“ஹமே பதா நஹி ஹமாரா பேட்டா கைசா மரா, கம்பெனி நே ஹமே பதாயா பி நஹி [எங்கள் மகன் எப்படி இறந்தார் என்றே எங்களுக்கு சரியாக தெரியாது. அவரது கம்பெனியும் எங்களுக்கு எதுவும் சொல்லவே இல்லை],” என்கிறார் நீலம் யாதவ்.

33 வயதான இவர், சோனிபட்டின் ராய் நகரில் தனது வீட்டிற்குள் நின்று பேசுகிறார். பேசும் பொழுது கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்த்துவிடுகிறார். 2007-ல், தான் திருமணமாகி வந்ததிலிருந்து எடுத்து வளர்த்த, இவரது மைத்துனரின் மகன், 27 வயது ராம் கமல், சுமார் ஆறு மாத காலத்திற்கு முன், உள்ளூர் உணவுசார் ரீடெயில் தொழிற்சாலையில் ஏசி பழுதுபார்க்கும் பிரிவில் பணிபுரியும் போது மரணம் அடைந்துள்ளார்.

நீலம், ஜூன் 29, 2023-ஐ, நல்ல வெயில் காயும் நாளாக நினைவுகூறுகிறார். அவரது மூன்று குழந்தைகள் - இரண்டு மகள்கள், ஒரு மகன், மற்றும் அவரது மாமனார் ஷோப்நாத் அனைவரும், பொதுவாக இவர் செய்யும் பருப்பு சாத (பருப்பு சூப் மற்றும் சாதம்) மதிய உணவை அப்போது தான் உண்டு முடித்திருந்தனர். நீலம் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருக்க, ஷோப்நாத் மதிய உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

சுமார் 1 மணியளவில், அழைப்பு மணி ஓசை கேட்டதும், கைகளை துடைத்து விட்டு, ஆடைகளை சரி செய்தவாறே, யார் என்று பார்க்க சென்றார். கைகளில் வண்டியின் சாவிக் கொத்தை வைத்து விளையாடிக்கொண்டே, இரண்டு நீல சீருடை அணிந்த ஆட்கள் நின்று கொண்டிருந்தனர். ஆடைகளை வைத்து அவர்கள் ராம் கமலின் கம்பெனியில் பணிபுரிபவர்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டார். அதில் ஒருவர், “ராமுவிற்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டது, சிவில் மருத்துவமனைக்கு உடனடியாக வரவும்", எனக் கூறியதை நினைவு கூருகிறார் நீலம்.

“அவர் எப்படி இருக்கிறார், பயப்பட ஒன்றுமில்லையே, பேசுகிறாரா என நான் கேட்டதற்கு, இல்லை, பேசவில்லை என்று மட்டும் கூறினார்கள்,” என தழுதழுக்கும் குரலில் நீலம் கூறுகிறார். அவரும், ஷோப்நாத்தும், பொதுப் போக்குவரத்திற்கு காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், வந்திருந்தவர்களின் வண்டியிலேயே கொண்டு விடச் சொல்லி ஏறி சென்றுவிட்டனர். அவர்கள் மருத்துவமனையை அடைய சுமார் 20 நிமிடம் ஆனது.

Left: Six months ago, 27-year-old Ram Kamal lost his life at work in a food retail factory. He worked as a technician in an AC repair unit.
PHOTO • Navya Asopa
Right: Ram's uncle Motilal standing outside their house in Sonipat, Haryana
PHOTO • Navya Asopa

இடது: ஆறு மாதத்திற்கு முன், 27 வயதான ராம் கமல், உணவுசார் ரீடெயில் தொழிற்சாலையில் பணிபுரியும்போது மரணித்துள்ளார். அவர் அங்கு ஏசி பழுதுபார்க்கும் பிரிவில் பணிபுரிந்து வந்திருந்தார். வலது: ராமின் மாமா மோதிலால், ஹரியானா சோனிபட்டில் உள்ள அவர்களின் வீட்டின் வெளியே நிற்கிறார்

Left: The cupboard dedicated for the safekeeping of Ram Kamal’s documents and evidence of the case.
PHOTO • Ashish Kothari
Right: Ram lived with his uncle and aunt at their house in Sonipat since 2003
PHOTO • Navya Asopa

இடது: இந்த வழக்கிற்கான, ராம் கமலின் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களுக்காகவே ஒதுக்கப்பட்ட அலமாரி. வலது: 2003 முதல், ராம் தனது மாமா மற்றும் அத்தையுடன் அவர்களது வீட்டில் தான் வசித்து வந்தார்

நீலத்தின் கணவரும் ராமின் மாமாவுமான மோதிலாலை நீலம் அழைத்தபோது, தனது பணியிடத்தில் அவர் இருந்தார். ரோஹ்தக்கின் சம்சனாவில் கட்டுமானப்பணியில் வேலை செய்து கொண்டிருந்த அவர், 20 கிலோமீட்டர் தூரத்தை, அரை மணி நேரத்தில் தனது ஸ்கூட்டரில் விரைந்து கடந்து வந்தார்.

“அவரை போஸ்ட்மார்ட்டம் பிரிவில் வைத்திருந்தனர்" என்கிறார், 75 வயதான அவரது தாத்தா, ஷோப்நாத். அழுகையை அடக்கிக் கொண்டு, “என்னால் அவரை பார்க்கவே முடியவில்லை. அவரை கருப்பு துணியால் மூடி வைத்திருந்தனர். நான் அவரை அழைத்த வண்ணம் நின்றிருந்தேன்,” என்கிறார் நீலம்.

*****

பெற்றோரான குலாப் மற்றும் ஷீலா யாதவ், தங்களது மகன் ராமை, அவரது அத்தை மற்றும் மாமாவின் வீட்டில் இருக்க அனுப்பி வைத்திருந்தனர். ராமிற்கு 7 வயது இருக்கும்போது, மோதிலால், அவரை உத்தரபிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் உள்ள நிஜாமாபாத் தாலுகாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தார். “நாங்கள் வளர்த்த பிள்ளை அவன்,” என்கிறார் மோதிலால்.

ஜனவரி 2003 முதல், ராம் கமல், அந்த தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவரது மாதச் சம்பளம் 22,000 ரூபாய். தனது சம்பளத்தில் பாதியை, தனது அம்மா, அப்பா, மனைவி மற்றும் தனது எட்டு மாத பெண் குழந்தை நிறைந்த தனது குடும்பத்திற்கு அனுப்பிவிடுவார்.

“அவனது மகள்தான் அவனுக்கு எல்லாம். அவளை இப்போது யார் பார்த்துக்கொள்வார்? அந்த கம்பெனி ஆட்கள் ஒருமுறை கூட அதை பற்றியெல்லாம் விசாரிக்கவே இல்லை,” என்கிறார் ஷோப்நாத். அந்த கம்பெனியின் முதலாளி இன்னும் அந்த குடும்பத்தை வந்து பார்க்கக் கூட இல்லை.

'If this tragedy took place at their home [the employers], what would they have done?' asks Shobhnath, Ram's grandfather.
PHOTO • Navya Asopa
Right: It was two co-workers who informed Neelam about Ram's status
PHOTO • Navya Asopa

‘இப்படி ஒரு நிலை அவர்களின் [முதலாளியின்] குடும்பத்தில் நடந்திருந்தால், இப்படி தான் இருந்திருப்பார்களா என்று கேள்வி எழுப்புகிறார், ராமின் தாத்தா, ஷோப்நாத். வலது: ராமுடன் பணிபுரிந்த இருவர்தான் ராமின் நிலையைப் பற்றி நீலமிடம் கூறினார்கள்

அவர் மரணித்ததற்கு முந்தைய நாள் ராம் வீட்டிற்கு வரவில்லை என்று நீலம் நினைவுகூருகிறார்: “அவருக்கு வேலை அதிகமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் கூட ராம் பணிபுரிந்திருக்கிறார்."  அவரது வேலை நேரம் பற்றி அவரது குடும்பத்திற்கு சரியாக தெரியவில்லை. சில நாட்கள் உணவு கூட உண்ணாமல் சென்று விடுவார். சில நாட்கள், தொழிற்சாலையில் உள்ள கம்பெனியின் குடிலிலேயே உறங்குவார். “எங்கள் மகன், கடுமையான உழைப்பாளி," என பெருமிதச் சிரிப்பை உதிர்க்கிறார் மோதிலால். ஓய்வு நேரத்தில், தனது மகள் காவ்யாவிற்கு வீடியோ கால் செய்து பேசுவது தான் ராமுக்கு  பிடித்த விஷயம்.

கம்பெனியில் ராம், கூலிங் பைப்லைனை பழுது பார்க்கும் பணிபுரிகிறார் என்பதையே சக பணியாளர்கள் கூறிதான் அவரது குடும்பம் அறிந்து கொண்டது. இந்த வேலைக்கான தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது முன்னெச்சரிக்கைகள் ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். ஈரக் கைகளுடன், கால்களில் செருப்பு கூட அணியாமல், அவர் ஏசி-பைப் ஸ்பிரே மற்றும் ப்ளையருடன், பழுதுபார்க்க  சென்றிருக்கிறார்.  கம்பெனியின் மேலாளர் அவரை எச்சரித்திருந்தால் இன்று எங்கள் மகன் உயிரோடு இருந்திருப்பார்," என்கிறார் ராமின் மாமா, மோதிலால்.

ராமின் மரணம் பற்றி அறிந்த அடுத்த நாள், அவரது தந்தை குலாப் யாதவ், இறுதி சடங்கை நிறைவேற்ற சோனிபட் வந்திருந்தார். சில நாட்களுக்கு பிறகு, ஹரியானா ராய் போலீஸ் ஸ்டேஷனில் கம்பெனியின் அலட்சியம் குறித்து புகார் அளிக்க சென்றிருந்தார். ஆனால், அந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சுமித் குமார், ராமின் குடும்பத்தை சமரசம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

“போலீஸ் எங்களை ஒரு இலட்சத்திற்கு [ரூபாய்க்கு] சமரசம் செய்து கொள்ள வலியுறுத்தினர். ஆனால் அது சரி வராது. நீதிமன்றம் தான் இனி முடிவு செய்ய வேண்டும்,” என்கிறார் மோதிலால்.

The police at the station in Rai, Sonipat, asked Ram's family to settle
PHOTO • Navya Asopa

சோனிபட்டின் ராய் நகரில் உள்ள போலீஸ், ராமின் குடும்பத்தை சமரசம் செய்து கொள்ள வலியுறுத்தியுள்ளனர்

கடந்த இருபது வருடங்களில், தொழில்துறை மையமாக மாறியுள்ள சோனிபட்டில், தொழிலாளர்களின் மரணங்கள் பொதுவானதாக மாறிவிட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும்  தொழிலாளர்களில் பெரும்பாலானோர் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் டெல்லியில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்

போலீஸார் தன்னை விரட்டியடிப்பதாக உணர்ந்த மோதிலால், சம்பவம் நடந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தார். ராய் நகரின் தொழிலாளர் நீதிமன்றத்தில், ராமின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சந்தீப் தஹியா, காகிதப்பணிக்கு மட்டுமே ரூ.10,000 வசூலிக்கிறார். மாத வருமானமாக சுமார் ரூ. 35,000 மட்டும் பெறும் ஒரு குடும்பத்திற்கு, இது மிகப்பெரிய தொகை. "ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. நீதிமன்றத்தில் இன்னும் எத்தனை நாட்கள் போராட வேண்டியிருக்கும் என்று கூட எங்களுக்குத் தெரியாது," என்று தற்போது குடும்பச் செலவுகளை தனி ஆளாக சமாளிக்கும் நிலையில் உள்ள மோதிலால் கூறுகிறார்.

வீட்டிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள தொழிற்சாலைக்கு தினமும் ராம் பயணிக்க உபயோகப்படுத்திய ஸ்கூட்டியை மீட்கக்கூட போலீஸ் அதிகாரிகள் குலாப் மற்றும் மோதிலாலுக்கு உதவவில்லை. பைக்கைக் கேட்பதற்காக நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன், மோதிலால் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டார். ஆனால், அவர்கள் நேரடியாக, கம்பெனியின் தள மேற்பார்வையாளரிடம் நேரடியாகப் பேச அறிவுறுத்தினார். ஆனால், மேற்பார்வையாளர், மோதிலாலுக்கு செவி கொடுக்கவில்லை: “பைக்கை கேட்க சென்றபோது, நாங்கள் ஏன் சமரசம் செய்து கொள்ளவில்லை? ஏன் வழக்கு பதிவு செய்தோம் என்று கேட்டார்.”

மோதிலாலுக்கும், ராமின் கம்பெனி அடையாள அட்டை எங்கே என்று தெரியவில்லை. “எஃப்ஐஆரில் ஒப்பந்தத் தொழிலாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது சம்பளம், நேரடியாக நிறுவனம் மூலமே வழங்கப்பட்டது. அவருக்கு ஒரு அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் அதையும் எங்களிடம் ஒப்படைக்கவில்லை,” என்கிறார். அந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் இன்னும் அந்த கம்பெனி கொடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“இது அவனின் அலட்சியத்தால் தான் ஆனது. அவன் ஏற்கனவே ஒரு ஏசியை சர்வீஸ் செய்து முடித்திருந்தான்... அவனது கைகளும் கால்களும் ஈரமாக இருந்தது. அதனால் தான் கரண்ட் ஷாக்  அடித்தது,” எனும் மேற்பார்வையாளர், தனக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை என மறுக்கிறார்.

Left: Ram Kamal’s postmortem report states the entry wound was found on his left finger, but the family are skeptical about the findings.
PHOTO • Navya Asopa
Right: Article about Ram's death in Amar Ujala newpaper
PHOTO • Navya Asopa

இடது: ராம் கமலின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அவரது இடது விரலில் அடிபட்ட காயம் உள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் அது குறித்தும் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வலது: அமர் உஜாலா பத்திரிகையில், ராமின் மரணம் பற்றிய கட்டுரை

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், கமலின் இடது சுண்டு விரலின் பின்புறத்தில் ஷாக் அடித்த காயம் உள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. ஆனால், ராமுக்கு வலது கை பழக்கம் தான் என்பதால், அவரது குடும்பம், இதை நம்ப மறுக்கிறது. “ஷாக் அடித்தால், தீக்காயங்களினால் முகம் கறுத்துவிடும். ஆனால் ராமின் முகம் மிகவும் தெளிவாக இருந்தது,” என்று நீலம் கூறுகிறார்.

கடந்த இருபது வருடங்களில், தொழில்துறை மையமாக மாறியுள்ள சோனிபட்டில், தொழிலாளர்களின் மரணங்கள் இயல்பானதாக மாறிவிட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும்  தொழிலாளர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியில் (சென்சஸ் 2011) இருந்து புலம்பெயர்ந்தவர்கள். போலீஸார் கூறுகையில், மாதத்திற்கு குறைந்தது 5 தொழிலாளர்களாவது தொழிற்சாலைகளில் காயமடைகின்றனர் என்கின்றனர். “தொழிலாளர்கள் காயமடையும் போது, பெரும்பாலான நேரங்களில், அத்தகைய சம்பவம் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வருவதில்லை. அவர்களாகவே சமரசம் ஆகிவிடுகின்றனர்," என போலீஸார் கூறுகின்றனர்.

ராமின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், இழப்பீடு குறித்த முறையான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது என்கிறார் தஹியா. “எத்தனையோ மரணங்கள் நிகழ்கின்றன. அதற்கெல்லாம் யார் பதில் கூறுவது? இது ஐபிசி 304 சம்பந்தமான வழக்கு, ராமின் மகளுக்காக நான் இந்த வழக்கில் போராடுவேன்," என்கிறார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 304வது பிரிவு, "கொலைக்கு சமமான ஆனால் கொலை அல்லாத" வழக்குகளைக் கையாள்கிறது.

நிதிநிலையிலும், உணர்வு ரீதியாகவும் துவண்டு பின் தங்கியிருந்தாலும், ராமின் குடும்பம் இந்த வழக்கில் இருந்து பின் வாங்க மறுக்கிறது. ‘இப்படி ஒரு நிலை அவர்களின் [முதலாளியின்] குடும்பத்தில் நடந்திருந்தால், அவர்கள் இப்படித் தான் இருந்திருப்பார்களா? நாங்கள் செய்வதைத் தானே செய்திருப்பார்கள்,” என்று கேள்வி எழுப்புகிறார், ஷோப்நாத். “ஜோ கயா வோ தோ வாபஸ் நஹி ஆயேகா. பர் பைசா சாஹே கம் தே, ஹமே ந்யாய் மில்னா சாஹியே [போனவன் திரும்ப வரப் போறதில்லை. எங்களுக்கு பணம் ஏதும் பெருசா கிடைக்கலைன்னாலும், நீதி கிடைக்கணும்].”

தமிழில்: அஹமத் ஷ்யாம்

Student Reporter : Navya Asopa

نویہ آسوپا، سونی پت کی اشوک یونیورسٹی میں پولٹیکل سائنس اور میڈیا اسٹڈیز میں گریجویشن کے تیسرے سال کی طالبہ ہیں۔ وہ صحافی بننا چاہتی ہیں اور ہندوستان میں ترقی، مہاجرت اور سیاست سے متعلق موضوعات پر کام کرنے کی خواہش مند ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Navya Asopa
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

کے ذریعہ دیگر اسٹوریز Ahamed Shyam