ஒரு கயிற்றுக்கட்டில் மீது அலங்கோலமாக அமர்ந்துகொண்டு தனது காயங்களைக் காட்டுகிறார் சுதிர் கோசரே - அவரது வலது காலில் ஓர் ஆழமான காயம்; வலது தொடையில் சுமார் ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள வெட்டு; அவரது வலது முன்கையில் ஒரு நீளமான, வெறித்தனமாக கிழிக்கப்பட்ட காயம் எல்லாவற்றிலும் தையல் போட வேண்டியிருந்தது. இது தவிர உடல் முழுவதும் சிராய்ப்புகள்.
போதிய அளவு விளக்குகள் எரியாத, பூச்சு வேலை செய்யப்படாத அந்த வீட்டின் இரண்டு அறைகளில் ஒன்றில் அவர் அமர்ந்திருக்கிறார். அவர் மொத்தமாக ஆடிப்போயிருக்கிறார்; நல்ல வலி என்பதால் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவரது மனைவி, தாய், சகோதரன் ஆகியோர் அவருக்கு அருகில் இருக்கிறார்கள். வெளியே மழை கொட்டுகிறது. நீண்ட காலம் பெய்யாமல் எரிச்சலூட்டிய பிறகு, ஒரு வழியாக இந்தப் பகுதியில் இப்போது மழை வெளுக்கிறது.
நிலமற்ற விவசாயத் தொழிலாளியான சுதிர், 2023 ஜூலை 2 அன்று மாலை ஒரு வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஒரு பருத்த, ஆவேசம் கொண்ட காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு, உயிர் பிழைத்தார். லோஹர்-காடி (காடி லோஹார் என்றும் குறிப்பிடப்படும் சமூகம் இம்மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது) சாதியைச் சேர்ந்த அவருக்கு 30 வயது. ஒல்லியான, உறுதியான தேகம் கொண்டவர். நல்வாய்ப்பாக தனது முகத்திலும், நெஞ்சிலும் காயம்படவில்லை என்கிறார் அவர்.
சந்திரபூர் மாவட்ட சாவ்லி வட்டத்தில் உள்ள வட்டாரக் காடுகளுக்குள் புதைந்து கிடக்கும், பெரிதாக அறியப்படாத கவடி என்ற சிற்றூரில் ஜூலை 8 அன்று மாலையில் அவரை சந்தித்தது பாரி. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தார் அவர்.
காட்டுப் பன்றியிடம் மாட்டிக் கொண்டு காப்பாற்றச் சொல்லி குரல் கொடுத்தபோது, வயலில் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த மற்றொரு தொழிலாளி தன்னுடைய பாதுகாப்பையும் பார்க்காமல் ஓடிவந்து பன்றியின் மீது கற்களை எறிந்ததை நினைவுகூர்ந்தார் அவர்.
அது பெண் பன்றியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அவர் கீழே விழுந்தவுடன் அந்தப் பன்றி தனது மருப்பினால், (வாயில் இருந்து வெளியே வரும் நீண்ட பல்) அவரைத் தாக்கியது. இருட்டிக்கொண்டு வந்த வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கீழே விழுந்த அவருக்கு மரண பயம் வந்தது. “அது பின்னால் போய், வேகமாக ஓடிவந்து என் மீது மோதி, அதன் நீண்ட மருப்பை என் மீது குத்தியது,” என்கிறார் சுதிர். அவரது துணைவி தர்ஷனா நம்ப முடியாமல் முணுமுணுக்கிறார். தனது கணவர் சாவில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்திருக்கிறார் என்பது அவருக்குத் தெரிகிறது.
அவருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்திவிட்டு அருகில் உள்ள புதருக்குள் ஓடி ஒளிந்தது அந்த விலங்கு.
அன்றைய தினம் விட்டுவிட்டுப் பெய்த மழையால் அவர் வேலை செய்துகொண்டிருந்த நிலம் ஈரமாக இருந்தது. சுமார் இரண்டு வாரமாக, தாமதமாகி வந்த விதைப்பு அன்று தொடங்கியிருந்தது. சுதிருக்கு வேலை, காட்டை ஒட்டியிருக்கிற வரப்பை செதுக்கிவிடுவது. அந்த வேலைக்கு அவருக்கு அன்று ரூ.400 கூலி கிடைத்திருக்கும். பிழைப்பதற்கு அவர் செய்கிற பல வேலைகளில் இந்த வேலையும் ஒன்று. அந்தப் பகுதியில் உள்ள மற்ற நிலமற்ற தொழிலாளர்களைப் போல தொலைதூரம் புலம் பெயர்ந்து செல்வதைவிட இது மாதிரி வேலை கிடைப்பதற்காக காத்திருப்பது அவருக்கு பரவாயில்லை என்றிருந்தது.
அன்றிரவு சாவ்லியில் உள்ள அரசாங்கத்தின் ஊரக மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்து, அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில், கட்சிரோலியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கே அவரது காயங்களுக்குத் தையல் போட்டு 6 நாட்கள் உள்நோயாளியாக வைத்து மருத்துவம் பார்த்தார்கள்.
கவடி, சந்திரபூர் மாவட்டத்தில் இருந்தாலும், 70 கி.மீ. தொலைவில் உள்ள சந்திரபூர் மாநகரைவிட கட்சிரோலி மாநகரமே அவர்களுக்கு அருகில் அமைந்துள்ளது. பன்றி கடித்த இந்தக் காயங்கள் மூலம் ராபிஸ் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்க ராபிபர் தடுப்பூசி போடவும், காயத்துக்குக் கட்டுப்போடவும் சாவ்லியில் உள்ள உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவர் போகவேண்டும்.
காட்டுப்பன்றியால் சுதிர் தாக்கப்பட்டது, ‘வேளாண்மை இடர்ப்பாடு’ என்பதற்கு ஒரு புதிய பொருளைக் கொடுக்கிறது. விலை ஏற்ற இறக்கங்கள், காலநிலை சீர்கேடுகள் உள்ளிட்ட பல மாறும் காரணிகள் விவசாயத்தை ஓர் ஆபத்தான தொழிலாக மாற்றி வைத்திருக்கின்றன. சந்திரபூர் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள காப்புக் காடுகளை காப்பற்ற, காடுகளை ஒட்டி இயங்கும் வேளாண் உலகம், ரத்தக் காவு கேட்கும் தொழிலாக மாறியுள்ளது.
காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக, பல இரவுகள், தூக்கம் துறந்து கண்காணிக்கிறார்கள். விந்தையான நுட்பங்களை எல்லாம் செய்து பார்க்கிறார்கள் விவசாயிகள். காரணம், அவர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு உள்ள ஒரே தொழில் இதுதான். படிக்கவும்: 'இது ஒரு புதுவித வறட்சி'
ஆகஸ்ட் 2022 முதல், அதற்கு முன்பும்கூட புலி, சிறுத்தை உள்ளிட்ட காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களையும் படு காயம் அடைந்த ஆண்களையும் பெண்களையும் சுதிர் போன்ற விவசாயத் தொழிலாளர்களையும் இந்த செய்தியாளர் சந்தித்துள்ளார். அவர்கள், சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள, தடோபா அந்தரி புலிகள் காப்பகத்தை ஒட்டிய வட்டங்களில், மூல், சாவ்லி, சிந்தேவாஹி, பிரம்மபுரி, பத்ராவதி, வரோரா, சிமூர் ஆகிய ஊர்களில் வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள். காட்டு விலங்கு (குறிப்பாக புலிகள்) – மனித மோதல் இந்தப் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக தலைப்புச் செய்தியாக உள்ளது.
கடந்த ஆண்டு, சந்திரபூர் மாவட்டத்தில் மட்டும் புலி தாக்குதலில் 53 பேர் இறந்தனர். இவர்களில் 30 பேர் சாவ்லி, சிந்தேவாஹி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்கிறது இந்த செய்தியாளர் திரட்டிய மாவட்ட வனத்துறைத் தரவு. இப்பகுதி மனிதர்கள் – புலிகள் மோதலின் கொதிநிலையில் இருப்பதை அந்தத் தரவு காட்டுகிறது.
காயங்கள், உயிரிழப்புகள் தவிர, புலிகள் காப்பகத்தை ஒட்டிய இடைத் தாங்கல் பகுதியிலும் (buffer zone), வெளியிலும் மக்களை அச்சமும், பீதியும் ஆட்கொண்டிருக்கின்றன. இந்த அச்சத்தின் தாக்கம் வேளாண் செயல்பாடுகளில் தெரியத் தொடங்கியுள்ளது. விவசாயிகள் குறுவை பருவ சாகுபடியை தவிர்க்கின்றனர். விலங்குகள் தாக்கும் என்ற அச்சமும், காட்டுப் பன்றி, மான்கள், நீலமான்கள் போன்றவை நிலத்தில் எதையும் விட்டு வைக்காது என்ற விரக்தியும் இவர்கள் விவசாயத்தைக் கைவிடுவதற்குக் காரணம் ஆகும்.
சுதிர் உயிரோடு இருப்பது நல்வாய்ப்பு – அவரைத் தாக்கியது புலி அல்ல, காட்டுப் பன்றிதான். படிக்கவும்: கோல்தோதாவில் ஓர் இரவு ரோந்து
*****
2022 ஆகஸ்டு மாதம் ஒரு மழைநேரப் பிற்பகலில், மற்ற தொழிலாளிகளோடு சேர்ந்து நெல் நடவு செய்துகொண்டிருந்தார் 20 வயது பவிக் சார்கர். அப்போது அவரது அப்பாவின் நண்பர் வசந்த் பிப்பர்கெடேவிடமிருந்து அழைப்பு வந்தது.
சில நிமிடங்களுக்கு முன்பு அவரது தந்தை பக்ததாவை புலி தாக்கிவிட்டதாக பிப்பர்கெடே அலைபேசியில் தெரிவித்தார். அந்த தாக்குதலில் பக்ததா உயிரிழந்தார். அவரது உடலை புலி காட்டுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
45 வயது பக்ததாவும் அவரது மூன்று நண்பர்களும், காட்டை ஒட்டியுள்ள நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். பக்ததா ஓய்வாக தரையில் அமர்ந்த நேரம், திடீரென எங்கிருந்தோ பாய்ந்த புலி அவரது கழுத்தைக் கவ்விப் பிடித்துவிட்டது. ஒரு வேளை வேறு ஏதோ இரை என்று கருதிப் பிடித்திருக்கலாம்.
“எங்கள் நண்பனை அது பிடித்து புதருக்குள் இழுத்துச் செல்வதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர எங்களால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை,” என்று கூறுகிறார் பிப்பர்கெடே. அந்தக் கொடூர சம்பவத்தில் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்த குற்றவுணர்வு அவர் குரலில் தொனிக்கிறது.
“நாங்கள் பெரிதாக கூச்சல் போட்டோம். ஆனால் ஏற்கெனவே அது ஏற்கெனவே பக்ததாவை நன்றாகப் பிடித்துக்கொண்டது,” என்கிறார் அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மற்றொரு சாட்சியான சஞ்சய் ராவுத்.
அவர் இல்லாவிட்டாலும், அவர்களில் வேறொருவரை அது கட்டாயம் பிடித்திருக்கும் என்கிறார்கள் இரண்டு நண்பர்களும்.
அந்தப் பகுதியில் புலி உலவிக் கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் தங்கள் நிலத்தில் புலித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே, ஆடு மாடுகளை புலி அடித்திருந்தாலும், ஊரில் புலித் தாக்குதலில் உயிரிழந்த முதல் மனிதர் பக்ததாதான். சாவ்லியிலும், காட்டை ஒட்டியிருக்கும் மற்ற வட்டங்களிலும் கடந்த இருபது ஆண்டுகளாகவே மனிதர்கள் புலி தாக்குதலில் இறந்து வருகிறார்கள்.
ஹிராபூரில் உள்ள தன்னுடைய வீட்டில், தனது 18 வயது தங்கை ராகினியோடு அமர்ந்தபடி பேசிய பவிக், தந்தை இறந்த செய்தியைக் கேட்டு “அப்படியே உறைந்துவிட்டேன்” என்கிறார். திடுதிப்பென ஏற்பட்ட தனது தந்தையின் மரணம், தனக்கும் தனது குடும்பத்துக்கும் பேரிடி என்று கூறும் அவர், தந்தையின் துர்மரணத்தால் ஏற்பட்ட கலக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. ஹிராபூரில் இருந்து சுதிரின் ஊர் வெகு தொலைவில் இல்லை.
அண்ணன், தங்கை இருவருமே குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். பாரியின் சார்பில் சந்திக்கச் சென்றபோது அவர்களது தாய் லதாபாய் வீட்டில் இல்லை.
ஊரை அச்சம் ஆட்கொண்டிருந்தது. “இப்போதுகூட, யாரும் வெளியே தனியாகச் செல்வதில்லை,” என்கிறார்கள் விவசாயிகள்.
*****
உயரமான தேக்கு, மூங்கில் மரங்கள் கலவையாக நெல் வயல்களின் நடுநடுவே பரவிக் கிடக்கின்றன. மழை நீரைப் பிடித்து வைப்பதற்காக நெல் வயல்களின் வரப்புகள் உயர்த்திக் கட்டப்பட்டால், அவை சதுர, செவ்வகப் பெட்டிகளைப் போலத் தோன்றுகின்றன. சந்திரபூர் மாவட்டத்தில் பல்லுயிர்ப் பெருக்கம் மிகுந்த பகுதி இது.
தடோபா காட்டுக்கு தெற்கே இருக்கும் சாவ்லி, சிந்தேவாஹி ஆகிய இடங்கள் புலிகள் காப்புத் திட்டத்தின் பலனை எதிர்கொள்கின்றன. தடோபா, அந்தரி புலிகள் காப்பகத்தில் 2018-ம் ஆண்டு 97 புலிகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2022-ல் இந்த எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது என்கிறது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 2023ல் வெளியிட்ட ‘புலிகள் இணை வேட்டை விலங்குகள் நிலைமை அறிக்கை -2022’.
பல புலிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே, மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் இடையிடையே இருக்கிற வட்டாரக் காடுகளில் இருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறி, மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் உலவும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காட்டிலும், காட்டை ஒட்டியுள்ள இடைத் தாங்கல் பகுதியிலும் புலிகள் தாக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. இது காப்பகத்தை விட்டு பல புலிகள் வெளியேறுவதைக் காட்டுகிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதியை ஒட்டியிருக்கும் இடைத்தாங்கல் பகுதியிலும், அதற்கு வெளியிலும் பெரும்பாலான தாக்குதல்கள் நிகழ்கின்றன. மிக அதிக அளவிலான தாக்குதல்கள் காட்டில் நடக்கின்றன. அதையடுத்து அதிக தாக்குதல்கள் விவசாய நிலங்களிலும், வடகிழக்குப் பாதையில் உள்ள அடர்த்தி குறைந்த காடுகளிலும் நிகழ்கின்றன. காப்பகத்தையும், இடைத்தாங்கல் பகுதியையும், துண்டுக் காடுகளையும் இணைக்கும் வழித்தடத்தில் இந்த அடர்த்தி குறைந்த காடுகளும், விவசாய நிலங்களும் அமைந்துள்ளன என்று தடோபா, அந்தரி புலிகள் காப்பக வட்டாரத்தில் 2013-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
புலிகள் பாதுகாப்பு முயற்சி ஈட்டிய வெற்றியின் ஆபத்தான இன்னொரு பக்கம் மனித – புலிகள் மோதல் என்று 2023 ஜூலையில் நடந்த மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில், ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில், மாநில வனத்துறை அமைச்சர் சுதிர் முன்கன்டிவார் தெரிவித்தார். புலிகள் இடம் மாற்றும் பரிசோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு வளர்ந்த புலிகளை கோண்டியாவில் உள்ள நாகஜிரா புலிகள் காப்பகத்துக்கு அரசாங்கம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். புலிகளுக்கு இடம் கொடுக்க வாய்ப்புள்ள வேறு காடுகளுக்கு மேலும் அதிகப் புலிகளை அனுப்பி வைப்பது தொடர்பாக ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புலிகள் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு, காயங்கள், பயிர் சேதம், மாடுகள் இழப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்படும் இழப்பீடு உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அதே பதில் உரையில் கூறியிருந்தார். மனித உயிரிழப்புக்கு வழங்கும் இழப்பீட்டை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியது அரசாங்கம். ஆனால் கொல்லப்படும் மாடுகளுக்கும், பயிர் சேதத்துக்கும் வழங்கும் இழப்பீட்டை அரசாங்கம் உயர்த்தவில்லை. பயிர் சேதத்துக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம், மாடுகள் கொல்லப்பட்டால் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
ஆனால், உடனடியாக, குறுகிய காலத்தில் இந்த சிக்கலுக்கு முடிவு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
“மகாராஷ்டிரத்தின் தடோபா-அந்தரி புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதியில், கடந்த இருபது ஆண்டுகளில் ஊன் உண்ணிகள் மனிதர்களைத் தாக்குவது வெகுவாக அதிகரித்திருக்கிறது என்று கூறுகிறது இந்தக் காப்பக வட்டாரத்தில் (காப்பகத்துக்கு வெளியேயும் இடைத்தாங்கல் பகுதியின் உள்ளேயும் வெளியேயும்) நடத்தப்பட்ட விரிவான ஆய்வு.
2005-11ல் நடத்தப்பட்ட அந்த ஆய்வு, "மனிதர்களுக்கும் பெரிய ஊன் உண்ணிகளுக்கும் இடையிலான மோதல்களைத் தடுக்கவோ, குறைக்கவோ வழிகளைப் பரிந்துரைப்பதற்காக, தடோபா-அந்தரி புலிகள் காப்பகத்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் புலிகள், சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கும் விவகாரத்தின் மனிதக் கோணத்தையும், சூழலியல் கோணத்தையும் ஆராய்ந்தது." 132 தாக்குதல்களில் 78 சதவீதம் புலிகளாலும், 22 சதவீதம் சிறுத்தைகளாலும் நடந்திருந்தன.
“முக்கியமாக, மற்ற நடவடிக்கைகளைவிட சிறு வனப் பொருட்கள் சேகரிக்கும்போதுதான் நிறைய பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறது அந்த ஆய்வு. காடுகளில் இருந்தோ, ஊர்களில் இருந்தோ ஒருவர் எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறாரோ அவ்வளவு தூரம் அவர் மீது தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. மனித உயிரிழப்புகளையும், பிற மோதல்களையும் குறைப்பதற்கு, புலிகள் காப்பகத்துக்கு அருகே மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவேண்டும், முடிந்தவரை குறைக்கவேண்டும் என்று கூறும் அந்த ஆய்வு, சாண வாயு, சூரியவிசை போன்ற மாற்று ஆற்றல்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்து, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை சேகரிக்கச் செல்ல வேண்டிய நெருக்கடியைக் குறைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
காட்டைவிட்டு வெளியே செல்லும் ஊன் உண்ணிகளின் நீண்ட தொலைவு செல்லும் பழக்கமும், மனிதர்கள் சூழ்ந்த பகுதிகளில் அவற்றுக்கு உணவாக காட்டுயிர்கள் கிடைப்பது அரிதாக இருப்பதும் புலி – மனித மோதல் நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஆனால், காட்டில் வனப் பொருட்கள் சேகரிக்கச் செல்லும்போதோ, மாடு மேய்க்கும்போதோ மட்டும் அல்லாமல், வயல்களில் ஆட்கள் வேலை செய்யும்போது தாக்குதல்கள் அதிக அளவில் நடப்பதை சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் காட்டுகின்றன. சந்திரபூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காட்டு விலங்குகள், குறிப்பாக தாவர உண்ணிகள் பயிர்களை மேய்வது விவசாயிகளுக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. ஆனால் தடோபா – அந்தரி புலிகள் காப்பகத்துக்கு அருகே காட்டை ஒட்டிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நடக்கும் புலி, சிறுத்தைத் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளன. கண்ணுக்கு எட்டிய தொலைவில் இதற்குத் தீர்வும் தெரியவில்லை.
அந்தப் பகுதியில் பயணம் செய்தால், காட்டு விலங்குகள், புலிகள் தாக்குதலே மக்களின் அதிமுக்கியப் பிரச்சனையாக இருப்பது தெரியவருகிறது. புனேவில் இருக்கும் காட்டுயிர்கள் தொடர்பான உயிரியலாளர் டாக்டர் மிலிந்த் வாட்வே குறிப்பிடுவதைப் போல இந்தப் பிரச்சனை, நீண்ட கால நோக்கில் இந்தியாவின் காட்டுயிர் பாதுகாப்புத் தேவைகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உள்ளூர் மக்கள் காட்டுயிர்களுக்கு எதிரிகளாக ஆவார்கள் என்றால் (இயல்பில் அப்படித்தான் நடக்கும்) பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு வெளியே எப்படி காட்டுயிர்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும்?
சமீபத்திய சிக்கல் ஒரு புலியால் நடப்பது அல்ல. பல்வேறு புலிகள் வேறு இரை என்று கருதி மனிதர்களை தவறுதலாகத் தாக்கும் விபத்துகள் இவை. இத்தகைய தாக்குதல்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழப்பவர்களும், இந்த சம்பவங்களை நேரில் பார்ப்பவர்களும் முடிவற்ற அதிர்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஹிராபூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சாவ்லி வட்டத்தைச் சேர்ந்த சாந்த்லி பி.கே. என்ற ஊரைச் சேர்ந்த பிரசாந்த் யேலட்டிவார் அத்தகைய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். 2022 டிசம்பர் 15-ம் தேதி ஒரு வளர்ந்த புலி அவரது மனைவி ஸ்வரூபாவைக் கொன்றது. ஐந்து பெண்கள் அச்சத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது ஸ்வரூபா மீது பாய்ந்து கடித்து, காட்டுக்குள் இழுத்துச் சென்றது. இது நடந்தது காலை 11 மணி வாக்கில்.
2023ல் இது பற்றிப் பேசிய யேலட்டிவார், “அவள் போய்ச் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன,” என்றார். “என்ன நடந்தது என்பதையே என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை,” என்றார் அவர்.
யேலட்டிவார் குடும்பத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அவர்கள் விவசாயத் தொழிலாளிகளாகவும் வேலை செய்தார்கள். ஊருக்கு அருகில் இருந்த வேறொருவர் நிலத்தில் ஸ்வரூபாவும் மற்ற பெண்களும் பருத்தி எடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். (முக்கியமாக நெல் விளையும் இந்தப் பகுதியில் பருத்திப் பயிர் மிகவும் புதியது.) அப்போது ஸ்வரூபா மீது பாய்ந்த புலி அவரை அரை கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது. இந்தக் கொடூர சம்பவம் நடந்த சில மணி நேரம் கழித்து, வனத்துறை அதிகாரிகள், வனக் காவலர்கள் உதவியோடு குதறப்பட்ட, உயிரற்ற ஸ்வரூபாவின் உடலை ஊர் மக்கள் மீட்டனர். இந்தப் பகுதியில் புலியால் உயிரிழந்தவர்களின் நீண்ட பட்டியலில் ஸ்வரூபாவும் ஒருவர்.
“புலியை விரட்டுவதற்கு நாங்கள் தட்டுகளையும், மேளங்களையும் அடித்து பெரிதாக சத்தம் போடவேண்டியிருந்தது,” என்கிறார் விஸ்தாரி அல்லூர்வார். அன்றைய தினம் ஸ்வரூபாவின் உடலை மீட்கச் சென்றவர்களில் இவரும் ஒருவர்.
“நாங்கள் எல்லாவற்றையும் பீதியில் பார்த்துக்கொண்டிருந்தோம்,” என்கிறார் யேலட்டிவாரின் பக்கத்து வீட்டுக்காரரும், 6 ஏக்கர் நிலம் வைத்திருப்பவருமான சூர்யகாந்த் மாருதி படேவார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊரில் மக்கள் பீதியில் உறைந்து கிடப்பதாக கூறுகிறார் இவர்.
சம்பவம் நடந்தபோது கொந்தளிப்பு நிலவியது. பிரச்சனைக்குரிய புலியை வனத்துறையினர் பிடித்து அல்லது முடக்கி தங்கள் பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என்று ஊர் மக்கள் வலியுறுத்தினர். ஆனால், சிறிது காலத்தில் போராட்டம் நீர்த்துப்போனது.
அவரது மரணத்துக்குப் பிறகு, ஸ்வரூபாவின் கணவருக்கு வேலைக்குப் போகும் துணிச்சல் இல்லை. ஊர் எல்லையில் இன்னும் ஒரு புலி வந்துபோய்க் கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.
“என் நிலத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு புலியைப் பார்த்தோம். அதன் பிறகு எந்த வேலைக்காகவும் நிலத்துக்குத் திரும்பிப் போகவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு யாரும் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யவில்லை” என்கிறார் ஏழு ஏக்கர் நிலம் வைத்துள்ள 49 வயது திட்டி ஜக்லு பத்தம்வார். ஜூலை மாதத் தொடக்கத்தில் நல்ல மழை பெய்து, விதைப்புப் பருவம் அப்போதுதான் தொடங்கியிருந்த நிலையில், அவர் இதைக் கூறினார்.
தனது மனைவியின் மரணத்துக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் பெற்றார் பிரசாந்த். ஆனால் அந்தப் பணம் தனது மனைவியை உயிரோடு கொண்டு வராது என்கிறார் அவர். ஒரு மகனையும், மகளையும் விட்டுச் சென்றார் ஸ்வரூபா.
*****
2022 முடிந்து 2023 வந்துவிட்டது. ஆனால் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. சந்திரபூர் மாவட்டத்தின் பரந்த தடோபா - அந்தரி புலிகள் காப்பக வட்டாரம் முழுவதிலும், புலிகள் தாக்குதலும் வயல்களில் காட்டுயிர் தொல்லையும் தொடர்கின்றன.
2023 ஆகஸ்டு மாதம், பழங்குடி பெண் விவசாயியான லட்சுமிபாய் கன்னாகே, புலி தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது ஊரான டெக்காடி, பத்ராவதி வட்டத்தில், புகழ்பெற்ற மொஹார்லி சரகத்தில், புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கம்பீரமான காட்டிற்குள் செல்வதற்கான முக்கிய நுழைவாயில் மொஹார்லி.
சம்பவம் நடந்த நாளில், இராய் அணையின் காயல் பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்தில் மருமகள் சுலோச்சனாவுடன் சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்தார் லட்சுமிபாய். மாலை சுமார் 5.30 மணி இருக்கும். லட்சுமிபாய்க்குப் பின்னால், காட்டுப் புல்லில் மறைந்தபடியே ஒரு புலி மெதுவாக நகர்ந்து வருவதைப் பார்த்துவிட்டார் சுலோச்சனா. ஆனால் அவர் கத்திக் கூச்சலிட்டு தனது மாமியாரை எச்சரிப்பதற்கு முன்பாகவே அந்த மூதாட்டி மீது பாய்ந்துவிட்டது புலி. அவரது கழுத்தைக் கடித்து அணை நீருக்குள் உடலை இழுத்துச் சென்றுவிட்டது. தன்னைப் பாதுகாத்துக்கொண்டு ஓடிய சுலோச்சனா ஆட்களை அழைத்துக்கொண்டு நிலத்துக்கு வந்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு லட்சுமிபாயின் சடலம் நீரில் இருந்து மீட்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் உடனடியாக, லட்சுமிபாயின் இறுதிச் சடங்குக்காக ரூ.50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். சில நாட்கள் கழித்து, ஊர் மக்களிடம் நிலவும் கோபத்தையும், போராட்டங்கள் நடப்பதற்கான வாய்ப்பையும் உணர்ந்து அவரது கணவர், 74 வயது ராம்ராவ் கன்னாகேவுக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டை வழங்கிவிட்டனர்.
டெக்காடி கிராமத்தில் ஒரு வனக்காப்பாளர்கள் குழு கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஊரே அச்சத்தில் நடுங்குவதால், ஊர் மக்கள் தங்கள் நிலங்களில் வேலை செய்ய கும்பலாக செல்கிறார்கள்.
அதே பத்ராவதி வட்டத்தில் 20 வயது மனோஜ் நீல்கண்ட் கேரே என்ற, இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவரை சந்தித்தோம். 2023 செப்டம்பர் 1-ம் தேதி காட்டுப் பன்றி தாக்கியதில் பட்ட பயங்கரமான காயத்துக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
“என் தந்தையின் நிலத்தில் நடந்த களை பறிக்கும் வேலையை நான் மேற்பார்வை செய்த நேரத்தில் பின்னால் இருந்து ஓடிவந்த ஒரு காட்டுப் பன்றி என் மீது மோதி, தன் மருப்பினால் என்னைத் தாக்கியது.”
அதே பத்ராவதி வட்டத்தில், பிர்லி கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா மங்கேஷ் ஆசுத்கர் வீட்டில் ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த மனோஜ், அந்த தாக்குதல் சம்பவத்தைப் பற்றி விரிவாக கூறினார். “30 விநாடிகளில் அது நடந்துவிட்டது,” என்கிறார் அவர்.
பன்றி அவரது இடது தொடையில் கிழித்தது. தற்போது கட்டுப் போடப்பட்டுள்ளது. பிறகு அது அவரது இடது கெண்டைக் காலை வெறியோடு கடித்ததில், கெண்டைக் கால் சதை தனியாகப் பிய்த்துக்கொண்டு வந்துவிட்டது. அவரது கெண்டைக் காலை சரி செய்ய, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். எனவே, அவரது சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் ஏராளமாக செலவு செய்யவேண்டியிருக்கும். “நல்வாய்ப்பாக நான் அந்த தாக்குதலில் உயிர் பிழைத்தேன்,” என்கிறார் அவர். வேறு யாரும் அந்த தாக்குதலில் காயமடையவில்லை.
விவசாயிகளான பெற்றோருக்கு ஒரே மகனான மனோஜ் கட்டுமஸ்தான உடம்புக்காரர். அவரது ஊரான வேட்காவ்ன் தொலைதூரத்தில் இருப்பதாலும், அங்கே சென்று வர பொதுப்போக்குவரத்து ஏதுமில்லை என்பதாலும், அவரது தாய் மாமா அவரை பிர்லி கிராமத்துக்கு அழைத்து வந்துவிட்டார். 27 கி.மீ. தொலைவில் உள்ள பத்ராவதி நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு அங்கிருந்து செல்வது எளிது.
தாக்குதல் நடந்த நாளில், உடனடியாக, தனது ஸ்மார்ட் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டுகிறார் அவர். அந்தப் படங்களில், அவரது காயங்கள் எவ்வளவு மோசமானவை என்பது தெரிகிறது.
மக்கள் உயிரிழப்பது, உடல் திறனை இழப்பது தவிர, இத்தகைய சம்பவங்கள் ஊரில் விவசாய வேலைகளை மோசமாகப் பாதிக்கின்றன என்கிறார், சாந்த்லி கிராமத்தின் அரை மேய்ச்சல் சமூகமான குர்மார் சமூகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சிந்தமன் பலம்வார். “விவசாயிகள் குறுவை பருவ சாகுபடியில் ஈடுபடுவது குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் நிலத்துக்குச் செல்ல அஞ்சுகிறார்கள்,” என்கிறார் அவர்.
காட்டு விலங்குகள் படையெடுப்பும், புலி நடமாட்டமும் பல ஊர்களில் குறுவை பருவ விதைப்பை பாதிக்கின்றன. இரவு நேரப் பயிர் பாதுகாப்புக்குச் செல்வது கிட்டத்தட்ட நின்றுவிட்டது. மக்கள் ஊரை விட்டு வெளியே செல்லவும், ஏதும் அவசரம் என்றால் முன்பு போல மாலை நேரத்தில் வெளியே செல்லவும் அஞ்சுகிறார்கள்.
இதனிடையே, கவடி கிராமத்தில் அனுபவம் மிக்க விவசாயத் தொழிலாளியான சசிகலாபாய்க்கு தன் மகன் சுதிர் காட்டுப் பன்றி தாக்குதலில் எவ்வளவு தூரம் மயிரிழையில் உயிர் தப்பி வந்திருக்கிறான் என்பது தெரிகிறது.
அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் மராத்தியில் கடவுளைப் போற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். “அவர் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்,” என்கிறார் அவர். சுதிரின் தந்தை இல்லை. நீண்ட காலம் முன்பே அவர் இறந்துவிட்டார். “அது பன்றியாக இல்லாமல், புலியாக இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?” என்று கேட்கிறார் அந்தத் தாய்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்