மும்பையில் எல்லா மூலைகளும் மெட்ரோ ரயிலுக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் இணைக்கப்படும் நிலையில், டாமு நகர்வாசிகள், கொஞ்ச தூரம் செல்வதற்கே போராட வேண்டியிருக்கிறது. இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளிக்குதான் அவர்கள் செல்கீறார்கள். ஓரடி சுவரைத் தாண்டி, குப்பைகளில் நாற்றத்தினூடாக நடந்து செல்ல வேண்டும் என்கிறார்கள். காய்ந்த புற்களைக் கொண்ட திறந்த வெளி அது. இங்கிருக்கும் சில மரங்கள் கொஞ்சம் தனிமையேனும் கொடுக்குமா?

சாத்தியமில்லை. “தனிமை இங்கு கிடையவே கிடையாது,” என்கிறார் 51 வயது மிரா யெடே. டாமு நகரில் நீண்ட காலம் வாழ்பவர். “காலடி சத்தம் ஏதேனும் கேட்டால், பெண்களாகிய நாங்கள் உடனே எழுந்து நிற்க வேண்டும்.” பல வருடங்களாக இப்பகுதி, ஆண்களுக்கும் பெண்களுக்குமென வலது மற்றும் இடதாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், “குறைவான இடைவெளிதான் அது. சில மீட்டர் தூரம் இருக்கும். யார் அதை அளந்து பார்த்தார்கள்?” என்கிறார். இரு பகுதிகளுக்கு இடையே சுவர் போன்ற எந்த தடுப்பும் இல்லை.

டாமு நகரில் வசிப்பவர்கள் பலர், கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் ஆவர். வடக்கு மும்பை தொகுதியின் இப்பகுதியில் இப்பிரச்சினை பல காலமாக நீடித்து வருகிறது. பல கட்டங்களாக நடத்தப்படும் 18வது மக்களவைக்கான தேர்தலிலும் அவர்களுக்கு இதுதான் பிரச்சினையாக இருக்கிறது. மிராவின் மகன் பிரகாஷ் யெடே சொல்கையில், “எல்லாமுமே நாட்டில் சரியாக இருப்பதாக ஒரு பிரசாரம் முன்வைக்கப்படுகிறது,” என்கிறார். பிரகாஷ் நம்முடன் பேசிக் கொண்டிருக்கும் அவரது வீட்டின் கூரை, உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக வெப்பத்தை அது ஈர்க்கக்கூடியது.

“நாட்டின் இப்பகுதிகளில் இருக்கும் மெய்யான பிரச்சினைகளை பற்றி எவரும் பேச விரும்புவதில்லை,” என்கிறார் 30 வயது பிரகாஷ். டாமு நகரில் வசிக்கும் 11,000 பேர், எப்படி சிரமங்களுடன் வாழ்கின்றனர் என்பதை சொல்கிறார். கழிவறைகளோ குடிநீர் இணைப்போ மின் இணைப்போ அங்கு இல்லாததால் உருவாகும் பிரச்சினைகளும் அதிகம். டாமு நகர் என்ற அந்த குப்பம், சென்சஸ்ஸில் பீம் நகர் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உடையக் கூடிய சுவர்களும் தார்ப்பாய்களும் கூரைகளும் கொண்ட 2,300 வீடுகள் அங்கு இருக்கின்றன. இவையாவும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவுக்குள் இருக்கும் குன்றில் அமைந்திருக்கிறது. குறுகிய, சமமற்ற, பாறைகள் நிறைந்த பாதையில், சாக்கடையை தவிர்த்து நடந்து வீடுகளுக்கு செல்ல வேண்டும்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: பிரகாஷ் யெடே, டாமு நகரின் வீட்டுக்கு முன். தாய் மிரா மற்றும் தந்தை ஞானதேவ் ஆகியோருடன் அவர் அங்கு வசிக்கிறார். வலது: டாமு நகர் குப்பம் பீம் நகர் என்றும் அறியப்படுகிறது

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: டாமு நகரில் வசிப்பவர்கள் ஓரடி உயர சுவரைத் தாண்டி, குப்பைக் குவியலினூடாக நடந்து சென்று, அங்கிருக்கும் வெளியில் இயற்கை உபாதையை கழிப்பார்கள். வலது: குடிநீர் இணைப்பு, மின்சாரம் மற்றும் கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளை, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என சொல்லி குப்பத்தில் ஏற்படுத்தாமல் இருக்கிறது நகராட்சி

எனினும் கடந்த தேர்தல்களைப் போல, இங்குள்ள மக்களின் வாக்குகள், அடிப்படை வசதியின்மைக்காக மட்டும் இருக்கப் போவதில்லை.

“செய்திகள் முக்கியம். அதில் உண்மை இருக்க வேண்டும். எங்களைப் போன்ற மக்களைப் பற்றி ஊடகங்கள் உண்மையை சொல்வதில்லை,” என்கிறார் பிரகாஷ் யெடே. பொய்ச் செய்திகள், பாரபட்சமான செய்திகள் போன்றவற்றை பற்றி அவர் சொல்கிறார். “கேட்பதையும் பார்ப்பதையும் வைத்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் அவர்கள் கேட்பதும் பார்ப்பதும் மோடியின் புகழாக மட்டும்தான் இருக்கிறது.”

பிரகாஷ், தனக்கான செய்திகளை, விளம்பரங்கள் அல்லாமல் இயங்கும் சுயாதீன பத்திரிகை தளங்களில்தான் படிக்கிறார். “என் வயதில் உள்ளோர் பலருக்கும் இங்கு வேலை இல்லை. வீட்டு வேலையிலும் உடலுழைப்பு வேலைகளிலும்தான் அவர்கள் இருக்கிறார்கள். மிகச் சிலர், குறிப்பாக 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள்தான் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்,” என்கிறார் அவர் நாடு முழுவதும் இருக்கும் வேலையின்மை, அவரது ஊரின் இளையோரிடமும் பிரதிபலிப்பதை குறித்து.

12ம் வகுப்பு முடித்திருக்கும் பிரகாஷ், மலாதிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புகைப்பட வடிவமைப்பாளராக, மாத வருமானம் ரூ.15,000-க்கு வேலை பார்த்தார். பிறகு அந்த வேலையை செயற்கை நுண்ணறிவு எடுத்துக் கொண்டது. “கிட்டத்தட்ட 50 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எனக்கு வேலை பறிபோய் ஒரு மாதம் ஆகி விட்டது,” என்கிறார் அவர்.

தேசிய அளவில் வேலையின்றி இருக்கும் மக்களில் படித்த இளையோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. 2000மாம் ஆண்டிலிருந்த 54.2 சதவிகிதம், 2022ம் ஆண்டில் 65.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்கிறது இந்தியா வேலைவாய்ப்பு அறிக்கை 2024. மார்ச் 26 அன்று, டெல்லியில் சர்வதேச உழைப்பு நிறுவனம் (ILO) மற்றும் மனித வளர்ச்சி நிறுவனம் (IHD) ஆகிய அமைப்புகள் அந்த அறிக்கையை வெளியிட்டன.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: ‘செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும்,’ என்கிறார் பிரகாஷ். ‘ஊடகங்கள் எங்களை போன்ற மக்களை பற்றிய உண்மைகளை தருவதில்லை.’ வலது: சந்திரகலா காரத், 2015ம் ஆண்டில் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கணவரை இழந்தார். சாலையில் அவர் தற்போது பிளாஸ்டிக் பொருட்களையும் குப்பைகளையும் சேகரித்து விற்று வாழ்கிறார்

பிரகாஷின் வருமானம், குடும்ப வளர்ச்சியில் மிகவும் முக்கியம். கடந்த சில வருடங்களாகத்தான் வருமானம் உள்ள வேலையில் அவர் இருக்கிறார். துயரத்துக்கு பின்னான வெற்றியின் கதை இது. 2015ம் ஆண்டில் டாமு நகரை, சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து விழுங்கியது. யெடேவின் குடும்பமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அடக்கம். “உடுத்தியிருந்த துணிகளோடு தப்பியோடினோம். ஆவணங்கள், நகை, பாத்திரங்கள், மின் சாதனங்கள் என எல்லாமும் சாம்பலாயின,” என நினைவுகூருகிறார் மிரா.

“வினோத் டவாடே (மகாராஷ்டிராவின் கல்வி அமைச்சராகவும் போரிவலி சட்டமன்ற உறுப்பினராகவும் அப்போது இருந்தவர்) ஒரு மாதத்தில் எங்களுக்கு வீடு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார்,” என்கிறார் தீ விபத்துக்கு பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை பிரகாஷ் நினைவுகூர்ந்து.

வாக்குறுதி கொடுக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு, 2019ல் மக்களவை தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்தனர். ஒன்றும் மாறவில்லை. பிரகாஷின் தாத்தாவும் பாட்டியும் ஜால்னா மாவட்டத்திலிருந்து மும்பைக்கு 1970களில் நிலமற்ற தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்கள்.

அவரின் தந்தையான 58 வயது ஞான்தேவ், இன்னும் பெயிண்டராக பணிபுரிகிறார். தாய் மிரா, ஒப்பந்த தொழிலாளராக இருக்கிறார். வீடுகளிலிருந்து குப்பைகளை அவர் சேகரிக்கிறார். “பிரகாஷின் ஊதியத்தையும் சேர்த்து, நாங்கள் மூவரும் மாதத்துக்கு 30,000 ரூபாய் வருமானம் ஈட்ட முடிந்தது. எரிவாயு சிலிண்டர்கள், எண்ணெய், தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளுடன் (நிச்சயமாக தற்போது இருப்பதை விட குறைந்தே இருந்தது) நாங்கள் ஓரளவுக்கு நல்லபடியாக வாழத் தொடங்கியிருந்தோம்,” என்கிறார் மிரா.

வாழ்க்கைகளை மீட்டுருவாக்கும் அவர்களது முயற்சிகள் ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும் புதிய பிரச்சினைகள் தோன்றும். “தீ விபத்துக்கு பிறகு பணமதிப்புநீக்கம் வந்தது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கு. அரசு எந்த நிவாரணமும் தரவில்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: 2015ம் ஆண்டு தீ விபத்தில் எல்லா உடைமைகளையும் யெடேவின் குடும்பம் இழந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த வினோத் டவாடே வீடுகள் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். எட்டு வருடங்கள் ஓடியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வலது: பிரகாஷ், மலாதில் புகைப்பட வடிவமைப்பாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் செயற்கை நுண்ணறிவு அவரின் வேலையைப் பறித்து விட்டது. ஒரு மாதம் வேலையின்றி இருந்தார்

PHOTO • Jyoti

டாமு நகர், சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவுக்குள் இருக்கும் குன்றில் இருக்கிறது. 2,300 வீடுகள் இருக்கின்றன. குறுகிய, கற்கள் நிறைந்த, காடு முரடான பாதைகள் வீடுகளை நோக்கி செல்கின்றன

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மோடி அரசாங்கம் அளிக்கும் “அனைவருக்கும் வீடு (நகர்ப்புறம்)” திட்டம், 2022ம் ஆண்டுக்குள் தகுதி பெற்ற எல்லா குடும்பங்களுக்கும் வீடுகள் தருவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. தன்னுடைய குடும்பத்துக்கு ‘தகுதி’ இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பிரகாஷ் முயலுகிறார்.

”திட்டத்தின் பலன்களை என் குடும்பத்துக்கு பெற தொடர்ந்து முயன்று வருகிறேன். வருமான சான்றிதழும் சரியான ஆவணங்களும் இல்லாமல், எனக்கான சாத்தியம் இருக்காது,” என்கிறார் அவர்.

கல்வியுரிமை சட்டத்தில் ( RTE ), மகாராஷ்டிர மாநில அரசாங்கம் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் கொண்டு வந்திருக்கும் அறிவிப்பு , அவருக்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தையின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் அரசுப் பள்ளியோ அரசின் உதவி பெறும் பள்ளியோ இருந்தால், குழந்தை அங்கு சேர்க்கப்பட வேண்டும். பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களில், 25% விளிம்பு நிலை சமூகக் குழந்தைகள் இருக்க வேண்டுமென்கிற கல்வியுரிமைச் சட்டத்தின் திருத்தம், தனியார் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதுதான் இதற்கு அர்த்தம். “கல்வியுரிமை சட்டத்தின் பயனையே அது இல்லாமல் ஆக்கி விடுகிறது,” என்கிறார் அனுதனித் ஷிக்‌ஷா பச்சாவ் சமிதியை (அரசு உதவி பெறும் பள்ளிகளை பாதுகாக்கும் சங்கம்) சேர்ந்த பேராசிரியர் சுதிர் பராஞ்சப்பே கூறுகிறார்.

“இத்தகைய முடிவுகளால் கல்வித்தரம் கொடுக்க முடியாது. கல்வித்தரத்தை உறுதிப்படுத்தும் ஒரே சட்டமும் (அறிவிப்பால்) இப்போது இல்லை. எப்படி நாம் வளர முடியும்?” என அவர் கேட்கிறார் கோபத்துடன்.

அடுத்த தலைமுறைக்கான தரம் வாய்ந்த கல்வி மட்டும்தான் பிரகாஷுக்கும் டாமு நகரை சேர்ந்த பிறருக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு. டாமு நகரின் குழந்தைகளுக்கு விளிம்புநிலை தகுதி வழங்கப்படுகிறதா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. நாற்பது வருடங்களுக்கும் மேலாக இந்த குப்பத்தில் வசித்து வரும் பலரும் நவ பெளத்தர்கள். அதாவது தலித்கள். பலரின் தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர், மும்பைக்கு ஜால்னாவிலிருந்து சோலாப்பூரிலிருந்து 1972ம் ஆண்டின் பெரும் பஞ்சத்தில் புலம்பெயர்ந்தவர்கள்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: கல்வியுரிமை சட்டம் தரும் 25 சதவிகித ஒதுக்கீடு, ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரசு பள்ளியோ அரசு உதவி பெறும் பள்ளியோ இருக்கும் பட்சத்தில், தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என அரசிதழ் குறிப்பை மாநில அரசாங்கம் இந்த வருடம் வெளியிட்டிருக்கிறது. டாமு நகரின் விளிம்பு நிலை குழந்தைகளின் தரம் வாய்ந்த கல்விக்கான உரிமையை இது பறிக்கும், என்கிறார் அனுதனித் ஷிக்‌ஷா பச்சாவ் சமிதியின் பேராசிரியர் சுதிர் பராஞ்சப்பே. வலது: டாமு நகரின் பெண்களுக்கு பாதுகாப்பான கழிவறைகள் கிடையாது. ‘உடல்நலம் குன்றியிருந்தாலோ ஏதேனும் காயம் இருந்தாலோ கூட, நீங்கள் பக்கெட் நீர் எடுக்க ஏறிச் செல்ல வேண்டும்,’ என்கிறார் லதா சொனாவனே (பச்சை துப்பட்டா)

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது மற்றும் வலது: குழந்தைகளுடன் லதா அவரது வீட்டில்

கல்வியுரிமை பெறுவது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை. ‘விளக்குக் குடுவை’ என்கிற பெயரில் பிரகாஷின் பக்கத்து வீட்டுக்காரர் அபாசாகேப் மாஸ்கேவின் முயற்சிகளும் கூட தோற்றுப் போனது. “இந்தத் திட்டங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன,” என்கிறார் 43 வயது மாஸ்கே. முத்ரா யோஜ்னா திட்டத்தில் கடன் பெற முயற்சித்தேன். ஆனால் கிடைக்கவில்லை. ஏனெனில் என்னை கடன் கொடுக்க முடியாதோர் பட்டியலில் சேர்த்து விட்டனர். ஏற்கனவே வாங்கியிருந்த 10,000 ரூபாய் கடனுக்கான ஒரே ஒரு தவணையை மட்டும் நான் கட்டத் தவறி விட்டேன்.”

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் சார்ந்த ஏழைகளுக்கு பல்வேறு சுகாதார நலத் திட்டங்கள் கிடைப்பதில் உள்ள நிலவரத்தை பாரி தொடர்ந்து செய்தியாக்கி வந்திருக்கிறது. (வாசிக்க: இலவச சிகிச்சை பெருஞ்செலவில் நேரும்போது மற்றும் ‘என் பேரக்குழந்தைகள் சொந்தமாக வீடு கட்டுவார்கள்’ )

10 X 10 அடி அறையில் குடும்பத்தையும் பட்டறையையும் நடத்துகிறார் மாஸ்கே. வீட்டுக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் சமையலறையும் குளியலறையும் இருக்கிறது. அதற்கருகே, குடுவைகளை அலங்கரிப்பதற்கான பொருட்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

“கண்டிவாலி மற்றும் மலாத் ஆகிய இடங்களில் சுற்றி இந்த விளக்குகளை நான் விற்கிறேன்.” மதுபானக் கடைகளிலிருந்தும் காயலான் கடைகளிலிருந்தும் ஒயின் குடுவைகளை அவர் சேகரிக்கிறார். “விமல் (மனைவி) சுத்தப்படுத்தவும் கழுவவும் காய வைக்கவும் உதவுவார். பிறகு ஒவ்வொரு குடுவையையும் செயற்கைப் பூக்கள் மற்றும் நூல்கள் கொண்டு நான் அலங்கரிப்பேன். ஒயர்களை பேட்டரிகளுடன் இணைப்பேன்,” என்கிறார் அவர். ‘விளக்கு குடுவைகள்’ பற்றி விளக்குகிறார். “முதலில் LR44 பேட்டரிகளை செம்பு ஒயரின் LED விளக்கு கம்பிகளுடன் இணைப்பேன். பிறகு விளக்கை குடுவைக்குள், செயற்கைப் பூக்களுடன் சேர்த்து தள்ளுவேன். விளக்கு தயார். பேட்டரியில் இருக்கும் பொத்தானைக் கொண்டு அதை இயக்கலாம்.” வீடுகளில் பயன்படுத்தப்படும் இந்த அலங்கார விளக்குகளுக்கு கொஞ்சம் கலைத்தன்மையையும் அவர் கொடுக்கிறார்.

”கலையில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. என்னுடைய திறமைகளை விரிவாக்கி, அதிகம் சம்பாதித்து, மூன்று மகள்களுக்கு நல்ல கல்வி கொடுக்க விரும்புகிறேன்,” என்கிறார் அபாசாகேப் மாஸ்கே. ஒரு குடுவை உருவாக்க 30-லிருந்து 40 ரூபாய் வரை ஆகிறது. ஒரு விளக்கை மாஸ்கே 200 ரூபாய்க்கு விற்கிறார். அவரின் அன்றாட வருமானம் 500 ரூபாய்க்கும் குறைவுதான். “10,000 முதல் 12,000 ரூபாய் வரை மாதத்துக்கு 30 நாட்கள் வேலை செய்து ஈட்டுகிறேன்.” சராசரியாக ஒரு நாளுக்கு இரண்டு குடுவைகள். “ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு அது போதாது,” என்கிறார் அவர். ஜல்னா மாவட்டத்தின் ஜல்னா தாலுகாவிலுள்ள தெர்காவோன் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் மாஸ்கே.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: அபாசாகேப் மாஸ்கே ‘விளக்கு குடுவைகள்’ உருவாக்கி கண்டிவாலி மற்றும் மலாதில் விற்கிறார். குடும்பத்தின் 10 X 10 அடி வீட்டில் பட்டறையை அவர் நடத்துகிறார். வலது: அபாசாகேப் உருவாக்கிய குடுவை, செயற்கை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. காயலான் கடைகளிலிருந்தும் மதுபானக் கடைகளிலிருந்தும் குடுவைகளை அவர் பெறுகிறார்

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: அவரின் மனைவி விமல், குடுவைகளை சுத்தப்படுத்தவும் கழுவவும் காய வைக்கவும் உதவுகிறார். வலது: ஒரு குடுவை உருவாக்க 30-40 ரூபாய் ஆகிறது. மாஸ்கே 200 ரூபாய்க்கு அதை விற்று, மாதத்துக்கு 10,000-12,000 ரூபாய் ஈட்டுகிறார். நாளொன்றுக்கு இரண்டு குடுவைகள் விற்கிறார்

வருடந்தோறும் ஜூன் மாதத்தில், சோயாபீன் மற்றும் சோளம் ஆகியவற்றை தன் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விதைக்க கிராமத்துக்கு வருகிறார் அவர். “எப்போதும் எனக்கு ஏமாற்றம்தான். மழை பற்றாக்குறையால் நல்ல விளைச்சல் கிடைத்ததில்லை,” என்கிறார் அவர். கடந்த சில வருடங்களாக விவசாயத்தை மாஸ்கே நிறுத்தி விட்டார்.

பிரகாஷ், மிரா, மாஸ்கே மற்றும் டாமு நகர் குப்பத்தில் வசிக்கும் பிறர், இந்தியாவின் 65 மில்லியன் குப்பவாசிகளில் மிகக் குறைவான அளவுதான். ஆனால் பிற குப்பவாசிகளுடன் சேர்த்து, R/S நகராட்சி வார்டில் அவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

“குப்பங்கள், கிராமத்திலிருந்து புலம்பெயருபவர்களின் வித்தியாசமான உலகம்,” என்கிறார் அபாசாகேப்.

மே 20ம் தேதி, கண்டிவாலியின் மக்கள் வடக்கு மும்பை தொகுதியில் வாக்களிக்கவிருக்கிறார்கள். தற்போதைய மக்களவை உறுப்பினராக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் கோபால் ஷெட்டி, நான்கரை லட்ச வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊர்மிளா மடோண்ட்கரை 2019ம் ஆண்டில் வீழ்த்தினார்.

ஆனால் இம்முறை, கோபால் ஷெட்டிக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் வடக்கு மும்பையில் போட்டியிடுகிறார். “பாஜக இரண்டு முறை வென்று விட்டது (2014 மற்றும் 2019). அதற்கு முன் காங்கிரஸ் இருந்தது. ஆனால் நான் பார்த்தவரை, பாஜகவின் முடிவுகள் ஏழைகளை பொருட்படுத்துவதாக இல்லை,” என்கிறார் அபாசாகேப் மாஸ்கே.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: டாமு நகரின் குறுகிய தெருக்கள். இக்குப்பத்தில் வசிப்பவர்கள் மே 20ம் தேதி வாக்களிக்கவிருக்கின்றனர்.வலது: அபாசாகேப் மாஸ்கே, விமல் மற்றும் அவர்களின் மகள்கள் அவர்களது வீட்டில். ‘இந்த தேர்தல் (...) என்னை போன்ற ஒடுக்கப்பட்ட குடிமக்களின் உரிமைகளை தக்க வைப்பதற்கான தேர்தலென நினைக்கிறேன்’

மிரா யெடாவுக்கு வாக்கு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை. வாக்குச்சீட்டுகளைதான் நம்புகிறார். “வாக்கு இயந்திரம் போலி என்பது என் கருத்து. வாக்குச்சீட்டு முறை நன்றாக இருந்தது. அந்த வகையில், யாருக்கு ஓட்டு போட்டோமென்பது உறுதியாக நமக்கு தெரியும்,” என்கிறார் மிரா.

செய்திகள் பற்றிய வேலையற்ற பிரகாஷின் கருத்துகள்; வாக்கு இயந்திரம் மீது தொழிலாளர் மிரா கொண்டிருக்கும் அவநம்பிக்கை; அரசு திட்டங்கள் கொண்டு சிறு தொழிலை உருவாக்க முடியாத மாஸ்கேவின் நிலை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது சொல்ல.

”எங்களின் கவலைகளை கருத்தில் கொள்ளும் வேட்பாளருக்கு வாக்களிப்பேன்,” என்கிறார் பிரகாஷ்.

“இதுவரை வென்றவர்கள், எங்களுக்கு எந்த வளர்ச்சியையும் கொடுக்கவில்லை. எங்களின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கிறது. யாருக்கு ஓட்டு போட்டாலும் எங்களின் கடும் உழைப்புதான் எங்களை காக்கும். வெற்றி பெறுபவர் இல்லை. வாழ்க்கையை வளர்த்தெடுக்கதான் முயற்சி எடுக்க வேண்டும். ஏதோவொரு தலைவரை வளர்க்க அல்ல,” என்கிறார் மிரா.

“இந்த தேர்தலில் அடிப்படை வசதிகள் மட்டுமே பிரச்சினையாக இருக்காது என நினைக்கிறேன். எங்களை போன்ற விளிம்புநிலை மக்களின் உரிமைகளை தக்க வைப்பதும் முக்கிய பிரச்சினையாக இருக்கும்,” என்கிறார் அபாசாகேப். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், டாமு நகரின் மக்கள் ஜனநாயகத்துக்கு வாக்களிக்க இருக்கிறார்கள்.

தமிழில்: ராஜசங்கீதன்

Jyoti

جیوتی پیپلز آرکائیو آف رورل انڈیا کی ایک رپورٹر ہیں؛ وہ پہلے ’می مراٹھی‘ اور ’مہاراشٹر۱‘ جیسے نیوز چینلوں کے ساتھ کام کر چکی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jyoti

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan