கோமல் ரயில் பிடிக்க சென்று கொண்டிருந்தார். அசாமில் அவரது வீடு இருக்கும் ரங்கியா ஜங்ஷனுக்கு செல்லவிருக்கிறார்.
அது அவர் போகக் கூடாது என முடிவெடுத்திருந்த இடம். மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கூட பார்க்க அவர் செல்ல விரும்பவில்லை.
பாலியல் ரீதியாக அவருக்கு வன்கொடுமை இழைக்கப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக டெல்லியில் தங்கி GB ரோட்டிலுள்ள விபச்சார விடுதிகளில் வேலை பார்ப்பது மேலானது. அவர் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்த 17 வயது ஒன்று விட்ட சகோதரன், அவருக்கு 10 வயதாக இருக்கும்போது பலமுறை வல்லுறவு செய்திருப்பதாக சொல்கிறார். “அவனது முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை. அவனை நான் வெறுக்கிறேன்,” என்கிறார் கோமல். அவரை அவன் அடிப்பான். தடுத்தால் தாயைக் கொன்று விடுவதாக மிரட்டுவான். ஒருமுறை கூரான பொருள் ஒன்றினால் அவன் தாக்க, அவரின் நெற்றி இன்னும் அந்த காயத்தின் தழும்பை தாங்கியிருக்கிறது.
“இதனால்தான் நான் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை. அவர்களிடம் நான் பலமுறை சொல்லி விட்டேன்,” என்கிறார் கோமல் காவலர்களிடம் நடந்த உரையாடலை குறித்து. இதற்குப் பிறகும் காவலர்கள் அவரை, எந்த ஏற்பாடும் இன்றி, கைவசம் ஒரு சிம் கார்டு கூட இன்றி, அசாமுக்கான 35 மணி நேரப் பயணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். பாதுகாப்பாக அவர் சென்றாரா அல்லது வீட்டில் வன்முறை நேர்ந்ததா என தெரிவிக்கக் கூட வாய்ப்பில்லை.
கடத்தி செல்லப்படும் இளையோருக்கும் சிறுவர் சிறுமியருக்குமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சேவைகள் தேவை என்கிறார் கோமல்.
*****
கோமல் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தன்னுடைய 4 x 6 சதுர அடி சிறு அறையிலிருந்து ஓர் இரும்பு ஏணியில் ஏறுகையில்தான் விடுதிக்கு இரு காவலர்கள் வந்தனர். அந்த விபச்சார விடுதியில்தான் இந்த வருடத் தொடக்கத்தில் அவர் பணிபுரிந்து வசித்து வந்தார். இந்த அறைகள் வெளியே புலப்படாது. இரும்பு ஏணிகள்தாம் இங்கு பாலியல் தொழில் நடப்பதை சுட்டிக் காட்டும் சமிக்ஞைகள். டெல்லியின் சிவப்பு விளக்கு பகுதியான ஷ்ரதானந்த் மார்க் என்ற அப்பகுதி, GB ரோடு என வழங்கப்படுகிறது.
22 வயதாவதாக அவர் கூறுகிறார். “குறைவாக கூட இருக்கலாம். தெளிவாக தெரியவில்லை,” என்கிறார் அசாமி மொழியில் கோமல். 17 வயதுதான் இருக்கும், அல்லது ஒரு 18. அவர் மைனர் என அறிந்து கொண்ட காவல்துறை அவரை அன்று ‘மீட்டனர்’.
விடுதியின் உரிமையாளர் பெண்களான அக்காக்கள் காவலர்களை தடுக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கும் கோமலின் உண்மையான வயது தெரியவில்லை. 20 வயதுக்கு மேல் என்றும் தான் பாலியல் தொழில் சொந்த விருப்பத்தில் செய்வதாகவும் சொல்லும்படி அவரை அவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அது சரிதான் என்பதை உணர்ந்தார் கோமல். டெல்லிக்கு சென்று பாலியல் தொழில் செய்து சுதந்திரமாக வாழ்வதுதான் தன்னுடைய விருப்பம் என அவர் நினைத்தார். ஆனால் அவரின் ‘விருப்பம்’ பல தொடர் துயரங்களை அவருக்கு அளித்தது. வல்லுறவு, மைனராக கடத்தப்படுதல், பிழைப்பதற்கு எந்த ஆதரவும் இல்லாதிருத்தல், மாற்றுப் பாதைகள் இன்மை என அவர் துயருற்றார்.
சுயவிருப்பத்தில்தான் விபச்சார விடுதியில் இருப்பதாக காவலர்களிடம் அவர் சொன்னபோது, அவர்கள் ஏற்கவில்லை. செல்பேசியில் பிறப்பு சான்றிதழைக் காட்டி தனக்கு 22 வயது என்று கூட அவர் கூறினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். அவரிடம் இருந்த ஒரே அடையாள ஆவணம் அதுதான். கோமல் ‘மீட்கப்பட்டு’ காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இரண்டு மணி நேரம் ஆலோசனை வழங்கப்பட்டதாக சொல்கிறார் அவர். அவர் மைனராக இருப்பதாக நம்பப்படுவதால் சட்டமுறைப்படி குடும்பத்துடன் மீண்டும் அவர் சேர்ப்பிக்கப்படுவார் என சொல்லப்பட்டது.
காப்பகத்தில் இருந்த சமயத்தில், விடுதியிலிருந்து உடைகள், இரண்டு செல்பேசிகள் மற்றும் 20,000 ரூபாய் வருமானம் ஆகிய அவரது உடைமைகளை கொண்டு வந்து கொடுத்தனர்.
பாலியல் தொழிலுக்கு கோமல் வர வல்லுறவு, மைனர் வயதில் கடத்தல், மீள்வதற்கான உதவிகள் இன்மை போன்றவை காரணங்களாக இருந்தன
“மைனர்கள் மீண்டும் கடத்தப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மைனர்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குடும்பத்துக்கு செல்வதா காப்பகத்திலேயே இருப்பதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஒப்படைப்பதற்கு முன் குடும்பங்களுக்கு போதுமான அளவில் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் டெல்லியை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான உத்கார்ஷ் சிங். சிறார் நீதி சட்ட த்தின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்பான குழந்தை நல வாரியம், கோமல் போன்றோரை மீட்கும்போது சரியான முறைகள் பின்பிற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் அவர்.
*****
அசாமின் பக்சா மாவட்டத்திலுள்ள போடோலேண்ட் வட்டாரப் பகுதியில் கோமலின் கிராமம் இருக்கிறது. மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் இது பிடிஆர் என அழைக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் 6வது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதி ஆகும்.
கோமல் வல்லுறவு செய்யப்பட்ட காணொளியை கிராமத்தில் இருக்கும் பலரும் பார்த்திருக்கின்றனர். ஒன்றுவிட்ட சகோதரன்தான் படம்பிடித்து அனைவருக்கும் அனுப்பி இருக்கிறான். “என் மாமா (தாய்மாமாவும் வல்லுறவு செய்தவனின் தந்தையும் ஆவார்) எல்லாவற்றுக்கும் நான்தான் காரணமென திட்டுவார். அவரது மகனை நான் வசியப்படுத்தியதாக சொன்னார். என் தாயின் முன்னாலேயே என்னை இரக்கமின்றி அடிப்பார். அழுதபடி என் தாய், அவரை நிறுத்தச் சொல்லி மன்றாடுவார்,” என கோமல் நினைவுகூருகிறார். முடிவோ தீர்வோ தென்படாத நிலையில் 10 வயது கோமல் தன்னைத் தானே வதைத்துக் கொள்ளத் தொடங்கினார். “என் கோபத்தையும் வலியையும் தணிக்க என் கையை ப்ளேடால் வெட்டிக் கொள்வேன். என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன்.”
பிகாஷ் அண்ணனும் (மாமா பையனின் நண்பன்) காணொளி பார்த்தவர்களில் ஒருவன். ‘தீர்வு’ கொடுப்பதாக சொல்லி அவன் அணுகினான்.
“சிலிகுரிக்கு (அருகாமை நகரம்) வந்து விபச்சாரத்தில் சேரும்படி கூறினான். குறைந்தபட்சம் வருமானமேனும் ஈட்டலாம் என்றும் தாயையும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினான். கிராமத்தில் வசிப்பதை விட அது மேலானது என்றும் என் பெயர் கெட்டுவிட்டதாகவும் கூறினான்,” என்கிறார் கோமல்.
சில நாட்களில், அந்த இளம் குழந்தை தன்னோடி ஓடி வரச் செய்தான் பிகாஷ். 10 வயது கோமல் மேற்கு வங்க சிலிகுரி நகரத்தின் கல்பாரா பகுதியிலுள்ள விபச்சார விடுதிக்குக் கடத்தப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 370-ன்படி மிரட்டல், வற்புறுத்தல், முறைகேடு, ஏமாற்று, அதிகாரப் பிரயோகம் ஆகியவற்றின் மூலமாக குழந்தை தொழிலாளராக்கவும், கட்டாயத் தொழிலாளராக்கவும் விபசாரத்துக்காகவும் மனிதக் கடத்தல் என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 1956ம் ஆண்டின் ஆள்கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (ITPA) 5ம் பிரிவு, விபச்சாரத்துக்கென ஒரு நபரை சேர்த்துவிடுவது தண்டனைக்குரிய குற்றம். “உச்சபட்சத் தண்டனை பதினான்கு வருடங்கள் வரை கிடைக்கும்.” ITPA சட்டம் குறிப்பிடும் குழந்தை என்பவர், 16 வயதுக்குட்பட்டவர்.
பிகாஷ் கடத்தியது தெளிவான குற்றமாக இச்சம்பவத்தில் இருந்தபோதிலும் எந்தவித புகாரும் அவர் மீது கொடுக்கப்படவில்லை. சட்டப்பூர்வ தண்டனையை அவர் எப்போதும் பெறுவதற்கும் வாய்ப்பில்லை.
சில்குரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு, ஒரு ரெய்டில் கால்பராவிலிருந்து கோமல் காவலர்களால் மீட்கப்பட்டார். CWC மன்றத்துக்கு முன் கொண்டு செல்லப்பட்டதை நினைவுகூருகிறார். பிறகு மைனர்களுக்கான காப்பகத்தில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டார். அதற்குப் பிறகு அசாமுக்கு செல்லும் ரயிலில் எவரின் துணையும் இல்லாமல் வீட்டுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டதைப் போலவே 2024-லிலும் அனுப்பி வைக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட குழந்தைகளுக்கென பின்பற்றப்பட வேண்டிய முறை 2015லும் சரி, 2024லும் சரி கோமலுக்கு பின்பற்றப்படவில்லை.
’ வணிகரீதியான பாலினச் சுரண்டல் ’ மற்றும் ‘ கட்டாய உழைப்பு ’ ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் செயல்படும் முறையின்படி துப்பறியும் அதிகாரி ஒருவர் வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வயதை உறுதிபடுத்தும் வகையில் பிறப்பு சான்றிதழையும் பள்ளி சான்றிதழையும் குடும்ப அட்டையையும் அவர் பெற வேண்டும். ஆவணங்கள் இல்லை என்றாலோ பெற முடியவில்லை என்றாலோ பாதிக்கப்பட்டவர், “நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலான வயது பரிசோதனை”க்கு பாதிக்கப்பட்டவர் அனுப்பப்பட வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்ஸோ சட்டப்பிரிவு 34 (2)ன்படி குழந்தையின் உண்மையான வயதை சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்து “எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்.”
டெல்லியில் கோமலை மீட்ட காவலர்கள் அவரளித்த பிறப்பு சான்றிதழை ஏற்கவில்லை. அவர் சட்டம் கோரும் அரசின் மருத்துவப் பரிசோதனைக்கும் (MLC) கொண்டு செல்லப்படவில்லை. குழந்தைகள் நல காப்பகத்துக்கும் கொண்டு செல்லப்படவில்லை. எலும்பு வழியாக வயதை நிர்ணயிக்கும் பரிசோதனை யும் நடத்தவில்லை.
அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்டவரை குடும்பத்திடம் சேர்க்க வேண்டுமென ஒருமித்த கருத்துக்கு வந்தாலும் கூட, அவரை சேர்ப்பிப்பதற்கு முன், விசாரணை அதிகாரியோ குழந்தைகள் நல காப்பகமோ “வீட்டுக்கு முறையாக தெரிவித்து உறுதிபடுத்தியிருக்க வேண்டும்.” மேலும் “பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டால் சமூகத்துடன் இயைந்து அவர் ஏற்கப்படும் சாத்தியங்களை”யும் அதிகாரிகள் பதிவு செய்திருக்க வேண்டும்.
“மேலும் ஆபத்து” நேரக் கூடிய பணியிடத்துக்கோ வசிப்பிடத்துக்கோ பாதிக்கப்பட்டவர்கள் எந்த காரணத்தாலும் கொண்டு செல்லப்படக் கூடாது. வல்லுறவு செய்து கடத்தப்பட்ட அசாமுக்கே கோமல் கொண்டு செல்லப்படுவது, விதிமீறல். வீட்டில் உறுதிபடுத்தவில்லை. கோமலின் குடும்பம் குறித்து எவரும் கண்டறியவும் இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனம் நிவாரணத்தின் பொருட்டு தொடர்பு கொள்ளும் வகையில் தொடர்பு எண் பற்றி கூட எவரும் பொருட்படுத்தவில்லை.
மேலும் அரசாங்கத்தின் உஜ்வாலா திட்ட த்தின்படி, ஆள்கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலுக்குள்ளானவர்களுக்கு “உடனடி நிவாரண சேவைகளும் அடிப்படைத் தேவைகளும் அளிக்கப்பட வேண்டும்.” மனநல ஆலோசனை, தொழிற்பயிற்சி போன்றவை வழங்கப்பட வேண்டும். பாலியல் தொழிலுக்கான ஆள்கடத்தல் வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட குழந்தைகள் ஆலோசகர் ஆனி தியோடோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆதரவு வழங்கப்படுவதற்கான முக்கியத்துவத்தையும் அறிவுறுத்துகிறார். “சமூகத்துடன் சேர்ந்த பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனை வழங்குவதுதான் பெரும் சவால்,” என்கிறார் அவர்.
டெல்லியின் விபச்சார விடுதிகளிலிருந்து மீட்கப்பட்ட பிறகு, இரண்டு மணி நேரங்கள் கோமலுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு உடனடியாக குடும்பத்துடன் சேர்ப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மனநல ஆலோசகர் ஆனி, “பல வருட காலமாக பாதிப்பில் உழன்றிருக்கும் ஒருவர் எப்படி இரண்டு மூன்று மாதங்கள் அல்லது இரண்டு, மூன்று நாட்கள் மன நல ஆலோசனையில் மீண்டெழுந்துவிட முடியும்?” எனக் கேட்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு, தங்களின் துயரங்களை இந்த அமைப்பு விரும்பும் வண்ணம் வெளிப்படுத்துவதற்கு இந்த அமைப்பு அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.
பாதிக்கப்பட்டவர்களின் மனநல சிக்கல்களை அரசு அமைப்புகள் அதிகரித்து , அவர்களை மீண்டும் ஆள் கடத்தலுக்கு ஆட்படவோ பாலியல் தொழிலுக்கு செல்லவோ வைக்கின்றன என்கின்றனர் வல்லுநர்கள். “தொடர் கேள்விகள் மற்றும் பரிவின்மை ஆகியவற்றால், மீண்டும் தங்களின் துயரங்கள் நினைவுகூற வைக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கின்றனர். ஆள் கடத்தல் செய்தவர்களும் விடுதி உரிமையாளர்களும் தரகர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கல்கள் அளித்த பிறரும் முன்பு செய்ததை தற்போது அரசாங்க அமைப்புகள் செய்கின்றன,” என முடிக்கிறார் ஆனி.
*****
முதல்முறை கோமல் மீட்கப்பட்டபோது அவருக்கு 13 வயதுக்கு மேல் இருக்காது. இரண்டாம் முறையின்போது அவருக்கு 22 வயது இருக்கலாம். ‘மீட்கப்பட்டு’ டெல்லியை விட்டு விருப்பத்துக்கு மாறாக அனுப்பப்பட்டிருக்கிறார். மே 2024-ல் அசாமுக்கு அவர் ரயிலேறினார். ஆனால் அவர் பாதுகாப்பாக போய் சேர்ந்தாரா? தாயுடன் அவர் வாழ்வாரா அல்லது மீண்டும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று சேர்வாரா?
பாலியல் மற்றும் பாலின வன்முறையில் பிழைத்தவர்கள் மீள்வதற்கு தடையாக இருக்கும் அமைப்புரீதியான, சமூகரீதியான, நிறுவனரீதியான அம்சங்களை நாடு முழுவதும் செய்தியாக்கும் பணியின் ஓர் அங்கம் இக்கட்டுரை. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட பணி இது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்