அது ஞாயிற்றுக் கிழமை காலை. ஆனால் ஜோதிரிந்திரா நாராயண் லஹிரி பிசியாக இருந்தார். ஹூக்லி மாவட்டத்திலிருந்த அவரது வீட்டின் மூலை அறையில், 50 வயதான அவர், 1778ம் ஆண்டு மேஜர் ஜேம்ஸ் ரென்னெலால் தயாரிக்கப்பட்ட முதல் சுந்தவன வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
“பிரிட்டிஷின் ஆய்வின்படி தயார் செய்யப்பட்ட முதல் நம்பகத்தன்மையான வரைபடம் இது. சதுப்புநிலக் காடுகள் கொல்கத்தா வரை இருந்ததாக இது காட்டுகிறது. நிறைய மாறியிருக்கிறது,” என்கிறார் லஹிரி, வரைபடத்தில் விரலை வைத்துக் காட்டியபடி. இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையில்தான் உலகின் பெரிய சதுப்புநிலப்பகுதியான சுந்தரவனம் பரவியிருக்கிறது. ராயல் பெங்கால் புலி உள்ளிட்ட பல உயிர்கள் இருக்கும் இடம் அது.
அவரின் அறை சுவர்களில் வரிசையாக இருக்கும் புத்தக அலமாரிகளில் சுந்தரவனம் பற்றி இருக்கும் எல்லா வகை புத்தகங்களும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. சுந்தரவன பறவைகள், செடிகள், அன்றாட வாழ்க்கை, வரைபடங்கள், குழந்தைகள் புத்தகங்கள் என பலவை ஆங்கிலத்திலும் வங்கமொழியிலும் நிறைந்திருக்கின்றன. இங்குதான் அவர், சுந்தரவனம் பற்றிய காலாண்டு இதழான ‘சுது சுந்தரவன சர்ச்சா’ பத்திரிகையை வடிவமைக்கிறார்.
“இப்பகுதியின் நிலையை பார்க்க பல முறை நான் சென்றிருக்கிறேன். அச்சமேற்படுத்தும் வகையில் அது இருந்தது,” என நினைவுகூருகிறார் அவர். “குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. மக்கள் வீடுகளை இழந்திருந்தனர். ஆண்கள் பெரும் திரளாக இடம்பெயர்ந்திருந்தனர். பெண்கள்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை. மக்களின் வாழ்க்கை, ஆற்றங்கரை உடைவதை சார்ந்துதான் இருக்கிறது.”
பேரிடர் குறித்த அறிக்கைகள் மேலோட்டமாக இருப்பதாக லஹிரி கண்டறிந்தார். “சுந்தரவனம் குறித்த வழக்கமான விஷயங்களையே ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன. புலி தாக்குதல் அல்லது மழை ஆகியவற்றை பற்றிதான் நீங்கள் செய்தி பார்க்க முடியும். மழை பெய்யவில்லை என்றாலோ வெள்ளம் வரவில்லை என்றாலோ, சுந்தரவனம் செய்தியில் இடம்பெறுவதில்லை,” என்கிறார் அவர். “பேரிடர், வன உயிர் மற்றும் சுற்றுலா ஆகியவைதான் ஊடகத்தை ஈர்க்கும் விஷயங்கள்.”
இந்தியா மற்றும் வங்க தேச கண்ணோட்டங்களுடன் சுந்தரவனப் பகுதி பற்றிய செய்திகளை பிரதானப்படுத்தி சுது சுந்தர்பன் சர்ச்சா (‘’சுந்தரவன உரையாடல் மட்டும்’ என மொழிபெயர்க்கலாம்) பத்திரிகையை அவர் தொடங்கினார். 2010ம் ஆண்டிலிருந்து 49 இதழ்களை அவர் பிரசுரித்துவிட்டார். நவம்பர் 2023-ல் 50வது இதழ் பதிப்பிக்கப்படவிருக்கிறது. “கடந்த கால இதழ்கள் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தியது. வெற்றிலை எப்படி வளர்ப்பது தொடங்கி சுந்தரவன வரைபடங்கள், பெண் குழந்தைகளின் வாழ்க்கைகள், தனி கிராமங்கள், மழைப்பொழிவு போன்றவை வரை,” என்கிறார் அவர். ஒரு இதழ், சுந்தரவனம் பற்றிய விஷயங்களை ஊடகம் எந்தளவுக்கு செய்தியாக்குகிறது என்பதை பற்றி கூட பேசியிருந்தது. மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச பத்திரிகையாளர்களின் பார்வைகள் அதில் வெளியாகியிருந்தன.
2023 ஏப்ரல் மாதம் வெளியான பத்திரிகையின் 49வது இதழ், சதுப்பு நிலங்கள் மற்றும் புலிகள் பற்றி பேசியது. “சுந்தரவனங்கள் மட்டும்தான் உலகளவில் புலிகள் வாழும் ஒரே சதுப்புநிலக் காடுகள் ஆகும். எனவே அதை சார்ந்து ஓரிதழை கொண்டு வர நாங்கள் முடிவு செய்தோம்,” என்கிறார் அவர். 50வது இதழுக்கான திட்டமிடலும் தொடங்கியது. சுந்தரவனத்தில் நேரும் காலநிலை மாற்றம் மற்றும் உயரும் கடல் மட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை செய்திருக்கும் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியரை பற்றி இந்த இதழ் பேசவிருக்கிறது.
குறிப்பிட்ட தரவுகளுக்காகவும் இப்பகுதியின் மீது கொண்ட ஆர்வத்தாலும் படிக்கும் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் மாணவர்களும்தான் எங்களின் வாசகர்கள். எங்களின் இதழ்களை வரிக்கு வரி படிக்கும் 80 வயது நிறைந்தவர்களும் இருக்கின்றனர்,” என்கிறார் லஹிரி.
ஒவ்வொரு காலாண்டுக்கும் சுமாராக 1,000 பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. “520-530 சந்தாதாரர்கள், பெரும்பாலும் மேற்கு வங்கத்தை சார்ந்தவர்கள், இருக்கின்றனர். பத்திரிகை அவர்களுக்கு அனுப்பப்படும். 50 பிரதிகள் வங்க தேசத்துக்கு அனுப்பப்படும். நாங்கள் நேரடியாக அனுப்புவதில்லை. ஏனெனில் அது செலவை அதிகமாக்கும்,” என விளக்குகிறார் லஹிரி. வங்க தேச புத்தக வியாபாரிகள், கொல்கத்தாவின் பிரபலமான புத்தகச் சந்தை இருக்கும் கல்லூரி தெருவில் வாங்கி அவர்களின் நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள். “வங்க தேச எழுத்தாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களையும் நாங்கள் பதிப்பிக்கிறோம்,” என்கிறார் அவர்.
பத்திரிகை கொண்டு வருவது செலவு மிகுந்த விஷயம். ஒவ்வொரு பதிப்பும் கறுப்பு வெள்ளையில் பளபளப்பு தாளில் அச்சிடப்படுவதற்கு முன் எழுத்து கோர்க்கப்பட வேண்டும். “பிறகு மை, காகிதம், போக்குவரத்து செலவுகள் இருக்கின்றன. ஆனாலும் எங்களின் பதிப்பு செலவுகள் அதிகமில்லை. ஏனெனில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்து கொள்கிறோம்,” என்கிறார் லஹிரி. அவருக்கு உதவியாக 48 வயது மனைவி ஸ்ரீஜனி சதுகானும் 22 வயது மகள் ரிதாஜியும் 15 வயது மகன் அர்சிஸ்மனும் இருக்கின்றனர். ஆசிரியர் குழுவில் நேரத்தையும் முயற்சியையும் பணத்தை எதிர்பார்க்காமல் செலவழிக்கும் 15-16 பேர் இருக்கின்றனர். “வேலையில் ஆட்களை சேர்ப்பதற்கான வழி எங்களுக்கு இல்லை. நேரத்தையும் உழைப்பையும் செலுத்துபவர்கள், எங்களின் பத்திரிகைகளில் நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளின் முக்கியத்துவம் புரிந்ததால்தான் பணியாற்றுகிறார்கள்,” என்கிறார் அவர்.
ஒவ்வொரு பத்திரிகை இதழின் விலையும் ரூ.150 ஆகும். “சொந்த செலவு 80 ரூபாயாக இருந்தால், (ஒவ்வொரு இதழையும்) 150 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் விற்பவர்களுக்கு உடனடியாக 35 சதவிகித கமிஷன் கொடுக்க முடியும்,” என்கிறார் லஹிரி பதிப்பின் பொருளாதாரத்தை விளக்கி.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் லஹிரியும் அவரின் குடும்பமும் ஆறு வங்காள செய்தித்தாள்களையும் மூன்று ஆங்கில செய்தித்தாள்களையும் செய்திகளுக்காக பார்க்கின்றனர். அப்பகுதியின் முக்கியமான குரலாக அவர் இருப்பதால், புலி தாக்குதல் போன்ற செய்திகள் நேரடியாக அவருக்கு வந்து விடும். செய்தித்தாள் ஆசிரியர்களுக்கு வாசகர்கள் எழுதும் கடிதங்களையும் லஹிரி சேகரித்திருக்கிறார். “வாசகர்கள் பெரிய மனிதர்களாகவோ செறிவானவர்களாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் விஷயம் புரியும். அது சார்ந்து கேள்விகளும் கேட்பார்கள்,” என்கிறார் அவர்.
பத்திரிகை மட்டுமே அவரின் பணி அல்ல. ஒவ்வொரு நாளும் அவர் 180 கிமீ பயணித்து பர்பா பர்தமான் மாவட்டத்துக்கு சென்று, ஓர் அரசுப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புவியியல் கற்று தருகிறார். “காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, இரவு 8 மணிக்கு திரும்புவேன். அச்சகம், பர்தமான் நகரத்தில் இருக்கிறது. எனவே ஏதேனும் வேலை இருந்தால், அச்சகத்துக்கு சென்றுவிட்டு, மாலை தாமதமாக வீடு திரும்புவேன்,” என்கிறார் கடந்த 26 வருடங்களாக கற்பித்து வரும் லஹிரி. “கற்பித்தலும் பத்திரிகை போல என் விருப்பப் பணி,” என்கிறார் அவர்.
தமிழில் : ராஜசங்கீதன்