“இந்த சமாதி நாங்கள் கட்டிய ஒரு தற்காலிக ஏற்பாடு. சவ்லா பீரின் உண்மையான தலம், இந்தியா-பாகிஸ்தானின் கடல் எல்லையருகே இருக்கிறது,” என்கிறார் ஃபகிரானி ஜாட்களின் 70 வயது ஆன்மிகத் தலைவரான அகா கான் சவ்லானி. அவர் குறிப்பிடும் கட்டடம் தனியாக அமைந்திருக்கும் பச்சை நிற, சிறிய தர்காவாகும். லக்பத் தாலுகாவின் பிபார் கிராமத்தருகே இருக்கும் திறந்த வெளிக்கு நடுவே அமைந்திருக்கிறது. சில மணி நேரங்களில் சவ்லா பீர் விழா கொண்டாட அங்கு வரும் மக்களால் அந்த இடம் பரபரப்பாகி விடும்.

உண்மையான தலம் ஒரு தீவில் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2019ம் ஆண்டில் அது மூடப்பட்டு விட்டது. எல்லை பாதுகாப்பு படைக்கான முகாம் அங்கு இருக்கிறது. “சுதந்திரத்துக்கு முன்பு, கோடேஷ்வரை தாண்டியுள்ள கோரி ஓடையின் தீவிலிருந்து சவ்லா பீரின் வீட்டில் விழா நடந்தது. அச்சமயத்தில், தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்த் பகுதியில் வசித்த ஜாட்கள் படகில் வந்து வேண்டுதல் செலுத்துவார்கள்,” என்கிறது சமூக பண்பாட்டு கையேடு.

இப்பகுதியை சேர்ந்த இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரும் விழாவுக்கு வந்து வேண்டுதலை செலுத்துவது பாரம்பரியமாக இருக்கிறது. வருடாந்திர நிகழ்வாக நடத்தப்படும் இந்த விழா, குஜராத்தி நாட்காட்டியின் சைத்ரா மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது நாள் நடக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அந்த நாள் வரும்.

“சவலா பீரின் தலத்தில், அனைவரும் வரலாம். எந்த பாரபட்சமும் இல்லை. எவரும் வந்து வேண்டுதல் வைக்கலாம். இரவு வரை நீங்கள் காத்திருந்து கூட்டம் எப்படி இருக்கிறது எனப் பாருங்கள்,” என்கிறார் கச்சின் பிபார் கிராமத்தை சேர்ந்தவரும் 40 வயதுகளில் இருப்பவருமான சோனு ஜாட். 50-லிருந்து 80 ஜாட் குடும்பங்கள் அந்த கிராமத்தில் வாழ்கின்றன.

PHOTO • Ritayan Mukherjee

ஸ்வாலா பீருக்கான புதிய வழிபாட்டுத் தலம், குஜராத்தின் லக்பத் தாலுகாவிலுள்ள பிபார் கிராமத்தில் இருக்கிறது. முந்தைய தலம், இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்தது. 2019ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருக்கிறது

ஃபகிரானி ஜாட்கள் ஒட்டகங்கள் மேய்ப்பவர்கள். பல தலைமுறைகளாக கச்சின் வறண்டபகுதிகளிலும் கடலோர வறண்ட பகுதிகளிலும் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் கரய் என்கிற கச்சி வகை ஒட்டக இனத்தை வைத்திருக்கிறார்கள். மேய்ச்சல் தொழில் செய்யும் அவர்கள், பல நூற்றாண்டுகளாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். பாரம்பரியமாக அவர்கள் நெய், வெண்ணெய், பால் தரும் பால் விவசாயிகளாகவும் இருந்திருக்கிறார்கள். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் கம்பளி மற்றும் உரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் மந்தையில் செம்மறிகளும் ஆடுகளும் எருமைகளும் பசுக்களும் பிற பூர்விக வகைகளும் இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் தங்களை ஒட்டகம் வளர்ப்பவர்களாக்தான் கருதுகின்றனர். அப்பகுதியின் பல இடங்களுக்கு ஒட்டகங்களுடனும் குடும்பங்களுடனும் செல்வார்கள். ஃபகிரானி பெண்களும் மந்தையை பராமரிக்கிறார்கள். பிறக்கும் ஒட்டகக் குட்டிகளை அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர்.

”ஆனால் தொடக்கத்தில் நாங்கள் ஒட்டகம் வளர்ப்பவர்களாக இல்லை,” என்கிறார் அப்பகுதியின் சூஃபி கவிஞரான உமர் ஹாஜி சுலெமான். “ஒருமுறை இரு ராபரி சகோதரர்கள் ஒட்டகத்தை சொந்தம் கொண்டாடுவதில் முரண்பட்டார்கள்,” என அவர் ஃபகிரானி ஜாட்களின் வாழ்க்கைக்கு பின்னிருக்கும் கதையை சொல்லத் தொடங்குகிறார். “அவர்களின் பிரச்சினையை தீர்க்கும்பொருட்டு, மதிப்புமிக்க துறவியான சவ்லா பீரிடம் சென்றார்கள். அவர் தேன்மெழுகை கொண்டு ஒரு ஒட்டகத்தை செய்து, இரண்டு ஒட்டகங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி சகோதரர்களிடம் சொன்னார். உயிருள்ள ஒட்டகத்தை அண்ணன் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். தம்பியான தேவிதாஸ் ராபரிக்கு தேன் மெழுகு ஒட்டகம்தான் கிடைத்தது. துறவி தேவிதாஸை ஆசிர்வதித்து, அவன் திரும்பி வருகையில் ஓர் ஒட்டக மந்தை அவனுடன் வரும் என்றார். வீடடையும் வரை திரும்பிப் பார்க்கவில்லை எனில் அந்த மந்தை அதிகரித்துக் கொண்டே வரும் என்றும் கூறினார்.

“தேவிதாஸால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வீடு செல்வதற்கு முன் பின்னால் திரும்பிப் பார்த்தான். கணிசமான எண்ணிக்கையில் ஒட்டகங்கள் அவனை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. திரும்பிப் பார்த்து விட்டதால் அந்த எண்ணிக்கை வளராமல் அப்படியே நின்று விட்டது. அவன் இன்னும் அதிகமாக ஒட்டகங்களை பெற வேண்டுமெனில் அந்த ஒட்டகங்களை ஜாட்களிடம் ஒப்படைத்து பராமரிக்க வேண்டும் எனவும் சவ்லா பீர், தேவிதாஸிடம் சொல்லியிருந்தார். அதனால்தான் இன்றும், ராபரிகள் கொடுக்கும் ஒட்டகங்களை ஜாட்கள் பராமரித்து வருகின்றனர்,” என்கிறார் அவர். “அப்போதிருந்து இங்குள்ள அனைவரும் சவ்லா பீரை வணங்கி வருகிறார்கள்.”

ஃபகிரானி ஜாட்கள் இஸ்லாமியர்கள் ஆவர். 400 வருடங்களுக்கு முன் ஒட்டக மந்தையுடன் கோரி ஆற்றுத்தீவில் வசித்த ‘சவ்லா பீர்’தான் அவர்கள் வணங்கும் சூஃபி துறவி. வருடந்தோறும் நடப்பதை போல, இந்த வருடமும் லக்பதில் இரு நாட்களுக்கான சவ்லா பீர் விழா, ஏப்ரல் 28 மற்றும் 29, 2024 தினங்களில் நடத்தப்பட்டது.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

சிறு மரப் படகுகளை அலங்காரங்களுடன் தலத்துக்கு பக்தர்கள் சுமந்து செல்கின்றனர். சூஃபி சவ்லா பீரின் இருப்பை படகு பிரதிபலிப்பதாக கவிஞர் உமர் ஹாஜி சுலேமான் சொல்கிறார். ஏனெனில் ஓடைகளுக்கு இடையே உள்ள தீவுகளுக்கு படகுகளிதான் துறவி பயணித்தார்

*****

கண்காட்சி வண்ணங்களாலும் சத்தங்களாலும் நடவடிக்கைகளாலும் உணர்வுகளாலும் கொண்டாட்டம் பூண்டிருக்கிறது. மாலை நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டிருக்கும் பெரும் மேடைக்கு மீது பந்தலை கட்டுகின்றனர் ஜாட்கள்.  துணிகளுக்கும் உணவுக்கும் பாத்திரங்களுக்கும் கைவினைப் பொருட்களுக்குமான சிறுகடைகள் முளைக்கின்றன. தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் பெரியவர்களின் குழு ஒன்று என்னை பார்த்து அடையாளம் காணுகிறது. “இந்த விழாவில் பங்கேற்க வெகு தூரத்திலிருந்து வந்திருப்பது எனக்கு சந்தோஷம்.”

கண்காட்சிக்கு நிறைய யாத்ரீகர்கள் வந்து சேர்கின்றனர். நடைபயணமாகவும் பைக்குகளிலும் டெம்போ வாகனங்களிலும் வந்திருக்கின்றனர். கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் இருக்கின்றனர். வண்ணமயமான உடைகள் அணிந்திருக்கும் அவர்கள் பேசவும் புகைப்படம் எடுக்கப்படவும் விரும்பவில்லை.

இரவு 9 மணி ஆனதும் மேள வாத்தியக்காரர்கள் இசைக்கத் தொடங்குகின்றனர். மெல்லிசை காற்றில் பரவத் தொடங்குகிறது. ஒரு முதியவர் சட்டென பக்தி பாடலை பாடுகிறார். சவ்லா பீரை பற்றி சிந்தி மொழியில் பாடப்படும் பாடல் அது. சில நிமிடங்களில் நிறைய பேர் அவருடன் சேர்ந்து பாடுகின்றனர். இன்னும் சிலர் ஒரு வட்டம் உருவாக்கி, ஆடத் தொடங்குகின்றனர். பாடலுக்கும் தாளத்துக்கும் ஆடி இரவு கழிகிறது.

அடுத்த நாள் ஏப்ரல் 29ம் தேதி, விழாவின் முக்கியமான நாள். குழுவின் பெரியவர்கள் ஆன்மிக சொற்பொழிவுகளை வழங்குவார்கள். கடைகள் திறக்கப்பட்டு, ஆசிர்வாதங்களுக்காக மக்கள் பெருமளவுக்கு வருகின்றனர்.

காணொளி சவ்லா பீர் கண்காட்சி

”ஊர்வலத்துக்கு தயாராகி விட்டோம். அனைவரும் பிரார்த்திக்கும் பகுதியில் கூடுங்கள்.” உரத்த குரல் ஒன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது. சிறு படகுகளை, வெள்ளை பாய்மரங்கள் மற்றும் பூத்தையலால் அலங்கரித்து தலைகளுக்கு மேல் சுமந்திருக்கும் கூட்டம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து, சவ்லா பீரின் பெயரை உச்சாடனம் செய்து பாடியபடி கண்காட்சியை சுற்றி பிறகு வழிபாட்டு தலத்தை நோக்கி விரைகின்றனர். தீவுகளுக்கு படகில் சென்றதால், படகுகள் சவ்லா பீரின் இருப்பை பிரதிபலிக்கின்றன.

“இங்கு நான் வருடந்தோறும் வருகிறேன். எங்களுக்கு சவ்லா பாபாவின் ஆசிர்வாதம் தேவை,” என்கிறார் 40 வயது ஜெயேஷ் ராபரி. அவர் அஞ்சாரிலிருந்து வந்திருக்கிறார். “மொத்த இரவும் இங்குதான் கழித்தோம். ஃபகிரானி சகோதரர்களுடன் தேநீர் அருந்தி, கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, சந்தோஷமான மனதுடன் வீட்டுக்கு செல்வோம்.”

“என் குடும்பம் கஷ்டத்தை சந்திக்கும்போது, இங்கு வந்து வேண்டுவோம். பிரச்சினை தீர்ந்து விடும். கடந்த 14 வருடங்களாக இங்கு நான் வருகிறேன்,” என்கிறார் 30 வயது கீதா பென் ராபரி. புஜ் பகுதியிலிருந்து இங்கு அவர் நடந்தே வந்த்ரிஉக்கிறார்.

“எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பை போதிக்கின்றன. அன்பில்லாமல் மதம் கிடையாது,” என்கிறார் கவிஞர் உமர் ஹாஜி சுலேமான், இரண்டு நாள் விழாவுக்கு நான் விடை கொடுக்கும்போது.

PHOTO • Ritayan Mukherjee

ஃபகிரானி ஜாட் ஆண்களின் குழுக்கள் ஒட்டகப் பாலை கொண்டு தேநீர் தயாரிக்கின்றனர். அவர்களின் பண்பாட்டில் முக்கியமான அங்கம் அது

PHOTO • Ritayan Mukherjee

மரூஃப் ஜாட் என்கிற பெரியவர் கடவுளை வேண்டுகிறார். ‘நீங்கள் மற்றும் உங்களின் குடும்பம் உள்ளிட்ட அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நிம்மதிக்கும் நான் வேண்டுகிறேன்,’ என்கிறார் அவர்

PHOTO • Ritayan Mukherjee

பிபார் கிராமத்தில் மாலை தொழுகைக்கு தயாராகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

துணிகள், உணவு, பாத்திரங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுக்கான சிறு கடைகள் முந்தைய நாள் மாலை வந்தது

PHOTO • Ritayan Mukherjee

இரவில் எல்லாமும் அமைதியான பிறகு, யாத்ரீகர்கள் இசை நிகழ்ச்சிகளை தொடங்குகின்றனர். நிகழ்ச்சி தொடக்கத்தை மேள வாத்தியக்காரர்கள் அறிவித்ததும் இரவு 10 மணிக்கு கண்காட்சி மைதான மையத்துக்கு பார்வையாளர்கள் வந்து சேருகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

வட்டத்துக்குள் ஆடும் ஆண்களும் அவர்களின் நிழல்களும் சேர்ந்து அமானுஷ்யமான சூழலை நள்ளிரவு வரை உருவாக்குகிறது

PHOTO • Ritayan Mukherjee

எல்லா சாதிமதங்களையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இரு நாள் கொண்டாட்டத்தில் பங்கு பெறுகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

வழிபாட்டு தலத்துக்கு அளிப்பதற்கு முன் அலங்கரிக்கப்பட்ட மரப் படகுகளை தலைகளில் சுமந்து யாத்ரீகர்கள் ஊர்வலம் செல்கின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

ஆண்கள் ஊர்வலம் செல்கிறது. பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் பெண்கள் ஊர்வலத்திலும் நடனத்திலும்ப் பங்கு பெறவில்லை

PHOTO • Ritayan Mukherjee

பீரின் பெயரும் அவருக்கு அர்ப்பணிக்கப்படும் அலங்கார படகுகளும் வருடாந்திர விழாவில் கூடியிருக்கும் பக்தர்களின் கடலில் மிதக்கின்றன

PHOTO • Ritayan Mukherjee

ஊர்வலம் செல்கையில் மைதானத்தின் எல்லா மூலைகளிலும் சவ்லா பீரின் பெயர் எதிரொலிக்கிறது

PHOTO • Ritayan Mukherjee

ஆண்களின் கூட்டம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து, சவ்லா பீரின் பெயரை உச்சாடனம் செய்து பாடியபடி கண்காட்சியை சுற்றி வந்து தலத்தை நோக்கி செல்கிறார்கள்

PHOTO • Ritayan Mukherjee

வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனைக்கு பிறகு, யாத்ரீகர்கள் கிளம்பி வீட்டுக்கு செல்கின்றனர்

தமிழில் : ராஜசங்கீதன்

Ritayan Mukherjee

رِتائن مکھرجی کولکاتا میں مقیم ایک فوٹوگرافر اور پاری کے سینئر فیلو ہیں۔ وہ ایک لمبے پروجیکٹ پر کام کر رہے ہیں جو ہندوستان کے گلہ بانوں اور خانہ بدوش برادریوں کی زندگی کا احاطہ کرنے پر مبنی ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Ritayan Mukherjee
Editor : Pratishtha Pandya

پرتشٹھا پانڈیہ، پاری میں بطور سینئر ایڈیٹر کام کرتی ہیں، اور پاری کے تخلیقی تحریر والے شعبہ کی سربراہ ہیں۔ وہ پاری بھاشا ٹیم کی رکن ہیں اور گجراتی میں اسٹوریز کا ترجمہ اور ایڈیٹنگ کرتی ہیں۔ پرتشٹھا گجراتی اور انگریزی زبان کی شاعرہ بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Pratishtha Pandya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan