மகன் விட்டுச் சென்ற இரண்டு மகன்கள் மற்றும் ஆறு மகள்கள் பற்றி பல முறை கவலை கொள்கிறார் பாட்டியான புதெ மஜி. இளம் குழந்தையான ஜானகிக்கு வயது ஆறு. “அவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம் எனத் தெரியவில்லை,” என்கிறார் 70 வயது கோண்ட் பழங்குடியான அவர். ஒடிசாவின் பலாங்கிர் மாவட்டத்திலுள்ள ஹியால் கிராமத்தில் வசிக்கிறார்.
சிறுநீரக கோளாறாக குடும்பம் நம்பும் குறைபாட்டுக்கு, இரு வருடங்களுக்கு முன் அவரது 50 வயது மகன் பலியானார். புலம்பெயர் தொழிலாளர்களாக அவரும் அவரது மனைவியான 47 வயது நமனியும் செங்கல் சூளைகளில் வேலை பார்க்க தெலெங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.
“நவம்பர் 2019-ல் செங்கல் சூளையில் வேலை பார்க்க நாங்கள் சென்னைக்கு சென்றோம்,” என்கிறார் நமனி. அவர்களின் குடும்பத்திலிருந்து 10 பேர் சென்றதாக குறிப்பிடுகிறார். அவரின் கணவரான 50 வயது ந்ருபா, அவர்களின் மூத்த மகனான 24 வயது ஜுதிஷ்திர் மற்றும் அவரின் மனைவியான 21 வயது பர்மிளா, 19 வயது பூர்ணிமா, 16 வயது சஜ்னே, 15 வயது குமாரி மற்றும் அவரின் கணவரான 21 வயது தினேஷ் உள்ளிட்டோர் சென்றனர். “உள்ளூர் ஒப்பந்ததாரரால் எங்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் அவர். 10 வயது சபித்ரியும் ஆறு வயது ஜானகியும் உடன் சென்றனர். அவர்களுக்கு பணம் கிடையாது.
ஜூன் 2020-ல் கோவிட் காரணமாக அவர்கள் அனைவரும் கிராமத்துக்கு திரும்பினர். தற்காலிக மருத்துவத்துக்கும் பராமரிப்புக்கும் பள்ளிகளிலும் சமூக நலக் கூடங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை ஒடிசா அரசாங்கம் செய்திருந்தது. “கிராமப் பள்ளியில் நாங்கள் 14 நாட்கள் தங்கியிருந்தோம். என் கணவரும் நானும் தலா 2,000 ரூபாய் இங்கு தங்கியிருந்ததற்கு (ஒடிசா அரசாங்கத்திடமிருந்து) பெற்றோம்,” என நினைவுகூருகிறார் நமனி.
விரைவிலேயே நிலவரம் மாறியது. “அவர் (கணவர் ந்ருபா) சென்னையிலேயே நோய்வாய்ப்பட்டார். உள்ளூர் ஒப்பந்ததாரர் அவருக்கு க்ளுக்கோஸ் நீரும் சில மருந்துகளும் கொடுத்தார். கிராமத்துக்கு திரும்பிய பிறகும் அவரின் நோய் தொடர்ந்தது,” என நினைவுகூருகிறார் நமனி. கந்தாபஞ்சியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றார். ந்ருபாவின் தாயான புதெ சொல்கையில், “என் மகனின் மலத்தில் ரத்தம் வரத் தொடங்கியது,” என்கிறார்.
சிந்தெகெலா மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களிலுள்ள பல அரசு மருத்துவமனைகளுக்கு அவரை குடும்பம் கொண்டு சென்றது. இறுதியாக, கந்தாபஞ்சி மருத்துவமனையில், அவருக்கு பலவீனம் இருப்பதாக மருத்துவர் கூறினார். “எங்களிடம் பணம் இருக்கவில்லை. எனவே பணம் ஏற்பாடு செய்ய திரும்பி விட்டோம். மீண்டும் மருத்துவமனைக்கு சென்றபோது, சில பரிசோதனைகளை மருத்துவர் செய்தார். பிறகு அவரது சிறுநீரகங்கள் செயலிலழந்து கொண்டிருப்பதாக சொன்னார்.”
பிற வழிகளை முயலுவதென உறுதி கொண்ட நமனி, மாற்று மருத்துவத்துக்கு மாற முடிவெடுத்தார். “ஆயுர்வேத சிகிச்சைக்காக (25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்) சிந்தெகெலாவுக்கு அவரைக் கொண்டு செல்லும்படி என் பெற்றோர் யோசனை கூறினர். ஒரு மாதம் அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். ஆனாலும் சரியாகவில்லை,” என்கிறார் அவர். உடல்நிலை மோசமானதும் 40 கிலோமீட்டர் தொலைவில் பட்னாகருக்கு அருகே இருக்கும் சமூக சுகாதார மையத்துக்கு அவரை கொண்டு சென்றனர்.
மார்ச் 2021-ல் எட்டு குழந்தைகளையும் தவிக்க இட்டு ந்ருபா இறந்தார். இளைய குழந்தைக்கு ஆறு வயதுதான் ஆகியிருந்தது.
மீண்டும் புலம்பெயர்வதில் நமனிக்கு விருப்பு இல்லை. மருத்துவக் கட்டணங்களுக்கான நிவாரணத்தைக் பெற்று, அதில் கொஞ்ச காலம் ஓட்டலாம் என குடும்பம் நம்பியது. “கணவரின் சிகிச்சைக்காக வாங்கிய கடனை திரும்ப அடைக்க வேண்டியிருப்பதால், நாங்கள் மீண்டும் செல்ல வேண்டும். அரசாங்கம் ஏதேனும் உதவினால், நாங்கள் போக மாட்டோம்.”
நலவாரியத்தில் பயனாளியாக பதிவு செய்து கொண்ட குறைந்த அளவு ஒடியா தொழிலாளர்களில் காலஞ்சென்ற ந்ருபாவும் ஒருவர். 2018ம் ஆண்டு அவர் பதிவு செய்து கொண்டார். எனினும் அவரின் குடும்பம் எந்த நிதியும் பெற முடியவில்லை. நமனி குறிப்பிடுகிற ‘உதவி’, ஒடிசாவின் கட்டட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்திடமிருந்து காலஞ்சென்ற கணவருக்கு கிடைக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் நிதிதான். “மூன்று வருடங்களாக நாங்கள் புதுப்பிப்புக் கட்டணம் கட்டாததால், எங்களுக்கு பணம் கிடைக்காது என அவர்கள் (தொழிலாளர் துறை அதிகாரிகள்) கூறுகிறார்கள்,” என்கிறார் அவர்.
இந்திய தலைமை கணக்காளர் (CAG) அளித்த நிதி அறிக்கையின்படி, அரசு வைத்திருக்கும் பணம், அரசியல் சாசனப் பிரிவுகளுக்கு புறம்பானது. 2020-21ல் வசூலிக்கப்பட்ட தொழிலாளர் வரியான 406.49 கோடி ரூபாய் ’அரசுக் கணக்கு’க்கு வெளியே இருப்புத் தொகைகளாகவும் சேமிப்புக் கணக்குகளாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அரசாங்க கருவூல கிளையில் வைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனப் பிரிவுகளை மீறும் செயலாகும்,” என அறிக்கை குறிப்பிடுகிறது.
புதெ சொல்கையில், “ந்ருபாவுக்கு ஆரோக்கியம் குன்றியபோது, சகோதரி உமேவிடம் (இருக்கும் ஒரே சகோதரி) பண உதவி கேட்க சென்றார்.” உமே திருமணம் முடித்து அருகாமை கிராமமான மல்பராவில் வாழ்கிறார். “நகையை அவரிடம் கொடுத்தார். இருவருக்கும் இருந்த அன்பு அத்தகையது,” என்கிறார். ந்ருபா நகையை அடகு வைத்து கிடைத்த சில ஆயிரங்களும் சிகிச்சைக்கு சென்றது.
புதெ மற்றும் அவரின் காலஞ்சென்ற கணவர் கோபி மஜி ஆகியோரின் குடும்பத்துக்கு அரசாங்கம் 2013ம் ஆண்டில் வீடு ஒதுக்கியது. கோபி மஜி 2014ம் ஆண்டில் இறந்தார். “கோபி உயிரோடு இருந்தபோது 10,000, 15,000 மற்றும் 15,000 ரூபாயென மூன்று தவணைகளில் 40,000 ரூபாய் கொடுக்கப்பட்டது,” என்கிறார் புதெ. வீடு கட்டுவதற்கான கற்களையும் மண்ணையும் குடும்பம் வாங்கியது. ஆனால் மூத்த மஜி இறந்ததும் வீடு கட்டுவது நின்றுபோனது.
“இந்த கல்வீட்டில் எப்படியோ சமாளிக்கிறோம்,” என்கிறார் புதெ, பயன்பாட்டுக்குக் காத்திருக்கும் கற்களை சுட்டிக்காட்டி.
மகன் மற்றும் மருமகள் ஆகியோரைப் போல, புதெ வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு சென்றதில்லை. “எங்களின் குடும்ப நிலத்தில் விவசாயம் பார்த்து பிழைத்தோம். ந்ருபாதான் வேலைக்காக பிற மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கினார்,” என்கிறார் அவர். நிலத்தை அடகு வைத்து 1,00,000 ரூபாய் கடனை குடும்பம் பெற்றிருக்கிறது.
“ஜுதிஸ்திர் (ந்ருபா மகன்) வேலைக்கு சென்று நிலத்தை மீட்க வேண்டும்,” என்கிறார் புதெ.
*****
திருமணத்துக்கு முன் நமனி, பிழைப்புக்காக புலம்பெயர்ந்ததில்லை. முதன்முறையாக அவர் புலம்பெயர்ந்தது திருமணத்துக்குப் பிறகு, ஆந்திராவுக்கு இருவருமாக சென்றபோதுதான். அப்போது அவர்களின் மூத்த மகன் ஜுதிஸ்திர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். “அந்த வேலைக்கான முன்பணம் குறைவாக இருந்தது. 8,000 ரூபாய்தான் எங்களுக்குக் கொடுத்தார்கள். வருடம் நினைவில் இல்லை. ஆனால் சஜ்னே (மகள்) பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. எனவே அவளையும் எங்களுடன் கொண்டு சென்றோம்.” அப்போதிலிருந்து - 17 வருடங்களுக்கு முன்னிருந்து - ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களுக்கு வேலை தேடி அவர்கள் சென்று கொண்டிருந்ததாக நமனி சொல்கிறார்.
முதல் தடவைக்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் குடும்பம் புலம்பெயர்ந்தது. “இரண்டு வருடங்களுக்கு நாங்கள் மீண்டும் ஆந்திராவுக்கு சென்றோம். 9,500 ரூபாய் வரை எங்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் அவர். அடுத்த நான்கு வருடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர். முன்பணம் மொத்தக் குழுவுக்கும் மெதுவாக உயர்ந்து ரூ.15,000 வரை தொட்டது.
சென்னைக்கு செல்லும்போதுதான் அதிக பணம் கிடைத்தது. 2019ம் ஆண்டில் முன்பணமாக 25,000 ரூபாய் கிடைத்தது. சென்னையில் ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும், ஒரு தொழிலாளர் குழு 350 ரூபாய் பெறும். ஒரு வாரத்தில் நான்கு பேர் கொண்ட குழுவில் இருப்பவருக்கு தலா 1,000 - 1,500 ரூபாய் வரை கிடைக்கும்.
வாரக்கூலி என்பதால் அப்பணம் கொண்டு அவர்கள் உணவுப் பொருட்கள், சோப், ஷாம்பூ போன்றவற்றை வாங்கினார்கள். “பணம் கொடுக்கும்போது சூப்பர்வைசர், முன்பணத்திலிருந்து கொஞ்சம் பணத்தை பிடித்துக் கொண்டு, எங்களுக்கு ஊதியம் கொடுப்பார்,” என விளக்குகிறார் நமனி. மொத்த முன்பணமும் கழியும் வரை இது தொடரும்.
பெரும்பாலான தொழிலாளர்கள் இறுதியில் 100 ரூபாய்க்கும் குறைவாக பெறுவார்கள். கட்டுமானத்துறையில் வேலை பார்க்கும் திறனற்ற தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தில் பாதிக்கும் குறைவான தொகை அது. ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் விதிப்படி, சேம்பர் செங்கற்கள் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.610 (1000 செங்கற்களுக்கு) நாட்கூலியாக சென்னை போன்ற நகரங்களில் கொடுக்கப்பட வேண்டும்
ந்ருபா மற்றும் அவரின் குடும்பம் சம்பாதித்த பணம் இந்த தொழிலாளர் விதிகளுக்கு எதிரான தொகை.
கட்டடம் மற்றும் பிறக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஒடியாவுக்குள் புலம்பெயரும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் ஒடிசா கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பயனாளிகளாக பதிவு செய்யவில்லை. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல நலத்திட்டங்களை கிடைக்க அச்சட்டம்தான் வழிவகுக்கிறது.
எனினும் ந்ருபா பதிவு செய்திருந்தார். ஆனால் ஒரு சிறு பிழையால் அவரின் குடும்பம் தண்டனையை அனுபவிக்கிறது. பலன் கிடைக்க வேண்டுமெனில், பதிவு செய்து கொண்ட பயனாளி, மூன்று வருடங்கள் தொடர்ந்து 50 ரூபாய் நிதிக்காக கட்ட வேண்டும். அந்த பணமும் பலாங்கிர் மாவட்ட அலுவலகத்தில் இருக்கும் தொழிலாளர் துறை வழியாக கட்டப்பட வேண்டும். ஆனால் அந்த அலுவலகம் பலாங்கிர் மாவட்ட ஹியால் கிராமத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
மே 1, 2022-க்கு இம்முறை இணையத்துக்கு மாறியது. ந்ருபா சென்னைக்கு செல்வதற்கு கொஞ்சம் முன்னால் தனக்கான தொழிலாளர் அட்டையை பெற்றார். ஊரடங்கு மற்றும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றால் மாவட்ட அலுவலகத்துக்கு சென்று பணம் கட்ட அவரால் முடியவில்லை. இப்போது அவரின் குடும்பம், கிடைக்க வேண்டிய நிவாரணத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இக்கட்டுரையாளர், பலாங்கிரின் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். அதிகாரப்பூர்வ வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டு, ஒடிசா கட்டட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர் சட்டத்தின்படி நமனிக்கும் அவரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இக்கட்டுரை பிரசுரமாகும்வரை, எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்