”ஏ பேட்டி தனி எக் கோதா சினா லே லே
மார்தோ ஜிதோ மே சாத் ஹொயேலா…
ஜெய்சன் ஆயெல் ஹை தைசான் அகேலே நா ஜா…

(ஏ பெண்ணே, என்னுடைய முத்திரையை எடுத்துக் கொள்…
வாழ்விலும் சாவிலும் அது உன்னுடன் இருக்கும்.
தனியாக வந்தது போல், நீ தனியாக செல்ல மாட்டாய்…)”

மண்டர் ஒன்றியத்தின் கிராமங்களில் வீடு வீடாக செல்லும் ராஜ்பதி தேவி இவ்வாறு பாடுகிறார். அவரின் தோளில் தொங்கும் பிளாஸ்டிக் சாக்குப் பையில், சில பாத்திரங்களும் ஊசிகளின் பெட்டியும் இருக்கின்றன. ராஜ்பதி, கோத்னா (பச்சைக் குத்தும்) கலைஞர் ஆவார். பூக்கள், நிலா, தேள்கள் மற்றும் புள்ளிகள் ஆகியவற்றின் படங்களை இலவசமாக பச்சைக் குத்துவார். 45 வயதாகும் அவர், இக்கலையை ஊர் ஊராக சென்று செய்யும் கடைசி பெண் கலைஞர்களில் ஒருவர் ஆவார்.

மாயி சங்கே ஜாத் ரஹி தா தேகாத் ராஹி உஹான் கோதாத் ரஹான், தா ஹமாஹு தேக்-தேக் சிகாத் ராஹி. கர்தே கர்தே ஹமாஹு சிக் காயிலி , (என் தாயுடன் சென்று, அவர் கோத்னா செய்வதை பார்த்திருக்கிறேன். இறுதியில் நானும் அதைக் கற்றுக் கொண்டேன்),” என்கிறார் ஐந்தாம் தலைமுறை கலைஞரான ராஜ்பதி

பல நூற்றாண்டு பழமையான கோத்னா கலை, ராஜ்பதியின் மலர் சமூகத்துக்கு (பிற்படுத்தப்பட்ட சமூகம்) பல தலைமுறைகளாக கையளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உடலின் பல பகுதிகளிலும் பச்சை குத்தப்படுகிறது. பல பகுதிகளுக்கும் சமூகங்களுக்கும் வேறுபடும் முத்திரைகளும் அர்த்தங்கள் கொண்ட படங்களும் பச்சை குத்தப்படுகின்றன. பெரும்பாலும் பெண்கள்தான் ஆண்களை விட கோத்னாவை தேர்ந்தெடுக்கின்றனர்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: ராஜ்பதி தேவி வீட்டுக்கு முன்னால் கணவர் ஷிவ்நாத் மலருடனும் மகன் சோனுவுடனும் பேரன் அதுலுடனும் அமர்ந்திருக்கிறார். வலது: அவரின் கைகளில் பச்சை குத்தியிருக்கும் பொதி (மேலே) மற்றும் டங்கா ஃபூல் (கீழே) ஆகிய இரு முத்திரைகளை காட்டுகிறார்

மணி, பிற்பகல் மூன்று. ஆறு மணி நேரங்களாக ராஜ்பதி, ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் நடந்து, கார்கே பஸ்தியிலுள்ள ஈரறை வீட்டுக்கு திரும்புகிறார். மண்டர் கிராமத்தின் மலர் சமூகத்துக்கான சிறு வசிப்பிடம் அது. சில நாட்கள் அவர் 30 கிலோமீட்டர் தூர அளவும் சென்று, வீட்டில் செய்யும் பாத்திரங்களை விற்கிறார். கோத்னா போட்டுக் கொள்ளும்படி மக்களை கேட்கிறார்.

பாத்திரங்களை அவரது 50 வயது கணவர் ஷிவ்நாத், தோக்ரா என்னும் பாரம்பரிய உலோக உத்தியை பயன்படுத்தி செய்கிறார். பெரும்பாலும் வீட்டிலுள்ள மகன்கள், கணவர் போன்ற ஆண்களுதான் அலுமினியம் மற்றும் பித்தளைப் பொருட்களை செய்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோவொரு வகையில் பங்களிக்கின்றனர். ராஜ்பதி, அவரது மகள் மற்றும் மருமகள்கள் போன்ற பெண்கள், வார்ப்புகளை உருவாக்கி, வெயிலில் அவற்றை காய வைக்கும் வேலையை செய்கின்றனர். மண்ணெண்ணெய் விளக்கு, பூஜை பாத்திரங்கள், கால்நடைகளுக்கு மணிகள், அளவு பாத்திரங்கள் போன்ற அன்றாடப் பொருட்களை அவர்கள் செய்கின்றனர்.

“இந்த சிறிய பொருளின் விலை ரூ.150,” என்கிறார் அவர், பைலா என நாக்பூரி மொழியில் அழைக்கும் பொருளை கையில் வைத்துக் கொண்டு. “இது அரிசியை அளப்பதற்கு பயன்படும். இதில் அரிசியை நிரப்பினால், கால்கிலோ அளவு பிடிக்கும்,” என்கிறார் அவர். இப்பகுதியில் பைலா மங்களகரமான பொருளென சொல்லும் அவர் வீட்டில் உணவு பற்றாக்குறை வராமலிருக்க உதவும் எனக் கூறுகிறார்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: பாரம்பரிய உலோக உத்தியான தோக்ராவை கொண்டு ஷிவ்நாத் பாத்திரங்கள் தயாரிக்கிறார். வலது: வீட்டுக்கு வெளியே அவர்கள் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறை

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: ராஞ்சி மாவட்டத்தின் மண்டர் ஒன்றியத்தில் ஊர் ஊராக சென்று ராஜ்பதி பாத்திரங்களை விற்கிறார். வலது: சிபாதோஹார் கிராமத்தில் வசிக்கும் கோஹாமணி தேவி, அரிசி அளக்க பயன்படும் பைலாவைக் காட்டுகிறார்

*****

ஒரு சிறு மஞ்சள் பெட்டி காட்டி, அவர், “இதில் ஊசிகளும் இதில் ஜார்ஜாரி கஜாரும் (கோஹ்ல்) இருக்கிறது,” என்றார்.

பிளாஸ்டிக் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து, அவர்கள் உருவாக்கும் வடிவங்களைக் காட்டுகிறார் ராஜ்பதி.

இஸ்கோ போதி கெஹ்தே ஹைன், ஔர் இஸ்கோ டங்கா ஃபூல் (இதற்கு பெயர் பொதி மற்றும் இதற்குப் பெயர் டங்கா ஃபூல்)” என்கிறார் ராஜ்பதி, ஒரு பானையில் பூக்கும் ஒரு பூவின் வடிவத்தை சுட்டிக் காட்டி. அந்த வடிவத்தைதான் அவர் தன் கையில் பச்சை குத்தியிருக்கிறார். “ இஸ்கோ ஹசுலி கேஹ்தே ஹெய்ன், யெ காலே மெயின் பண்டா ஹை (இதற்குப் பெயர் ஹசுலி , கழுத்தைச் சுற்றி இது செய்யப்படும்),” என்கிறார் ராஜ்பதி அந்த வடிவத்தைக் காட்டி.

உடலின் ஐந்து பகுதிகளில் வழக்கமாக ராஜ்பதி பச்சை குத்துவார்: கைகள், கால்கள், மூட்டு, கழுத்து மற்றும் நெற்றி. ஒவ்வொன்றுக்கு பிரத்யேகமான ஒரு வடிவம் உண்டு. கையில் பூக்களும் பறவைகளும் மீன்களும் இடம்பெறும். கழுத்தி வளைந்த கோடுகளும் புள்ளிகளும் கொண்ட வட்ட வடிவம் இடம்பெறும். நெற்றியில் இடம்பெறும் வடிவம் ஒவ்வொரு குழுவுக்கும் தனித்துவமானது.

“பல்வேறு பழங்குடி குழுக்களுக்கு பல்வேறு பச்சைக் குத்தும் பாரம்பரியங்கள் இருக்கின்றன. ஒராவோன்கள் மகாதேவ் ஜாட் (உள்ளூர் பூ) மற்றும் பிற பூக்களை குத்துவார்கள். காரியாக்கள் மூன்று நேர்கோடுகளையும் முண்டாக்கள் புள்ளி கோத்னா வையும் பச்சை குத்துவார்கள்,” என விளக்கும் ராஜ்பதி, கடந்த காலத்தில் நெற்றியிலிருக்கும் வடிவங்களை கொண்டு மக்களை அடையாளம் காணுவது வழக்கம் என்றும் கூறுகிறார்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: உடலின் ஐந்து பகுதிகளில் வழக்கமாக ராஜ்பதி பச்சை குத்துவார்: கைகள், கால்கள், மூட்டுகள், கழுத்து மற்றும் நெற்றி. ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்யேக வடிவம் உண்டு. நெற்றியில் இடம்பெறும் வடிவம் ஒவ்வொரு குழுவுக்கும் மாறும். வலது: கோத்னா கலைஞரான மொஹாரி தேவியுடன் ராஜ்பதி தேவி

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: சுனிதா தேவி, தன் கையில் மகாதேவ் ஜாட் எனப்படும் பூவின் வடிவத்தை பச்சை குத்தியிருக்கிறார் . வலது: தலித் சமூகத்தில் சுத்தத்தின் குறியீடாக இருக்கும் சுபாலி (மூங்கில் சுளகு) அவரின் காலில் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. உயர்சாதி நிலவுடமையாளர்கள் அதை வைத்துதான் நிலங்களில் அவரை வேலை பார்க்க அனுமதிப்பார்கள்

சுனிதா தேவி சுபாலியின் (மூங்கில் சுளகு) வடிவத்தை காலில் பச்சை குத்தியிருக்கிறார். பலாமு மாவட்டத்திலுள்ள செச்செரியா கிராமத்தில் வசிக்கும் 49 வயது நிரம்பிய அவர், அந்த வடிவம் பரிசுத்தத்தை குறிப்பதாக சொல்கிறார். “இது இல்லை என்றால் முன்பெல்லாம் வயல்களில் வேலை பார்க்க முடியாது. அசுத்தமானவர்களாக நாங்கள் கருதப்படுவோம். ஆனால் பச்சை குத்திய பிறகு, நாங்கள் சுத்தமாகி விடுவோம்,” என்கிறார் தலித் சமூகத்தை சார்ந்த இந்த குத்தகை விவசாயி.

“கோத்னா கலையின் பூர்விகமாக புதிய கற்கால குகை ஓவியங்களை சொல்லலாம். குகைகளிலிருந்து அது வீடுகளுக்கும் உடல்களுக்கும் நகர்ந்து விட்டது,” என விளக்குகிறார் ராய்ப்பூரின் பண்டிட் ரவிஷங்கர் ஷுக்லா பல்கலைக்கழகத்தில் புராதன இந்திய வரலாறு, பண்பாடு மற்றும் அகழாய்வுத்துறையின் ஆய்வு மாணவரான அன்சு திர்கி.

கோஹாமனி தேவியை போன்ற பலரும், கோத்னாவுக்கு குணமாக்கும் சக்தி இருப்பதாக நம்புகின்றனர். ஜார்க்கண்டின் லதேகார் மாவட்டத்திலுள்ள சிபாதோஹார் கிராமத்தில் வசிக்கிறார் 65 நிரம்பிய அவர். ஐம்பது ஆண்டுகளாக கோத்னா செய்து வரும் அவர், ஜஹார் கோத்னாவுக்கு பெயர் பெற்றவர் (விஷ பச்சை குத்துதல்). நோய்களை அது குணமாக்குவதாக நம்பப்படுகிறது.

“ஆயிரக்கணக்கான பேருக்கு கோத்னா கொண்டு கழுத்து கழலை நோயை நான் குணப்படுத்தி இருக்கிறேன்,” என்று சொல்கிறார், தாய் பச்சைக் குத்தியதால் குணமான தன் சொந்தக் கழலையைக் காட்டி. சட்டீஸ்கர், பிகார், வங்கம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் குணமாக்க கேட்டு அவரிடம் வருகின்றனர்.

கழலை மட்டுமின்றி, மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி மற்றும் பிற தீவிர வலிகளையும் கோஹாமணி போக்கியிருக்கிறார். எனினும் இக்கலை மறைந்து விடும் என்கிற பயம் அவருக்கு இருக்கிறது. “தற்போது அதிகமாக யாரும் பச்சைக் குத்திக் கொள்வதில்லை. கிராமங்களுக்கு நாங்கள் சென்றாலும் பெரிய வருவாய் கிடைப்பதில்லை. எங்களுக்கு பிறகு, இதை செய்ய யாரும் இருக்க மாட்டார்,” என்கிறார் கோஹாமணி.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: கோஹாமணி தேவி தன் வீட்டுக்கு வெளியே ஒரு பெட்டி நிறைய கோத்னாவுக்கான ஊசிகள் மற்றும் மையோடு. வலது: அவர் ஒரு தீப கோடாவை (மேலே) காட்டுகிறார். மூட்டில் பொதி வடிவத்தையும் காட்டுகிறார்

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: பிகாரி மலர்தான் கோஹமணியின் ஒரே மகன். வயிற்று வலி போக்க தாயால் ஜஹார் கோத்னா பச்சை குத்தியிருக்கிறார் அவர். வலது: கோஹமணியின் கணவர் ஜஹார் கோத்னாவை காலில் காட்டுகிறார். இப்பகுதியை சேர்ந்த பலரும் இந்த வடிவங்கள் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர்

*****

பச்சை குத்த ஒரு கோத்னா கலைஞருக்கு லால்கோரி கே தூத் (தாய்ப்பால்), காஜல் (கண் மை), மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை தேவை. பித்தளை ஊசிகளை கொண்டு போடப்படும் கோத்னா க்கள் பெதார்முகி சுயி என்றழைக்கப்படுகிறது. அது பயன்படுத்தும் பித்தளை முனை, துருவை தடுத்து, தொற்று பாதிப்பை குறைக்கிறது. “நாங்களே கண் மை உருவாக்கியிருக்கிறோம். ஆனால் இப்போது அதை வெளியில் வாங்குகிறோம்,” என்கிறார் ராஜ்பதி.

பச்சை குத்தும் வடிவத்தை சார்ந்து, இரு ஊசிகள் தொடங்கி பதினொரு ஊசிகள் வரை பயன்படுத்தப்படும். முதலில் கோத்னா கலைஞர் பாலையும் மையையும் கடுகு எண்ணையுடன் சேர்த்து ஒரு கலவை செய்வார். பிறகு வடிவத்தின் ஓவியம் பேனா அல்லது பென்சில் கொண்டு வரையப்படும். வடிவத்தை சார்ந்து ஊசிகள் தேர்ந்தெடுக்கப்படும். நுட்பமான வடிவத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஊசிகளும் தடித்த பார்டருக்கு ஐந்து அல்லது ஏழு ஊசிகளும் பயன்படுத்தப்படும். “எங்களின் கோத்னா அதிகமாக வலி கொடுக்காது,” என்கிறார் ராஜ்பதி.

வடிவத்தின் அளவை சார்ந்து, “சிறியதுக்கு சில நிமிடங்களும் பெரியதுக்கு சில மணி நேரங்களும் ஆகும்,” என்கிறார் ராஜ்பதி. பச்சைக் குத்தப்பட்ட பிறகு, மாட்டுச்சாணம் கொண்டு முதலிலும் பிறகு மஞ்சள் கொண்டும் அது கழுவப்படுகிறது. மாட்டுச்சானம் தீமையை போக்குவதாக நம்பப்படுகிறது. மஞ்சளும் கடுகு எண்ணெயும் தொற்றை தடுக்க பூசப்படுகிறது.

“கடந்த காலத்தில் கோத்னா போடப்படும்போது பெண்கள் பாடுவார்கள். ஆனால் இப்போது எவரும் பாடுவதில்லை,” என்கிறார் ராஜ்பதி. அவர் கோத்னா போட சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா வரை கூட சென்றிருக்கிறார்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: பச்சை குத்த ஒரு கோத்னா கலைஞருக்கு லால்கோரி கே தூத் (தாய்ப்பால்), காஜல் (கண் மை), மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை தேவை. பித்தளை ஊசிகளை கொண்டு போடப்படும் கோத்னாக்கள் பெதார்முகி சுயி என்றழைக்கப்படுகிறது. துருவை தடுத்து, தொற்று பாதிப்பை அது குறைக்கிறது. வலது: கோத்னாவுக்கான முக்கிய மை, ஜார்ஜாரி காஜல் ஒரு பெட்டியில்

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: சிந்தா தேவி, தன் கையில் திபா கோடா பச்சை குத்தியிருக்கிறார். புள்ளி, நேர்க்கோடு, வளைகோடு ஆகியவை அதில் இருக்கின்றன. வலது: அவரின் தோழியான சந்தி தேவி, மணம் முடித்த பெண்ணுக்கான பச்சை குத்தும் வடிவத்தை தன் கையில் காட்டுகிறார்

“இந்த மூன்று புள்ளி வடிவம் 150 ரூபாயும் இந்த பூ வடிவம் 500 ரூபாயும் ஆகும்,” என ராஜ்பதி தன் மூட்டில் இருக்கும் கோத்னா வை சுட்டிக் காட்டுகிறார். “சில நேரங்களில் எங்களுக்கு பணம் கிடைக்கும். சில நேரங்களில் எங்களுக்கு மக்கள் அரிசி, எண்ணெய் மற்றும் காய்கறிகள் அல்லது புடவை தருவார்கள்,” என்கிறார் அவர்.

நவீன பச்சை குத்தும் கருவிகள் பாரம்பரிய கலைஞர்களின் வருமானத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. “வெகு சிலர்தான் கோத்னா போட விரும்புகிறார்கள்,” என்னும் ராஜ்பதி, “மெஷின் டாட்டூக்களைதான் பெண்கள் விரும்புகின்றனர். செல்பேசிகளில் வடிவங்களை காட்டி செய்ய சொல்கிறார்கள்,” என்கிறார்.

முன்பைப் போல முழு உடலிலும் கோத்னா பச்சை குத்த எவரும் விரும்புவதில்லை என்கிறார் ராஜ்பதி. “இப்போது அவர்கள் ஒரு சிறு பூ அல்லது தேளை பச்சைக் குத்திக் கொள்கின்றனர்.”

இந்த கலையிலிருந்து கிடைக்கும் வருவாய், குடும்பத்தை ஓட்ட போதுவதில்லை என்பதால் பாத்திர வியாபாரத்தை சார்ந்து அவர்கள் இருக்கின்றனர். ராஞ்சி சந்தையில் அவர்கள் பாத்திரம் விற்பதிலிருந்துதான் பெரிய வருவாய் அவர்களுக்குக் கிடைக்கிறது. “சந்தையில் 40-50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நல்ல வருமானமாக இருக்கும். இல்லையெனில் வெறும் 100-200 ரூபாய்தான் நாளொன்றுக்கு கிடைக்கும்,” என்கிறார் ராஜ்பதி.

“டாட்டூக்கள் மங்களகரமானவை,” என்னும் அவர், “இறப்புக்கு பின்னும் உடலுடன் இருப்பது அவை மட்டும்தான். மற்ற எல்லாமும் போய்விடும்,” என்கிறார்.

இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை மானிய ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Ashwini Kumar Shukla

اشونی کمار شکلا پلامو، جھارکھنڈ کے مہوگاواں میں مقیم ایک آزاد صحافی ہیں، اور انڈین انسٹی ٹیوٹ آف ماس کمیونیکیشن، نئی دہلی سے گریجویٹ (۲۰۱۸-۲۰۱۹) ہیں۔ وہ سال ۲۰۲۳ کے پاری-ایم ایم ایف فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Ashwini Kumar Shukla
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan