தொலைதூரத்தில் உள்ள மலியாமாவின் புத்த குக்கிராமத்தில், அமைதியான மதிய வேளையை குலைக்கும் விதமாக, ஆரவாரத்தோடும், கூச்சலோடும், ஒரு 'ஊர்வலம்' நடந்து செல்கிறது. ஆமாம், இது அக்டோபர் மாதம். ஆனால் பூஜைகள் இல்லை, பந்தல்கள் இல்லை. 'ஊர்வலத்தில்' 2 முதல் 11 வயதுக்குட்பட்ட எட்டு முதல் பத்து மோன்பா குழந்தைகள் உள்ளனர். துர்கா பூஜையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால் வீட்டில் இருக்கிறார்கள்.
பொதுவாக, மற்ற நாட்களில், விளையாட்டு நேரத்தை அறிவிக்கும் வகையில் பள்ளியில் மணி அடித்திருப்பர். இரண்டு தனியார் பள்ளிகளும் அருகிலுள்ள அரசுப் பள்ளியும், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிராங்கில் உள்ளன. குழந்தைகள் தினமும் நடந்து செல்ல வேண்டிய இந்த பள்ளிகள், கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. கொஞ்சம் சுதந்திரமான இந்த காலகட்டத்தில், விளையாட்டு நேரத்தை மணி அடிக்காமலேயே அவர்கள் உணர்கிறார்கள். அதாவது மதிய உணவுக்குப் பிறகு, 2 மணி. கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள இந்த குக்கிராமத்தில் இணைய இணைப்பு மோசமாக இருக்கும். மேலும் அவர்கள் தங்கள் பெற்றோரின் மொபைல் போன்களை அவர்களிடம் திருப்பித் தர வேண்டிய நேரம் இது. அதாவது மன்கா லாய்டாவின் (ஒரு 'வால்நட் விளையாட்டு') காலவரையற்ற சுற்றுகளுக்காக பிரதான வீதியில் கூட வேண்டிய நேரம் இது.
இந்த குக்கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளில் வால்நட்கள் அமோகமாக வளர்கிறது. இந்தியாவில், உலர் பழங்கள் உற்பத்தி செய்யும் நான்காவது பெரிய மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். மேற்கு கமெங்கைச் சார்ந்த இம்மாவட்டத்தின் வால்நட்கள் அவற்றின் 'ஏற்றுமதி' தரத்திற்கு பெயர் பெற்றவை. ஆனால் இந்த குக்கிராமத்தில் யாரும் அவற்றை பயிரிடுவதில்லை. குழந்தைகளுக்குக் கிடைக்கும் சிலவும் காட்டில் இருந்து பெறப்படுவது தான். திபெத்திலிருந்து மலியாமாவிற்கு வந்து வாழும் 17 முதல் 20 மோன்பா குடும்பங்கள், பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் வேட்டைக்காரர்கள். தற்போது வீட்டு உபயோகத்திற்காக அவர்க்ள் வனப் பொருட்களை சேகரிக்கின்றனர். "கிராமவாசிகள் ஒவ்வொரு வாரமும் குழுக்களாக காட்டிற்குள் சென்று காளான்கள், கொட்டைகள், பெர்ரி, விறகு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வருகிறார்கள்," என்று 53 வயதான ரிஞ்சின் ஜோம்பா கூறுகிறார். குழந்தைகள், ஒவ்வொரு மதியமும் தெருக்களில் இறங்கி விளையாடுவதற்கு முன்பு தங்கள் கைகளையும், பைகளையும் வால்நட்களால் நிரப்புகின்றனர்.
வால்நட்கள், தெருவில் ஒரே வரிசையில் வைக்கப்பட்டிருக்கும். விளையாடும் ஒவ்வொருவரும் அந்த வரிசையில் மூன்று வால்நட்டை வைக்கிறார்கள். பின்னர் அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் ஒரு வால்நட்டை, வரிசையில் இருக்கும் வால்நட்டின் மீது குறிவைத்து மாறி மாறி எறிகிறார்கள். நீங்கள் எத்தனை வால்நட்களை அடித்து நாக் அவுட் செய்கிறீர்களோ, அத்தனையும் உங்களுக்குத் தான். நீங்கள் வென்ற வால்நட்களை நீங்களே சாப்பிடலாம்! கணக்கில்லாத சுற்றுகளுக்குப் பிறகு, போதுமான அளவு வால்நட்களை சாப்பிட்டதும், அவர்கள் விளையாடும் அடுத்த விளையாட்டு, தா கியாண்டா லாய்டா (கயிறு இழுக்கும் போட்டி).
இதற்கு ஒரு கயிறு தேவை - கயிறாக ஒரு துணியை எடுத்துக் கொள்ளலாம். இந்த விளையாட்டிலும், குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கின்றனர். குடும்பத்தின் நீண்ட ஆயுளுக்காக ஆண்டுதோறும் நடக்கும் பூஜைக்குப் பிறகு வீடுகளில் ஏற்றப்படும் கொடிகளின் மீதமுள்ள துணிகள் தான் இதற்கு பயன்படுகின்றது.
ஒவ்வொரு சில மணி நேரத்துக்கு ஒரு முறை விளையாட்டுகள் மாறிக்கொண்டே இருக்கும். கோ-கோ, கபடி, குட்டைகளில் ஓடுதல் அல்லது குதித்தல் போன்றவையும் இதில் அடங்கும். MGNREGS தளங்களுக்கு 'ஜாப் கார்டு வேலைக்கு' செல்லும், அவர்களின் பெற்றோர் செய்வது போலவே, சில நாட்கள் குழந்தைகள் JCB (அகழ்பொறி) பொம்மைகள் வைத்து மண்ணைத் தோண்டி விளையாடுகிறார்கள்.
விளையாட்டிற்கு பின் சிலர் அருகிலுள்ள ஒரு சிறிய சக் மடாலயத்திற்குச் செல்கின்றனர், வேறு சிலர், தங்கள் பெற்றோருக்கு உதவ பண்ணைகளுக்குச் செல்கின்றனர். மாலை வேளையில், மீண்டும் 'ஊர்வலம்' திரும்பி, வழியில் உள்ள மரங்களிலிருந்து ஆரஞ்சு அல்லது சீமைப் பனிச்சை பழங்களைப் பறித்து சாப்பிடுவதோடு நாள் நிறைவடைகிறது.
தமிழில் : அஹமத் ஷ்யாம்