சூடான, உருக்கப்பட்ட பித்தளையை சஞ்சா வில் (வார்ப்பு பாத்திரம்) முகமது அஸ்லாம் ஊற்றுகையில் நுண் துகள்கள் காற்றில் பறக்கின்றன. இது, பித்தளையை உறுதியான சந்தான் பியாலி யாக (பிரார்த்தனைக்கு பயன்படுத்தப்படும் சிறு பாத்திரம்) மாற்றும்.

பித்தளை வேலைகளில் திறன் வாய்ந்த ஓர் உலோக கைவினைஞராக அஸ்லாமின் கைகள் உறுதியாகவும் எச்சரிக்கையாகவும் இயங்குகின்றன. பித்தளையை ஊற்றும்போதே அவர், பாத்திரத்தின் அழுத்தத்தை அளக்கிறார். மண் உள்ளே இருப்பதை உறுதி செய்கிறார். மண்தான் வடிவத்தை தரும்.

“உங்களின் கைகள் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளே இருக்கும் சாஞ்சா வின் வடிவம் பாதிக்கப்படும். அதாத் (வார்க்கப்பட்ட பொருள்) நாசமாகி விடும்,” என்கிறார் 55 வயது அஸ்லாம். ஆனால், காற்றில் பறக்கும் துகள் கொடுக்கும் கவலையின் அளவுக்கு மண் சிந்துவது அவருக்கு பிரச்சினையாக இல்லை. “அவற்றை பார்த்தீர்களா? இது பித்தளை. இவை வீணாகிறது. இதற்கான செலவை நாங்கள்தான் ஏற்க வேண்டும்,” என புலம்புகிறார். அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு 100 கிலோ பித்தளை வார்ப்புக்கும் 3 கிலோ வரை காற்றில் அவர்கள் இழக்கின்றனர். கிட்டத்தட்ட 50 ரூபாய் காற்றில் கரைந்து போகிறது.

பித்தளை வேலைகளுக்கு பெயர் பெற்ற மொராதாபாத்தின் பீர்சாதா பகுதியில் இருக்கும் பல உலைகளில் வேலை பார்க்கும் கைவினைஞர்களில் அஸ்லாமும் ஒருவர். உள்ளூரில் தலாயி க காம் அல்லது வார்த்தல் என அழைக்கப்படும் இக்கலையின் கலைஞர்கள் பித்தளைக் கட்டிகளை உருக்கி, வெவ்வேறு வடிவங்களை வார்க்கின்றனர்.

அவர்களின் வேலைப் பொருட்களான கரி, மண், மரப்பலகை, இரும்பத் தடிகள், பல அளவுகளிலான இடுக்கிகள் யாவும் அஸ்லாமும் அவரின் உதவியாளர் ரயீஸ் ஜானும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை பார்க்கும் பணியிடத்தில் அங்கும் இங்குமாக கிடக்கின்றன. அந்த ஐந்து சதுர அடி இடத்துக்கு மாத வாடகையாக அஸ்லாம் ரூ.1,500 கொடுக்கிறார்.

PHOTO • Mohd Shehwaaz Khan
PHOTO • Mohd Shehwaaz Khan

இடது: முகமது அஸ்லாம் (வலது) மற்றும் ரயீஸ் ஜான் (இடது) ஆகியோர் பிரார்த்தனைக்கான சிறு பாத்திரங்களை மொராதாபாதின் பீர்சாதா பகுதியின் உலைகள் ஒன்றில்  வார்க்கின்றனர். வலது: அஸ்லாம் சஞ்சாவை (வார்ப்பு பாத்திரம்) உருவாக்கி, அதற்குள் அவர் செய்யும் பொருளின் வார்ப்பை வைக்கிறார்

PHOTO • Mohd Shehwaaz Khan
PHOTO • Mohd Shehwaaz Khan

இடது: வார்ப்பு பாத்திரத்துக்குள் மண்ணை நிரப்பி, உருக்கிய பித்தளையை ஊற்றுவதற்கு ஏற்ப குவியத்தை அதில் அஸ்லாம் உருவாக்குகிறார். வலது: பிறகு அவர் பித்தளையை ஊற்றி, உள்ளே இருக்கும் மண் வெளியே சிந்தி விடாமல் பார்த்துக் கொள்கிறார்

உத்தரப்பிரதேசத்தில் பித்தாள் நகரி ( பித்தளை நகரம்) என அழைக்கப்படும் இந்த நகரத்தின் தொழிலாளர்கள் பெரிதும் இஸ்லாமியர் சமூகத்தை சார்ந்தவர்கள். கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வரை, பீர்சாதா பகுதியருகேதான் வாழ்வதாக அஸ்லாம் கணக்கிடுகிறார். மொராதாபாத்தின் இஸ்லாமிய மக்கள்தொகை நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் 47.12 சதவிகிதம் (சென்சஸ் 2011).

அஸ்லாமும் ஜானும் இணைந்து ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். அதிகாலையிலேயே வேலையைத் தொடங்கி விடுகிறார்கள். உலைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வந்து விடுவார்கள். மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்கிறார்கள். இருவரும் உலைக்கு அருகேயே வசிக்கின்றனர். மாலையில் தேநீர் நேரத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் பட்டறைக்கு தேநீர் கொண்டு வந்து கொடுக்கிறார்.

“கடுமையாக உழைத்தாலும் உணவை தவற விடுவதில்லை. உணவுக்குதானே நாம் உழைக்கிறோம்!,” என்கிறார் அஸ்லாம்.

அஸ்லாமின் உதவியாளரான ஜானுக்கு அன்றாடக் கூலியாக ரூ.400 கொடுக்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து பித்தளையை உருக்கி, குளிர்வித்து, சுற்றி சிதறியிருக்கும் மண்ணை மறுபயன்பாட்டுக்காக சேகரிக்கும் வேலைகளை செய்கின்றனர்.

பெரும்பாலும் உலையை ஜான் பார்த்துக் கொள்கிறார். நின்றபடி அதற்கு கரி போட வேண்டும். “ஒருவரால் இந்த வேலையை செய்ய முடியாது. குறைந்தபட்சம் இருவர் வேண்டும். எனவே அஸ்லாம் பாய் விடுமுறையில் இருந்தால், எனக்கும் வேலை இருக்காது,” என்கிறார் 60 வயது ஜான். “ரயீஸ் பாய், நாளை சசுராலு க்கு (மனைவி வீட்டுக்கு) செல்லவிருக்கிறார். 500 ரூபாய் எனக்கு இழப்பு,” என்கிறார் அஸ்லாம் புன்னகையுடன்.

‘கரி வாங்கும் காசுதான் பித்தளை வார்ப்பவருக்கு அதிகம்,” என்கிறார் அஸ்லாம். “பாதி விலைக்கு கரி கிடைத்தால், எங்களுக்கு மிகவும் பயனளிக்கும்,” என்கிறார். அன்றாடம் பித்தளை வார்க்கவென தேகா (ஒப்பந்தம்) போட்டிருக்கிறார்.

PHOTO • Mohd Shehwaaz Khan
PHOTO • Mohd Shehwaaz Khan

இடது: அஸ்லாமின் உதவியாளரான ரயீஸ் ஜான் உலையைப் பார்த்துக் கொள்கிறார். ஐந்து வருடங்களாக இருவரும் ஒன்றாக வேலை பார்க்கின்றனர். வலது: உலை கரியில் இயங்குகிறது. ஒரு கிலோ பித்தளை உருக்க, 300 கிராம் கரி தேவைப்படுகிறது. அஸ்லாம் போன்ற பித்தளை வார்ப்பவர்கள், கரியின் விலை (கிலோ ரூ.55) அதிகமாக இருப்பதாக கருதுகிறார்கள்

உள்ளூர் நிறுவனங்களிலிருந்து பித்தளைக் கட்டிகளை கிலோ 500 ரூபாய் என்ற விலையில் அவர்கள் வாங்குகிறார்கள். வார்ப்பு வேலை முடிந்த பிறகு திருப்பி தந்து விடுகிறார்கள். ஒரு வழக்கமான பித்தளைக் கட்டி ஏழு முதல் எட்டு கிலோ வரை எடை இருக்கும்.

“நாளொன்றுக்கு 42 கிலோ பித்தளை வரை வார்க்கிறோம். நாங்கள் வார்க்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் 40 ரூபாய் சம்பாதிக்கிறோம். கரியின் விலை மற்றும் பிற செலவுகளும் அதில்தான் பார்க்க வேண்டும்,” என்கிறார் அஸ்லாம்.

ஒரு கிலோ கரியின் விலை ரூ.55. ஒரு கிலோ பித்தளையை உருக்க, கிட்டத்தட்ட 300 கிராம் கரி செலவாவதாக அஸ்லாம் சொல்கிறார். “எல்லா செலவுகளையும் விட்டுவிட்டால், எங்களின் உழைப்பு ஒரு கிலோ வார்ப்புக்கு ஆறிலிருந்து ஏழு ரூபாய் ஈட்டி தருகிறது,” என்கிறார் அவர்.

10 வயதில் ரயீஸ் ஜான் வேலை பார்க்கத் தொடங்கினார். ஒரு வருடத்தில் தொழில் கற்றுக் கொண்டார். “சுலபமான வேலை போல தெரியலாம். ஆனால் கஷ்டம்,” என்கிறார் அவர். “உருக்கிய பிறகு பித்தளை எப்படி செயல்படும் என தெரிந்து கொள்வதுதான் கஷ்டமான வேலை.”

பித்தளையை வார்க்கும்போது, கைகளை உறுதியோடும் அமைதியோடும் இருக்க வேண்டும் என்கிறார் ஜான். “பாத்திரத்தை நிரப்புவதுதான் சாமர்த்தியம். உருக்கிய பித்தளையை நிரப்பிய பிறகு எத்தனை முறை அதை அடிக்க வேண்டுமென புதியவருக்கு தெரியாது. அது சரியாக செய்யப்படாதபோது, அதத் ( வார்க்கப்பட்ட துண்டு) உடையும். போலவே பாத்திரத்தை வேகமாக எடுத்தாலும் உடையும்,” என்கிறார் ஜான். “வல்லுநரின் கைகள் இத்தகைய சூழலில் இயல்பாக இயங்கும்.”

பித்தளை வார்ப்பவர்களின் நெடிய மரபில் வருபவர் ஜான். “இது என்னுடைய பாரம்பரிய வேலை,” என்கிறார் அவர். “கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இதை செய்கிறோம்.” ஆனால் இத்தொழிலை செய்ய வேண்டுமென எடுத்த முடிவு குறித்து அவ்வப்போது ஜான் யோசிக்கிறார். “என் தந்தை வார்ப்பு வணிகம் வைத்திருந்தார். நான் அன்றாடக் கூலி மட்டும்தான்,” என புலம்புகிறார்.

PHOTO • Mohd Shehwaaz Khan
PHOTO • Mohd Shehwaaz Khan

இடது: சாஞ்சா, மண்ணை பரப்ப மரப்பலகைகள், சாரியா அல்லது மண்ணை பாத்திரத்துக்குள் அடைக்க பயன்படும் இரும்புத் தடி, அதிகமாக இருக்கும் பித்தளையை வெட்ட சந்தாசி அல்லது இடுக்கிகள், வார்ப்பை செதுக்க குழவி போன்றவை இரும்பு  வார்ப்பு வேலையில் பயன்படும் பொருட்கள். வலது: சந்தான் பியாலிஸில் இருக்கும் அதிக பித்தளையை மறுபயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வார்கள்

பித்தளை வார்ப்பை 40 வருடங்களுக்கு முன் அஸ்லாம் தொடங்கினார். தொடக்கத்தில் குடுப்மத்தின் வாழ்வாதாரத்தை அப்பாவின் பழ, காய்கறி வண்டி பார்த்துக் கொண்டது. குடும்பத்துக்கு உதவதான் அவர் இத்தொழிலுக்கு வந்தார். “ஒவ்வொரு நாளும் இங்கு ஒன்று போல்தான் இருக்கும். எதுவும் மாறாது,” என்கிறார் அவர். “இன்று நாங்கள் சம்பாதிக்கும் 500 ரூபாய்தான் 10 வருடங்களுக்கு முன் சம்பாதித்த 250 ரூபாயின் மதிப்பும்,” என்கிறார் அவர் விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டி.

இரு மகள்களும் ஒரு மகனும் அஸ்லாமுக்கு இருக்கின்றனர். அவரின் மகள்கள் மணம் முடித்து விட்டனர். “மகனுக்கு திருமணமாகி இன்னொரு உறுப்பினர் குடும்பத்துக்கு வருமளவுக்கு வீட்டில் இடமில்லை,” என்கிறார் அவர்.

*****

பீர்சாதாவில் வேலை பார்க்கும் கைவினைஞர்களுக்கு வெள்ளிக்கிழமைதான் வார விடுமுறை. எல்லா உலைகளும் மூடப்பட்டுவிடும். வழக்கமான சுத்தியல், குறடு சத்தம் இருக்காது.

விடுமுறையில் முகமது நயீம் வீட்டுக் கூரையில் ஏறி, பேரக்குழந்தைகளுடன் பட்டம் விடுவார். “மன அழுத்தத்தை போக்க உதவுகிறது,” என்கிறார் அவர்.

வாரத்தின் மிச்ச நாட்களை அஸ்லாம் மற்றும் ஜான் ஆகியோரின் உலையிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கும் பட்டறையில்தான் அவர் கழிக்கிறார். இந்த வேலையை அவர் 36 வருடங்களாக செய்து வருகிறார். “இந்த பித்தளை பொருட்களை ஏன் மக்களுக்கு இவ்வளவு பிடிக்கிறது என தெரியவில்லை. எனக்கென ஒன்றை நான் தயாரித்துக் கொள்ளவில்லை,” என்கிறார் அவர். அஸ்லாம் மற்றும் ஜான் போலல்லாமல், அவர் வேலை பார்க்க 20 கிலோமீட்டர் பயணித்து, இருட்டில் திரும்பி வர வேண்டும். நாளொன்றுக்கு அவர் 80 ரூபாய் வரை போக்குவரத்துக்கு செலவிடுகிறார்.

PHOTO • Aishwarya Diwakar
PHOTO • Aishwarya Diwakar

முகமது நயீம் உலையில் நெருப்பை (இடது) பார்த்துக் கொள்கிறார். அங்குதான் அவர் வேலை பார்த்து வெறும் கைகளில் உலையிலிருந்து (வலது) வார்ப்பை எடுப்பார்

55 வயதாகும் அவர் பெரும்பாலும் சூளையை பார்த்துக் கொள்ள மற்ற மூவர் வார்ப்பு மற்றும் இழைப்பு வேலைகளை பார்க்கின்றனர்.

விளக்குகள், ஓம் வடிவ முத்திரைகள், விளக்குகளின் கீழ் பகுதிகள் போன்ற பூஜைப் பொருட்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் அவர்.

“நாட்டின் எல்லா கோவில்களின் பித்தளை பொருட்களையும் நாங்கள்தான் தயாரித்தோம் என்றே சொல்லலாம்,” என்னும் அவர் அக்கோவில்கள் இருக்கும் இடங்களை, “கேரளா, பனாரஸ், குஜராத்,” என விரல் விட்டு பட்டியலிடுகிறார்.

வெப்பம் கிட்டத்தட்ட 42 டிகிரியை தொட்டது. ஆனால் நயீம் எல்லாருக்கு தேநீர் போடுவதாக கட்டாயப்படுத்தினார். “சிறந்த தேநீர் நான் போடுவேன்,” என்கிறார் அவர் கண்களை சிமிட்டி. “உலையிலிருந்து தேநீர் சாப்பிட்டிருக்கிறீர்களா?” என பாரி செய்தியாளர்களை அவர் கேட்கிறார். உலையின் சூட்டில் பாலும் தேநீரும் நன்றாக சூடாவதே இதன் சிறப்பு என்கிறார் அவர்.

சகோதரர் மற்றும் உறவினரை தொடர்ந்து நயீம் இங்கு வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனால் அவரது குடும்பத்தின் பாரம்பரியத் தொழில் துணி வியாபாரம்தான். “அவர்கள் இத்தொழிலை விட்டு சென்று விட்டார்கள். நான் மட்டும் இருக்கிறேன்,” என்கிறார் அவர்.

மேலும் நாட்கூலியான 450-500 ரூபாய் போதாதென நினைக்கும் நயீம் அவ்வப்போது இந்த வேலையை விட்டு விடவும் யோசித்திருக்கிறார். “பணமிருந்தால், நானும் துணி விற்க சென்றிருப்பேன். அந்த வேலை எனக்கு பிடிக்கும். நன்றாக வசதியாக நாற்காலியில் நாள் முழுக்க அமர்ந்திருந்து துணி விற்க வேண்டும்,” என்கிறார் அவர்.

PHOTO • Aishwarya Diwakar
PHOTO • Aishwarya Diwakar

இடது: நயீமும் அவரின் சக ஊழியர்களும் விளக்குகள், ஓம் முத்திரைகள் ஆகியவற்றை உருவாக்கி இந்தியா முழுக்க இருக்கும் கோவில்களுக்கு அனுப்புகிறார்கள். வலது: வார்ப்பிலிருந்து எடுக்கப்படும் ஓம் முத்திரை

PHOTO • Aishwarya Diwakar
PHOTO • Aishwarya Diwakar

இடது: வார்க்கப்பட்ட ஓம் முத்திரையுடன் நயீம். வலது: நயீமால் வார்க்கப்பட்ட சந்தா பியாலிகள்

*****

பித்தளைத்துறை ஒன்றிய அரசையும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் ‘ ஒரு மாவட்டம் ஒரு பொருள் ’ முன்னோடி திட்டத்தையும் சேர்ந்ததாகும். மொராதாபாதின் உலோகக் கலைக்கு 2014ம் ஆண்டில் புவிசார் குறியீடு கிடைத்தது. ஆனால் வார்ப்பு வேலை செய்பவர்களின் நிலை மாறவில்லை.

பித்தளை பொருட்கள் செய்வதிலேயே கடின உழைப்பைக் கோருவது வார்ப்பு வேலைதான். தொழிலாளர்கள் அதிக நேரத்துக்கு தரையில் குத்த வைத்து அமர்ந்து, கனமான பாத்திரங்களை தூக்க கைகளையும் அசைத்துக் கொண்டிருக்க வேண்டும். உலையிலும் கரி நிரப்ப வேண்டும். தீயையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிறு வருமானத்தை கொடுக்கும் கடின உழைப்பு என்பதால் இளையோர் இந்த கலையில் ஈடுபடவில்லை.

இளைஞர்கள் பலரும் மீனா கா காம் அல்லது உலோகத்துக்கு நிறம் பூசும் வேலை பார்க்கின்றனர். இது மரியாதைக்குரிய வேலை என்கிறார்கள். ஆடைகள் இந்த வேலையில் அழுக்காகாது. பொட்டலம் போடுவது, தைப்பது, பெட்டிகளை நிரப்புவது போன்றவை இதிலிருக்கும் பிற வேலைகள்.

PHOTO • Mohd Shehwaaz Khan
PHOTO • Mohd Shehwaaz Khan

இடது: மொராதாபாதின் பல இளைஞர்கள் இந்த வேலையை செய்ய தயங்கும் நிலையில், முகமது சுபானுக்கு வேறு வழியில்லை. கோவிட் ஊரடங்கில் சேமிப்பை அவர் இழந்துவிட்டார். பணம் கையிருப்பில் இல்லை. திருமணங்களுக்கான காலத்தில் அவர் எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்க்கிறார். வலது: சுபானால் வார்க்கப்பட்ட விளக்குகள்

PHOTO • Mohd Shehwaaz Khan
PHOTO • Mohd Shehwaaz Khan

இடது: ‘ எட்டு குழந்தைகளில் நான் இரண்டாவது. குடும்பத்தை நான் பார்த்துக் கொள்ள வேண்டும்,’ என்கிறார் சுபான். வலது: உலையில் வேலை பார்த்ததில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் ஒருநாளில் மீண்டும் வேலைக்கு வந்து விட்டார்

24 வயது பித்தளை வார்ப்பாளரான முகமது சுபான், குடும்பத்துக்காக இரண்டு வேலை பார்க்கிறார். பகலில் அவர் பித்தளை வார்த்து 300 ரூபாய் ஈட்டுகிறார். திருமண காலம் தொடங்கியதும் அவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து ஒவ்வொரு திருமணத்துக்கும் 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். “இந்த (வார்ப்பு) வேலையை விடுவதற்கு சாத்தியமில்லை. அந்தளவுக்கு பண நெருக்கடி இருக்கிறது,” என்கிறார் அவர்.

ரிக்‌ஷா ஓட்டுபவரின் மகனான அவர் 12 வயதில் வேலை பார்க்கத் தொடங்கினார். “எட்டு குழந்தைகளில் நான் இரண்டாவது. குடும்பத்தை நான் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் சுபான். “கோவிட் ஊரடங்கு காலத்தில், என்னுடைய சேமிப்பை நான் இழந்து விட்டேன். இப்போது வேலையை விடுவது முடியாத காரியமாக இருக்கிறது.”

தான் தனியாக இல்லை என சுபானுக்கு தெரியும். “என்னை போல் பல இளைஞர்கள் இரு வேலைகள் செய்து கொண்டிருக்கின்றனர். பிரச்சினைகள் இருந்தால், ஏதேனும் செய்தாக வேண்டும்,” என்கிறார் அவர்.

இக்கட்டுரை, மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் (MMF) மானிய நிதியில் எழுதப்பட்டது

தமிழில் : ராஜசங்கீதன்

Mohd Shehwaaz Khan

محمد شہواز خان دہلی میں مقیم ایک صحافی ہیں۔ انہیں فیچر لکھنے کے لیے سال ۲۰۲۳ کے لاڈلی میڈیا ایوارڈ سے نوازا گیا تھا۔ وہ ۲۰۲۳ کے پاری-ایم ایم ایف فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Mohd Shehwaaz Khan
Shivangi Pandey

شیوانگی پانڈے، نئی دہلی میں مقیم ایک صحافی ہیں اور ترجمہ کا کام بھی کرتی ہیں۔ وہ اس موضوع میں کافی دلچسپی رکھتی ہیں کہ عوام کی یادداشت پر زبان کے ختم ہونے کا کیا اثر پڑتا ہے۔ شیوانگی سال ۲۰۲۳ کی پاری-ایم ایم ایف فیلو ہیں۔ انہیں ’آرمری اسکوائر وینچرز پرائز فار ساؤتھ ایشین لٹریچر ان ٹرانسلیشن ۲۰۲۴‘ کے لیے شارٹ لسٹ کیا گیا تھا۔

کے ذریعہ دیگر اسٹوریز Shivangi Pandey
Photographer : Aishwarya Diwakar

Aishwarya Diwakar is a writer and translator based in Rampur, Uttar Pradesh. She has worked on the oral and cultural history of Rohilkhand and is currently working with IIT Madras on an Urdu-language AI programme.

کے ذریعہ دیگر اسٹوریز Aishwarya Diwakar
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan