“முதலில் நான் தோக்ராவை பார்த்தபோது மாயம் போல இருந்தது,” என்கிறார் 41 வயது பிஜுஷ் மொண்டல். மேற்கு வங்க பிர்பும் மாவட்டத்தின் கைவினைக் கலைஞரான அவர், 12 வருடங்களாக அக்கலை வடிவத்தை செய்து வருகிறார். இம்முறையில் ‘மெழுகு இழக்கும்’ உத்தியை பயன்படுத்தினார்கள். இந்தியாவின் மிகப் பழமையான உலோக வார்ப்பு முறை இது. கிட்டத்தட்ட சிந்து சமவெளி நாகரிக காலத்து முறை.
தோக்ரா என்கிற பெயர், கிழக்கு இந்தியாவில் பயணிக்கும் நாடோடி கைவினைக் கலைஞர்கள் குழுவை குறிக்கிறது.
ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சட்டீஸ்கர் வரை நீளும் சோடா நாக்பூர் பீடபூமி, பெரியளவில் தாமிரத் தனிமத்தை கொண்டிருக்கிறது. தோக்ரா சிலைகள் செய்யப்படும் பித்தளை, வெண்கலம் போன்ற உலோகப் போலிகளில் இடம்பெறும் முக்கியமான உட்கூறு இது. இந்தியாவின் பல பகுதிகளில் தோக்ரா கலை கடைபிடிக்கப்பட்டாலும் பங்குரா, பர்த்தாமன் மற்றும் புருலியா மாவட்டங்களின் ‘வங்காள தோக்ரா”வுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.
தோக்ரா சிலை வடிப்பின் முதல் கட்டம் களிமண்ணை வார்ப்பதாகும். உருவாக்க விரும்பும் சிலைக்கான முதல் கட்டம் அது. விரிவான வடிவங்கள் உருவாக்கப்பட்டு தேன்மெழுகிலோ குங்கிலிய மர மெழுகிலோ செதுக்கப்பட்டு, களிமண் வார்ப்புக்குள் பதிக்கப்படும். பிறகு மெழுகு வார்ப்பு, இன்னொரு களிமண் கூடால் மூடப்படும். உள்ளே இருக்கும் மெழுகு, உருகி வெளிவரும் வகையில் ஒன்றோ இரண்டோ துளைகள் கூடில் இருக்கும். அதே வழியில்தான் உருக்கப்பட்ட உலோகம் உள்ளே ஊற்றப்படும்.
“இயற்கை இம்முறைக்கு மிகவும் முக்கியம்,” என்கிறார் சிமா பால் மொண்டல். “குங்கிலிய மரங்கள் இல்லையென்றால், நான் மெழுகு உருவாக்க முடியாது. தேனீக்களும் தேன் கூடுகளும் இல்லாமல், மெழுகு கிடைக்காது.” தோக்ரா வார்ப்பு, மண் வகைகளையும் வானிலையையும் அதிகமாக சார்ந்திருக்கும் முறை ஆகும்.
வெளிக்கூடு காய்ந்த பிறகு, பிஜுஷும் அவரின் உதவியாளர்களும் சிலையை, 3-லிருந்து 5 அடி ஆழ உலையில் சுட வைக்கின்றனர். களிமண் வேகத் தொடங்கியதும், மெழுகு உருகி வெளியேறி உட்பகுதி காலியாகி விடுகிறது. உருக்கப்பட்ட உலோகம் அதற்குள் ஊற்றப்படுகிறது. களிமண் வார்ப்பின் சூடு தணிய ஒருநாள் அப்படியே விட்டுவிடப்படும். வேகமாக சிலை செய்ய வேண்டுமெனில், 4 அல்லது 5 மணி நேரங்களுக்கு குளிர வைக்கப்படும். அதற்குப் பிறகு, அது உடைக்கப்பட்டு உள்ளிருக்கும் சிலை வெளியே எடுக்கப்படும்.
தமிழில்: ராஜசங்கீதன்