முடக்கப்படுதல், கட்டாய திருமணம், பாலியல் மற்றும் உடல்ரீதியிலான வன்முறை, ‘சரிப்படுத்தும்’ சிகிச்சைகள் போன்றவைதான் LGBTQIA+ சமூகத்தினரால் அடிக்கடி எதிர்கொள்ளப்படுவதாக சர்வதேச சட்ட நிபுணர்கள் கமிஷன் 2019ம் ஆண்டில் வெளியிட்ட Living with Dignity என்ற அறிக்கை குறிப்பிடுகிறது.

உதாரணமாக வித்தியையும் ஆருஷையும் எடுத்துக் கொள்வோம் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன). ஒன்றாய் வாழ்வதற்காக, மகாராஷ்டிராவின் தானே மற்றும் பல்கர் மாவட்டங்களிலுள்ள தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறி மும்பைக்கு வர வேண்டியிருந்தது. வித்தியும் ஆருஷும் (திருநம்பி) நகரத்தின் வாடகை அறை ஒன்றுக்கு சென்றனர். "வீட்டு உரிமையாளருக்கு எங்களின் உறவு குறித்து தெரியாது. நாங்கள் எங்கள் உறவை மறைக்க வேண்டியிருந்தது. அறையை நாங்கள் காலி செய்ய விரும்பவில்லை," என்கிறார் ஆருஷ்.

LGBTQIA+ மக்களுக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். குடும்பத்தாலும் வீட்டு உரிமையாளர்களாலும் அண்டை வீட்டாராலும் காவலர்களாலும் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். பலருக்கு வீடற்ற நிலை இருப்பதாக குறிப்பிடுகிறது Living with Dignity அறிக்கை.

கிராமப்புற இந்தியாவில் இருக்கும் பாரபட்சமும் அச்சுறுத்தலும் திருநர் சமூகத்தினர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பாதுகாப்பான இடத்தை தேட வைக்கிறது. மேற்கு வங்கத்தில் திருநர் பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் 2021ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை யின்படி “அவர்களின் பாலின வெளிபாட்டை மூடி மறைக்க குடும்பம் அழுத்தம் கொடுக்கிறது.” குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகம் வெளிப்படுத்தும் பாரபட்சமான அணுகுமுறையால் பாதி பேர் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

“திருநராக நாங்கள் இருப்பதால், எங்களுக்கு மதிப்பு இல்லை என அர்த்தமா?” எனக் கேட்கிறார் ஷீதல். பள்ளி, தெருக்கள், பணியிடம் என எல்லா இடங்களிலும் பல வருடங்களாக நேர்ந்த கசப்பான அனுபவங்களின் விளைவாக அவரின் கேள்வி எழுகிறது. “ஏன் அனைவரும் எங்களை அவமதிக்கின்றனர்?” என அவர், ‘' எதோ தீய சக்தியைப் போல் அல்லவா எங்களைப் பார்க்கிறார்கள் ' கட்டுரையில் கேட்கிறார்.

PHOTO • Design courtesy: Dipanjali Singh

கொல்ஹாப்பூரில் சகினா (ஒரு பெண்ணாக அவரே வைத்துக் கொண்ட பெயர்) பெண்ணாவதற்கான தன் விருப்பத்தை குடும்பத்திடம் சொல்ல முயன்றார். ஆனால் ஒரு பெண்ணை அவர் (ஆணாகத்தான் அவர்கள் அவரை பார்த்தனர்) திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். “வீட்டில் நான் தந்தையாகவும் கணவராகவும் வாழ வேண்டும். பெண்ணாக வாழும் என் ஆசையை நான் நிறைவேற்ற முடியாது. மனதில் பெண்ணாகவும் உலகில் ஆணாகவும் ஓர் இரட்டை வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.”

LGBTQIA+ சமூகத்தை சார்ந்த மக்கள் மீதான முன் அனுமான அணுகுமுறைகள் நாட்டின் பல பகுதிகளில் நிலவுகின்றன. உதாரணமாக இயல்பான மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வாக்களிப்பு, குடும்பம் மற்றும் திருமணம் போன்ற விஷயங்களில் பெறும் உரிமைகளில் பல திருநர் சமூகத்துக்கு கிடைப்பதில்லை என திருநர் சமூக உரிமைகள் பற்றிய இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் முதல் ப்ரைட் அணிவகுப்பு ஏப்ரல் 2023-ல் நடத்தப்பட்டது. அதை நவ்நீத் கொதிவாலா போன்ற பல உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் எதிர்கொண்டனர். “இது சரி என எனக்கு தோன்றவில்லை. பால்புதுமையர் இதற்காக போராடக் கூடாது. ஏனெனில் இது இயற்கை அல்ல. எப்படி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்?”

திருநர் சமூகத்தினர் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். வசிக்க வீடும் வேலைகளும் நிராகரிக்கப்படுகிறது. “பிச்சை கேட்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் மக்கள் எங்களுக்கு வேலை தருவதில்லை,” என்கிறார் 13 வயதில் தான் ஒரு திருநர் என்பதை கண்டறிந்த ராதிகா கொசாவி .

சமூகப் புறக்கணிப்பும் நியாயமான வேலைகள் கிடைப்பதற்கான தடையும் திருநர் சமூகத்தினர் சந்திக்கும் பிரதான பிரச்சினைகள். Study on Human Rights of Transgender as a Third Gender என்கிற (உத்தரப்பிரதேசத்திலும் தில்லியிலும் நடத்தப்பட்ட) ஆய்வின்படி பதிலளித்தோரில் 99 சதவிகித பேர், ஒரு முறைக்கும் மேலான ‘சமூகப் புறக்கணிப்பு’களை சந்தித்ததாகவும் 96 சதவிகிதம் பேர் ‘வேலைவாய்ப்பு’ புறக்கணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

PHOTO • Design courtesy: Dipanjali Singh

”எங்கேனும் நாங்கள் செல்ல வேண்டுமென்றால், ரிக்‌ஷா ஓட்டுநர் எங்களை பெரும்பாலும் ஏற்றிக் கொள்வதில்லை. மக்கள் எங்களை ரயில்களிலும் பேருந்துகளிலும் தீண்டத்தகாதவர் போல நடத்துகின்றனர். எங்களின் அருகே எவரும் நிற்கவோ உட்காரவோ மாட்டார். தீய ஆவிகள் போல அவர்கள் எங்களை முறைத்துக் கொண்டே இருப்பார்கள்,” என்கிறார் திருநரான ராதிகா.

வணிகப் பேரங்காடி, உணவகங்கள் போன்ற பொது வெளிகளை பயன்படுத்துவதில் LGBTQIA+ சமூகத்தினருக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சேவைகள் நிராகரிக்கப்படுகின்றன. கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாரபட்சமான கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி முடிப்பது இன்னொரு சவாலாக இருக்கிறது. கே.ஸ்வெஸ்திகா மற்றும் ஐ.ஷாலின் ஆகியோர் மதுரையை சேர்ந்த கும்மியாட்டக் கலைஞர்கள். இருவரும் முறையே தங்களின் முதுகலை படிப்பையும் 11ம் வகுப்பு படிப்பையும் திருநங்கைகளாக இருந்தமையால் காட்டப்பட்ட ஒடுக்குமுறையால் இடைநிறுத்த வேண்டியிருந்தது. படிக்க: கொடுமைக்குள்ளாகி தனிமையில் தவிக்கும் மதுரையின் திருநங்கை கலைஞர்கள்

2015ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட (திருநரை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு வருடம் கழித்து) இந்த கணக்கெடுப்பு , கேரளாவின் திருநர் சமூகத்தை சேர்ந்த 58 சதவிகிதம் பேர், 10ம் வகுப்பு முடிக்கும் முன்பே கல்வியை இடைநிறுத்துவதாக குறிப்பிடுகிறது. பள்ளியில் நிலவும் தீவிரமான அச்சுறுத்தல், இட ஒதுக்கீடின்மை, ஆதரவளிக்காத வீட்டுச் சூழல் போன்றவை கல்வியை இடை நிறுத்துவதற்கான காரணங்களாக இருக்கின்றன.

*****

“‘பெண்களின் அணியில், ஓர் ஆண் விளையாடுகிறான்’ - இதுபோலத்தான் தலைப்புச் செய்திகள் வந்தன,” என நினைவுகூருகிறார் தன்னை ஆணாகவு ஊடுபாலாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் போனி பால் . முன்னாள் கால்பந்தாட்ட வீரரான அவர், 1998ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுகளின் தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாலின அடையாளத்தால் இறுதியில் நீக்கப்பட்டார்.

ஆண், பெண் உடல்கள் கொண்டிருக்கும் இரு வகையான தன்மைகளில் (பாலுறுப்புகள், சனனிகள், குரோமோசோம்கள் போன்றவை) அடங்காத பாலின இயல்புகளுடன் பிறந்தவர்களை ஊடுபாலினத்தவர் என குறிப்பிடுகிறது ஐநாவின் மனித உரிமை அமைப்பு.

PHOTO • Design courtesy: Dipanjali Singh

“எனக்கு கருப்பை இருந்தது, ஒரு கருமுட்டை இருந்தது, ஓர் ஆணுறுப்பும் உள்ளே இருந்தது. இரு ‘விஷயங்களும்’ (பாலுறுப்புகள்) இருந்தன,” என்கிறார் போனி. “என் உடல் வகை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கிறது. தடகள வீரர்கள், டென்னிஸ் வீரர்கள், கால்பந்தாட்ட வீரர்கள் என என்னைப் போல பல விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர்.”

சமூகத்தின் மீது அச்சம் கொண்டிருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்கிறார் போனி. LGBTQIA+ சமூக உறுப்பினர்கள், தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர். சித்திரவதை வரையான வன்கொடுமைகளும் சர்வதேச சட்டம் குறிப்பிடும் தரக்குறைவான நடத்தை போன்றவையும் நேர்வதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சொல்லப் போனால், 2018ம் ஆண்டில் பதிவான மனித உரிமை மீறல் வழக்குகளில் 40 சதவிகிதத்தை உடல் ரீதியான வன்முறை வகிக்கிறது. அடுத்தபடியாக வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமை (17 சதவிகிதம்) வகிக்கிறது.

2014ம் ஆண்டு தொடங்கி கர்நாடகாவை தவிர்த்து நாட்டின் வேறெந்த மாநில அரசாங்கமும், மூன்றாம் பாலினத்தை அடையாளமாக்கும் சட்ட அங்கீகாரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தவில்லை என இந்த அறிக்கை காட்டுகிறது. இந்த அறிக்கை, காவலர்களால் திருநர் சமூகம் சந்திக்கும் அச்சுறுத்தல்களையும் முன் வைக்கிறது.

இந்தியாவின் முதல் கோவிட் ஊரடங்கின்போது, பாலின வளர்ச்சியில் மாறுபாடுகள் கொண்ட பலருக்கு சுகாதார வசதி கிடைப்பதில், “அவர்களின் தேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்த குறைந்த அறிவு கொண்டிருந்தமையால்” சிரமம் இருந்தது எனக் குறிப்பிடுகிறது Corona Chronicles . பாரி நூலகத்திலுள்ள பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினர் பிரிவில் இடம்பெற்றிருக்கும் இத்தகைய பல அறிக்கைகள் இந்தியாவிலுள்ள LGBTQIA+ சமூகத்தின் நிலை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை புரிந்து கொள்ள உதவுகின்றன.

PHOTO • Design courtesy: Dipanjali Singh

கோவிட் தொற்று தமிழ்நாட்டின் பல நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பேரழிவை தந்த நிலையில், திருநங்கை கலைஞர்கள்தான் அதிக பாதிப்பை சந்தித்தனர். வேலையுமின்றி, வருமானமின்றி, உதவியுமின்றி அரசின் பலன்களுமின்றி பெரும் பாதிப்பை அவர்கள் எதிர்கொண்டனர். மதுரையின் அறுபது வயது திருநங்கை நாட்டுப்புறக் கலைஞரான தர்மா அம்மா , “எங்களுக்கென நிலையான வருமானம் இல்லை. இந்த கொரோனாவால், எங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச வருமானத்துக்கான வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது,” என்கிறார்.

8,000-லிருந்து 10,000 ரூபாய் வரை அவர், வருடத்தின் முதல் பாதியில் மாதந்தோறும்  சம்பாதிப்பார். அடுத்த பாதியில், மாதத்துக்கு 3,000 ரூபாய் வரை ஈட்டுவார். கொரோனா ஊரடங்கு அவை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. “ஆண், பெண் கலைஞர்கள் சுலபமாக பென்ஷனுக்கு விண்ணப்பிக்க முடியும். திருநர்களால் முடியாது. என் விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் அவர்.

மாற்றம், குறைந்தபட்சம் காகிதத்திலேனும் வந்து கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டில் திருநர் பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் மொத்த இந்தியாவுக்கு பொருந்தும் வகையில் நிறைவேற்றப்பட்டது. எந்த நபரும் நிறுவனமும் எந்த திருநருக்கும் எதிராக கல்வியிலும் சுகாதாரச் சேவைகளிலும் வேலைவாய்ப்பிலும் தொழிலிலும் நடமாட்டத்திலும் சொத்து வாங்குவதிலும் வாடகைக்கு விடுவதிலும் பொது பதவிக்கு போட்டியிடுவதிலும் அதை வகிப்பதிலும் பொருட்கள், வசிப்பிடம், சேவை, வசதி, பலன், வாய்ப்பு போன்றவற்றை பெறுவதிலும் வேறுபாடு காட்டக் கூடது என அச்சட்டம் குறிப்பிடுகிறது.

பாலின அடையாளத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்ட அரசியல் சாசனம் தடை விதிக்கிறது. மேலும் அது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்பதற்காக தனிப்பிரிவுகளை சேர்க்கும் அதிகாரத்தையும் மாநிலங்களுக்கு வழங்கியிருக்கிறது. எனினும் இதே வகை பிரிவுகளை பால்புதுமையருக்காகவும் அறிமுகப்படுத்துவது குறித்து எதையும் அது சொல்லவில்லை.

அட்டை படம்: ஸ்வதேஷ ஷர்மா மற்றும் சிதித்தா சொனவானே

தமிழில் : ராஜசங்கீதன்

Siddhita Sonavane

سدھیتا سوناونے ایک صحافی ہیں اور پیپلز آرکائیو آف رورل انڈیا میں بطور کنٹینٹ ایڈیٹر کام کرتی ہیں۔ انہوں نے اپنی ماسٹرز ڈگری سال ۲۰۲۲ میں ممبئی کی ایس این ڈی ٹی یونیورسٹی سے مکمل کی تھی، اور اب وہاں شعبۂ انگریزی کی وزیٹنگ فیکلٹی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Siddhita Sonavane
Editor : PARI Library Team

دیپانجلی سنگھ، سودیشا شرما اور سدھیتا سوناونے پر مشتمل پاری لائبریری کی ٹیم عام لوگوں کی روزمرہ کی زندگی پر مرکوز پاری کے آرکائیو سے متعلقہ دستاویزوں اور رپورٹوں کو شائع کرتی ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز PARI Library Team
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan