கடைக்கு மேல் பெயர்ப்பலகை எதுவும் இல்லை. “இது ஒரு பெயரற்றக் கடை,” என்கிறார் முகமது அசீம். 8 x 8 அடி கொட்டகையின் ஆஸ்பெஸ்டாஸ் சுவர்கள் புகைக்கரியாலும் சிலந்தி வலைகளாலும் மூடப்பட்டிருந்தன. ஒரு சிறு உலை மூலையில் இருந்தது. ஒரு நீலநிற தார்ப்பாயுடன் கரிக்குவியல் நடுவில் கிடந்தது.
ஒவ்வொரு நாள் காலை ஏழு மணியானதும் மேற்கு ஹைதராபாத்தின் தூத் பவுலியிலுள்ளக் குறுகியச் சந்துகளில் அசீம் சைக்கிள் ஓட்டிச் செல்வார். பட்டறைக்கு அருகே சைக்கிளை நிறுத்துவார். ஹகீம் மிர் வசீர் அலி இடுகாட்டின் சுவர்தான் பட்டறைக்கான சுவரும்.
தூசுபடிந்த பிளாஸ்டிக் பெட்டிகள், துருப்பிடித்த உலோகப் பெட்டிகள், உடைந்த பக்கெட்டுகள் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் உபகரணங்கள் என கொஞ்சம் கூட இடமின்றி இருக்கும் இங்குதான் மண் வார்ப்பு உலோக டோக்கன்களைச் செய்யும் தன் அன்றாட நாளை அவர் தொடங்குகிறார்.
ஹைதராபாத்தின் சில பழைய டீக்கடைகளும் உணவகங்களும் 28 வயது அசீம் தயாரிக்கும் இந்த டோக்கன்களை இன்னும் பயன்படுத்துகின்றன. முன்பு, இதே போன்ற உணவு டோக்கன்கள் ஆலைகளிலும் ராணுவ மையங்களிலும் ரயில் நிலையங்களிலும் வங்கிகளிலும் விடுதிகளிலும் கூட்டுறவுகளிலும் இன்னும் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் டோக்கன்களுக்கான தேவை சரிந்து மக்கள் பிளாஸ்டிக் டோக்கன்களுக்கும் ரசீதுகளுக்கும் மாறிவிட்டனர். சில ஹைதரபாத் உணவகங்கள் இன்னும அவர்களின் அன்றாட வருமானத்தை கணக்குப் பார்க்க உலோக டோக்கன்களை சார்ந்திருக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் உணவு வேண்டுமெனில் அந்த உணவுக்கான டோக்கன் வாங்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களும் பிற கடைக்காரர்களும் அசீமை அஜூ என அழைப்பார்கள். இத்தகைய டோக்கன்கள் செய்யும் திறனை ஹைதராபாத்தில் கொண்டிருக்கும் கடைசிச் சிலரில் தானும் ஒருவர் என்கிறார் அஜூ.
அடுக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலிருந்து சிலவற்றை எடுத்துத் தரையில் வைக்கிறார். தேநீர், சோறு, இட்லி, பாயா, மீன், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி எனப் எல்லாப் பெட்டிகளிலும் உணவின் பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன. பல டோக்கன்களுக்கு மீன், சிக்கன், ஆடு, தோசை போன்ற ஓர் உணவின் வடிவத்தைக் கொண்டிருந்தன.
“இந்த டோக்கன் நாணயங்களை தயாரிப்பதில் நாங்கள் திறன் பெற்றவர்கள். ஹைதராபாத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் கடைக்காரர்கள் நாணயம் வாங்க இங்கு வருவார்கள். ஆனால் இப்போது வியாபாரம் சரிந்துவிட்டது,” என்கிறார் அசீமின் மாமாவான முகமது ரஹீம். 60 வயதுகளில் இருக்கும் அவரும் இந்தப் பணியில் இருந்திருக்கிறார்.
அசீமின் தாத்தா, பாட்டியும் இந்த வேலையை பார்த்ததாகச் சொல்கிறார் அசீம். அரண்மனைக்கு நாணயங்களும் ஆபரணங்களும் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியில் (1911-1948) அவர்கள் செய்து கொடுத்திருக்கின்றனர். சைக்கிள் உரிமையாளர்களின் பெயர்கள் பதிக்கப்பட்ட நாணயங்களையும் உருவாக்கியிருப்பதாக ரஹீம் சொல்கிறார். அந்த நாணயங்களை உரிமையாளர்கள் சைக்கிளில் அறைந்துவிடுவார்கள். பல வருடங்களுக்கு முன் அவரின் தந்தை உருவாக்கிய ஒரு உலோகத் தகட்டை நம்மிடம் அசீம் காட்டுகிறார்.
அசீமின் தந்தையான முகமது முர்துசா தலைச்சிறந்த நாணயத் தயாரிப்பாளராக இருந்தவர். ஊரில் இருந்த அனைவரும் நாணயம் தயாரிக்க அவரையே நாடியிருக்கின்றனர். ஆனால் அஜ்ஜு பிறப்பதற்கும் பல பத்தாண்டுகளுக்கு முன், உலை வெடித்ததில் முர்துசாவின் கையில் காயம் ஏற்பட்டது. கையையே எடுக்க வேண்டியதாகிவிட்டது.
முர்தசாவும் ரஹீமும் இன்னும் அவர்களது பெற்றோரின் பாரம்பரியத்தைத் தொடர்கின்றனர். முதன்முதலாக வேலை செய்யத் தொடங்கியபோது தனக்கு என்ன வயது என அசீமுக்குத் தெரியவில்லை. 4ம் வகுப்பு அவர் படித்துக் கொண்டிருந்தபோது, நண்பன் ஒருவனுடன் சண்டை போட்டு விட்டதால், அவரது படிப்பை தந்தை நிறுத்தியிருக்கிறார். நாணயத் தயாரிப்புதான் அவருக்குத் தெரிந்த ஒரே வேலை என்கிறார் அவர்.
பல பத்தாண்டுகளில் தகர்ப்பினாலும், உலையிலிருந்து வந்த புகையால் கொடுக்கப்பட்டப் புகார்களாலும் இட நெருக்கடிகளாலும் கடையைப் பல இடங்களுக்கு குடும்பம் மாற்றியிருக்கிறது. சார்மினாருக்கு அருகே ஒரு கொட்டகையிலிருந்து அவர்கள் வேலை பார்த்திருக்கின்றனர். சார்மினார் பகுதியிலிருந்து சிறு மசூதிக்கு அருகே ஒரு கடையில் கொஞ்ச காலம் பணிபுரிந்திருக்கின்றனர். அவ்வப்போது மூன்று அறை வீட்டில் இருந்து வேலை பார்த்திருக்கின்றனர். அசீமின் மனைவியான நசிமா பேகம் அருகாமை மைதானங்களிலிருந்து மண்ணைச் சேகரித்து வந்து சலித்து, வார்ப்புகளில் நிரப்புவது போன்ற வேலைகளைச் செய்தார்.
மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கியது. மாற்றுத்திறனாளி ஊக்கத்தொகையாக முர்துசா மாதாமாதம் வாங்கிய 2000 ரூபாயில் அவர் வைத்திருந்த சேமிப்பு குடும்பம் நடக்க உதவியது. அசீமின் மூன்று சகோதரிகளுக்கு மணமாகி விட்டது. தம்பி இருசக்கர வாகன நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்க்கிறார்.
ஏப்ரல் 2020-ல் முர்துசா இறந்தார் (அசீமின் தாய் காஜா 2007-ல் இறந்துவிட்டார்). ஊக்கத்தொகை நின்றுபோனது. எனவே நவம்பர் 2020-ல் இடுகாட்டுக்கு அருகே இருந்த கடையை அசீம் வாடகைக்கு எடுத்து வேலை செய்யத் தொடங்கினார். நிறைய வாடிக்கையாளர்களை ஈர்த்து நல்ல வருமானம் ஈட்ட நம்பிக்கைக் கொண்டுள்ளார். ஆனால் அந்தக் கொட்டகை நடைபாதையில் இருக்கிறது. நகராட்சி அதிகாரிகளால் எப்போது வேண்டுமானாலும் அகற்றப்படலாம் என்கிறார் அவர்.
ஒருமுறை பேகம்பெட்டின் உணவகம் ஒன்றிலிருந்து அவருக்கு ஆர்டர் கிடைத்தது.
உணவகத்தின் தேவையைப் பொறுத்து, - தேநீர் கோப்பையோ, மீனோ - ஒரு சரியான வடிவத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டுமென்கிறார். எல்லா வடிவங்களுக்குமான மூல டோக்கன் ஒன்றை அவர் வைத்திருந்தார். வெகுகாலத்துகு முன் வெள்ளை உலோகத்தால் செய்யப்பட்ட டோக்கன். அதற்குப் பிறகுதான் மாதிரிகளை உருவாக்கும் பல தன்மைகள் நிறைந்த நுட்பமான பணி தொடங்கும்.
அசீம் ஓர் உலோகச் சட்டகத்தை மரப் பலகையில் வைத்து அதன் மேல் வார்ப்புப் பொடியைத் தூவுகிறார். “மண் துகள் நாணயத்தில் இல்லாமலிருக்க பொடி உதவும்,” என்கிறார் அவர். பிறகு அவர், விரும்பும் வடிவங்களிலான டோக்கன்களை ஒன்றன்பின் ஒன்றாக பலகையில் வைக்கிறார்.
சட்டகத்தின் நான்கில் ஒரு பங்கை மீண்டும் அவர் மண் மற்றும் வெல்லப்பாகுக் கலவையால் நிரப்புகிறார். எந்த மண்ணும் பயன்படும் என்கிறார் அவர். அது சலிக்கப்பட்டு பெரிய துகள்கள் மட்டும் இல்லாதிருக்க வேண்டும். கலவை அடி மண்ணில் சேர்க்கப்படுகிறது. மேலே அவர், நீல தார்பாயால் மூடப்பட்டிருந்த முந்தைய வார்ப்பின் கரித்தூளைச் சேர்க்கிறார்.
மொத்த சட்டகமும் நிரம்பியதும் மணலை அழுத்த அசீம் அதன் மீது ஏறி நிற்கிறார். பிறகு அதை திருப்பி வைக்கிறார். நாணயங்களின் வடிவங்கள் இப்போது கலவையில் பதிந்துவிட்டன. வார்ப்பை மூடியால் மூடி, அதன் மீது வார்ப்புப் பொடியைத் தூவுகிறார். பிறகு அடிமண்ணையும் கரித்தூளையும் மேலே போடுகிறார். அதன் மீது அவர் மீண்டும் ஏறி நிற்கிறார். அவரது கால்களை களிமண்ணும் புகைக்கரியும் அப்பியிருக்கிறது.
அதிகமாக இருக்கும் மண் துடைக்கப்படுகிறது. பிறகு சட்டகம் திறக்கப்படுகிறது. மூல வடிவங்களை மெல்ல அவர் அகற்றுகிறார். அவை அவற்றின் பதிவுகளை குழிகளாக மண் கலவையில் பதியச் செய்திருக்கின்றன.
உருக்கப்பட்ட அலுமினியம் உள்ளே செல்வதற்காக சிறு குச்சியைக் கொண்டு துளைகள் உருவாக்குகிறார் அசீம். குச்சியைக் கொண்டு அவர் குழிகளில் இருக்கும் மண்ணை சமப்படுத்தி பழைய ஆர்டர்களின் பதிவுகளை அகற்றுகிறார். சட்டகத்தை அவர் மூடிப் பூட்டுகிறார். ஒரு மரப்பலகையை மேலே வைக்கிறார். வார்ப்புக்கான நேரம் வந்து விட்டது.
கரியை உலையில் நிரப்பி விசிறப்படுகிறது. கரியில் நெருப்பு வரத் தொடங்கியதும் பயன்படாத அலுமினிய நாணயங்கள் அல்லது திடத் துண்டுகள் கொண்ட ஒரு உலோகக் கலனை உள்ளே வைக்கிறார். அவை உருகியதும் ஒரு இடுக்கியைக் கொண்டு சூடான திரவத்தை சட்டகத்தில் ஊற்றுகிறார். இவை அனைத்தையும் எந்தப் பாதுகாப்பும் இன்றி அவர் செய்கிறார். “இதுபோல் வேலை பார்க்கப் பழகி விட்டேன். பாதுகாப்பு உபரணங்கள் விலை உயர்ந்தவை,” என்கிறார் அவர்.
உருக்கப்பட்ட திரவம் வேகமாக திடமாகிறது. சில நிமிடங்களில் வார்ப்பு திறக்கப்படுகிறது. புதிய நாணயங்கள் உள்ளே உருவாகியிருக்கின்றன. அவர் அவற்றை வெளியே எடுத்து, முனைகளை கூர்படுத்துகிறார். பிறகு அதைக் உள்ளங்கையில் எடுத்து வைத்து, “இதோ எங்களின் நாணயம்,” என்றார்.
அடுத்தக் கட்டம் ஆங்கிலத்தில் உணவின் பெயரையும் உணவகப் பெயரையும் டோக்கன்களில் பொறிக்க வேண்டும். அதற்காக எழுத்து மற்றும் எண் முத்திரைகள் புதிய அலுமினிய டோக்கன்களில் அறையப்பட வேண்டும். ஒரு தொகுதி உருவானதும், அவற்றைக் கொண்டு புதியப் பதிவுகளை அவர் தொடர்கிறார்.
“சட்டகத்தை பொறுத்து ஒவ்வொரு தொகுதியின் நாணய எண்ணிக்கை மாறும். என்னிடம் 12 வெவ்வேறு அளவுகள் இருக்கின்றன,” என்கிறார் அவர் சட்டகங்களின் குவியலைக் காட்டி. நடுத்தர அளவான 15 x 9 அங்குல சட்டகத்தில் 40 டோக்கன்களை அவர் ஒரு நேரத்தில் செய்துவிட முடியும். நிறைய ஆர்டர்கள் இருந்து 10 மணி நேரங்கள் அவர் உழைத்தால், ஒரு நாளில் 600 நாணயங்களை அவர் செய்து விட முடியும்.
அரிதாக புதிய வடிவம் உருவாக்கப்பட வேண்டி வந்தால், மூல நாணயம் இருக்காது. முப்பரிமாண பிளாஸ்டிக் மாதிரியை கொண்டு வருமாறு அசீம் வாடிக்கையாளர்களிடம் சொல்வார். ஆனால் அவற்றின் விலை அதிகம். எனவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பழைய வடிவங்களையே திரும்பச் செய்யதான் விரும்புவார்கள். (அசீமின் தந்தை முர்துசா வார்ப்பு வேலை செய்தபோது, புதிய வடிவங்களை அவர் கையாலேயே உருவாக்கினார்).
உலோக நாணயங்கள் பிளாஸ்டிக் நாணயங்களை விட அதிகக் காலம் நீடிக்கும். விலையும் மலிவானவை என்கிறார் முகமது மொகீன். அசீமின் பட்டறையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேகம்பெட்டின் ஒரு உணவகத்தில் மேசைப் பணியாளராக பணிபுரிகிறார் அவர். அவர் ஆர்டர் கொடுப்பதற்காக வந்திருக்கிறார். “நாம்தான் எண்ண வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்களும் அதையே விரும்புகின்றனர்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு உணவுக்கும் நாங்கள் 100 நாணயங்கள் வைத்திருப்போம். அவை பயன்படுத்தப்பட்டபிறகு, 100 முறை அந்த உணவு விற்றிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களின் அன்றாட வருமானத்தை அப்படித்தான் நாங்கள் கணக்கிடுவோம். எங்களுக்கு கல்வியறிவு கிடையாது. எனவே இந்த முறைதான் எங்களிடம் இருக்கிறது.”
ஒரு நாணயம் செய்ய அசீம் 3 ரூபாய் கட்டணம் வாங்குகிறார். ஆனால் 1,000 நாணயங்களுக்குக் குறைவான அளவு தயாரிக்க வேண்டுமெனில் அவர் நான்கு ரூபாய் வாங்குவார். “எல்லா நாளும் எனக்கு வேலைகள் கிடைப்பதில்லை. வாரத்துக்கு இருமுறையோ மூன்று முறையோ சில வாடிக்கையாளர்கள் வருவார்கள்,” என்கிறார் அவர். “அவர்களுக்கு என்னையும் என் கடை இருக்கும் இடமும் தெரியும். அல்லது என்னுடைய செல்பேசி எண் அவர்களிடம் இருக்கும். செல்பேசியில் அழைத்து ஆர்டர் கொடுப்பார்க்ள். சிலருக்கு 300 நாணயங்கள் தேவைப்படும். சிலருக்கு 1,000 நாணயங்கள் தேவைப்படும். நிலையான வருமானம் எனக்குக் கிடையாது. சில நேரத்தில், ஒரு வாரத்துக்கு வெறும் 1,000 ரூபாய்தான் கிடைக்கும். சில நேரங்களில் 2,500 ரூபாய் கிடைக்கும்.”
சில நேரங்களில் ஆர்டர் கொடுத்து விடுவார்கள். அவற்றை வாங்க வர மாட்டார்கள். அலமாரியின் முதல் பகுதியில் இருக்கும் ஒரு தொகுதியை நம்மிடம் காட்டுகிறார் அசீம். “இந்த 1000 நாணயங்களை நான் உருவாக்கினேன். ஆனால் வாடிக்கையாளர் திரும்ப வரவே இல்லை,” என்கிறார் அவர். சில நாட்கள் கழித்து, வாங்கப்படாத நாணயங்களை உருக்கி, மீண்டும் பயன்படுத்திக் கொள்வார் அவர்.
வருமானத்தின் பெரும்பகுதி, இரு கடைகளின் வாடகைக்கே செல்வதாக அசீம் சொல்கிறார். மசூதிக்கு அருகே இருந்த பழையக் கடைக்கு வாடகை 800 ரூபாய் (வாடிக்கையாளர்கள் வருவதற்காக அக்கடையை இன்னும் அவர் வைத்திருக்கிறார்). இடுகாடுக்கு அருகே இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் பட்டறையின் வாடகை ரூ.2,000. “ஒவ்வொரு மாதமும் 6,000லிருந்து 7,000 ரூபாய் வரை பள்ளிக் கட்டணம், மளிகை சாமான் மற்றும் பிற வீட்டுச் செலவுகளுக்கு நான் செலவழிக்கிறேன்,” என்கிறார் அவர். தம்பி குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார்.
மதியவேளையில் வழக்கமாக ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மொயின்புராவிலுள்ள வீட்டுக்கு அசீம் திரும்புவார். வீட்டில் மரச்சாமான்கள் மிகக் குறைவு. சிமெண்ட் தரைகள் பிளாஸ்டிக் பாய்களால் மூடப்பட்டிருக்கின்றன. “என் குழந்தைகளும் இந்த வேலைக்கு வருவதை நான் விரும்பவில்லை. உலை மற்றும் சூடான உலோகங்கள் மிகவும் ஆபத்து,” என்கிறார் அவர்.
“என் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தை நான் விரும்புகிறேன். சிறந்த கல்வியை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவரின் மனைவி நசிமா. மூன்று வயது மகள் சமீரா அவரோடு ஒட்டிக் கொண்டு நிற்க, ஆறு வயது மகன் தகீர் ஒரு மூலையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனது கையில் பல நாணயங்கள் இருக்கின்றன. தாத்தா செய்து கொடுத்த சிறு இரும்பு சுத்தியலும் இருக்கிறது.
தமிழில் : ராஜசங்கீதன்