ஹர்மன்தீப் சிங், பல வண்ணமயமான காற்றாடிகளை தன் மீது சுற்றிக் கொண்டு நிற்கிறார். அவருக்கு சற்று முன்னால், பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே உள்ள ஷம்பு எல்லையில், விவசாயிகள் டெல்லிக்கு முன்னேறிச் செல்வதைத் தடுக்க, காவல்துறையினர் பெரிய தடுப்புகளை நிறுவியுள்ளனர்.
அமிர்தசரஸிலிருந்து வரும் 17 வயதான இவர், போராடும் விவசாயிகளின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், தான் வைத்திருக்கும் காற்றாடிகள் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் ட்ரோன்களை வீழ்த்துகிறார். “கண்ணீர் புகைக் குண்டுகளின் தாக்கத்தை சமாளிக்க, கண்களைச் சுற்றி பற்பசையை தேய்த்துக் கொள்கிறேன். நாங்கள் முன்னேறி சென்று, இந்த போராட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்”, என்று கூறுகிறார்.
பஞ்சாபிலிருந்து பிப்ரவரி 13, 2024 அன்று, டெல்லிக்கு அமைதிப் பேரணியைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களில் ஹர்மன்தீபும் ஒருவர். துணை ராணுவம், விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஷம்பு எல்லையில் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விவசாயிகள் டெல்லியில் உள்ள தங்களது போராட்டக் களத்திற்கு செல்ல முடியாதபடி, சாலையில் இரும்பு ஆணிகள் மற்றும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
முதல் தடுப்பில், திரண்டிருக்கும் கூட்டத்தில் குர்ஜந்த் சிங் கல்சா, தங்களது ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றுகிறார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி, லக்கிம்பூர் கேரி படுகொலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2020-2021 போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவைதாம் அந்தக் கோரிக்கைகள்.
2020-21 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்று கூடினர். அவை, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 , விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020 . மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 . நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 2020-ல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்களை, நவம்பர் 2021-ல் ரத்து செய்ய, அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இந்த இயக்கம் குறித்த PARI கட்டுரைகளைப் படிக்க: விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்
“நாங்கள் போராட்டத்தை முழுமையாக நிறுத்தவில்லை,” என்கிறார் கர்னலின் 22 வயதான கல்சா. “ஒன்றிய அரசாங்கத்துடனான எங்களது பேச்சுவார்த்தையில், ஒன்றிய அமைச்சர்கள், எங்களது எல்லா கோரிக்கைகளையும் ஏற்று, நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்ததால், போராட்டத்தை இடைநிறுத்தம் செய்திருந்தோம். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கமிட்டியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில், 2 வருடங்களுக்கு பிறகு, திடீரென்று பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. கமிட்டியும் கலைக்கப்பட்டது. எனவே மீண்டும் போராட்டத்தைத் துவங்கியுள்ளோம்.”
அதிகப்படியான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சாலைக்கு அடுத்துள்ள வயல்களில் கூடி, போராளிகள் எல்லையை கடக்கும் வகையில் அதிகாரிகளை திசைதிருப்ப தொடங்கினர்.
போராளிகள், ஷம்புவில் உள்ள தடுப்புச்சுவர்களை தகர்க்கத் துவங்கியதும், காவல்துறை அதிகாரிகள், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பலரும் காயமடைந்தனர். காவல்துறையினர், கூட்டத்தைக் கலைப்பதற்கு வானத்தை நோக்கி சுடாமல், போராளிகளைக் குறிவைத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித் தாக்கியதாக, போராட்டத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். போராளிகளை கலைக்க தண்ணீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. பல வயது முதிர்ந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், கண்ணீர் புகை குண்டுகளை செயலிழக்கச் செய்ய குச்சிகளுடன் வந்தனர். ஒவ்வொரு குண்டும் செயலிழக்கப்பட்டபோது, கூட்டம் ஆரவாரம் செய்து கொண்டாடியது.
கண்ணீர் புகைக் குண்டுகளை செயலிழக்கச் செய்தவர்களில் ஒருவர், அமிர்தசரஸைச் சேர்ந்த விவசாயி திர்பால் சிங். "நாங்கள் ஆயுதம் ஏதும் ஏந்தவில்லை. இருந்த போதும், ரப்பர் தோட்டாக்கள், பெல்லட்டுகள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி எங்களை ஒடுக்குகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். "சாலை, அனைவருக்கும் சொந்தமானது. நாங்கள் அதில் முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறோம். அமைதியாக நாங்கள் சென்ற போதும் தாக்கப்படுகிறோம். ஷம்பு எல்லையில் சிறைப்பட்டதாக தற்போது உணர்கிறேன்.”
அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக இந்த 50 வயது முதியவர் உணர்கிறார். "அரசாங்கம், தங்கள் கட்சிக்கு நிதியளிக்கும் பணக்கார கார்ப்பரேட்களை மகிழ்விக்க, குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்க மறுக்கிறது," என்கிறார். “குறைந்தபட்ச ஆதாரவிலை உத்தரவாதம் இல்லாவிடில், மிகப்பெரிய நிறுவனங்கள், நம்மை ஏமாற்றலாம். அவர்கள் விருப்பம்போல், எங்களது பயிர்களை மலிவான விலையில் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். அரசாங்கத்தால், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை பெரிய நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்ய முடியும் என்றால், சில லட்சங்கள் அல்லது அதற்கும் குறைவாக விவசாயிகளும் தொழிலாளர்களும் கொண்டிருக்கும் கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும் என்று திர்பால் சிங் நம்புகிறார்.
கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை துணிச்சலுடன் எதிர் கொண்டு முன்னேறிய பிறகு, தடுப்பின் இரண்டாவது அடுக்கில் உள்ள ஆணிகளை அகற்ற முயன்றனர் போராளிகள். அந்த நேரத்தில் போலீசார், போராளிகளின் கால்களைக் குறிவைத்து, ரப்பர் தோட்டாக்களை சுடுவதைக் காண முடிந்தது. இதனால், போராளிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஒரு சில நிமிடங்களிலேயே, பல விவசாயிகளும் தொழிலாளர்களும் இரத்த காயத்துடன், சுயாதீன மருத்துவர்களால் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமிற்கு தூக்கிச் செல்லப்பட்டனர்.
"கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும், நான் 50 போராளிகளை கவனிக்க வேண்டியிருந்தது," என்று, ஒரு முகாமின் பொறுப்பாளரான டாக்டர் மந்தீப் சிங் கூறுகிறார். "நான் ஷம்பு எல்லைக்கு வந்ததிலிருந்து கணக்கில்லாமல், போராளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வருகிறேன்,” என்று கூறும் 28 வயது மருத்துவர் மந்தீப், ஹோஷியார்பூரில் உள்ள தனது கிராமத்தில் பாபா ஸ்ரீ சந்த் ஜி எனும் மருத்துவமனையை நடத்தி வருகிறார். விவசாயிகளின் குடும்பத்தில் இருந்து வரும் இந்த இளம் மருத்துவரும் 2020-ல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்தான். அப்போதும் அவர் ஐக்கிய சீக்கியர்கள் அமைப்புடன் ஒரு முகாம் அமைத்திருந்தார். இது ஐக்கிய நாடுகள் சபையுடன் இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பு ஆகும்.
"வெட்டுக் காயங்கள், கீறல்கள் மற்றும் சுவாசக்கோளாறுகள் என பல்வேறு பிரச்சனைகளுடன் போராளிகள் வந்துள்ளனர்," என்கிறார். “அரசாங்கம், நமது விவசாயிகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நாம்தானே அவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துகிறோம்,” என்று மேலும் கூறுகிறார்.
களத்தில் உள்ள மற்றொரு மருத்துவரான தீபிகா, மருத்துவ முகாமில் உதவ, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவிலிருந்து வந்துள்ளார். 25 வயதான அவர் கூறும்பொழுது, “சுவாசப் பிரச்சினையோடு, மக்கள் ஏக்கத்துடனும், கவலையுடனும் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பல மணிநேரம் சுவாசிப்பதால், அவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினைகளும் வருவதாக கூறுகின்றனர்.”
இவர்களுக்கு உதவ டாக்டர்கள் மட்டுமல்ல - தடுப்புச் சுவர்களுக்கு சில மீட்டர்கள் தொலைவில், பலரும் தள்ளுவண்டிகளை அமைத்து, அனைவருக்கும் உணவளிக்க பொது சமையலறை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளனர். பலர் தங்கள் குடும்பத்துடன் வந்துள்ளனர். குர்பிரீத் சிங், தனது இளைய மகன் தேஜஸ்வீருடன் வந்துள்ளார். “எங்கள் போராட்டத்தை அவன் பார்க்க வேண்டும் என்பதற்காக, எனது மகனை நான் இங்கு அழைத்து வந்துள்ளேன்,” என்கிறார் பாட்டியாலாவில் இருந்து வந்துள்ள குர்ப்ரீத். "நம் உரிமைகளுக்காகப் போராடுவது ஏன் முக்கியம் என்பதை அவனுக்குக் கற்பிக்க விரும்புகிறேன். விவசாயிகளும் தொழிலாளர்களுமான நம்மை அரசாங்கங்கள் ஒடுக்கும்போது எதிராகச் போராட வேண்டுமென்பது அவனுக்கு தெரிய வேண்டும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
போராட்டத் தளத்தைச் சுற்றி, புரட்சிகரமான பாடல்களும், வீர முழக்கங்களும் ஒலிக்கின்றன. “இக்கி டுக்கி சக் தேயங்கே, தௌன் தே கோடா ரக் டியாங்கே” [எதிர்க்கும் எவரையும் வீழ்த்துவோம். அவர்களின் தலை எங்கள் காலடியில் இருக்கும்], என கோஷம் எழுப்பியபடி குழுக்கள் பேரணியாக சென்று இன்னும் அதிக மக்களைத் திரட்டுகிறது.
"விவசாயிகளின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் என்பதால் நானும் போராடுகிறேன்," என்கிறார் ராஜ் கவுர் கில். "சண்டிகரை சேர்ந்த 40 வயதான இவர், 2021-ல் சண்டிகரில் விவசாயிகளின் போராட்டங்களின் மத்தியத் தளமான மட்கா சவுக்கில் முக்கியப்புள்ளியாக இருந்தவர்.
"குறைந்தபட்ச ஆதார விலை வழங்காததன் மூலம், அரசாங்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடினமாக்குகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தழைத்தோங்க, தேசத்திற்கு உணவளிப்பவர்களை வீழ்த்துகின்றனர்," என்னும் அவர், "ஆனால், அவர்கள் வெற்றிபெற முடியாது," என மேலும் கூறுகிறார்.
தமிழில்: அஹமது ஷ்யாம்