20 வருடங்களுக்கு முன் எடுத்த முடிவால் இப்போது பாதிப்பு ஏற்படும் என பாலாசாகெப் லோந்தே கனவு கூட கண்டிருக்கவில்லை. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள ஃபர்சுங்கி என்கிற சிறு டவுனின் விளிம்புநிலை விவசாயக் குடும்பத்தில் பிறந்த லோந்தே, குடும்பம் பருத்தி விளைவிக்கு சிறு நிலத்தில் இளம்வயதிலிருந்தே வேலை பார்க்கத் தொடங்கினார். 18 வயதானதும் கூடுதல் வருமானத்துக்காக ஒட்டுநர் வேலையும் செய்ய முடிவெடுத்தார்.
“கால்நடைகளை கொண்டு செல்லும் வணிகம் செய்யும் ஓர் இஸ்லாமியர் குடும்பத்துக்கு என்னை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார்,” என்கிறார் 48 வயதாகும் அவர். “ஒட்டுநர்கள் தேவை அவர்களுக்கு இருந்ததால், நானும் அந்த வேலையில் சேர்ந்தேன்.”
வணிகத்தை கவனமாக பயின்று வியாபாரம் செய்யும் இளைஞராக லோந்தே இருந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு, போதுமான அளவுக்கு கற்றுக் கொண்டதாகவும் சேமித்து விட்டதாகவும் லோந்தே கருதினார்.
“பயன்படுத்தப்பட்ட ஒரு ட்ரக்கை 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இன்னொரு 2 லட்சம் மூலதனத்துக்கு இருந்தது,” என்கிறார் அவர். “10 வருடங்களில் சந்தையின் விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன்.”
லோதேவின் பணிக்கு வெற்றி கிடைத்தது. பயிர் விலை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, காலநிலை மாற்றம் போன்றவற்றால் ஐந்து ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போனபோது, அவரின் வியாபாரம்தான் அவரைக் காப்பாற்றியது.
நேரடியான வேலை: கால்நடைகளை விற்க விரும்பும் விவசாயிகளிடமிருந்து அவற்றை வாங்கி, கமிஷனுடன் சேர்த்து கசாப்புக் கடைக்கோ அல்லது பிற விவசாயிகளுக்கோ விற்க வேண்டும். வியாபாரத்தில் பத்தாண்டுகள் இருந்த பிறகு, 2014ம் ஆண்டில் இரண்டாவது ட்ரக் வாங்கினார்.
பெட்ரோல் செலவு, வாகன பராமரிப்பு செலவு, ஓட்டுநர் சம்பளம் ஆகியவற்றை தாண்டி, மாத வருமானம் அச்சமயத்தில் 1 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக லோந்தே கூறுகிறார். இஸ்லாமிய குரேஷி சமூகம் அதிகமாக செய்து கொண்டிருந்த வணிகத்தில் இருக்கும் சில இந்துக்களில் அவரும் ஒருவராக இருந்தார். “தங்களின் தொடர்புகளையும் யோசனைகளையும் அவர்கள் கொடுத்து உதவினார்கள்,” என்கிறார் அவர். “எல்லாம் சரியாக இருப்பதாக நினைத்தேன்.”
ஆனால் 2014ம் ஆண்டி பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் பசு பாதுகாப்பு வன்முறை தீவிரமடையத் தொடங்கியது. பசு பாதுகாப்பு வன்முறை என்பது கும்பல் வன்முறை ஆகும். பசுக்களை பாதுகாப்பதாக சொல்லிக் கொண்டு இந்துக்களல்லாத மக்கள், குறிப்பாக இஸ்லாமியரை, இந்து தேசியவாதிகள் தாக்கும் வன்முறை இது. இந்து மதத்தில் பசு, புனிதமாகக் கருதப்படுகிறது.
2019ம் ஆண்டில், நியூ யார்க்கின் மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம், 2015 மே மாதம் தொடங்கி 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரை, மாட்டுக்கறி சார்ந்த தாக்குதல்கள் 100-க்கும் மேற்பட்ட்டவை இந்தியாவில் நடந்ததாக குறிப்பிடுகிறது. அவற்றில் 280 பேர் காயமுற்றிருக்கின்றனர். 44 பேர் இறந்திருக்கின்றனர். அதில் பெரும்பானமை இஸ்லாமியர்.
2017ம் ஆண்டில் இண்டியாஸ்பெண்ட் என்கிற இணையதளம், 2010ம் ஆண்டிலிருந்து நடந்த பசு குறித்த கும்பல் கொலைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. கொல்லப்பட்டவரில் 86 சதவிகிதம் இஸ்லாமியர் என அது குறிப்பிடுகிறது. 97 சதவிகித தாக்குதல், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, இணையதளம் ஆய்வை கைவிட்டுவிட்டது.
கடந்த மூன்று வருடங்களில், உயிர் பறிக்கும் மிரட்டல்களை உள்ளடக்கிய வன்முறை அதிகரித்து விட்டதாக லோந்தே சொல்கிறார். 1 லட்சம் ரூபாய் வரை மாதத்துக்கு சம்பாதித்த லோந்தேவுக்கு, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 30 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. உயிர் மீதான அச்சமும் அவரின் ஓட்டுநர்களுக்குமான அச்சமும் அவரிடம் இருக்கிறது.
“அது ஒரு கொடுங்கனவு,” என்கிறார் அவர்.
*****
செப்டம்பர் 21, 2023 அன்று 16 எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லோந்தேவின் இரு ட்ரக்குகள் புனே சந்தைக்கு சென்று கொண்டிருந்தன. ‘பசு காவலர்கள்’ என அழைக்கப்படுகிற வன்முறையாளர்கள், ட்ரக்குகளை அரை மணி நேர தூரத்தில் சிறு டவுன் கட்ரஜ் அருகே நிறுத்தினர்.
மகாராஷ்டிராவில் கசாப்புக்கு மாடு வெட்டுவதற்கு 1976ம் ஆண்டிலிருந்து தடை இருக்கிறது. 2015ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த தேவேந்திர ஃபதநாவிஸ் அத்தடையை காளைகளுக்கும் விரிவுபடுத்தினார் . லோந்தேவின் ட்ரக்கில் ஏற்றிச் சென்ற எருமைகளுக்கு தடை கிடையாது.
”எனினும் இரு ஓட்டுநர்களும் தாக்கப்பட்டனர்,” என்கிறார் லோந்தே. “ஒருவர் இந்து, இன்னொருவர் இஸ்லாமியர். சட்டப்பூர்வ அனுமதிகள் எல்லாமும் என்னிடம் இருந்தன. ஆனால் என் ட்ரக்குகள் கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.”
‘கால்நடைகளுடன் ட்ரக் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தான விஷயம். மன அழுத்தத்தை தரவல்லது. இந்த குண்டர் ராஜ்ஜியம் கிராமப்புறத்தை அழித்து விட்டது. சட்ட ஒழுங்கை பாதிப்பவர்கள் மட்டும்தான் நன்றாக வாழ்கிறார்கள்’
புனே காவல்துறை லோந்தே மீதும் இரண்டு ஓட்டுநர்கள் மீதும் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. கால்நடைகள் தீவனமும் நீரும் இன்றி சிறு இடத்துக்குள் நெருக்கியடித்து கொண்டு வரப்பட்டதுதான் வழக்கு. “பசு வன்முறையாளர்கள் ஆவேசத்தை காவல்துறை எதிர்க்கக் கூடவில்லை,” என்கிறார் லோந்தே. “இது அச்சுறுத்தும் உத்தி.”
லோந்தேவின் கால்நடைகள் புனேவின் தாமனே கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, சட்டரீதியிலான வழியை பின்பற்றும்படி அவர் நிர்பந்திக்கப்பட்டார். கிட்டத்தட்ட 6.5 லட்சம் ரூபாய் சிக்கலில் இருந்தது. அவரும் என்னென்னவோ முயன்று பார்த்தார். வழக்கறிஞரிடமும் ஆலோசித்து பார்த்தார்.
இரண்டு மாதங்கள் கழித்து, நவம்பர் 24, 2023 அன்று புனேவின் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கால்நடைகளை பசு வன்முறையாளர்கள் திருப்பிக் கொடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதும் லோந்தே நிம்மதி அடைந்தார். உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் லோந்தேவின் நிம்மதி நீடிக்கவில்லை. உத்தரவு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும், கால்நடைகள் அவருக்குக் கிடைக்கவில்லை.
“நீதிமன்ற உத்தரவு கிடைத்த இரு நாட்களில், என் ட்ரக்குகளை காவல்துறை கொடுத்தது,” என்கிறார் அவர். “ட்ரக்குகள் இல்லாமல், எந்த வேலையையும் நான் அந்த நேரத்தில் பெற முடியவில்லை. ஆனால் அதற்கு பிறகு நடந்த விஷயம் இன்னும் துயரமானது.”
“நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ட்ரக்குகள் கிடைத்தன. அதற்குப் பிறகுதான் கொடுமையான விஷயம் நடந்தது,” என லோந்தே நினைவுகூருகிறார். சாந்த் துகாராம் மகாராஜ் கோசாலைக்கு கால்நடைகளை மீட்கச் சென்றார். கோசாலையின் பொறுப்பாளரான ருபேஷ் கராடே அடுத்த நாள் வரும்பட்சி ஒல்லி அவரை அனுப்பி வைத்தார்.
அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டன. விலங்குகளை பரிசோதிக்கும் மருத்துவர் இல்லை என்றார் கராடே. நாட்கள் ஓடின. பொறுப்பாளர், செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை உத்தரவு பெற்றார். விலங்குகளை கொடுக்காமல் கராடே நேரம் கடத்திக் கொண்டிருந்தது தெரிந்தது என்கிறார் லோந்தே. “அவர் வந்து எதை சொன்னாலும் காவல்துறை ஏற்றுக் கொண்டது. மிகவும் தவறான விஷயம்.”
புனேவிலும் அதை சுற்றி இருக்கும் குரேஷி சமூகத்தினருடன் பேசுகையில், இச்சம்பவம் தனியானதாக தெரியவில்லை. பசு வன்முறையாளர்களின் செயல்பாட்டு முறையே இதுவாகத்தான் இருந்தது. பல வணிகர்களுக்கு இது போன்ற இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அக்கறையின் பேரில் மாடுகளை பிடிப்பதாக பசு வன்முறையாளர்கள் சொன்னாலும் குரேஷி சமூகத்துக்கு சந்தேகம்தான்.
“இந்த பசு வன்முறையாளர்கள் உள்ளபடியே மாடுகள் மீது அக்கறை கொண்டிருந்தார்கள் எனில், ஏன் விவசாயிகளை இலக்காக்குவதில்லை?” எனக் கேட்கிறார் புனேவின் வணிகரான 52 வயது சமீர் குரேஷி. “அவர்கள்தான் விற்கிறார்கள். நாங்கள் அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்பவர்கள் மட்டும்தான். இதன் உண்மையான நோக்கம் இஸ்லாமியர்களை ஒடுக்குவதுதான்.”
ஆகஸ்ட் 2023-ல் சமீருக்கும் இதே போன்ற அனுபவம் நேர்ந்தது. அவரின் ட்ரக் தடுத்து நிறுத்தப்பட்டது. ஒரு மாதத்துக்கு பிறகு, புரந்தர் தாலுகாவின் செந்தேவாடி கிராமத்தில் இருக்கும் கோசாலைக்கு, வாகனத்தை மீட்பதற்கான நீதிமன்ற உத்தரவுடன் சென்றார்.
“அந்த இடத்தை அடைந்ததும் என் கால்நடை எதுவும் காணவில்லை,” என்கிறார் சமீர். “1.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து எருமைகளும் 11 கன்றுகளும் எனக்கு இருந்தன.”
4-லிருந்து 11 மணி வரை, ஏழு மணி நேரங்களாக யாரேனும் வந்து மாடுகள் காணாமல் போனதன் காரணத்தை விளக்க சமீர் பொறுமையாக காத்திருந்தார். இறுதியில், அடுத்த நாள் வரும்படி காவல் அதிகாரி அறிவுறுத்தினார். “காவல்துறை அவர்களை கேள்வி கேட்க அஞ்சியது,” என்கிறார் சமீர். “அடுத்த நாள் நான் சென்றதும், பசு வன்முறையாளர்கள் தடை உத்தரவு வாங்கி வைத்திருந்தனர்.”
கால்நடைகளின் மதிப்பையும் தாண்டி செலவழிக்க வேண்டி வந்ததால் சமீர் நீதிமன்ற வழக்கை கைவிட்டார். மன அழுத்தத்தையும் அவர் தாள முடியவில்லை. “ஆனாலும் கால்நடைகளை பிடித்துச் சென்ற பிறகு அவர்கள் அவற்றை என்ன செய்கிறார்களென தெரிந்து கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர். “என் மாடுகள் எங்கே? இதை நான் மட்டும் உணரவில்லை. என்னுடன் பணிபுரியும் பலருடைய கால்நடைகளும் பசு வன்முறையாளர்கள் எடுத்துச் சென்ற பிறகு காணாமல் போயிருக்கின்றன. அவற்றை அவர்கள் விற்கிறார்களா? இப்படியொரு வேலை நடக்கிறதா?”
மிகக் குறைந்த தருணங்களில் பசு வன்முறையாளர்கள் கால்நடைகளை கொடுத்திருப்பதாக வணிகர்கள் சொல்கின்றனர். வழக்கு நடக்கும் காலத்தில் கால்நடைகளை பார்த்துக் கொண்டதற்கு நிவாரணமாக ஒரு தொகையை அவர்கள் கேட்பார்கள். புனேவை சேர்ந்த இன்னொரு வணிகரான 28 வயது ஷாநவாஸ் குரேஷி, நாளொன்றுக்கு ஒரு விலங்குக்கு பசு வன்முறையாளர்கள் ரூ.50 கேட்டதாக சொல்கிறார். “அதாவது, சில மாதங்களுக்கு 15 மாடுகளை அவர்கள் பார்த்துக் கொண்டால், நாங்கள் அவற்றை மீட்க 45,000 ரூபாய் கொடுக்க வேண்டும்,” என்கிறார் அவர். “இந்த வணிகத்தில் நாங்கள் பல வருடங்களாக இருக்கிறோம். இது மிரட்டி பணம் பறிக்கும் உத்திதான்.”
புனே மாவட்டத்தின் சாஸ்வத் டவுனிலிருக்கும் 14 வயது சுமித் காவ்டே, கால்நடைகளை ஏற்றிச் செல்லும் ட்ரக் ஓட்டுநருடன் மோதியதைப் பார்த்திருக்கிறார். இது நடந்தது 2014ம் ஆண்டில்.
“உற்சாகம் தொற்றியது நினைவிலிருக்கிறது,” என்கிறார் காவ்டே. “நானும் அதைச் செய்ய வேண்டுமென தோன்றியது.”
மேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் புனே மாவட்டத்தில், 88 வயது இந்து தேசியவாதியான சம்பாஜி பிடே மிகப் பிரபலம். வீர சிவாஜியின் பாரம்பரியத்தை பற்றி கட்டுக்கதை சொல்லி சிறுவர்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமியருக்கு எதிராக திருப்பும் பழக்கத்துக்கு பெயர் பெற்றவர் அவர்.
“இஸ்லாமியர்களான மொகலாயர்களை சிவாஜி வீழ்த்தியதை பற்றி அவர் பேசிய உரைகளை கேட்டிருக்கிறேன்,” என்கிறார் காவ்டே. “இந்து மதம் பற்றி மக்களிடையே பேசி, நம்மை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் பேசுவார்.”
14 வயதான அந்த இளைஞருக்கு பிடேவின் உரைகள் உற்சாகம் கொடுக்கிறது. பசு வன்முறையை அருகிலிருந்து பார்க்கையில் உற்சாகம் கிடைப்பதாக காவ்டே சொல்கிறார். பிடே உருவாக்கிய ஷிவ பிரதிஷ்தான் இந்துஸ்தான் அமைப்பின் தலைவர் பண்டிட் மோடக் அவரை தொடர்பு கொண்டார்.
சாஸ்வதை சேர்ந்த மோடக், புனேவை சேர்ந்த முன்னணி இந்து தேசியத் தலைவர் ஆவார். தற்போது பாஜகவின் தொடர்பில் இருப்பவர். சாஸ்வத் பகுதியில் இருக்கும் பசு வன்முறையாளர்கள் அவரிடம்தான் தகவல் தெரிவிப்பார்கள்.
மோடக்கிடம் காவ்டே பத்து வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். மொத்தமாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். “எங்களின் வேலை இரவு 10.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை தொடரும்,” என்கிறார் அவர். “சந்தேகம் ஏற்பட்டால் நாங்கள் வாகனத்தை நிறுத்துவோம். ஓட்டுநரை விசாரித்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்வோம். காவலர்கள் எப்போதும் ஒத்துழைப்பு தருவார்கள்.”
காவ்டேவின் பகல் வேலை கட்டுமானம். ஆனால் அவர் ‘ பசுக் காவலர்’ ஆக ஆனதிலிருந்து, சுற்றியிருக்கும் மக்கள் மரியாதையுடன் அவரை நடத்துவதாக கூறுகிறார். “பணத்துக்காக நான் இதை செய்யவில்லை,” என தெளிவுபடுத்துகிறார். “எங்களின் உயிரைப் பணயம் வைக்கிறோம். சுற்றியுள்ள இந்துக்கள் அதை அங்கீகரிக்கின்றனர்.”
புராந்தர் தாலுகாவில் மட்டும் 150 பசு வன்முறையாளர்கள் இருக்கின்றனர். அங்குதான் சாஸ்வத் கிராமம் இருப்பதாக சொல்கிறார் காவ்டே. “எங்களின் ஆட்கள் எல்லா கிராமங்களிலும் இருக்கிறார்கள்,” என்கிறார் அவர். “ரோந்து பணியில் ஈடுபட முடியவில்லை என்றாலும், துப்பு கொடுத்து உதவுவார்கள்.”
கிராமப் பொருளாதாரத்துக்கு பசுக்கள்தான் மையம். பல்லாண்டுகளாக கால்நடைகளை விவசாயிகள் காப்பீடாக பயன்படுத்தி வருகின்றனர். திருமணம், மருத்துவம் அல்லது நடவுக்காலம் போல ஏற்படும் திடீர் செலவுகளுக்கு கால்நடைகளை அவர்கள் விற்று பணம் பெறுவார்கள்.
ஆனால் பசு வன்முறை குழுக்களின் பரவல், அந்த பாதுகாப்பை முற்றாக அழித்துவிட்டது. ஒவ்வொரு வருடம் கடக்கும்போதும், வன்முறைகள் தீவிரமாகி, அவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது. ஷிவ் பிரதிஸ்தான் இந்துஸ்தான் அமைப்பையும் தாண்டி நான்கு இந்து தேசியவாத குழுக்கள் - பஜ்ரங் தளம், இந்து ராஷ்டிர சேனா, சமஸ்தா இந்து அகாடி மற்றும் ஹோய் இந்து சேனா - பெரும் வன்முறை வரலாறுடன் புனே மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.
“களத்தில் இருக்கும் செயற்பாட்டாளர்கள், ஒருவருக்கொருவர் வேலை பார்த்துக் கொள்கிறார்கள்,” என்கிறார் காவ்டே. “அமைப்பென பெரிதாக ஒன்றுமில்லை. நோக்கம் ஒன்றுதான் என்பதால் எஙகளுக்குள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம்.”
புரந்தாரில் மட்டும் ஒரு மாதத்தில் ஐந்து ட்ரக்குகள் வரை பசு வன்முறையாளர்கள் பிடிப்பதாக காவ்டே சொல்கிறார். இக்குழுக்களின் உறுப்பினர்கள் புனேவில் ஏழு தாலுகாவில் செயல்படுகிறார்கள். அதாவது மாதத்துக்கு 35 ட்ரக்குகள். வருடத்துக்கு 400.
கணக்கு சரியாக இருக்கிறது.
புனேவில் இருக்கும் குரேஷி சமூகத்தின் மூத்தவர்கள், 2023ம் ஆண்டில் அவர்களுக்கு சொந்தமான 400-450 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு வாகனமும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கால்நடைகளை ஏற்றிச் சென்றது. குறைந்தளவுக்கு மதிப்பிட்டாலும் கூட, மகாராஷ்டிராவின் 36 மாவட்டங்களில் பசு வன்முறையாளர்கள் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விளைவாக, தங்களின் வாழ்வாதாரங்களை கைவிடும் நிலைக்கு குரேஷி சமூகத்தினர் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
“சட்டத்தை நாங்கள் கையில் எடுப்பதில்லை,” என்கிறார் காவ்டே. “விதிகளின்படிதான் நாங்கள் நடந்து கொள்வோம்.”
இத்தகைய வன்முறைக்கு ஆட்படும் ட்ரக் ஓட்டுநர்கள் வேறு கதை சொல்கிறார்கள்.
*****
2023ம் ஆண்டின் தொடக்கத்தில் 25 எருமைகளை கொண்டு சென்ற ஷபீர் மெளலானியின் ட்ரக், சாஸ்வதில் பசு வன்முறையாளர்களால் மறிக்கப்பட்டது. அந்த இரவை இன்னும் மிரட்சியுடன் நினைவில் வைத்திருக்கிறார் அவர்.
“அன்றிரவு என்னைக் கொன்று விடுவார்கள் என நினைத்தேன்,” என்கிறார் புனேவிலிருந்து இரண்டு மணி நேரத் தொலைவில் இருக்கும் சதாரா மாவட்டத்தின் படாலே கிராமத்தை சேர்ந்த 43 வயது மெளலானி. “என்னை மிரட்டி, கடுமையாக தாக்கினார்கள். நான் வெறும் ஓட்டுநர்தான் என சொல்ல முயன்றேன், ஆனால் பிரயோஜனமில்லை.
காயம்பட்ட மெளலானி காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். அவரை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. “பசு வன்முறையாளர்கள் என் ட்ரக்கிலிருந்து 20,000 ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டார்கள்,” என்கிறார் அவர். “காவலர்களுக்கு விளக்க முயற்சித்தேன். தொடக்கத்தில் கேட்டார்கள். பண்டிட் மோடக் காரில் வந்த பிறகு, காவல்துறை அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.”
மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கும் மெளலானி, ஒரு மாதத்துக்கு பிறகு ட்ரக்கை மீட்டார். ஆனால் மாடுகள் இன்னும் பசு வன்முறையாளர்களிடம்தான் இருக்கிறது. “நாங்கள் சட்டவிரோதமாக எதாவது செய்திருந்தால், காவல்துறை எங்களை தண்டிக்கட்டும்,” என்கிறார் அவர். “தெருக்களில் வைத்து எங்களை அடிக்க அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?”
வீட்டிலிருந்து மெளலானா கிளம்பும் ஒவ்வொரு முறையும், 40 வயது மனைவி சமீனாவால் தூங்க முடிவதில்லை. ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் அவரை தொடர்பு கொண்டு அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொள்கிறார். “அவளை திட்ட முடியாது,” என்கிறார் அவர். “இந்த வேலையை விட விரும்புகிறேன். ஆனால் என் மொத்த வாழ்க்கைக்கும் இந்த வேலையைதான் நான் செய்திருக்கிறேன். எனக்கு இரு குழந்தைகளும் நோயுற்ற தாயும் இருக்கிறார்கள். குடும்பத்தை நடத்த பணம் வேண்டியிருக்கிறது.”
சதாராவை சேர்ந்த வழக்கறிஞரான சர்ஃபராஸ் சய்யது, மெளலானியின் வழக்கை போல் பல வழக்குகளை கையாண்டிருக்கிறார். மறிக்கப்படும் ட்ரக்குகளிலிருந்து பசு வன்முறையாளர்கள் பணத்தை திருடி, ஈவிரக்கமின்றி ஓட்டுநர்களை தாக்குவார்கள் எனக் கூறுகிறார் அவர். “ஆனால் அது எதுவும் எஃப்ஐஆர் ஆனதில்லை,” என்கிறார் அவர். “கால்நடைகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது காலங்காலமாக நடந்து வரும் வணிகம். மேற்கு மகாராஷ்டிர சந்தைகளும் பரவலாக அனைவருக்கும் தெரியும். ஓட்டுநர்களை அடையாளம் கண்டு அச்சுறுத்துவது அவர்களுக்கு கஷ்டம் அல்ல. ஏனெனில் அனைவரும் ஒரே நெடுஞ்சாலையைத்தான் பயன்படுத்துவார்கள்.”
ஓட்டுநர்களை பணிக்கமர்த்துவது மிகவும் கஷ்டமாகி விட்டதாக லோந்தே சொல்கிறார். “கூலி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என பலரும் உடலுழைப்பு வேலைக்கு செல்கின்றனர்,” என்கிறார் அவர். “கால்நடைகளுடன் ட்ரக் ஓட்டுவது உயிரைப் பணயம் வைக்கும் வேலை. மன அழுத்தம் கொடுப்பது. ரவுடிகள் ராஜ்ஜியம் கிராமப் பொருளாதாரத்தை அழித்து விட்டது.”
கால்நடைகளுக்கான விலை மிகக் குறைவாக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. வணிகர்கள் பணத்தை இழக்கின்றனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்கனவே பிரச்சினைகள் இருக்கும் வணிகத்தில் மேலும் சிரமங்களைக் கூட்டுகிறது.
“சட்டம் ஒழுங்கை குலைப்பவர்கள் மட்டும்தான் நன்றாக வாழ்கிறார்கள்.”
தமிழில் : ராஜசங்கீதன்