“யார் ஜெயிக்கிறார் என்பது எப்படி ஒரு பொருட்டு ஆகும்? ஐபிஎல்லா உலகக் கோப்பையா என்பது கூட பொருட்டில்லை.”
கிரிக்கெட் மதம் போல பின்பற்றப்படும் நாட்டில், மதனின் கேள்வி ஆழமானதாக இருக்கிறது.
தொடர்ந்து அவர், “யார் ஜெயித்தாலும் எங்களுக்கு வேலை உண்டு,” என்கிறார். 51 வயது மதன் கிரிக்கெட் பந்துகள் செய்பவர். மீரட் நகரில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரிக்கெட் பந்துகள் தயாரிக்கும் பல ஆலைகளுக்கு உரிமையாளராக இருக்கிறார்.
அது மார்ச் மாதம். அவரை சுற்றி 100 அட்டைப் பெட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கிரிக்கெட்டில் விளையாடப்படத் தயாராக இருக்கும் ஆறு தோல் பந்துகள். ஐபிஎல் போட்டிகளின் முதல் பந்து மார்ச் மாதக் கடைசியில் வீசப்படும். அப்போட்டிகள் இரண்டு மாதங்கள் நடக்கும். அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகள் தொடங்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் உலகக் கோப்பை விளையாட்டு இந்தியாவில் நடக்கவிருக்கிறது.
“எந்த மட்டத்தில் பந்து பயன்படுத்தப்படும், யார் அதைக் கொண்டு விளையாடுவார், எத்தனை ஓவர்களுக்கு தாங்கும் போன்றவற்றை பந்தின் தரமே தீர்மானிக்கும்,” என்கிறார் மதன்.
“தொடர் விளையாட்டுகளுக்கு முன், விளையாட்டுப் பொருட்களுக்கான சில்லறை வணிகர்களும் மொத்த விற்பனையாளர்களும் எங்களை அணுகுவார்கள்,” என்கிறார் அவர், அந்த விளையாட்டில் மொத்த நாடும் கொண்டிருக்கும் பற்றை உறுதிபடுத்தும் வகையில். “இரண்டு மாதங்களுக்கு முன்பே தேவை அதிகமாகி விடும். பெருநகரங்களில் இருக்கும் கடைகள், பந்துகளை வாங்கி சேமிப்பில் வைக்க விரும்பும்.” விளையாடும் நபரை பொறுத்தும் எதிர்பார்ப்பை பொறுத்தும் ரூ.250-லிருந்து ரூ.3,500 வரை பந்தின் விலை அமையும்.
மும்பை, அகமதாபாத், பரோடா, ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களை சேர்ந்த சில்லறை வணிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கிரிக்கெட் அகாடெமிகளிடமிருந்து நேரடியாக மதனுக்கு ஆர்டர்கள் வரும். அவரின் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் பந்துகள் விளையாட்டின் தொடக்க நிலையில் இருக்கும் பயிற்சிகள் மற்றும் ஆட்டங்களில் பயன்படுத்தப்படும்.
அவரது பட்டறையில் நாம் இருக்கும்போது ஒரு கிரிக்கெட் பந்தயத்தின் நேரலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் எட்டு கைவினைஞர்களின் பக்கமாக தொலைக்காட்சி லேசாக திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கேட்க மட்டும்தான் முடியும். பார்வை வேலையில் இருக்கிறது. “எங்களுக்கு நேரம் கிடையாது,” என்கிறார் மதன்.
பற்றி இறுக்கும் இரும்புக் கருவி மீது குனிந்து, 600 கிரிக்கெட் பந்துகளை தயாரிக்க, தைத்துக் கொண்டிருக்கும் மும்முரத்தில் இருக்கின்றனர். வாங்குபவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர். மூன்று நாட்களில் கொடுக்கப்பட வேண்டும்.
அனுப்புவதற்கு தயாராக இருக்கும் பளபளப்பான சிவப்பு பந்துகளில் ஒன்றை எடுக்கிறார் மதன். “பந்து தயாரிக்க மூன்று விஷயங்கள் வேண்டும். படிகாரத்தால் பதனிடப்பட்ட மேல்தோல், உள்ளே வைக்கப்படும் தக்கை மற்றும் தைப்பதற்கான பருத்தி நூல்.” மீரட்டிலேயே மூன்றும் கிடைக்கிறது. “வாங்குபவர் விரும்பும் தரத்தை சொல்லிவிட்டால், அதற்கேற்ற தோல் மற்றும் தக்கையை நாங்கள் தெரிவு செய்வோம்.”
மீரட்டில் 347 கிரிக்கெட் பந்து தயாரிப்பு ஆலைகள் இருப்பதாக மாவட்டத்தின் தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் (DIPEDC) தெரிவிக்கிறது. மீரட்டின் தொழிற்பேட்டைகளில் இருக்கும் பெரும் தொழிற்சாலைகளையும் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இருக்கும் சிறு ஆலைகளையும் இந்த எண்ணிக்கை உள்ளடக்கியிருக்கிறது.
இந்த கணக்கெடுப்பு, எண்ணற்ற அமைப்பு சாரா தொழில் மையங்களையும் குடிசைத் தொழிலாக பந்துகள் செய்யப்படுவதையும் வெளியாரிடம் கொடுத்து வாங்கப்படும் வேலைகளையும் உள்ளடக்கவில்லை. மீரட் மாவட்டத்தில் இருக்கும் ஜங்கேதி, ககாவுல், பவன்பூர் போன்ற ஊர்கள் இந்த கணக்கில் வரும். “மீரட்டில் இருக்கும் கிராமங்களின்றி கிரிக்கெட் பந்துகள் கிடைக்கவே செய்யாது,” என்கிறார் மதன்.
கிரிக்கெட் பந்துகள் தோலில் செய்யப்படுவதால், நகரத்தில் பெரும் ஆலைகளிலும் கிராமங்களிலும் இருக்கும் கைவினைஞர்களின் பெரும்பாலானோர் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 1904 மாவட்ட அரசிதழை பொறுத்தவரை, ஜாதவ அல்லது சமார் சமூகத்தினர் (உத்தரப்பிரதேசத்தின் பட்டியல் சாதி) மீரட்டின் தோல் தொழிலில் ஈடுபடும் பணியாளர்களின் பெரும்பகுதியாக இருக்கின்றனர். “கிரிக்கெட் பந்தில் தோல் இருப்பது மக்களுக்கு பிரச்சினையாக தெரிவதில்லை. ஆனால் வேலையில் தோல் இடம்பெறும்போது அவர்களுக்கு பிரச்சினை வந்துவிடுகிறது,” என்கிறார் அவர்.
அவரது குடும்பத்துக்கு சொந்தமான பதனிடும் ஆலை ஒன்று ஷோபாப்பூரில் இருக்கிறது. கிரிக்கெட் பந்துக்கான தோல் படிகாரத்தால் பதனிடப்படுவது அப்பகுதியில் மட்டும்தான். (வாசிக்க: ஆட்டத்தை விட்டுப் போகாமல் இன்னும் நீடிக்கும் தோல் தொழிலாளர்கள் ). “படிகாரத்தால் பதனிடப்பட்ட மேல்தோலுக்கான தேவை அதிகரிப்பதை கண்டு, கிரிக்கெட் பந்துகளுக்கான தேவை என்றும் குறையாது என நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர். உத்தரவாதமான சந்தை என்பதால் அவர் 20 வருடங்களுக்கு முன் பி.டி & சன்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கினார். அப்பகுதியில் கிரிக்கெட் பந்து தயாரிக்கும் இரண்டு ஆலைகளில் ஒன்று அது.
பல முறைகள் இணைந்திருப்பதால் ஒரு பந்தை செய்வதற்கு எத்தனை மணி நேரங்கள் ஆகும் என சொல்வது கடினம் என்கிறார் மதன். பந்து செய்யப்படும் காலமும் தோலின் தரமும் கூட அது செய்யப்படும் காலத்தின் மீது தாக்கம் செலுத்தும். “ஒரு பந்து செய்ய கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகும்,” என்கிறார் அவர்.
மதனின் ஆலையிலுள்ள பணியாளர்கள் முதலில் தோலை படிகாரம் கொண்டு பதனிடுகிறார்கள். சிவப்பு நிறம் ஏற்றுகிறார்கள். வெயிலில் காய வைக்கிறார்கள். கொழுப்பை கொண்டு மினுமினுப்பு கொடுக்கிறார்கள். பிறகு மர சுத்தியல் கொண்டு அடித்து மென்மையாக்குகிறார்கள். “வெள்ளை பந்துகளுக்கு நிறமேற்றும் கட்டம் தேவையில்லை. ஏனெனில் படிகாரத்தால் பதனிடப்படும் மேல்தோல்களே வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். மாட்டுப்பாலில் கிடைக்கும் தயிரைக் கொண்டு அவற்றுக்கு மினுமினுப்பு கொடுக்கப்படும்,” என்கிறார் மதன்.
“வேலைகள் வரிசையாக நடக்கும். ஒவ்வொரு கைவினைஞரும் ஒரு வேலையில் திறன் பெற்றிருப்பார்,” என விளக்குகிறார் அவர். கைவினைஞர் பிறகு தோலை இரண்டாகவோ வட்டமாகவோ நான்கு நீள் வட்டங்களாகவோ வெட்டுவார். கிரிக்கெட் பந்துகள் இரண்டு அல்லது நான்கு தோல்கள் கொண்டு தயாரிக்கப்படும்.
“தோல்கள் ஒரே தடிமனையும் இழைகளையும் கொண்டிருக்க வேண்டும்,” என்கிறார் மதன். “இந்தக் கட்டத்தில் ஏதேனும் தவறு நேர்ந்தால், பந்தின் வடிவம் போய்விடும்,” என்கிறார்.
பந்து தயாரிக்கும் கலையிலேயே நுட்பமானதும் கடின உழைப்பைக் கோருவதும் பன்றியின் முள் மயிர்கள் கொண்ட பருத்தி நூலைக் கொண்டு கையால் தைக்கும் பணிதான். “ஊசிகளுக்கு பதிலாக முட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவைதான் வலுவாகவும் தோலை கிழிக்காமலும் இருக்கும்,” என்கிறார் மதன். “அவை நீளமாகவும், கையில் பிடிக்க சுலபமாகவும் தைப்பவர்களின் கைகளை குத்திடாமலும் இருக்கும்.”
“ஆனால் பன்றி முள் மயிர் பயன்படுத்தப்படுவதால் நம் இஸ்லாமிய சகோதரர்கள் இப்பணியை செய்வதில்லை. அவர்களுக்கு பன்றிகள் பிடிக்காது,” என்கிறார் அவர்.
“நான்கு தோல் கொண்ட பந்து தயாரிக்க போடப்படும் நால்வகை தையல்களை கற்பதற்கு பல ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்,” என்கிறார் மதனின் ஆலையில் அதிக அனுபவம் பெற்ற தரம் சிங். ஜம்மு காஷ்மீர் வாடிக்கையாளருக்கு செய்யப்படும் பந்துகளின் மீது வார்னிஷ் தடவுகிறார் 50 வயதாகும் அவர். “ஒரு தையல் போட்டுவிட்டு அடுத்த தையலுக்கு ஒரு கைவினைஞர் நகரும்போது, ஊதியமும் உயர்கிறது.” அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு தையலும் வித்தியாசமான உத்தி கொண்டது. வேறுபட்ட தன்மையைக் கொண்டது.
முதலில் தோலின் இரண்டு நீள்வட்டங்கள் உட்பக்கமாக தைக்கப்பட்டு ஓர் அரைக்கோளம் உருவாக்கப்படுகிறது. இதை உள்ளூரில் ஜுடாய் என அழைக்கின்றனர். புதிதாய் பணிக்கு வந்தவரால் முதல் தையல் போடப்படும். ஒவ்வொரு அரைக்கோளத்துக்கும் அவர் ரூ.7.50 வருமானம் ஈட்டுவார். “ஒரு ஜுடாய் செய்யப்பட்ட பிறகு, அரைக்கோளங்களுக்குள் லப்பே எனப்படும் மெல்லிய தோல் அழுத்தப்படும்,” என விவரிக்கிறார் தரம். பஞ்சடைக்கப்பட்ட தோலின் அரைக்கோளங்கள் பிறகு வட்ட வடிவத்துக்கு கோலாய் என்கிற இயந்திரம் கொண்டு மாற்றப்படுகிறது.
இரண்டு அரைக்கோளங்களை பணியாளர்கள் இணைத்து இடையில் தக்கையை வைத்து இரு பக்கங்களிலும் தைத்து பந்தை உருவாக்குகின்றனர். இதை செய்வதற்கான ஊதியம் ரூ.17-19. இரண்டு தோல் பந்துகளுக்கும் இவ்வகை கைத்தையல் போடப்படும்.
“இரண்டாம் தையல் போட்டு முடித்த பிறகுதான், பந்து என்கிற வார்த்தையை பயன்படுத்துவோம்,” என்கிறார் தரம். “தோல், பந்துக்கான வடிவத்தை இச்சமயத்தில்தான் முதன்முறையாக பெறும்.”
சூரஜ் குண்ட் சாலையின் ஒரு தொழிற்சாலையில் பந்து தயாரிக்கும் முறையை 35 ஆண்டுகளுக்கு முன் தரம் கற்றுக் கொண்டார். 1950களில் விளையாட்டுப் பொருட்கள் அங்குதான் தயாரிக்கப்பட்டன. பிரிவினைக்கு பிறகு, சியால்கோட்டிலிருந்து (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) புலம்பெயர்ந்தவர்களால் விளையாட்டுப் பொருட்கள் துறை நிறுவப்பட்டது. மீரட்டின் விக்டோரியா பார்க் மற்றும் சூரஜ் குண்ட் சாலை பகுதிகளில் இருந்த விளையாட்டு காலனிகளில்தான் அவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர். “மீரட்டை சுற்றியிருக்கும் கிராமங்களின் மக்கள் நகரத்துக்கு சென்று, இக்கலையை கற்று, இங்கு கொண்டு வந்தார்கள்.”
நான்கு தோல் பந்துக்கு மூன்றாம் கட்டத் தையல்தான் மிகவும் முக்கியம். நான்கு பக்கவாட்டு வரிசைத் தையல்கள் நுட்பத்துடன் பந்தின் மீது போடப்படும். “நல்ல பந்துகளில் 80 தையல்கள் இருக்கும்,” என்கிறார் அவர். தையல்களின் எண்ணிக்கை பொறுத்து பணியாளர் ரூ.35-50 ஒரு பந்துக்கு பெறுவார். இரண்டு தோல் பந்துகளுக்கு இந்தத் தையலை இயந்திரம் போடும்.
“சுழல் பந்து வீச்சாளரோ வேகப்பந்து வீச்சாளரோ, இருவரும் இத்தையலைதான் பந்து போட பயன்படுத்துவார்கள்,” என்கிறார் தரம். தையல் முடிந்தபிறகு, வெளிநீட்டிக் கொண்டிருக்கும் தையல் கையால் அழுத்தப்படும் பிறகு அரக்கு பூசப்பட்டு தரம் உறுதிபடுத்தப்படும். ”கிரிக்கெட் வீரருக்கு என்ன தெரியும்? பளபளப்பான பந்தும் தங்க முத்திரையும்தான்.”
“கிரிக்கெட் பந்தை சிறப்பாக்குவது எது என சொல்லுங்கள்,” என மதன் கேட்கிறார்.
“முறைகள் மாற்றப்பட்ட ஒரே விளையாட்டு அதுதான்,” என்கிறார் அவர். “ஆனால் பந்து செய்பவரும் தொழில்நுட்பமும் முறையும், தயாரிப்பு பொருட்களும் மாறவே இல்லை.”
சராசரியாக ஒருநாளில் 200 பந்துகள் மதனின் கைவினைஞர்களால் தயாரிக்க முடியும். ஒரு பந்தையோ சில பந்துகளையோ தயாரிக்க இரண்டு வாரங்கள் ஆகும். தோல் பதனிடுவது தொடங்கி, முடிக்கப்பட்ட பந்து வரை, “குறைந்தது 11 கைவினைஞர்களின் திறமைகள் தேவை, ஒரு அணிக்கு 11 வீரர்கள் தேவைப்படுவது போல,” என்கிறார் மதன் புன்னகைத்தபடி.
“ஆனால் விளையாட்டு வீரர் மட்டும்தான் திறமை வாய்ந்தவராக இந்த விளையாட்டில் கருதப்படுகிறார்,” என்கிறார் அவர்.
இக்கட்டுரை எழுத உதவிய பாரத் பூஷனுக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் (MMF) மானிய ஆதரவில் இக்கட்டுரை எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்