97 வயது ஆனாலும் லோக்கிகாந்தோ மஹாதோவுக்கு கணீரென்ற, அதிர்வுகளுடன் கூடிய குரல். அழகான தோற்றம் கொண்ட அவரின் முகம் பார்ப்பதற்கு ரபீந்திரநாத் தாகூரை நினைவுபடுத்தும்.
மார்ச் 2022-ல் நாம் லோக்கியை சந்தித்தபோது, மேற்கு வங்கத்தின் பிர்ரா கிராமத்திலுள்ள ஓரறை வீடு ஒன்றில், படுக்கையிலிருந்த அன்பு நண்பர் தெலு மஹாதோவுக்கு அருகே அவர் அமர்ந்திருந்தார்.
தெலுவுக்கு அப்போது 103 வயது. 2023ம் ஆண்டில் அவர் மறைந்தார். வாசிக்க: தெலு மஹாதோ உருவாக்கிய கிணறு
அப்பகுதியின் கடைசி சுதந்திரப் போராட்ட வீரர்களில் தெலு தாதுவும் (தாத்தா) ஒருவர். எண்பது வருடங்களுக்கு முன் புருலியா மாவட்ட காவல் நிலையத்தை நோக்கி பேரணி சென்றார். அது 1942ம் ஆண்டில் நடந்தது. அவரின் எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பகுதியாக உள்ளூரில் நடத்தப்படது.
இளைய லோக்கி காவல்நிலைய சம்பவங்களில் பங்குபெறவில்லை. ஏனெனில் அப்போராட்டத்தில் பங்கேற்க தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட 17 வயதுக்கும் குறைவான வயதில் அவர் அப்போது இருந்தார்.
தெலுவோ லோக்கியோ வழக்கமான சுதந்திரப் போராட்ட வீரர் ரகமில்லை. நிச்சயமாக அரசோ மேட்டுக்குடியினரோ நிர்ணயித்த ரகத்தில் அவர்கள் இல்லை. போலவே எண்ணிக்கைக்காக போராட்டங்களில் சென்று பங்கேற்கும் ஒற்றைத்தன்மை ஆட்களும் அவர்கள் இல்லை. இருவரும் அவர்களின் களத்தில் அறிவார்ந்து பேசுகின்றனர். விவசாயம் மற்றும் அப்பகுதியின் வரலாறு குறித்து தெலுவும் இசை மற்றும் பண்பாடு பற்றி லோக்கியும் பேசுகின்றனர்.
லோக்கி அதிகமாக பண்பாட்டு எதிர்ப்பின் பக்கத்தில்தான் இருந்தார். தம்சா, மடோல் போன்ற பழங்குடி மேளவகைகளை இசைக்கும் குழுக்களில் அவரிருந்தார். வழக்கமாக சந்தால்கள், குர்மிகள், பிர்ஹோர்கள் மற்றும் பிற பழங்குடி குழுக்கள் இவற்றை பயன்படுத்துவார்கள். எவருக்கும் பாதகம் தராதவையாக தோற்றமளிக்கும் நாட்டுப்புற பாடல்களை லோக்கியின் குழுக்கள் பாடின. ஆனால் அந்த காலப் பின்னணியில் இப்பாடல்கள் வேறொரு அர்த்தத்தை கொண்டன.
”அவ்வப்போது நாங்கள் வந்தே மாதரம் என்றும் கத்தினோம்,” என்கிறார் லோக்கி மேளக்காரர்களும் பாடகர்களும் எப்படி பிரிட்டிஷ் ஆட்சி மீதான எதிர்ப்புணர்வை பரப்பினார்கள் என்பதை குறிப்பிட்டு. அந்த கோஷத்திலோ பாடலிலோ அவர்களுக்கு உண்மையில் பிடித்தம் ஏதுமில்லை. ”ஆனால் அது பிரிட்டிஷை கோபப்படுத்தியது,” எனச் சொல்லி புன்னகைக்கிறார்.
இருவருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியங்கள் கொடுக்கப்படவில்லை. அவற்றை பெறும் முயற்சிகளையும் அவர்கள் ரொம்ப காலத்துக்கு முன்பே நிறுத்திவிட்டார்கள். 1,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியத்தில் தெலு வாழ்கிறார். லோக்கி, அவருக்கான முதியோர் ஓய்வூதியத்தை ஒரு மாதத்துக்கு மட்டும்தான் பெற்றார். அதற்கு பின் மர்மமாக நின்றுவிட்டது.
தெலு மற்றும் லோக்கி போல வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடினார்கள். இவர்கள் இருவரும் விருப்பத்தால் இடதுசாரிகள், இயல்பால் காந்தியவாதிகள். கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்து மிகவும் முன்னதாகவே எதிர்ப்பை பதிவு செய்த குழுக்களில் ஒன்றான குர்மி சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள்.
லோக்கி நமக்காக துசு கானம்பாடுகிறார். இது, துசு அல்லது குர்மிகளின் அறுவடை விழாவுடன் தொடர்பு கொண்டது. துசு ஒரு மதச்சார்பின்மை விழா. மதச்சார்பு கொண்டது அல்ல. இப்பாடல்கள் ஒரு காலத்தில் திருமணம் ஆகாத பெண்களால் பாடப்பட்டன. பிறகு நல்ல ரசிகர்தன்மை உருவானதால் அந்தக் குழுவை தாண்டியும் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. லோக்கி பாடும் பாடல்களில் துசு, இளம் பெண் ஆன்மாவாக பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாடல் , விழாவின் முடிவை குறிப்பதாக இருக்கும்.
টুসু নাকি দক্ষিণ যাবে
খিদা লাগলে খাবে কি?
আনো টুসুর গায়ের গামছা
ঘিয়ের মিঠাই বেঁধে দি।
তোদের ঘরে টুসু ছিল
তেই করি আনাগোনা,
এইবার টুসু চলে গেল
করবি গো দুয়ার মানা।
துசு தெற்கு பக்கம் போகிறது என கேள்விப்பட்டேன்
பசித்தால் அவள் என்ன சாப்பிடுவாள் ?
துசுவின் கம்சாவை* கொண்டு வாருங்கள்
நெய்யாலான சில இனிப்புகளை கட்டிக் கொடுக்கிறேன்.
நான் உன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்
துசு அங்குதான் வசித்தாள்
இப்போது துசு போய்விட்டாள்
உன் வீட்டில் எனக்கு வேலை இல்லை.
*மேல்துண்டு அல்லது தலைப்பாகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பருத்தி துணி. கம்சா என்பது தேவைக்கேற்ப தைத்துக் கொள்ளக் கூடிய துணி
முகப்புப் படம்: ஸ்மிதா காட்டோர்
தமிழில்: ராஜசங்கீதன்