“என் அச்சத்தை எப்படி விவரிப்பது? பீதியில் என் குலை நடுங்குகிறது. எப்போது திறந்தவெளிக்கு வருவேன் என்பதே எப்போதும் என் சிந்தனையாக இருக்கிறது,” என்கிறார் நண்டு பிடிப்பவரும், மீனவப் பெண்ணுமான பாருல் ஹால்தார் (41 வயது). மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதியில் உள்ள அடர்ந்த அலையாத்திக் காட்டில் நண்டு வேட்டைக்காக செல்லும் நாட்களில் தனது உள்ளத்தை சில்லிட வைக்கும் அச்சம் குறித்தே அவர் இப்படிக் கூறுகிறார். நண்டு வேட்டைப் பருவம் வரும்போதெல்லாம் அங்குள்ள அலையாத்திக் காடுகளின் குறுக்கு நெடுக்காக ஓடும் சிற்றாறுகளிலும், ஓடைகளிலும் படகு வலித்துச் செல்லும் பாருல், எங்கே புலி பதுங்கியிருக்குமோ என்ற அச்சத்துடன் எப்போதும் உஷார் நிலையில் இருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், கொசாபா வட்டாரத்தில் உள்ள லக்ஸ்பகான் என்ற ஊரைச் சேர்ந்தவர் பாருல். அவர் கரல் ஆற்றில் தனது மரப்படகை செலுத்தியபடியே, குறுக்கு வலையால் ஆன வேலித் தடுப்பை வெறித்துப் பார்க்கிறார். அந்த வேலிக்கு அப்பால் இருப்பது மாரிச்ஜாப்பி காடு. இந்தக் காட்டில்தான் அவரது கணவர் இஷார் ரோனோஜித் ஹால்தார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புலி தாக்கி இறந்துபோனார்.
வலித்துக் கொண்டிருந்த துடுப்பை படகின் விளிம்பில் சாய்த்து வைக்கிறார் பாருல். இந்த சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் அவரோடு படகில் வருகிறார் அவரது தாய் லோகி மண்டல் (56 வயது). அவரும் மீனவர்தான்.
இஷாரை மணந்துகொண்ட போது பாருல் 13 வயது சிறுமி. அவரது மாமியார் வீடும் ஏழைக் குடும்பம்தான். ஆனால், அவர்கள் மீன் பிடிக்கவோ, நண்டு பிடிக்கவோ காட்டுக்குச் சென்றதில்லை. “காட்டுக்கு வருவதற்கு நான்தான் அவரை சம்மதிக்க வைத்தேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு காட்டில் அவர் உயிரிழந்தார்,” என்கிறார் பாருல்.
நினைவில் தோய்ந்த பாருல், அமைதியில் உறைகிறார். இறக்கும்போது இஷாருக்கு 45 வயது. அவர்களது நான்கு மகள்களை வளர்க்கும் பொறுப்பு இப்போது பாருலின் தலையில்.
சிறு ஓய்வுக்குப் பிறகு தாயும் மகளும் மீண்டும் துடுப்பு போடுகிறார்கள். அவர்களுக்கு வியர்க்கிறது. தற்போது மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள அலையாத்திக் காட்டில் இருந்து ஒரு பாதுகாப்பான தொலைவில் அவர்கள் படகை செலுத்துகிறார்கள். மீன்களை வளரவிடவேண்டும் என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதம் அலையாத்திக் காடுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் தனது குளத்தில் மீன் பிடித்து விற்று பிழைப்பை ஓட்டுவார் பாருல்.
சுந்தரவனத்தில் வங்கப் புலிகள் தாக்கும் “பல விபத்துகள் நடக்கின்றன,” என்கிறார் பாருல். உலகிலேயே புலிகள் வாழும் ஒரே அலையாத்திக் காடு சுந்தரவனக் காடுதான். “நிறைய பேர் காட்டில் நுழைகிறார்கள். இதனால், விபத்துகளும் அதிகரிக்கின்றன. வனத்துறை அதிகாரிகள் எங்களை காட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்,” என்கிறார் பாருல்.
சுந்தரவனப் புலிகள் காப்புக் காட்டில், குறிப்பாக மீன்பிடிக் காலத்தில், புலி தொடர்புடைய மரணங்கள் அரிதானவை அல்ல. 2018 முதல் ஜனவரி 2023 வரையிலான காலத்தில் சுந்தரவனக் காடுகளில் புலியால் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், புலி தாக்கிய நிறைய சம்பவங்களை உள்ளூர் மக்கள் நினைவுகூருகிறார்கள். எனவே குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உண்மையில் புலியால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.
சுந்தரவனக் காடுகளில் 2018-ல் 88 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022 ல் 100 ஆக உயர்ந்ததாக புலிகளின் நிலை பற்றிய அரசாங்க அறிக்கை கூறுகிறது.
*****
மீன் பிடிப்பதை தம் தாயிடம் இருந்து கற்றுக்கொண்ட பாருல், 23வது வயதில் இருந்து மீன் பிடித்துவருகிறார்.
ஆனால், அவரது தாய் லோகி தமது 7 வயதில் இருந்தே தம் தந்தையோடு காட்டுக்குச் சென்று மீன் பிடித்து வருகிறார். அவரது கணவர் சந்தோஷ் மண்டல் (64 வயது) 2016ம் ஆண்டு ஒரு புலியோடு சண்டை போட்டு உயிரோடு வீடு திரும்பினார்.
“அப்போது அவரிடம் கத்தி இருந்தது; அவர் புலியோடு சண்டை போட்டார். ஆனால், அந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது துணிச்சல் மங்கிவிட்டது. அதன் பிறகு காட்டுக்குள் செல்ல அவர் மறுத்துவிட்டார்,” என்கிறார் லோகி. ஆனால், காட்டுக்குப் போவதை லோகி நிறுத்தவில்லை. கணவர் காட்டுக்குப் போக மறுத்தவுடன் அவர் தனது மகள் பாருல், மருமகன் இஷார் ஆகியோருடன் காட்டுக்குப் போகத் தொடங்கினார். பிறகு இஷார் புலியால் கொல்லப்பட்டார்.
“வேறு யாருடனும் காட்டுக்குப் போகும் துணிச்சல் எனக்கு இல்லை. பாருல் தனியாக காட்டுக்குப் போவதையும் நான் அனுமதிப்பதில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை நான் அவளோடு செல்வேன். காட்டுக்குள் உங்கள் சொந்த ரத்தம்தான் உங்களைப் பாதுகாக்க முடியும்,” என்கிறார் லோகி.
இரண்டு பெண்களும் பேசிக்கொள்ளாமல் இணையாக துடுப்பு போடுகிறார்கள். நண்டு பிடிக்கும் பருவம் வந்துவிட்டால் அவர்கள் வனத்துறையிடம் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, படகு வாடகைக்கு எடுத்துக்கொண்டு நண்டு வேட்டைக்குப் புறப்படுவார்கள்.
ஒரு நாளைக்கு 50 ரூபாய் வாடகை தருகிறார் பாருல். வழக்கமாக அவர்களோடு மூன்றாவதாக இன்னொரு பெண்ணும் வருவார். இந்த மூன்று பெண்களும் குறைந்தது 10 நாட்களுக்காவது காட்டுக்குள் தங்கவேண்டும். “நாங்கள் சமைப்பது, சாப்பிடுவது தூங்குவது எல்லாம் படகில்தான். அரிசி, பருப்பு, டிரம்மில் குடிநீர், சிறு ஸ்டவ் அடுப்பு ஆகியவற்றை எங்களோடு எடுத்து வருவோம். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் படகைவிட்டு இறங்கமாட்டோம். மலம், சிறுநீர் கழிப்பதற்காக கூட இறங்கமாட்டோம்,” என்கிறார் பாருல். அதிகரிக்கும் புலி தாக்குதல்தான் இந்த எச்சரிக்கைக்கு காரணம் என்கிறார் அவர்.
“புலிகள் இப்போது படகில்கூட ஏறி மனிதர்களை தூக்கிச் செல்கின்றன. என் கணவரைக் கூட படகில் இருக்கும்போதுதான் புலி தாக்கியது,” என்கிறார் பாருல்.
மீன் பிடிக்கச் செல்லும் 10 நாட்களில் மழை பெய்தாலும்கூட அவர்கள் படகில்தான் இருக்கிறார்கள். “ஒரு மூலையில் நண்டுகள் இருக்கும். இன்னொரு மூலையில் மனிதர்கள் இருப்பார்கள். மூன்றாவது மூலையில் சமையல் நடக்கும்,” என்கிறார் லோகி.
மீன்பிடிக்க காட்டுக்குள் செல்லும் ஆண்களைப் போலவே, மீன்பிடிக்கச் செல்லும் பெண்களும் புலியால் தாக்கப்படும் ஆபத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், மனித – விலங்கு மோதல் மிகுந்திருக்கும் சுந்தரவனக் காடுகளில் எத்தனை பெண்கள் புலி தாக்கி இறந்தார்கள் என்ற தகவல் ஏதும் இல்லை.
“பதிவான மரணங்களில் பெரும்பாலானவை ஆண்களின் மரணம்தான். பெண்களையும் புலிகள் தாக்கியுள்ளன. ஆனால், அது தொடர்பான தரவுகள் திரட்டப்படவில்லை. பெண்களும் காட்டுக்குச் செல்கிறார்கள். ஆனால், ஆண்களை ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையில்தான் செல்கிறார்கள்,” என்கிறார் ‘சிறிய அளவில் மீன்பிடிக்கும் தொழிலாளர்களுக்கான தேசிய மேடை’ அமைப்பாளர் பிரதீப் சாட்டர்ஜி. காட்டுக்கு எவ்வளவு அருகில் வசிக்கிறீர்கள் என்பது முக்கியக் காரணி. காட்டில் இருந்து தொலைவில் உள்ள ஊர்களைச் சேர்ந்த பெண்கள் காட்டுக்குச் செல்வதில்லை. போதிய அளவில் மற்ற பெண்களும் சென்றால்தான் அவர்கள் செல்கிறார்கள்.
பாருல், லோகி ஆகியோரது லக்ஸ்பகான் கிராமத்தில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4,504; இதில் 48 சதவீதம் பேர் பெண்கள். அந்த ஊரில் ஏறத்தாழ வீட்டுக்கு ஒரு பெண், 5 கி.மீ. தொலைவில் உள்ள மாரிச்ஜாப்பி காட்டுக்குப் போகிறார்.
ஆபத்தான இந்த வேலைக்குச் செல்வதற்கு, நண்டுகளுக்கு கிடைக்கும் நல்ல விலையும் ஒரு காரணம். “மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. முக்கிய வருமானம் தருவது நண்டுகள்தான். காட்டுக்குப் போனால், தினம் 300 முதல் 500 ரூபாய் சம்பாதிப்பேன்,” என்கிறார் பாருல். பெரிய நண்டுகள் என்றால் கிலோ ரூ.400 முதல் 600 விலை போகும். சிறிய ரகம், கிலோ ரூ.60 முதல் 80 வரை விலை போகும். மூன்று பெண்கள் சேர்ந்து ஒரு பயணம் போனால், மொத்தம் 20 முதல் 40 கிலோ நண்டு கிடைக்கும்.
*****
சுந்தரவனக் காடுகளுக்கு நண்டு பிடிக்கச் செல்கிறவர்களுக்கு ஒரு பக்கம் புலியால் ஆபத்து என்றால், கிடைக்கும் நண்டுகள் அளவு குறைவது இன்னொரு சிக்கல். “காட்டுக்கு நண்டு பிடிக்க நிறைய பேர் வருகிறார்கள். முதலில் ஏராளமான நண்டுகள் கிடைத்தன. இப்போது கடுமையாக உழைத்தால்தான் நண்டுகளைப் பார்க்க முடிகிறது,” என்கிறார் பாருல்.
நண்டுகள் எண்ணிக்கை குறைவதால், மீனவப் பெண்கள் காடுகளுக்கு நடுவே நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்போது, புலி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
இப்பகுதி மீனவர்கள், போதிய அளவில் மீன், நண்டு தேடி அலையாத்திக் காட்டின் நடுப்பகுதி வரை செல்வதால் அவர்கள் புலிகளோடு மோதலை எதிர்கொள்கிறார்கள் என்று கூறும் சாட்டர்ஜி, “வனத்துறை அதிகாரிகள் புலிகளைப் பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், மீன்கள் இல்லாவிட்டால், புலிகளும் இருக்காது. ஆற்றில் மீன்வளம் பெருகினால், மனித – விலங்கு மோதலும் குறையும்,” என்றார்.
ஆற்றில் இருந்து திரும்பிய பாருல், பகல் உணவு சமைக்கும் வேலையில் இறங்குகிறார். தனது குளத்தில் இருந்து பிடித்த மீனை சமைக்கும் அவர், சோறாக்கி, மாங்காய் சட்னியில் சர்க்கரையைப் போட்டு அடிக்கிறார்.
தனக்கு நண்டு சாப்பிடுவது பிடிக்காது என்கிறார் அவர். உரையாடலில் வந்து சேர்கிறார் அவரது தாய் லோகி. “நானும் நண்டு சாப்பிட மாட்டேன். என் மகளும் நண்டு சாப்பிட மாட்டாள்,” என்கிறார் அவர். ஏன் என்று கேட்டபோது, விளக்கமாக எதுவும் கூறாத அவர், “விபத்து” என்று மட்டும் கூறுகிறார். தனது மருமகன் கொல்லப்பட்டதைத்தான் அவர் அப்படி சொல்கிறார்.
புஷ்பிதா, பரோமிதா, பாபியா, பாப்ரி ஆகிய பாருலின் நான்கு மகள்களில் ஒருவர்கூட காட்டில் வேலை செல்வதில்லை. புஷ்பிதாவும், பாபியாவும் மேற்கு வங்கத்தின் வேறு மாவட்டங்களில் வீடுகளில் வேலை செய்கிறார்கள். பரோமிதா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இளைய மகள் பாப்ரி (13 வயது) லக்ஸ்பகான் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கிறாள். ஆனால், அவள் உடல் நலத்தோடு இல்லை. “அவளுக்கு டைபாய்டு காய்ச்சலும் மலேரியாவும் வந்துவிட்டது. சிகிச்சைக்காக 13 ஆயிரம் ரூபாய் செலவிட்டேன். தவிர, அவளுக்கு விடுதிக் கட்டணமாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் அனுப்புகிறேன்,” என்கிறார் பாருல்.
அவருக்கும் உடல் நிலை சரியில்லை. நெஞ்சு வலி வருவதால் அவரால் இந்த ஆண்டு மீன் பிடிக்கவோ, நண்டு பிடிக்கவோ செல்ல முடியவில்லை. அவர் தற்போது, பெங்களூருவில் உள்ள தமது மகள் பரோமிதா மிஸ்ட்ரியுடன் வசிக்கிறார்.
“கொல்கத்தாவில் உள்ள ஒரு டாக்டர் என்னை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்துகொள்ளும்படி கூறினார். அதற்கு 40 ஆயிரம் ரூபாய் ஆகும். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை,” என்றார் அவர். பெங்களூரு போய் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தனது மகள், மருமகனோடு தங்குவதென்று முடிவு செய்தார் பாருல். அங்கே மருத்துவரைப் பார்த்தபோது அவர் 6 மாதத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்து, ஓய்வும் எடுக்கச் சொன்னார்.
“எப்போதும், குறிப்பாக காட்டுக்குப் போகும்போதெல்லாம், என் மனதில் நிலவும் அச்சம் காரணமாகவே எனக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் கணவர் புலியால் கொல்லப்பட்டார். என் தந்தையையும் புலி தாக்கியது. அதனால்தான் எனக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது,” என்கிறார் அவர்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்