ஜோலன் சங்காவின் கைவினை தயாரிப்புகளில் குறைகளைக் கண்டுபிடிக்கவே முடியாது.
அவரது கைகளால் பின்னப்பட்ட சடாய் (பாய்கள்) வடிவங்களில் தொடக்கம், முடிவை அடையாளம் காண்பது கடினம் - சடாயின் நான்கு பக்கங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். பின்னும் போது சிறு தவறு நிகழ்ந்தாலும், ஒரு மாத உடல் உழைப்பை வீணாக்கிவிடும். எனவே 66 வயதான அவர் கவனமாக இருக்கிறார். அவரது கைகள் இப்போது இந்த வேலைக்கு பழகிவிட்டன. அவர் பிறருடன் உரையாடியபடி கூட நெசவு செய்ய முடியும்.
ஜோலனுக்கும் அவரது மறைந்த கணவர் யாகூப்புக்கும் இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் இருந்தனர். அவரது மூத்த மகன் 2001-ல் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், தொடர்ச்சியான துரதிர்ஷ்டங்களில், யாகூப், அவரது மகள்கள் ரஹில், நில்மணி, மகன் சிலாஸ் ஆகியோர் 2004 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலங்களில் காலமானார்கள்.
"என் குடும்பத்தில் நடந்த அனைத்து மரணங்களிலும் நான் நொறுங்கிப் போனேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை," என்கிறார் ஜோலன். "வீட்டை நடத்த எந்த வழியும் இல்லை. எனவே நான் பாய்களைத் பின்னத் தொடங்கினேன்."
ஜார்க்கண்டில் உள்ள சலங்கி கிராமத்தில் மக்கள் தொகை (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) 1,221 ஆக உள்ளது. சிறுமியாக இருந்ததிலிருந்து 25க்கும் மேற்பட்ட பாய்களை பின்னியுள்ளார். "இந்த வேலை [பின்னல்] பார்ப்பதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது," என்று அவர் கூறுகிறார். அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை கவனித்து அவர் அதை கற்றுக் கொண்டார். "எனக்கு குழந்தை பருவத்திலிருந்தே இத்திறன் இருந்தது. ஆனால் பண தேவைக்கு மட்டுமே நான் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினேன்."
அவர் ஏழாம் வகுப்பு வரை படித்தார். "என் காலத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பள்ளிக்குச் செல்வது நேரத்தை வீணடிப்பதாகக் கருதப்பட்டது. பாய்களை விற்பது, விவசாயம் செய்வது, தினக்கூலியாக வேலை செய்வது மூலம் அவருக்கு மாத வருமானம் வருகிறது.
"சடாய்களை பின்னுவதை விட வயல்களில் வேலை செய்வது எளிதானது," என்று அவர் கூறுகிறார். மழைக்காலத்தில் மட்டுமே விவசாயக் கூலி வேலை நடக்கும். தினசரி கூலி வேலை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும் போது, ஒரு சடாய் பின்ன அதன் அளவைப் பொறுத்து 40 முதல் 60 நாட்கள் வரை ஆகலாம் என்று அவர் கூறுகிறார். ஒரே நிலையில் தொடர்ந்து வேலை செய்வது தனது கண்களில் கண்ணீரை வரவழைப்பதோடு, மோசமான முதுகுவலியைக் கொண்டு வருகிறது என்று ஜோலன் கூறுகிறார்.
ஜோலன் அவரது இரண்டு மகள்களான 36 வயதாகும் எலிசாபா மற்றும் 24 வயதாகும் பினிதா ஆகியோர் முண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
*****
ஈச்சை மர ஓலைகளை சேகரித்து வெயிலில் உலர்த்துவதன் மூலம் ஒரு சடாய்க்கான பின்னல் செயல்முறை தொடங்குகிறது. ஓலைகளை சந்தையில் வாங்கலாம். ஆனால் ஜோலன் அவை விலை அதிகம் என்கிறார்; அவற்றை தானே சேகரிக்க விரும்புகிறார். அவர் தயாரிக்க திட்டமிடும் பாயின் அளவிற்கு ஏற்ப ஓலைகளைத் தேர்ந்தெடுக்கிறார். ஓலைகள் மட்டையிலிருந்து பிரிக்கப்பட்டு, தண்ணீரில் ஊறவைக்கப்படுகின்றன. பிறகு அவை பின்னலுக்கு தயாராகின்றன.
ஜோலன் தனது உள்ளங்கை அகலத்திற்கு ஒரு நீளமான விரிப்பை முதலில் பின்னுகிறார். மெல்லிய ஓலைகள் ஒரு சிக்கலான வடிவத்தில் கீழும் மேலும் ஒரு சடைப் போல பின்னுகிறார். அவர் தவறுகளின்றி கவனமாக கையாள்கிறார். இறுக்கமாக வைத்து பின்னுகிறார் - தளர்வான பின்னல் ஓலை பாயின் வடிவத்தை கெடுத்துவிடும்.
ஒரு நீளமான துண்டு தயாரானதும், நெய்யப்பட வேண்டிய பாயின் நீளத்தைப் பொறுத்து அதை அளந்து வெட்டுகிறார். வெட்டப்பட்ட துண்டுகள் அருகருகே போடப்பட்டு, ஒன்றாக தைக்கப்பட தயாராகின்றன. இதற்காக ஜோலன் தனது கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சௌக்கில் [சந்தை] வாங்கிய ரூ.10 ரூபாய் மதிப்புள்ள தடிமனான ஊசி மற்றும் ரூ.40 மதிப்புள்ள பிளாஸ்டிக் நூல் துண்டுகளை பயன்படுத்துகிறார். "முன்பு, அதே சரத்தை பத்து ரூபாய்க்கும், ஊசியை ஐந்து ரூபாய்க்கும் வாங்கினேன்," என்று அவர் வருத்தமாக கூறுகிறார்.
பின்னலை விட தையல் எளிதானது, விரைவானது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால், இரண்டு நாட்களில் முழு பாயையும் தைத்து விடலாம். புதிதாக பின்னப்பட்ட சடாய் ஐந்து கிலோவுக்கு மேல் எடை கொண்டது. பயன்படுத்தும்போது அதன் எடை குறைகிறது.
எந்த பருவத்திலும் பயன்படுத்த, ஈச்சைமர தடிமன் பாய், பிளாஸ்டிக் பாய்களை விட சிறந்தது, குறிப்பாக குளிர்காலங்களில். இது போன்ற ஒரு சடாய் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் - தண்ணீரிலிருந்து விலகி இருந்தால் இன்னும் நீடிக்கும்.
"நான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த சடாயைப் பயன்படுத்துகிறேன், இன்னும் சில ஆண்டுகளுக்கு கூட இதைப் பயன்படுத்துவேன். அது எங்கும் கிழியவில்லை", என்று ஜோலன் தனது வீட்டில் உள்ள ஒரு பழைய பாயை சுட்டிக்காட்டுகிறார். "நான் அதை தண்ணீர் படாமல் விலக்கி வைத்து ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்கிறேன்."
*****
"எங்க அம்மாவுக்கு பாய்கள் தயாரிப்பது ரொம்ப பிடிக்கும். எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பாய் பின்னத் தொடங்குவார்," என்கிறார் ஜோலனின் மூத்த மகள் எலிசாபா. எலிசாபா தனது தாயிடமிருந்து பின்னலை கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஈச்சை மர ஓலைகளைத் தயாரிப்பது, பின்னிய கீற்றுகளை வெட்டுவது மற்றும் பாய் தைப்பது ஆகியவற்றில் அவருக்கு உதவுகிறார்.
ஜோலனின் இளைய மகள் பினிதா, போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் இருக்கிறார். "ஒரு நல்ல மருத்துவமனைக்கு செல்ல எங்களிடம் வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் அவள் சிகிச்சை பெற்று வருகிறாள். ஒவ்வொரு மாதமும் மருந்துகளைப் பெற்று மசாஜ் செய்கிறோம்."
தினக்கூலி விவசாயத் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்கு வெறும் ரூ.100 மட்டுமே பெறுகின்றனர். இப்போது அவருக்கு சிறிதளவு நிலம் சொந்தமாக இருப்பதால், சொந்த தேவைக்கான உணவை அதில் உற்பத்தி செய்து கொள்கிறார். இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஜோலனுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அவரது மகள் பினிதாவும் சுவாமி விவேகானந்தா நிஷாக்த் ஸ்வாவலம்பன் புரோட்சஹான் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெறுகிறார்.
"என் குடும்பத்தில் அனைவரும் இருந்தபோது, நாங்கள் கல் குவாரிகளில் வேலை செய்தோம். சோர்வுடன் வீடு திரும்பினாலும், மகிழ்ச்சியுடன் நகைச்சுவையாக பேசிக் கொள்வோம்," என்று ஜோலன் நினைவுக் கூர்ந்தார். "அப்போதெல்லாம் எங்களுக்கான தேவைகள் அனைத்தும் எளிதாக கிடைத்தன."
*****
"நான் ஒரு மரத்தின் நிழலில் பின்னல் செய்வேன்," என்று தனது வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி ஜோலன் கூறுகிறார். அவர் தனது சொந்தப் பணத்தில் கட்டிய தாழ்வாரம் பாய் பின்னும் இடமாகவும், அக்கம்பகத்தினர் எப்போதாவது கூடும் இடமாகவும் உள்ளது.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கோடைகாலத்தில் (பிப்ரவரி முதல் ஜூன் வரை) கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி பின்னல் செய்வார்கள் என்று அவர் கூறுகிறார். இது பெண்கள் தங்கள் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும். ஈச்சை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் பாய் ரூ.600 முதல் 650க்கு விற்கப்படும்.
இன்று, ஜோலன் தயாரித்த பாயின் விலை அவற்றின் அளவைப் பொறுத்து ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை விற்கப்படுகிறது. நேரம் மற்றும் அவற்றை உருவாக்க தேவைப்படும் உடல் உழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இது குறைவு தான். இருப்பினும், இப்போதெல்லாம் மக்கள் பிளாஸ்டிக் பாய்களை வாங்கவே விரும்புகிறார்கள் - அவை மலிவானவை (ரூ.100 முதல் விலை நிர்ணயிக்கப்படுகின்றன), லேசானவை மற்றும் வண்ணமயமானவை.
ஜோலன் கூறுகிறார், முன்பெல்லாம் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பின்னிய பாயைக் காணலாம். ஆனால் இப்போது பழங்குடியின சமூகங்களின் வீடுகளில் மட்டுமே அவற்றை நீங்கள் பார்க்க முடியும். இதற்குக் காரணம், திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணுக்கு தனது புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்ல புதிதாக நெய்யப்பட்ட சடாய் வழங்குவது ஒரு பாரம்பரியம்.
பாய் பின்னும் தொழில் மெதுவாக மறைந்து வருகிறது எனும் ஜோலன், ஒருவேளை இன்னும் சில ஆண்டுகளில், சடாய் நெசவாளர்கள் கடந்த காலமாக மாறிப் போவார்கள் என்கிறார்.
இந்தக் கட்டுரைக்கு உதவிய பாரியின் முன்னாள் பயிற்சி மாணவர்களான பர்வீன் குமார், அம்ரிதா ராஜ்புத், ஆங்கில மொழிபெயர்ப்பில் உதவிய முன்னாள் பாரி பயிற்சி மாணவர் தியான்வி கதாராணி ஆகியோருக்கு எங்கள் நன்றிகள்.
தமிழில்: சவிதா