தேர்தலில் பப்லு கைப்ரடா வாக்களிப்பதற்கான இரண்டாவது வாய்ப்பு இது.

கடந்த தேர்தலில் முதன்முறையாக பப்லு வாக்களிக்க சென்றபோது, அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதித்தனர். வரிசையில் அவர் காத்திருக்கவில்லை. மேற்கு வங்க புருலியா மாவட்டத்தின் பல்மா கிராமத்திலுள்ள வாக்குச்சாவடிக்குள் சென்ற பிறகு, எப்படி வாக்களிப்பது என பப்லுவுக்கு தெரியவில்லை.

24 வயதாகும் பப்லு பார்வைத் திறன் குறைபாடு கொண்டவர். ப்ரெய்ல் வாக்குச் சீட்டுகளுக்கோ ப்ரெய்ல் முறை வாக்கு இயந்திரத்துக்கோ 2019 தேர்தல் வாக்குப்பதிவு நடந்த உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் சாத்தியம் இல்லை.

“எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. எனக்கு உதவுபவர் சின்னங்களை குறித்து பொய் சொன்னால் என்ன செய்வது?” இரண்டாம் வருட இளங்கலை படிக்கும் மாணவரான பப்லு கேட்கிறார். அந்த நபர் உண்மையையே சொன்னாலும் கூட, ரகசிய வாக்குப்பதிவு என்கிற ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டதாகி விடுமே என வாதிடுகிறார். அந்த நபர் காட்டிய பொத்தானைதான் பதட்டத்துடன் பப்லு அழுத்தினார். வெளியே வந்த பிறகு அதை உறுதி செய்தும் கொண்டார். “நல்லவேளையாக அந்த நபர் பொய் சொல்லவில்லை,” என்கிறார் அவர்.

ப்ரெய்ல் வாக்குச்சீட்டுகளும் வாக்கு இயந்திரங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. “பல விதிமுறைகள் செய்தித்தாளில் இருந்தன,” என்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ருதி மாற்றுத்திறனாளி உரிமைகள் மையத்தின் இயக்குநரான ஷம்பா சென்குப்தா. “ஆனால் அமலாக்கம்தான் மோசமாக இருக்கிறது.”

மீண்டும் தேர்தல் வந்துவிட்டது. ஆனால் ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வீட்டிலிருந்து கிளம்பி செல்வதா என பப்லு யோசிக்கிறார். பப்லு வாக்காளராக பதிவு செய்திருக்கும் புருலியா மாவட்டத்தில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

PHOTO • Prolay Mondal

பப்லு கைபர்டா மே 25ம் தேதி வாக்களிக்க செல்வது குறித்து யோசிக்கிறார். கடந்த முறை வாக்களிக்க சென்ற வாக்குச்சாவடியில் ப்ரெய்ல் வாக்குச்சீட்டோ வாக்கு இயந்திரமோ இருக்கவில்லை. அது மட்டுமின்றி, பொருளாதாரமும் அவருக்கு சிக்கலாக இருக்கிறது

அவரைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்மை மட்டும் அவரது நிச்சயமற்றத்தனமைக்கு காரணமல்ல. அவர் தங்கியிருக்கும் பல்கலைக்கழக விடுதியிலிருந்து புருலியாவுக்கு செல்ல ஆறேழு மணி நேரங்கள் கொல்கத்தாவிலிருந்து பயணிக்க வேண்டும்.

“பணம் குறித்தும் நான் யோசிக்க வேண்டும். இன்னும் நான் என் பயணச்சீட்டுகளுக்கும் ரயில் நிலையம் வரையான பேருந்துக் கட்டணத்துக்கு பணம் செலுத்த வேண்டும். இந்தியாவிலுள்ள 26.8 மில்லியன் மாற்றுத்திறனாளிகளில் 18 மில்லியன் கிராமத்தை சேர்ந்தவர்கள். 19 சதவிகித குறைபாடுகள் பார்வைத்திறன் சம்பந்தப்பட்டவை (கணக்கெடுப்பு 2011). மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான வசதி அமலாக்கப்பட்டாலும் கூட அதிகமாக நகர்ப்புறங்களில்தான் அமலாகிறது என்கிறார் ஷம்பா. “தேர்தல் ஆணையம் முன்னெடுப்பு எடுத்தால்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். குறிப்பாக ரேடியோக்களை பயன்படுத்த வேண்டும்,” என்கிறார்.

”யாருக்கு வக்களிப்பது என தெரியவில்லை,” என்கிறார் பப்லு, இக்கட்டுரையாளர் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தில் கேட்டபோது.

“ஒரு கட்சிக்கோ சில தலைவர்களுக்கோ நல்லது செய்வதாக நினைத்து நான் வாக்களித்தால், அவர்கள் தேர்தலுக்கு பிறகு மாறிவிடக் கூடும்,” என குறைபட்டுக் கொள்கிறார் பப்லு. கடந்த சில வருடங்களில், குறிப்பாக 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், மேற்கு வங்க அரசியல்வாதிகள், பல முறை கட்சிகள் மாறினார்கள்.

*****

பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக விரும்புகிறார் பப்லு. அரசு வேலையாக அது அவருக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும்.

மாநில அரசின் பள்ளி சேவை ஆணையம் (SSC) தவறான விஷயங்களுக்காக செய்தியில் அடிபட்டது. “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முக்கிய அமைப்பாக ஆணையம் விளங்கியது,” என்கிறார் முன்னாள் பேராசிரியரும் மாநிலத்தின் உயர்நிலை சபையின் தலைவருமான கோபா தத்தா. “கிராமங்களிலும் சிறு டவுன்களிலும் பெரிய நகரத்திலும் பள்ளிகள் இருப்பதால்தான் இப்பிரச்சினை.” தொடரும் அவர், “பள்ளி ஆசிரியராவது பல பேருடைய கனவு,” என்கிறார்.

PHOTO • Prolay Mondal

‘யாருக்கு வாக்களிப்பதென தெரியவில்லை,’ என்கிறார் பப்லு. அவர் வாக்களிக்கும் நபர், முடிவுகள் வெளியானதும் வேறு கட்சிக்கு மாறி விடுவாரோ என யோசிக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக மேற்கு வங்க அரசியலின் நிலையாக அதுதான் இருக்கிறது

கடந்த ஏழெட்டு வருடங்களாக வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறை விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. ரூபாய் நோட்டு கட்டுகள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, அமைச்சர்கள் சிறைக்கு சென்றார்கள், வெளிப்படையான முறை வேண்டுமென மாதக்கணக்கில் வேட்பாளர்கள் தர்ணா நடத்தினர், சமீபத்தில் கல்கத்தா உயர்நீதிமன்றம் 25,000 பேரின் பணிகளை ரத்து செய்திருக்கிறது. மே மாத முதல் வாரத்தில், அந்த உத்தரவை தடை செய்து உச்சநீதிமன்றம், தகுதியுள்ளவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டறியும் முறை உருவாக்கப்பட வேண்டுமெனக் கூறியது.

“எனக்கு பயமாக இருக்கிறது,” என்கிறார் அரசியல் நிலவரத்தை பற்றி பப்லு. “பார்வைத் திறன் குறைபாடு கொண்ட 104 பேர் இருப்பதாக சொல்கிறார்கள்.  அவர்களுக்கு தகுதி இருக்கலாம். ஆனால் யாரும் அவர்களை பற்றி யோசிக்கவே இல்லையா?”

பள்ளி சேவைப் பணித் தேர்வு மட்டுமின்றி, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களை அதிகாரிகள் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றே பப்லு நினைக்கிறார். “பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கான பள்ளிகள் போதுமான எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தில் இல்லை,” என்கிறார் அவர். “நல்ல அடித்தளத்தை உருவாக்க சிறப்பு பள்ளிகள் தேவை.” படிப்புக்காக அவர் வீட்டை விட்டு கிளம்ப வேண்டியிருந்தது. ஏனெனில் அருகாமையில் அவருக்கான சாத்தியங்கள் கொண்ட படிப்பிடங்கள் இல்லை. கல்லூரி தேர்ந்தெடுக்கும்போது கூட, அவர் விரும்பியது போல வீடருகே எந்தக் கல்லூரியும் அவருக்குக் கிடைக்கவில்லை. “மாற்றுத்திறனாளிகள் பற்றி யோசிக்கும் அரசாங்கம் என ஒன்றை கூட நான் கேள்விப்படவில்லை.”

ஆனாலும் பப்லு நம்பிக்கை இழக்கவில்லை. “வேலை தேடுவதற்கு இன்னும் சில வருடங்கள் எனக்கு இருக்கின்றன,” என்கிறார் அவர். “அதற்குள் நிலை மாறுமென நம்புகிறேன்.”

18 வயதிலிருந்து குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக பப்லுதான் இருந்து வருகிறார். அவரின் சகோதரியான பானுராணி கைபர்டா, கொல்கத்தா பார்வை குறைபாடுடையோருக்கான பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அவரின் தாய் சொந்தியா பல்மாவில் வசிக்கிறார். குடும்பத்தினர் கைபர்ட்டா சமூகத்தை (மாநிலத்தில் பட்டியல் சாதி) சேர்ந்தவர்கள். மீன் பிடிப்பதுதான் அச்சமூகத்தின் பாரம்பரியத் தொழில். பப்லுவின் தந்தை மீன் பிடித்து விற்றார். வந்ததை வைத்து சேர்த்தவற்றை, அவரது புற்றுநோய் சிகிச்சைக்கு செலவழிக்கப்பட்டது.

தந்தை 2012ம் ஆண்டு இயற்கை எய்திய பிறகு, பப்லுவின் தாய் வெளியே சில வருடங்களுக்கு வேலை பார்த்தார். “காய்கறிகள் விற்றார்,” என்கிறார் பப்லு. “ஆனால் இப்போது அவரது 50 வயதுகளில் அதிகம் வேலை பார்க்க முடியாது.” சொந்தியா கைபர்டாவுக்கு கைம்பெண் உதவித்தொகையாக ரூ.1,000 மாதந்தோறும் கிடைக்கிறது. “கடந்த வருட ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலிருந்து அவர் பெற்று வருகிறார்,” என சொல்கிறார் பப்லு.

PHOTO • Antara Raman

’அரசாங்கம் மாற்றுத்திறனாளிகள் குறித்து கவலைப்படுவதாக நான் கேள்விப்பட்டதே இல்லை’

ட்யூஷன் மற்றும் உள்ளூர் ஸ்டுடியோக்களில் இசையமைத்தும் அவர் வருமானம் ஈட்டுகிறார். மனாபிக் உதவித்தொகையின் கீழ் அவரும் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறுகிறார். பயிற்சி பெற்ற பாடகரான பப்லு, புல்லாங்குழலும் சிந்தசைசரும் வாசிப்பார். இசை பண்பாடு எப்போதுமே வீட்டில் இருந்ததாக சொல்கிறார் பப்லு. “என் தாத்தாவான ரபி கைபர்டா, புருலியாவில் பிரபலமான நாட்டுப்புறக் கலைஞர். அவர் புல்லாங்குழல் வாசித்தார்.” பப்லு பிறப்பதற்கு பல காலம் முன்பே அவர் இறந்துவிட்டாலும், இசை மீது அவருக்கு இருந்த  பற்றுதான் தனக்கும் இருப்பதாக பேரன் எண்ணுகிறார். “என் தந்தையும் இதையேதான் சொன்னார்.”

முதன்முறை ரேடியோவில் புல்லாங்குழல் இசையை கேட்டபோது பப்லு புருலியாவில்தான் இருந்தார். “வங்க தேசத்தின் குல்னா ஸ்டேஷனின் செய்திகளை நான் கேட்பேன். அது தொடங்கும் முன் அவர்கள் இசைப்பார்கள். அது என்ன இசை என என் தாயிடம் கேட்டேன்.” புல்லாங்குழல் என அவர் சொன்னதும் பப்லு குழம்பி விட்டார். அவர் ப்னெபு வாத்தியத்தைதான் பார்த்திருக்கிறார். சத்தமாக ஒலியை எழுப்பும் அந்த வாத்தியத்தை சிறு வயதில் அவர் வாசித்திருக்கிறார். சில வாரங்கள் கழித்து, அவரின் தாய் 20 ரூபாய்க்கு ஒரு புல்லாங்குழலை உள்ளூர் கண்காட்சியிலிருந்து வாங்கி வந்தார். ஆனால் அதை கற்றுக் கொடுக்க யாரும் இல்லை.

2011ம் ஆண்டில் கொல்கத்தாவின் புறநகரில் இருக்கும் நரேந்திரப்பூரிலுள்ள பார்வையற்றோர் அகாடெமியில் பப்லு சேர்ந்தார். சில கொடுமையான அனுபவங்களால் புருலியா பார்வையற்றோருக்கான பள்ளியில் படிப்பை நிறுத்தி இரு வருடங்கள் வீட்டில் இருந்தார். “ஒருநாள் இரவு என்னை அச்சுறுத்தும் ஏதோவொரு விஷயம் நடந்தது. பள்ளியில் மோசமான கட்டடம்தான். மாணவர்கள் இரவில் தனியாக விடப்படுவர். அச்சம்பவத்துக்கு பிறகு, பெற்றோரை அழைத்து வீட்டுக்கு கூட்டி செல்லும்படி கூறினேன்,” என்கிறார் பப்லு.

புதிய பள்ளியில் இசை வாசிக்க பப்லு ஊக்குவிக்கப்பட்டார். புல்லாங்குழலும் சிந்தசைஸரும் ஒருங்கே வாசிக்க அவர் கற்றுக் கொண்டார். பள்ளியின் இசைக்குழுவில் ஒருவராக இருந்தார். தற்போது அவர் நிகழ்ச்சிகளில் வாசிக்கிறார். பாடகர்கள் பாடும் பாடல்களுக்கு இடையே வரும் இசையையும் வாசிக்கிறார். ஒவ்வொரு ஸ்டுடியோ பதிவுக்கும் 500 ரூபாய் கிடைக்கும். ஆனால் அது நிலையான வருமானம் அல்ல, என்கிறார் பப்லு.

“இசையை நான் தொழிலாக செய்ய முடியாது,” என்கிறார் அவர். “அதற்கு செலவு செய்ய போதுமான நேரம் கிடையாது. பணம் இல்லாததால் நன்றாக அதை என்னால் கற்க முடியவில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் இப்போது எனக்கு இருக்கும் பொறுப்பு.”

தமிழில் : ராஜசங்கீதன்

Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Editor : Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Illustration : Antara Raman

انترا رمن سماجی عمل اور اساطیری خیال آرائی میں دلچسپی رکھنے والی ایک خاکہ نگار اور ویب سائٹ ڈیزائنر ہیں۔ انہوں نے سرشٹی انسٹی ٹیوٹ آف آرٹ، ڈیزائن اینڈ ٹکنالوجی، بنگلورو سے گریجویشن کیا ہے اور ان کا ماننا ہے کہ کہانی اور خاکہ نگاری ایک دوسرے سے مربوط ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Antara Raman
Photographs : Prolay Mondal

Prolay Mandal has an M.Phil from the Department of Bengali, Jadavpur University. He currently works at the university's School of Cultural Texts and Records.

کے ذریعہ دیگر اسٹوریز Prolay Mondal
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan