“நான் வேகமாக ஓடிவந்து குனோவில் வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்.”
இதுதான் அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி வழியாக சின்ட்டு எனும் வேங்கை, கேட்கவோ அல்லது படிக்கவோ தயாராக உள்ளவர்களுக்கு சொல்லும் செய்தியாகும்.
உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மத்திய பிரதேச வனத்துறை அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு வைத்த சுவரொட்டி இது. இச்சுவரொட்டியில் இருக்கும் நட்பு கதாபாத்திரமான ‘சின்ட்டு வேங்கை’, குனோ தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களை தனது வீடாக மாற்றவிருப்பதாக தெரிவிக்கிறது.
உயிருடன் உள்ள 50 ஆப்ரிக்க வேங்கைகளுடன் சின்ட்டுவும் இவ்வீட்டில் வசிக்கப் போகிறான். ஆனால் அதற்காக பக்சா கிராமத்திலிருந்து 556 மனிதர்கள் வேறு ஏதேனும் இடத்திற்கு மறுகுடியமர்த்தப்பட உள்ளனர். காடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ள சஹாரியா பழங்குடியினரின் அன்றாட வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இந்த வெளியேற்றம் மோசமாக பாதிக்கப் போகிறது.
தேசியப் பூங்காவிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ள வேங்கைகளை அதிக விலை கொடுத்து சஃபாரி பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே காண முடியும். உள்ளூர் மக்கள் குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் இதிலிருந்து இயல்பாகவே விலக்கப்படுகின்றனர்.
சரணாலயத்திற்கு வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குக்கிராமமான பைரா ஜாதவில் வசிக்கும் எட்டு வயது சிறுவன் சத்யன் ஜாதவிற்கு ‘அன்பான’ கேலிச்சித்திர சுவரொட்டியில் காணப்படும் பூனை குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவன் தனது தந்தையிடம், “இது ஆடா?” எனக் கேட்டான். அவனது நான்கு வயது தம்பி அனுரோதிற்கு அது ஒரு நாயின் வகை எனத் தோன்றுகிறது.
சின்ட்டுவைத் தொடர்ந்து மேலும் இரண்டு காமிக் கதாபாத்திரங்களும் சுவரொட்டிகளில் இடம்பெறுகின்றன. வேங்கை குறித்தத் தகவல்களை மின்ட்டு, மீனு எனும் இரண்டு குழந்தை கதாபாத்திரங்கள் பகிர்கின்றன. அவர்கள் வேங்கைகள் ஒருபோதும் மனிதர்களை தாக்காது என்பதால் சிறுத்தையைவிட பாதுகாப்பானது என்கின்றனர். அவற்றுடன் ஓட்டப்பந்தயம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மின்ட்டு சொல்கிறான்.
பெரிய பூனை வகையைச் சேர்ந்த இந்த வேங்கைகளை நேரில் கண்டால் ஜாதவ் சிறுவர்கள் நட்புப் பாராட்ட முயற்சிக்க மாட்டார்கள் என நம்புவோம்.
இது உண்மைக் கதை, இதில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.
அசினோனைஸ் ஜூபாதுஸ் – ஒரு ஆப்ரிக்க வேங்கை – ஆபத்தை விளைவிக்கக் கூடிய திறன் பெற்ற பெரிய பாலூட்டி. நிலத்தில் வாழும் வேகமான விலங்கு. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொள்ளாத இவை பாதிக்கப்படக்கூடிய விலங்கினம் ஆகும். நூற்றுக்கணக்கான குடும்பங்களை அவர்தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டவிருக்கும் விலங்கினம்.
*****
“இந்தாண்டு மார்ச் 6ஆம் தேதி அங்குள்ள காட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,” என்கிறார் குனோ காட்டை ஒட்டியுள்ள தனது பக்சா கிராமத்தை சுட்டிக்காட்டி 40 வயதான பல்லு ஆதிவாசி. “இப்பகுதி தேசியப் பூங்காவாக மாற்றப்பட உள்ளதால் நாங்கள் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என எங்களிடம் சொல்லப்பட்டது.”
மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்துள்ள சஹாரியா பழங்குடியினர் ’அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு (PVTG)’ என்று மத்தியப் பிரதேச அரசினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சஹாரியா பழங்குடியினரின் பக்சா கிராமம் 42 சதவீத கல்வியறிவு பெற்றவர்களைக் கொண்டுள்ளது. விஜய்பூர் வட்டாரத்தில் உள்ள இக்கிராமத்தில் 556 பேர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011ன்படி) வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குனோ ஆற்றங்கரையில் தேசியப் பூங்கா (குனோ பல்புர் என்றும் குறிப்பிடப்படுகிறது) சூழ்ந்துள்ள பகுதியில் கற்கூரை கொண்ட செங்கல் வீடுகள், மண் வீடுகளில் வசிக்கின்றனர்.
சஹாரியாக்கள் சிறிய நிலங்களில் மானாவாரி விவசாயத்தை மேற்கொள்கின்றனர் மற்றும் மரம் சாராத காட்டுப் பொருட்களை (NTFP) விற்க குனோவை நம்பியிருக்கிறார்கள்
இப்போது 60-களில் உள்ள கல்லோ ஆதிவாசி பக்சா கிராமத்தில் தனது திருமண வாழ்வை கழித்தவர். “எங்கள் நிலம் இங்குள்ளது. எங்கள் வனம், வீடு என அனைத்தும் இங்குதான் உள்ளது. இவை எங்களுடையது. ஆனால் இப்போது நாங்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறோம்.” ஏழுப் பிள்ளைகளுக்குத் தாய். ஏராளமான பேரப்பிள்ளைகளுடன் வசிக்கும் அவர் ஒரு விவசாயி. வனப் பொருட்களை சேகரிப்பவரும்கூட. அவர் கேட்கிறார், “இந்த வேங்கையை இங்கு கொண்டுவருவதால் என்ன நன்மை விளையப் போகிறது?” என.
பக்சாவிற்கு ஒருவர் செல்ல வேண்டுமெனில் ஷியோபூர்கோயிங் நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி, கருங்காலி, கர்தாய், குமஞ்சம் மரங்கள் சூழ்ந்த இலையுதிர் காடுகளில் மாசுக்காற்றைப் பரப்பும் சாலைக்குள் நுழைந்து ச் செல்ல வேண்டும். பன்னிரெண்டு கிலோமீட்டருக்குப் பிறகு ஏராளமான எண்ணிக்கையில் கால்நடைகள் மேயும் இடத்தைக் காணும்போது கிராமத்தை அடையலாம். இங்கிருந்து ஆரம்ப சுகாதார நிலையம் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தொலைப்பேசி இணைப்புகள், நெட்வொர்க்குகள் செயல்பட்டால் 108-க்கு அழைக்கலாம். பக்சாவில் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளது. 5-ம் வகுப்பிற்கு பிறகு படிப்பதற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் ஒச்சாவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். வாரம் முழுவதும் அங்கேயே தங்க வேண்டும்.
சஹாரியாக்கள் சிறிய நிலங்களில் மானாவாரி விவசாயத்தை மேற்கொள்கின்றனர் மற்றும் மரம் சாராத காட்டுப் பொருட்களை (NTFP) விற்க குனோவை நம்பியிருக்கிறார்கள். மறுகுடியமர்த்தப்பட்டவுடன் இந்த விற்பனையும் தடைபடும். சிர் மரங்களில் கிடைக்கும் கோந்து போன்ற NTFP பொருட்களே அவர்களின் முதன்மை வருவாய் ஆதாரம். தெண்டு இலைகள், பழங்கள், வேர்கள், மூலிகைகளும், பிற ரெசின்களும் அங்குக் கிடைக்கின்றன. அனைத்து பருவ காலங்களும் நன்றாக இருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் (சராசரி 10 நபர்கள்) ஆண்டு வருமானம் ரூ.2-3 லட்சம் வரை இருக்கும் என சஹாரியாக்கள் கணக்கிடுகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழான குடும்ப அட்டைகள் மூலம் கிடைக்கும் நியாய விலைப் பொருட்களும் உணவின் நிலைத்தன்மையை ஓரளவுக்கு உறுதி செய்கிறது.
காட்டை விட்டு வெளியேறிவிட்டால் இவை எல்லாம் முடிந்துவிடும். “காட்டில் கிடைக்கும் வசதிகள் போய்விடும். உப்பு, எண்ணெய் வாங்குவதற்காக இப்போது சேகரித்து வரும் சிர் மற்றும் கோந்துகளும் இனிமேல் கிடைக்காது. அதுவும் முடிந்துவிடும். வருமானத்திற்கு ஏதேனும் கூலித்தொழில்தான் செய்ய வேண்டும்,” எனக் குறிப்பிடுகிறார் பக்சாவில் உள்ள ஹரேத் ஆதிவாசி.
மறுகுடியமர்த்தலால் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார இழப்பீடு குறிப்பிடத்தக்கது, என்கிறார் பேராசிரியர் அஸ்மிதா கப்ரா. புலம்பெயர் பாதுகாப்பு வல்லுநரான அவர் பக்சா குறித்த 2004ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சி, சந்தைப்படுத்தக்கூடிய வனப் பொருட்களில் கிராமத்திற்கு கிடைக்கும் கணிசமான வருவாயை காட்டுகிறது. “இந்த நிலப்பரப்பு விறகு, மரத்துண்டுகள், மூலிகைகள், பழங்கள், இலுப்பை போன்ற பலவற்றை அளிக்கிறது,” என்கிறார் அவர். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி குனோ தேசியப் பூங்கா 748 சதுர கிலோமீட்டர் அளவுக்கானப் பகுதியை உள்ளடக்கியது. மொத்தமுள்ள 1,235 சதுர கி.மீ. பெரிய குனோ வனவிலங்கு பிரிவுக்குள் வருகிறது.
காட்டிலிருந்து கிடைக்கும் வருவாயுடன், தலைமுறை தலைமுறைகளாக விவசாய நிலத்தில் தொடர்ந்து விளைச்சல் செய்வதை மாற்றுவதென்பது கடினம். “மழை பெய்யும்போது எங்களால் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, எள்ளு, பாசிப்பயறு, காராமணி [தட்டைப்பயறு], போன்றவற்றையும், வெண்டைக்காய், பரங்கிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளையும் விளைவிக்க முடியும்,” என்கிறார் ஹரேத் ஆதிவாசி.
தனது குடும்பத்திற்கு 15 பிகா (5 ஏக்கருக்கும் குறைவு) விளைநிலம் வைத்துள்ள கல்லோ பேசுகையில், “இங்குள்ள எங்கள் நிலம் நன்றாக விளையக்கூடியது. நாங்கள் வெளியேற விரும்பவில்லை, ஆனால் அவர்கள் எங்களைக் கட்டாயப்படுத்துகின்றனர்,” என்கிறார்.
முறையான சூழலியல் ஆராய்ச்சி நடத்தாமல் வேங்கைக்கு இடமளிக்க காட்டிலிருந்து சஹாரியாக்கள் வெளியேற்றப்படுவதாகச் சொல்கிறார் பேராசிரியர் கப்ரா. “வனத்துறைக்கும், பழங்குடியினருக்கும் இடையேயான உறவு மேலாதிக்கம் கொண்டது என்பதால் பழங்குடியினரை வெளியேற்றுவது எளிதானது. அவர்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்களை வனத்துறை கட்டுப்படுத்துகிறது,” என்கிறார் அவர்.
ராம் சரண் ஆதிவாசி அண்மையில் சிறைக்குச் சென்று வந்த அனுபவம் இதை உண்மையாக்குகிறது. பிறந்து 50 ஆண்டுகளாக அவர் குனோவின் காடுகளுக்கு உள்ளே சென்று வந்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலில் அவரது தாயாருடன் விறகு சேகரிக்கச் சென்றார். கடந்த 5-6 ஆண்டுகளில், ராம் சரண் மற்றும் அவரது சமூகத்தினர் காட்டின் வளங்களை எடுப்பதற்கு வனத்துறை தடை விதிப்பதால் அவர்களின் வருவாயும் பாதியாக குறைந்துவிட்டது. “அத்துமீறி நுழைதல், வேட்டையாடுதல் என [கடந்த ஐந்து ஆண்டுகளில்] எங்கள் மீது ரேஞ்சர்கள் பொய் வழக்கு போடுகின்றனர். எங்களை [அவரது மகன் மகேஷூம், அவரும்] ஷியோபூர் சிறையில் அடைத்துவிட்டனர். பிணைத்தொகை மற்றும் தண்டங்களுக்காக நாங்கள் 10,000 – 15,000 வரை பணம் செலுத்த வேண்டியிருந்தது,” என்கிறார் அவர்.
வெளியேற்றப்படுவோம் என்ற அச்சுறுத்தலும் வனத்துறையுடன் அன்றாடப் பிரச்னைகள் இருந்தாலும் பக்சா பழங்குடிகள் துணிச்சலாக இருக்கின்றனர். “நாங்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை. கிராம சபை கூட்டத் தில் எங்கள் கோரிக்கைகளை தெளிவாக கூறிவிட்டோம்,” என்று குடியிருப்புவாசிகள் குழுவுக்கு நடுவே உரத்த குரலில் சொல்கிறார் ஹரேத். 70 வயதாகும் அவர் கிராம சபை உறுப்பினர். புலப்பெயர்வுக்காக 2022 மார்ச் 6ஆம் தேதி வனத்துறையின் சார்பில் கிராம சபை புதிதாக அமைக்கப்பட்டது என்கிறார். வன உரிமைச்சட்டம், 2006 [பிரிவு 4 (2) (இ)], கீழ் கிராம சபை எழுத்துப்பூர்வ ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே வெளியேற்றம் தொடங்கும்.
கிராமத்தினரால் தலைவர் என்று குறிப்பிடப்படும் பல்லு ஆதிவாசி நம்மிடம் பேசுகையில், “இழப்பீட்டிற்குத் தகுதியுள்ள நபர்கள் 178 பேர் என அதிகாரிகள் எழுதிவிட்டனர். ஆனால் கிராமத்தில் நாங்கள் 265 பேர் இருக்கிறோம் என்பதை தெரிவித்துவிட்டோம். எங்கள் எண்ணிக்கையை அவர்கள் ஏற்கவில்லை, அனைவருக்கும் இழப்பீடு கிடைக்கும்வரை நாங்கள் நகர மாட்டோம் என்று கூறிவிட்டோம். 30 நாட்களில் இதை செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.”
ஒரு மாதம் கழித்து 2022, ஏப்ரல் 7ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. அடுத்தநாள் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதல்நாள் மாலையே தெரிவிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, எங்களை யாரும் வெளியேற்றவில்லை என்றும் நாங்களே ஒப்புக் கொண்டு நகர்கிறோம் என்றும் எழுதப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட அதிகாரிகள் கோரினர். புலம்பெயர்வோருக்கான இழப்பீட்டுக்கு 178 பேர் மட்டுமே தகுதி பெற்றதாக காகிதத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதில் கையெழுத்திட கிராம சபை மறுத்துவிட்டது.
குனோ வனத்தின் அருகாமைப் பகுதிகளில் வசித்த 28 கிராமங்களைச் சேர்ந்த 1,650 குடும்பங்கள் 1999ஆம் ஆண்டு குஜராத்திலிருந்து வந்த சிங்கங்களுக்காக அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட துன்பகரமான நினைவுகள், சஹாரியாக்களின் நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்துகிறது. “அவர்களுக்கு அரசு அளித்த உறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர்கள் இப்போதும் இழப்பீட்டிற்காக அரசின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை,” என்கிறார் பல்லு.
சிங்கங்கள் வரவே இல்லை. ஆனால் அது நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.
*****
இந்தியாவில் வேட்டையாடி அழிக்கப்பட்ட ஆசிய வேங்கை (அசினோனைஸ் ஜூபாதுஸ் வெனாடிகஸ்) – ஆரஞ்சு நிறப் புள்ளிகள் கொண்ட காட்டுப் பூனை வகையைச் சேர்ந்தது. வரலாற்று நூல்களிலும், திரைப்படங்களிலும் காட்டப்பட்ட பரிச்சயமான உருவம். கடைசியாக நாட்டில் இருந்த மூன்று ஆசியப்பகுதி வேங்கைகளை குரியா எனும் சமஸ்தானத்தின் மகாராஜா ராமானுஜ் பிரதாப் சிங் தியோ 1947ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார்.
பூமியில் சிங்கம், புலி, வேங்கை, சிறுத்தை, பனிச் சிறுத்தை, படைச்சிறுத்தை என ஆறு வகையான புலிக் குடும்பங்களும் வாழும் ஒரே நாடு இந்தியா என்ற பெயரைப் தியோவின் இச்செயல் வீழ்த்தியது. வேகமான, சக்திவாய்ந்த புலிகள், ‘காட்டின் ராஜாக்கள்’ என நம் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை ஆதிக்கம் செய்கின்றன. முத்திரைகளிலும் ரூபாய் நோட்டுகளிலும் பயன்படுத்தப்படும் அசோக சக்கரத்தில் ஆசியச் சிங்கத்தின் சித்திரம் உள்ளது. தேசப் பெருமைக்கு சறுக்கல் ஏற்பட்டதைக் கண்டு, அடுத்தடுத்த அரசுகள் சிறுத்தைகளை இழப்பிலிருந்து பாதுகாக்கும் திட்டங்களை உறுதி செய்தன.
இந்தாண்டு ஜனவரி மாதம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), இந்தியாவில் வேங்கையை அறிமுகம் செய்யும் செயல் திட்டம் எனும் ஆவணம் வெளியிட்டது. இதில் ‘சீட்டா’ என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்துள்ளது தெரிகிறது. ‘புள்ளிகளைக் கொண்டது’ என்பது இதன் பொருள். மத்திய இந்தியாவில் புதிய கற்காலக் குகை ஓவியங்களில் வேங்கை இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மீண்டும் வேங்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சில ஆசியாடிக் வேங்கைகளை தருமாறு ஈரானின் ஷாவிடம் இந்திய அரசு 1970-களில் பேச்சுவார்த்தை நடத்தியது.
நாட்டில் வேங்கைகளை கொண்டு வருவதற்கான சாத்தியங்களை அறியுமாறு இந்திய வனஉயிர் நிறுவனம் மற்றும் இந்திய வனஉயிர் அறக்கட்டளையிடம் MoEFCC கேட்டபோது 2009ஆம் ஆண்டு இந்த விஷயம் மீண்டும் பேசப்பட்டது. மிச்சமுள்ள ஆசிய வேங்கைகளும் ஈரானில்தான் காணப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால் இறக்குமதி செய்வது கடினம். எனவேதான் நமிபியா, தென்னாப்ரிக்காவில் காணப்படும் ஆப்ரிக்க வேங்கை தோற்றத்தில் ஒத்துப்போவதாக கருதப்பட்டது. அவற்றின் பரிணாம வரலாறுகள் தோராயமாக 70,000 ஆண்டுகள் இரண்டையும் பிரித்து வைக்கின்றன என்கிற உண்மை பொருட்படுத்தப்படவில்லை.
மத்திய இந்தியாவில் உள்ள பத்து சரணாலயங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 345 ச.கி.மீ ஆக இருந்து 748 ச.கி.மீ ஆக 2018ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு சிங்கத்திற்கு வசிப்பிடமாக திகழும் குனோ பால்பூர் தேசிய பூங்காவே தகுதியானது எனக் கருதப்பட்டது. பூங்காவிற்குள் இருந்த பக்சா கிராமம் மட்டுமே இத்திட்டத்திற்கு அசவுகரியத்தை தருவதால் அதை அகற்ற வேண்டும். 2022 ஜனவரி மாதம் MoEFCC வெளியிட்ட செய்திக்குறிப்பில் குனோவை “எந்த மனிதரும் வாழ முடியாத இடம்” என்று அதிர்ச்சியூட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளது.
வேங்கையை கொண்டு வருவதால் “கடந்த காலங்களைப் போன்று புலி, சிறுத்தை, சிங்கம், வேங்கை ஆகியவை ஒன்றாக வாழ முடியும்” என்று செயல்திட்ட ஆவணம் சொல்கிறது. இக்கூற்றில் இரண்டு பெரும் பிழைகள் உள்ளன. இது ஒரு ஆப்ரிக்க வேங்கை. இந்தியாவின் பூர்வீக விலங்கான ஆசிய வேங்கை கிடையாது. 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், குஜராத் அரசு அவற்றை அனுப்பாத காரணத்தால் குனோவில் இப்போது சிங்கங்கள் இல்லை.
“இப்போது 22 ஆண்டுகள் ஆகியும் சிங்கங்கள் வரவில்லை. எதிர்காலத்திலும் அவை வரப்போவதில்லை,” என்கிறார் ரகுநாத் ஆதிவாசி. பக்சாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் ரகுநாத், குனோவை சுற்றியுள்ள கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் முதன்முறை இல்லை என்பதால் தனது வீட்டை இழக்க நேரிடும் எனக் கவலைப்படுகிறார்.
கடைசியாக உள்ள ஆசியச் சிங்கங்கள் (பந்தரோ லியோ லியோ) அனைத்தும் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா தீபகற்பத்தில் ஒரே இடத்தில் குவிந்துள்ளன – வனவிலங்கு பாதுகாப்பாளர்களின் கவலையால் 'காட்டின் ராஜாக்கள்' இடமாற்றம் செய்யப்பட்டன. வேறு இடங்களுக்கு மாற்றாவிட்டால் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் பாதிப்பு, காட்டுத் தீ அல்லது பிற ஆபத்துகளால் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் அழிந்துவிடும்.
ஆதிவாசிகள் மட்டுமின்றி காட்டில் வசிக்கும் தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் விலங்குகளுடன் அனுசரித்து வாழ்வதாக வனத்துறையிடம் உறுதி அளித்துள்ளனர். “சிங்கங்களுக்காக நாங்கள் ஏன் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்? எங்களுக்கு விலங்குகளைத் தெரியும், எங்களுக்கு பயமில்லை. நாங்கள் காட்டில் வளர்ந்தவர்கள். நாங்களும் சிங்கங்களே ! ,” என்கிறார் தேசியப் பூங்காவிற்குள் ஒரு காலத்தில் இருந்த பைரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது ரகுலால் ஜாதவ். 50 வயது வரை அங்கு வாழ்ந்தவர், அசம்பாவிதம் எதுவும் அங்கு நடந்ததில்லை என்கிறார்.
மனிதர்கள் மீது வேங்கைகள் தாக்குதல் நடைபெற்றதாக எவ்வித வரலாற்று அல்லது தற்காலப் பதிவுகளோ இல்லை என்கிறார் உயிரியல் பாதுகாப்பாளரும், இந்திய வனஉயிர் நிறுவன (WII) முதல்வருமான டாக்டர் யாதவேந்திரா ஜாலா. “மனிதர்களுடன் மோதல் என்பது பெரிய பிரச்னை கிடையாது. வேங்கையை மறுஅறிமுகம் செய்யத் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் பெரிய மாமிச உண்ணிகளுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். சச்சரவுகளை குறைப்பதற்காக அதற்கேற்ற வாழ்க்கை முறைகளையும், கால்நடை பராமரிப்புச் செயல்களையும் கொண்டுள்ளனர்.” கால்நடைகள் இழப்பு ஏதேனும் ஏற்பட்டாலும் அதற்கேற்ப பொருளாதாரம் சரிசெய்து கொள்ளப்படுகிறது.
காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, எங்களை யாரும் வெளியேற்றவில்லை என்றும் நாங்களே ஒப்புக் கொண்டு நகர்கிறோம் என்றும் எழுதப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட அதிகாரிகள் கோரினர்
உள்நாட்டு மக்களையும், விஞ்ஞானிகளையும் அலட்சியம் செய்யும் வகையில் 2022 ஜனவரி மாதம் ஒன்றிய அரசு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது: “வேங்கை திட்டம், சுதந்திர இந்தியாவின் ஒரே அழிந்துபோன பெரிய பாலூட்டியான வேங்கையை மீண்டும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை “சூழலியல் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை அதிகரிக்கும்”.
இந்த ஆப்ரிக்க வேங்கைகள் நகைமுரணாக இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்தியாவிற்கு வர உள்ளது.
அதன் முதல் இரை பக்சா கிராமமாக இருக்கும்.
மக்களை அப்புறப்படுத்தும் திட்டத்தை கவனித்து வரும் மாவட்ட வனத்துறை அலுவலர் பிரகாஷ் வர்மா கூறுகையில், வேங்கைகளைக் கொண்டு வரும் திட்டத்திற்காக ரூ.38.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.26.5 கோடி அப்புறப்படுத்தும் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். “வேங்கைக்கான பகுதியை ஒதுக்கவும் அதற்கான தண்ணீர் மற்றும் சாலை ஏற்பாடுகளைச் சரிசெய்யவும் விலங்கை கையாளும் வன அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் என சுமார் 6 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என்கிறார் அவர்.
35 ச.கி.மீ வசிப்பிடத்திற்கு ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ஆப்ரிக்காவிலிருந்து வரும் 20 வேங்கைகளுக்கு தலா 5 ச.கி.மீ பரப்பளவிற்கு சிறிய வசிப்பிடங்கள் அமைக்கப்படும். வேங்கைகள் சிறப்பாக வாழ்வதை உறுதி செய்ய அனைத்து வகையிலான கவனமும் செலுத்தப்படுகிறது. ஆப்ரிக்க வேங்கை (அசினோனைஸ் ஜூபாதுஸ்) ஆப்ரிக்க வன உயிரினங்களில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக IUCN அறிக்கை தெரிவித்துள்ளது. அவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைவதை பிற அறிக்கைகளும் பதிவு செய்துள்ளன.
எளிதில் பாதிக்கப்படத்தக்க ஒரு வகையை, பூர்வ குடியில்லாத ஓர் இனத்தை, பொருந்தாத சூழலுக்குக் கொண்டு வருவதற்கு கிட்டதட்ட ரூ.40 கோடி செலவிடப்படுகிறது. பூர்வக்குடிகளை, ‘பாதிக்கப்படக்கூடிய பட்டியலிடப்பட்ட பழங்குடி சமூகங்களை’ வெளியேற்றி அவற்றுக்கு இடமளிக்க உள்ளனர். இதற்கு 'மனித – விலங்கு மோதல்' என்ற புதிய பொருளும் கொடுக்கப்படுகிறது.
“மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ முடியாது என்பதும், பாதுகாப்பிற்காக இந்த விலக்கப்பட்ட அணுகுமுறை உதவும் என்பதும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை” என்கிறார் பேராசிரியர் கப்ரா. பாதுகாப்பிற்காக அகற்றுதல் என்ற தலைப்பில் இந்தாண்டு ஜனவரியில் வெளியான கட்டுரையை அவர் இணைந்து எழுதியுள்ளார். வன உரிமைச் சட்டம் 2006ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தபிறகு பழங்குடியினருக்கான பாதுகாப்பு முறைகளை வகுத்த போதிலும், இந்தியா முழுவதும் புலிகள் காப்பகங்களில் இருந்து 14,500 குடும்பங்கள் எப்படி இடம் பெயர்ந்தன என்று அவர் கேட்கிறார். இந்த விரைவான இடமாற்றம் நடந்ததற்குக் காரணம், கிராமவாசிகளை ‘தானாக முன்வந்து’ இடமாற்றம் செய்ய பல்வேறு சட்ட மற்றும் நடைமுறை நடவடிக்கைகளைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பகடைகள் எப்போதும் நகர்த்தப்படுவதே காரணம் என்று அவர் வாதிடுகிறார்.
வெளியேறுவதற்கு ரூ.15 லட்சம் தர உள்ளதாக பக்சா குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். அவர்கள் முழுப் பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது வீடு கட்டுவதற்கான நிலத்தையும், பணத்தையும் பெறலாம். “3.7 லட்சம் ரூபாயில் வீடு கட்டிக் கொண்டு, எஞ்சியப் பணத்தை விவசாய நிலமாக எடுத்துக் கொள்வது முதல் வாய்ப்பு. ஆனால் அவர்கள் மின் இணைப்புகள், சாலை வசதிகள், கை பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கான செலவையும் அதிலிருந்து பிடித்தம் செய்கின்றனர்,” என்கிறார் ரகுநாத்.
பக்சாவிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராஹல் தாலுக்காவின் கோரஸ் அருகே பமுராவில் அவர்கள் புதிய வீடுகள் அமைப்பதற்கான இடம் அளிக்கப்பட்டுள்ளது. “எங்களிடம் காட்டப்பட்ட புதிய நிலம் தற்போதைய நிலத்துடன் ஒப்பிட்டால் தரமற்றது. பாறைகள் நிறைந்துள்ளதால் உற்பத்தியும் குறைவாக இருக்கும். நிலத்தை உற்பத்தி திறனுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு அதிலிருந்து எந்த வருவாயும் எங்களுக்கு கிடைக்காது,” என்கிறார் கல்லோ.
*****
வேங்கைத் திட்டம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஆப்ரிக்க வேங்கைகள் கொண்டு வருவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக ‘சூழலை பாதுகாப்போம்’ என்றக் காரணம் பட்டியலிட்டுள்ளது. டாக்டர் ரவி செல்லம் போன்ற வனவிலங்கு நிபுணர்களை எரிச்சலூட்டும் ஒரு விஷயம். “புல்வெளிப் பாதுகாப்பு என்ற பெயரில் வேங்கைகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இந்தியா ஏற்கனவே இந்த புல்வெளிகளில் காட்டுப்பூனை, புல்வாய், கானமயில் போன்ற கவர்ச்சியான விலங்குகளை ஆபத்தில் வைத்திருப்பதால் இது அர்த்தமற்றது. ஆப்பிரிக்காவிலிருந்து இவற்றைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?” என்று வனவிலங்கு உயிரியலாளர் மற்றும் மெட்டாஸ்ட்ரிங் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கேட்கிறார்.
மேலும், 15 ஆண்டுகளில் 36 வேங்கைகள் என்ற அரசின் இலக்கு சாத்தியமானதாகவோ, தன்னிறைவானதாகவோ இல்லை. அவை மரபணு வலிமையையும் கொண்டிருக்காது. இந்தியாவில் பல்லுயிர் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வலையமைப்பான பல்லுயிர் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் செல்லம், "இது ஒரு புகழ்பெற்ற மற்றும் விலையுயர்ந்த சஃபாரி பூங்காவாக இருக்கப் போகிறது" என்று கூறுகிறார்.
குனோ வனப் பகுதியின் 28 கிராமங்களைச் சேர்ந்த 1,650 குடும்பங்கள் 1999-ம் ஆண்டு குஜராத் சிங்கங்களுக்காக வெளியேற்றப்பட்ட துயர நினைவுகள், சஹாரியாக்களின் நிலைப்பாட்டை இன்னும் வலுப்படுத்துகிறது
வராத சிங்கங்களுக்காக குனோவிலிருந்து மங்கு ஆதிவாசி வெளியேறி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் இழப்பீடாக பெற்ற நிலமும் தரமற்றதாக உள்ளது. அவர் செல்லத்தின் கருத்தை ஒப்புக் கொள்கிறார். “வேங்கைகள் வெறுமனே காட்சிக்காகத் தான் வருகின்றன. குனோவில் இதுபோன்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளோம் என்று சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் செய்தியாக்கவே இதை செய்கின்றனர். சிறுத்தைகளை [காட்டிற்குள்] விட்டால் அவற்றில் சிலவற்றை ஏற்கனவே உள்ள விலங்குகள் கொன்றுவிடும், சில அங்குக் கட்டப்பட்டுள்ள வசிப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி இறந்துவிடும். நாம் பார்க்கலாம்.”
வெளிநாட்டு விலங்குகளால் நோய்க்கிருமிகள் வருவதற்கான ஆபத்தும் உள்ளது. “உள்ளே வரும் வேங்கைகளுக்கு ஏற்கனவே உள்ள விலங்கினங்களின் நோய்க்கிருமிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் விளையும் ஆபத்துகள் குறித்து திட்டம் முழுமையாகக் கருத்தில் கொள்ளவில்லை" என்று டாக்டர் கார்த்திகேயன் வாசுதேவன் கூறுகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் அமைந்துள்ள அழிந்து வரும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான ஆய்வகத்தின் பாதுகாப்பு உயிரியலாளர் மற்றும் தலைமை விஞ்ஞானி டாக்டர் கார்த்திகேயன், “ப்ரியான் மற்றும் பிற நோய்களுக்கு, பூர்வீக வனவிலங்குகளின் சாத்தியமான வெளிப்பாடு, சாத்தியமான எண்ணிக்கையை தக்கவைக்கத் தவறிவிடும்” என்று எச்சரிக்கிறார். நீண்ட காலமாக சுற்றுச்சூழலில் இருக்கக்கூடிய நோய்க்கிருமிகள் சிறுத்தைகளை பாதிக்கலாம்.”
கடந்த ஆண்டு நடக்கவிருந்த வேங்கையின் வருகை ஒரு தொழில்நுட்பக் காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பரவலான வதந்திகள் உள்ளன. வன உயிர் (பாதுகாப்பு) சட்டம் 1972 , 49B பிரிவில் யானைத் தந்தங்களின் வர்த்தகம் மற்றும் இறக்குமதி கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெளிவாகக் கூறுகிறது. அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்தின் (CITES) உடன்படிக்கையின் கீழ் தந்தத்தின் மீதானத் தடையை நீக்குவதை இந்தியா ஆதரிக்கும் வரை, எந்த சிறுத்தைகளையும் பரிசளிக்கத் தயாராக இல்லை என நமிபியா சொல்வதாக ஒரு வதந்தி நிலவுகிறது. எந்த ஒரு அரசு அதிகாரியும் இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ தயாராக இல்லை.
இதற்கிடையில், பாக்சா இடைநிறுத்தப்பட்டு செயலற்ற நிலையில் உள்ளது. பிசினை சேகரிக்கக் காட்டுக்குள் முன்பு அமைத்த இடத்திற்குச் செல்லும் வழியில், ஹரேத் ஆதிவாசி பேசுகையில், “நாங்கள் அரசைவிட பெரியவர்கள் அல்ல. அவர்கள் சொல்வதைத் தான் நாங்கள் செய்தாக வேண்டும். நாங்கள் வெளியேற விரும்பவில்லை, ஆனால் அவர்கள் எங்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தக்கூடும்,” என்கிறார்.
இக்கட்டுரைக்கான ஆராய்ச்சி மற்றும் மொழிப்பெயர்ப்பிற்கு பெருமளவு உதவிய சவுரப் சவுத்ரிக்கு செய்தியாளர் நன்றித் தெரிவிக்க விரும்புகிறார்.
தமிழில்: சவிதா