“டெல்லியின் எல்லையை அவர்கள் மூடினார்கள்,” என்கிறார் புட்டர் சாரிங் கிராமத்தின் பிட்டு மலன். “இப்போது பஞ்சாப் கிராமங்களின் கதவுகள் அவர்களை நுழைய விடாமல் மூடப்பட்டிருக்கின்றன.”

ஸ்ரீ முக்சார் சாஹிப் மாவட்டத்தின் மலன் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயி, பிட்டு மலன். ‘அவர்கள்’ என அவர் குறிப்பிடுவது ஒன்றியத்தில் ஆளும் பாஜக கட்சியை. பஞ்சாபின் தேர்தலில் தனியாக போட்டி போடுகிறது அக்கட்சி.’நாங்கள்’ என குறிப்பிடுவது, டெல்லி நோக்கி நவம்பர் 2020-ல் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  லட்சக்கணக்கான விவசாயிகளை.

விவசாயப் போராட்டம், தேசியத் தலைநகரின் எல்லையில் அமைக்கப்பட்ட தளங்கள் பற்றிய நினைவுகள் பஞ்சாபில் நிறைந்திருக்கிறது. இம்மாநிலத்தின்  லட்சக்கணக்கான விவசாயிகள், மூன்று கோடைக்காலங்களுக்கு முன்பு, எதிர்ப்பும் நம்பிக்கையும் நிறைந்த பேரணியைத் தொடங்கினர். பல நூறு மைல்கள் ட்ராக்டர்களிலும் ட்ரெயிலர்களிலும் பயணித்து அவர்கள் தலைநகரில் குவிந்தது ஒரு கோரிக்கைக்காகத்தான். அவர்களின் வாழ்வாதாரங்களை அச்சுறுத்திய மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென்பதே அக்கோரிக்கை.

டெல்லியின் எல்லையை அடைந்ததும், அவர்களது கோரிக்கைகளின்பால் அரசாங்கம் எழுப்பியிருந்த பெரும் அலட்சியத்தை எதிர்கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு வருடம், அவர்களின் இரவுகள் தனிமையாலும் அநீதியின் வெப்பத்தாலும் நிறைந்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். தெர்மாமீட்டரில் பதிவான அளவு ஒரு பொருட்டாக அவர்களுக்கு இருக்கவில்லை. இரும்பு ட்ரெயிலர் வாகனங்களே அவர்களின் வசிப்பிடங்களாக மாறின.

358 நாட்களின் ஓட்டத்தில், 700 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் அனைவரும் பஞ்சாபுக்கு திரும்பினர். ஒவ்வொருவரும் அப்போராட்ட நினைவுக்கான சாட்சியாக இருந்தனர். ஆனால் போராட்டம் தோல்வியடைந்து விடவில்லை. அவர்களின் தியாகமும் பெரியளவிலான போராட்டமும், ஒரு வருடத்துக்கு பிறகு அரசாங்கத்தை அடிபணிய வைத்தது. நவம்பர் 19, 2021 அன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் பிரதமர்.

இப்போது பஞ்சாபுக்கு பதிலடி கொடுக்கும் நேரம். பிட்டு மலனும் அவரைப் போன்ற பல விவசாயிகளும் டெல்லியில் பெற்ற அனுபவத்தை திரும்பக் கொடுக்கும் மனநிலையில் இருக்கின்றனர். உயிரிழந்த ஒவ்வொரு விவசாயிக்குமான நியாயத்தை கேட்க வேண்டும் என்பதை கடமையாகக் கருதிய பிட்டு, ஏப்ரல் 23-ம் தேதி அன்று, புட்டார் சாரின்  கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க வந்த பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸை தைரியமாக எதிர்க்கொண்டார்.

காணொளி: ‘பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களை கேள்வி கேட்கும் பஞ்சாப் விவசாயிகள்

டெல்லி நோக்கி நவம்பர் 2020-ல் பேரணி செல்ல முயன்று   லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2024ம் ஆண்டில் பதிலடி கொடுக்க விவசாயிகள் முடிவெடுத்திருக்கின்றனர்

பிட்டுவிடமிருந்து ஏராளமான கேள்விகளையும் கருத்துகளையும் ஹன்ஸ் எதிர்கொண்டார்: “மிருகங்களை கூட வாகனங்கள் ஏற்றிக் கொல்ல மாட்டோம். ஆனால் லக்கிம்பூர் கெரியில் (அஜய் மிஷ்ரா) டெனியின் மகன், ஈவிரக்கமின்றி ஜீப்பை ஓட்டி வந்து விவசாயிகள் மீது ஏற்றினார். தோட்டாக்கள் கானாரியிலும் ஷாம்பு விலும் பாய்ந்தன. பிரித்பாலின் குற்றம் என்ன? அவரின் எலும்புகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. தாடை பெயர்க்கப்பட்டிருக்கிறது. எல்லாமும் அவர் சமையல் செய்ய சென்றதால் கிடைத்தவை. அவர் சண்டிகர் PGI-ல் (மருத்துவமனை) கிடக்கிறார். போய் பார்த்தீர்களா?

“பாடியாலாவை சேர்ந்த 40 வயதுக்காரரும் இரண்டு இளம் குழந்தைகளின் தந்தையுமான ஒருவர், கண்ணீர் புகைக்குண்டுக்கு பார்வையை இழந்தார். மூன்று ஏக்கர் நிலம்தான் அவர் சொந்தமாக வைத்திருந்தார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தீர்களா? இல்லை. சிங்கு வுக்கு சென்றீர்களா? இல்லை.” இக்கேள்விகள் எதற்கும் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸிடம் பதில் இல்லை.

பஞ்சாப் முழுக்க, ஆயிரக்கணக்கான பிட்டுகள் ஆர்வத்துடன் கிராம எல்லைகளில் பாஜக வேட்பாளர்களுக்காக காத்திருக்கின்றனர். எல்லா கிராமங்களிலும் இதுதான் நிலை. ஜூன் 1ம் தேதி பஞ்சாபில் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. 13 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்குதான் காவி கட்சி முதலில் வேட்பாளர்களை அறிவித்தது. மே 17ம் தேதி மேலுமொரு நான்கு பேரை அறிவித்தது. அவர்கள் அனைவரும் விவசாயிகளின் கருப்புக் கொடிகள், முழக்கங்கள் மற்றும் கேள்விகள் ஆகியவற்றால் எதிர்கொள்ளப்படுகின்றனர். பல கிராமங்களில் அவர்கள் நுழையக் கூட அனுமதி கொடுக்கப்படவில்லை.

”ப்ரெணீத் கவுர் ஊருக்குள் வர நாங்கள் விட மாட்டோம். அவருக்கு பல காலமாக விசுவாசமாக இருந்த குடும்பங்களிடமும் கேள்வி கேட்டிருக்கிறோம்,” என்கிறார் பாடியாலா மாவட்டத்தின் டகாலா ஊரில் நான்கு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியான ரக்பிர் சிங். ப்ரெணீத் கவுர், நான்கு முறை பாடியாலாவிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் மனைவியும் ஆவார். இருவரும் 2021-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, பாஜகவில் கடந்த வருடம் இணைந்தனர். பிற பாஜக வேட்பாளர்களை போல, அவரும் கருப்புக் கொடிகளாலும் ‘ஒழிக’ கோஷங்களாலும் பல இடங்களில் எதிர்கொள்ளப்பட்டார்.

அமிர்தசரஸ், ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர் மற்றும் பதிண்டா என எல்லா இடங்களிலும் இதே நிலவரம்தான். அவரது கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் கசப்பான பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளராக நிறுத்தப்படுவது முடிவான ஒரு மாதத்தில் மூன்று முறை காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினராகவும் தற்போதைய லூதியானாவின் பாஜக வேட்பாளருமாக இருக்கும் ரவ்நீத் சிங் பிட்டு, கிராமங்களில் பிரசாரத்துக்கு செல்ல சிரமப்படுகிறார்.

PHOTO • Courtesy: BKU (Ugrahan)
PHOTO • Vishav Bharti

இடது: பர்னாலாவில் (சங்க்ரூர்) விவசாயிகள், கிராமத்துக்குள் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் மனிதச் சுவர் அமைத்திருக்கிறார்கள். வலது: பஞ்சாபின் ஊரகத் தொழிலாளர் திட்ட தொழிலாளர் சங்கத் தலைவரான ஷேர் சிங் பர்வாஹி (கொடியால் மூடப்பட்டிருக்கும் முகம்) சமீபத்தியப் போராட்டத்தில்

PHOTO • Courtesy: BKU (Dakaunda)
PHOTO • Courtesy: BKU (Dakaunda)

பாஜக வேட்பாளர்கள் நுழைந்திடாத வண்ணம் மெஹல்கலன் கிராம எல்லையில் காவல் காக்கும் விவசாயிகள். விவசாயப் போராட்ட வரலாறு கொண்ட பகுதி இது

நாட்டின் பிற பகுதிகளில் வேண்டுமானால், சிறுபான்மையினருக்கு எதிராகவும் ‘மனதை புண்படுத்திவிட்டார்கள்’ என்றும் பேசி வாக்குகள் சேகரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பஞ்சாபில் அவர்களை 11 கேள்விகளுடன் விவசாயிகள் எதிர்கொள்கின்றனர் (கட்டுரைக்கு கீழே பார்க்கவும்). குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அவர்கள் கேட்கின்றனர். ஒரு வருடம் நீடித்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்தும் லக்கிம்பூரில் கொல்லப்பட்டவர்கள் குறித்தும் கனாரியில் தலையில் தோட்டா பட்டு இறந்த ஷுப்கரன் குறித்தும் விவசாயிகளின் கடன் குறித்தும் கேள்விகள் கேட்கின்றனர்.

விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றிய ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார்கள். ”ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியைக் குறைத்து அத்திட்டத்தையே பாஜக கொன்று விட்டது. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விவசாயத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் ஆபத்தானவர்கள்,” என்கிறார் பஞ்சாபை சேர்ந்த ஊரக வேலைத் திட்ட தொழிலாளர் சங்கத் தலைவரான ஷேர் சிங் பர்வாஹி.

ஆகவே இதே சிகிச்சையை பாஜக வேட்பாளர்களுக்கு அவர்களும் கொடுக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் 18 மாதங்களுக்கு முன் திரும்பப் பெறப்பட்டன. ஆனால் காயங்கள் இன்னும் ஆறவில்லை. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவைதாம் அந்த மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.

வாக்கெடுப்புக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பஞ்சாபில் பிரசாரமும் விவசாயிகளின் எதிர்ப்பும் சூடுபிடித்து வருகிறது. மே 4ம் தேதி, பாடியாலாவின் சேஹ்ரா கிராமத்தில் பாஜக வேட்பாளர் ப்ரெணீத் கவுர் நுழைவதை தடுத்துப் போராடியதில் சுரிந்தெர்பால் சிங் என்கிற விவசாயி உயிரிழந்தார். ப்ரெணீத் கவுரின் பாதுகாவலர்கள் சாலையில் கூட்டத்தை ஒழுங்கமைக்க முயன்றபோதுதான் அவர் இறந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் ப்ரெணீத் கவுர் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

கோதுமை அறுவடைப் பணிகளை முடித்துவிட்டதால் விவசாயிகள் தற்போது ஓய்வில்தான் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் வரும் நாட்களில் அதிகரிக்கலாம். குறிப்பாக, போராட்ட வரலாறு கொண்ட சங்க்ரூர் போன்ற கிராமங்களில். தேஜா சிங் ஸ்வதந்தார், தாரம் சிங் ஃபக்கார் மற்றும் ஜகீர் சிங் ஜோகா போன்ற விவசாயப் போராளிகளின் கதைகள் சொல்லப்படுதான் அங்கு குழந்தைகள் வளர்க்கப்படுவர்.

பாஜக வேட்பாளர்கள் கிராமத்துக்குள் நுழையும்போது எதிர்கொள்ளும் கேள்விகள்

இன்னும் அதிக தொந்தரவுகள் இருக்கின்றன. பாரதிய கிசான் சங்கம் (BKU) தலைவர் ஜாண்டா சிங் ஜெதுகே சமீபத்தில் பர்னாலாவில் அறிவித்தார்: “இன்னும் ஒரு வாரம் காத்திருங்கள். கிராமங்களிலிருந்து மட்டுமின்றி, பஞ்சாபின் டவுன்களிலிருந்தும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். டெல்லியில் நம்மை சுவர் கட்டியும் ஆணிகள் அடித்தும் எப்படி தடுத்தார்கள் என நினைவிருக்கிறதா? நாம் பதிலுக்கு தடுப்புகளோ ஆணிகளோ கொண்டு எதிர்க்கப் போவதில்லை. மனித சுவர்கள் எழுப்பி தடுக்கப் போகிறோம். லக்கிம்பூரில் அவர்கள் நம் மீது வாகனத்தை ஏற்றியிருக்கலாம். நம் சடலங்களை கொண்டேனும் அவர்கள் நம் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கத் தயாராக இருக்கிறோம்.”

எனினும் அவர்கள் நீதியை நம்பும் விவசாயிகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் ஷிரோமணி அகாலி தள தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா. “அவர்கள் கிராமத்துக்குள் நுழைவதை மட்டும்தான் தடுத்தார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசவில்லை. ரப்பர் புல்லட்டுகளை சுடவில்லை.”

பழைய மற்றும் சமீபத்திய எதிர்ப்பு மற்றும் போராட்டங்களின் நினைவுகள் பஞ்சாபில் ஆழப் பதிந்துள்ளன. 28 மாதங்களுக்கு முன், இந்த மாநிலம்தான் பிரதமர் நரேந்திர மோடியை ஃபெரோஸ்பூர் மேம்பாலத்தில் மறித்து நிறுத்தியது. இன்று, அக்கட்சியின் வேட்பாளர்கள் கிராமங்களில் நுழைவதை தடுத்து நிறுத்துகிறது. மோடி அரசாங்கத்தால் இரு முறை ஆளுநராக வெவ்வேறு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், தனக்கு பதவி கொடுத்த அக்கட்சியைப் பார்த்து சொன்னார்: “எதிரிகளை பஞ்சாபியர் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Vishav Bharti

وشو بھارتی، چنڈی گڑھ میں مقیم صحافی ہیں، جو گزشتہ دو دہائیوں سے پنجاب کے زرعی بحران اور احتجاجی تحریکوں کو کور کر رہے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Vishav Bharti

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan