்ப்பாயை விரித்து, பறந்துவிடாமலிருக்க மூலைகளில் கற்கள் வைக்கிறார் ரஞ்சித். இறகுகளை பரப்பி வைத்து, ”வெயில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு மணி நேரத்தில் இறகுகள் காய்ந்து விடும். அதற்குப் பிறகு, பந்துகள் செய்யும் வேலை தொடங்கலாம்,” என்கிறார்.
இறகுகள் காய்ந்ததும் தனித்தனியாக ஆராயப்படுகின்றன. “ஒன்றிலிருந்து ஆறு வரையிலான தரங்களில் வாத்தின் இறகுகளை - வலது அல்லது இடது - எந்த சிறகிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை பொறுத்து அடுக்கி வைப்போம். ஒரு சிறகின் ஐந்தாறு இறகுகள் மட்டும்தான் எங்களுக்கு தேவைப்படும்,” என்கிறார் ரஞ்சித்.
“ஓர் இறகுப்பந்து செய்ய 16 இறகுகள் தேவை. அவை எல்லாமும் ஒரே சிறகிலிருந்துதான் எடுக்கப்பட வேண்டும். ஒரே வகையான அடர்த்தியும் வலிமையும் வளைவும் இரு பக்கங்களிலும் இருக்க வேண்டும்,” என்கிறார் நபா குமார். “இல்லையெனில் காற்றில் சிதறி விடும்.”
“ஒன்றும் தெரியாத சிறகுகளும் ஒன்றாகதான் தோன்றும். ஆனால் நாங்கள் தொட்டுப் பார்த்தே கண்டுபிடித்து விடுவோம்,” என்கிறார் அவர்.
இங்கு தயாரிக்கப்படும் இறகுப்பந்துகள் அதிகமாக கொல்கத்தாவின் உள்ளூர் பூப்பந்தாட்ட க்ளப்களிலும் மேற்கு வங்கம், மிசோரம், நாகாலாந்து, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கும் விற்கப்படுகிறது. “உயர் மட்ட விளையாட்டு பந்தயங்களுக்கு, வாத்துகளின் இறகுகளை பயன்படுத்தும் ஜப்பானிய நிறுவனம் யோனெக்ஸ், மொத்த சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியா இறகுப்பந்துகளை சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தைவான், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்கிறது. ஏப்ரல் 2019ம் ஆண்டிலிருந்து மார்ச் 2021 வரை, 122 கோடி ரூபாய் மதிப்பிலான இறகுப்பந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக ஒன்றிய அரசின் வணிக தரவுகள் மற்றும் புள்ளியியல் இயக்குநரக அறிக்கை சொல்கிறது. “இது உள்ளரங்கு விளையாட்டு என்பதால் குளிர்கால மாதங்களில் தேவை அதிகமாகும்,” என்கிறார் நபா குமார். அவரது ஆலையில், வருடம் முழுக்க உற்பத்தி நடக்கும். செப்டம்பர் மாதத்திலிருந்து அது கணிசமாக உயரத் தொடங்கும்.
*****
கால் மீது கால் போட்டு, கம்பளம் போட்ட தரையில் இரு அறைகளில் கைவினைஞர்கள் குனிந்தமர்ந்து வேலையில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இயங்கும் விரல்களும் பார்வையும் இறகுப்பந்தாவதற்காக பல கட்டங்களாக வைக்கப்பட்டிருக்கும் இறகுகள், பறக்கும்படி அடிக்கும் தென்றல் காற்று நுழையும்போதுதான் திசைதிரும்புகிறது.
ஒவ்வொரு நாள் காலையும் நபா குமாரின் மனைவியான 51 வயது கிருஷ்ணா மைதி, காலை பிரார்த்தனை செய்கையில் கீழே பட்டறைக்கு வருவார். சத்தம் குறைவாக உச்சரித்தபடி, அவர் ஊதுபத்தியை வெவ்வேறு இடங்களில் சுற்றிக் காட்டியபடி இரு அறைகளுக்குள்ளும் சென்று, காலை காற்றை நறுமணத்தில் நிரப்புவார்.
அறையில் பணியை 63 வயது ஷங்கர் பெரா தொடங்குவார். ஒரு வருடமாக அங்கு அவர் வேலை பார்த்து வருகிறார். ஒரு நேரத்தில் ஓர் இறகை எடுத்து மூன்று அங்குல இடைவெளியில் இணைக்கப்பட்ட கத்திரிக்கோல் இடையில் வைப்பார். “ஆறிலிருந்து பத்து அங்குலம் இருக்கும் இறகுகள் ஒரே நீளத்துக்கு வெட்டப்படும்,” என்கிறார் அவர்.
“சிறகின் நடுப்பகுதிதான் வலிமையான பகுதி. அது வெட்டப்பட்டு 16 பகுதிகளாக்கிதான் இறகுப் பந்து செய்யப்படுகிறது,” என விளக்குகிறார் ஷங்கர். அவர் வெட்டி சிறு பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்க, அவை அடுத்தக் கட்டமாக நான்கு கைவினைஞர்களிடம் கொடுக்கப்படுகிறது.
35 வயது பிரகலாத் பால், 42 வயது மோண்டு பார்த்தா, 50 வயது பபானி அதிகாரி, 60 வயது லிக்கான் மஜி ஆகியோர் மூன்று அங்குல இறகுகளை வடிவத்துக்கு வெட்டும் பணியை செய்கின்றனர். அவர்கள் இறகுகளை மரத் தட்டில் வைத்து, மடியில் வைத்திருக்கின்றனர்.
“கீழ் பகுதி முற்றிலும் வெட்டப்படும். மேற்பகுதி வளைவாக ஒரு பக்கமும் நேராக மற்ற பக்கமும் வெட்டப்படும்,” என பிரகலாத் இரண்டு கத்திரிக்கோல்களை வைத்துக் கொண்டு விளக்குகிறார். ஒரு இறகை வடிவமைக்க ஆறு விநாடிகள் ஆகிறது. இறகு வெட்டுபவர்களும் வடிவமைப்பவர்களும் ஒவ்வொரு ஆயிரம் இறகுகளுக்கும் ரூ.155 ஊதியம் பெறுகின்றனர். அதாவது ஒரு இறகுப்பந்துக்கு ரூ.2.45.
“இறகுகள் எடையின்றி இருக்கலாம். ஆனால் அவற்றின் மையப்பகுதி உறுதியானவை. ஒவ்வொரு 10-15 நாட்களுக்கும் கூர் படுத்த கத்திரிக்கோல்களை இரும்புக் கொல்லருக்கு அனுப்புவோம்,” என்கிறார் நபா குமார்.
47 வயது சஞ்சிப் போதக், அரைக்கோள மூடியின் அடித்தளங்களில், துளையிடும் கருவி கொண்டு துளையிடுகிறார். மொத்த செயல்முறையிலும் கையால் கருவி இயக்கப்பட்டு செய்யப்படும் வேலை அது மட்டும்தான். கையின் உறுதி மற்றும் பார்வையில் துல்லியம் ஆகியவற்றை சார்ந்து ஒவ்வொரு அடிபாகத்திலும் 16 சம அளவிலான துளைகளை அவர் இடுகிறார். ஒரு மூடிக்கு துளை போட்டு ரூ.3.20 வருமானம் பெறுகிறார்.
“இரு வகை மூடி அடி பாகங்கள் இருக்கின்றன. செயற்கையானவற்றை மீரட் மற்றும் ஜலந்தரிலிருந்து கிடைக்கப் பெறுகிறோம். இயற்கையானவற்றை சீனாவிலிருந்து பெறுகிறோம்,” என்கிறார் சஞ்சிப். “இயற்கையான மூடி நல்ல தரமான இறகுகளுக்கு பயன்படுத்தப்படும்,” என்கிறார் அவர். தரம் சார்ந்து விலை மாறும். “செயற்கையான மூடி ஒரு ரூபாய் விலை. இயற்கையான மூடி ஐந்து ரூபாய் விலை,” என்கிறார் சஞ்சிப்.
மூடிகளின் அடிபாகங்கள் துளையிடப்பட்ட பிறகு, வடிவமைக்கப்பட்ட இறகுகளுடன் சேர்த்து அவை, மூத்த வல்லுநர்களான 52 வயது தபாஸ் பண்டிட் மற்றும் 60 வயது ஷ்யாம் சுந்தர் கோரோய் ஆகியோருக்கு அனுப்பப்படும். இறகுகளை மூடியின் துளைகளில் செருகும் நுட்பமான பணியை அவர்கள் செய்வார்கள்.
ஒவ்வொரு இறகையும் பிடித்துக் கொண்டு, அதன் அடிப்பாகத்தில் லேசாக பசை தடவி ஒவ்வொரு துளையிலும் செருகுவார்கள். “ஒவ்வொரு இறகு பணியும் அறிவியல்பூர்வமானது. ஏதேனும் ஏதோவொரு கட்டத்தில் தவறானால் கூட, இறகுப் பந்து பறப்பது, சுற்றுவது, திசை ஆகியவை பாதிக்கப்படும்,” என்கிறார் நபா குமார்.
“இறகுகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அடுக்குதலை சிறு இடுக்கி கொண்டு செய்யப்படும்,” என்கிறார் தப்பாஸ், 30 வருடங்கள் அனுபவத்தில் கற்றுக் கொண்ட திறனை செய்து காட்டியபடி. அவர் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோரின் ஊதியம், இறகுப் பந்து பெட்டிகள் நிரப்புவதை பொறுத்து தீர்மானிக்கப்படும். ஒரு பெட்டியில் 10 இறகுப்பந்துகள் இருக்கும். ஒரு பெட்டிக்கு அவர்களுக்கு 15 ரூபாய் கிடைக்கும்.
மூடியில் இறகுகள் ஒட்டப்பட்டதும், இறகுப்பந்துக்கான ஆரம்பக்கட்ட வடிவம் கிடைத்து விடும். பிறகு அவை 42 வயது தராக் கொயாலுக்கு அனுப்பப்பட்டு, மேற்பகுதி நூலால் இணைக்கப்படும். “இந்த நூல் உள்ளூரில் வாங்கியது. நைலானும் பருத்தியும் கலக்கப்படுவதால் அதிக வலிமையை அவை கொண்டிருக்கும்,” என விளக்கும் தராக், பத்து அங்குல நீள நூலை ஒரு பக்கம் கையில் முடிந்தும் மறுபக்கம் மூடி-இறகு ஆகியவற்றில் முடிந்தும் பிடித்திருக்கிறார்.
16 இறகுகளையும் கட்ட 35 விநாடிகள் எடுத்துக் கொள்கிறார். ‘ஒவ்வொரு இறகின் மையப்பகுதியையும் பிடித்துக் கொள்ளும் வகையில் முடிச்சு போடப்பட்டு, மையப்பகுதிகளுக்கு இடையில் இறுக்கமாக நூல் கட்டப்படும்,” என்கிறார் தராக்.
அவரின் முன்னங்கைகள் வேகமாக அசைகின்றன. 16 முடிச்சுகளும் 32 பின்னல்களும் ஒருமுறை மட்டும்தான் தெரிகிறது. இறுதி முடிச்சை தராக் கட்டி, நீட்டிக் கொண்டிருக்கும் நூலை வெட்டுகிறார். ஒவ்வொரு 10 இறகுப்பந்துகளுக்கும் அவர் 11 ரூபாய் வருமானம் பெறுகிறார்.
50 வயது பிரபாஷ் ஷ்யாஷ்மால் ஒவ்வொரு இறகுப் பந்தின் இறகு அடுக்கையும் நூலின் இடத்தையும் இறுதியாக ஒருமுறை பரிசோதிக்கிறார். தேவைப்படும் இடங்களில் சரி செய்துவிட்டு, பெட்டிகளை இறகுப்பந்துகளால் நிரப்பி, சஞ்சிபிடம் கொடுக்கிறார். அவை இறுகுவதற்கான பூச்சையும் நூலின் வலிமை கூட்டும் பூச்சையும் அவர் பூசுகிறார்.
காய்ந்ததும் இறகுப் பந்துகள் பெயரொட்ட தயார். அதுதான் இறுதிக் கட்டம். “2.5 அங்குல நீள நீல நிற பெயர் கொண்ட பட்டையை மூடியின் விளிம்பில் ஒட்டுவோம். வட்ட ஸ்டிக்கர் ஒன்றை இறகுகளின் கீழே ஒட்டுவோம்,” என்கிறார் சஞ்சிப். “பிறகு ஒவ்வொரு இறகுப்பந்தும் தனித்தனியாக எடை பார்க்கப்பட்டு, தன்மைக்கேற்ப பெட்டியில் வைக்கப்படும்,” என்கிறார் அவர்.
*****
“சைனா நெவாலும் பி.வி. சிந்துவும் மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்றிருக்கின்றனர். பூப்பந்தாட்டம் பிரபலமாகி வருகிறது,” என்கிறார் நபா குமார் ஆகஸ்ட் 2023-ல். “ஆனால் உலுபெரியாவில் இளைஞர்கள் இத்தொழிலை கற்றுக் கொண்டால், அவர்களின் எதிர்காலம் விளையாட்டு வீரர்களை போல பாதுகாப்பு கொண்டிருக்குமா என உறுதியாக தெரியவில்லை.”
உலுபெரியா நகராட்சி இறகுப்பந்து உற்பத்தி பகுதியென மேற்கு வங்க அரசாங்கத்தின் குறு, சிறு நடுத்தர தொழில் இயக்குநரகத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நபா குமார், “அதனால் ஒன்றும் மாறிவிட வில்லை. வெறும் பேச்சுக்குதான். நாங்கள்தான் எல்லாவற்றையும் செய்து கொள்கிறோம்,” என்கிறார் அவர்.
ஜனவரி 2020-ல் இறகுப்பந்து துறை கடும் பாதிப்புக்குள்ளானது. ஆயுள் மற்றும் “பொருளாதாரம் மற்றும் சூழலியல் காரணங்கள்” போன்றவற்றை கருத்தில் கொண்டு, செயற்கையான சிந்தடிக் இறகுப்பந்துகளை எல்லா மட்ட விளையாட்டுகளிலும் பயன்படுத்த பூப்பந்தாட்ட உலக சம்மேளனம் அனுமதித்தது . விளைவாக பூப்பந்தாட்ட விதிகளின் 2.1 பிரிவு தற்போது “இறகுப்பந்துகள் இயற்கை மற்றும் செயற்கை பொருட்களில் செய்யலாம்,” எனக் குறிப்பிடுகிறது.
“பிளாஸ்டிக்கோ நைலானோ இறகுடன் போட்டி போட முடியுமா? விளையாட்டுக்கு என்னவாகுமென எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த முடிவு சர்வதேச அளவில் எடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியுமென நினைக்கிறீர்களா? எனக் கேட்கிறார் நபா குமார். சிந்தடிக் பந்துகள் தயாரிக்கும் தொழில்நுட்பமும் திறனும் எங்களிடம் கிடையாது.”
“தற்கால கைவினைஞர்கள் அனைவரும் நடுத்தர வயது கொண்டோராகவும் மூத்தோராகவும்தான் இருக்கிறார்கள். 30க்கும் அதிக வருட அனுபவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மிகக் குறைந்த வருமானமும் நீண்ட நேர உழைப்பும் நிபுணத்துவம் பெற தேவை. புதியவர்களுக்கு அது பெரும் தடை.
“தரமான இறகுகள் கிடைக்க அரசாங்கம் தலையிட்டு விலை நிர்ணயம் செய்யவில்லை என்றாலும் நவீன தொழில்நுட்பம் அளிக்காமலும் இருந்தால், இந்த தொழில்துறை விரைவிலேயே அழிந்து விடும்,” என்கிறார் நபா குமார்.
இக்கட்டுரையாளர் அத்ரிஷ் மைதி இக்கட்டுரைக்கு உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்
இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) மானியப்பணியில் எழுதப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்