வெள்ளத்தால் சேதமடைந்த அனைத்து பொருட்களும், வங்கி ஆவணங்கள் உள்பட அனைத்தும் குப்பபுரம் ஏரிக்கரையில் காயவைக்கப்பட்டுள்ளன.

குட்டமங்கலம் கூட்டுறவு வங்கி, ஏரியில் இருந்து, கிட்டத்தட்ட 8 முதல் 10 அடி தொலைவில்தான் உள்ளது. இவ்வங்கி கேரளாவில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவில் இருந்து இன்னும் மீண்டுகொண்டிருக்கிறது. இந்தக்கிளையை வெள்ளத்தில் மூழ்கடித்த நீர்நிலைக்கு அருகே வங்கியின் ஆவணங்கள் குவியல் குவியலாக கிடக்கின்றன. கைனக்காரி பஞ்சாயத்தில் உள்ள அனைத்து இடங்களும் வெள்ளக்கடாகிக்கிடக்கிறது. பொருட்களை காயவைப்பதற்கு வேறு எந்த இடமும் இல்லை. வங்கியில் உள்ள ஆவணங்களைத்தவிர, மற்ற பேரேடுகள், கோப்புகள், பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

நாம் அவற்றை சுற்றி பார்த்தபோது, வங்கியின் அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறோம். கணினிகள் வைக்கப்பட்டுள்ள இடமும் காய வைக்கப்பட்டுக்கொண்டும், சுத்தப்படுத்தப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. அதுவும் உறுதியளிப்பதாக இல்லை. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தாழ்வான குட்டநாட் பகுதி கடல் மட்டத்தில் இருந்து பெரும்பாலும் கீழாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் மழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளில் இருந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னதாகவோ, பின்னரோ திரும்பினர். அதில் பெரும்பாலானோரின் வீடுகள் இன்னும் வெள்ளத்தில்தான் மூழ்கியுள்ளது.

“தண்ணீர் எங்கள் கட்டிடத்தின் வெளிக்கதவு வரை வந்துவிட்டது“ என்று வங்கியின் காசாளர் கிரிஷ்குமார். H. கூறுகிறார். மேலும் அனைத்தையும் துடைத்தெறிந்து நீரில் மூழ்கசெய்துவிட்டது என்றும் கூறுகிறார். வங்கியின் பெட்டகம் தாழ்வான இடத்தில் அதாவது, அடித்தளத்தின் அரைப்பகுதி அளவில் உள்ளது. அதனால் அனைத்தும் மோசமாகிவிட்டது. பெட்டகத்தின் கதவுகள் முழுமையாக திறக்கமுடியாத அளவிற்கு மாட்டிக்கொண்டுவிட்டது. நல்லவேளையாக பாதியளவு திறந்து சிக்குண்டிருந்தது. உள்புறத்தில், இரண்டு, பழைய மாடல், வார்ப்பிரும்பாலான வைப்பறைகளில் துரு பிடித்திருந்தது. தண்ணீரில் மூழ்கிய அடையாளங்கள் தெரியுமளவு அரித்திருந்தது.

கைனக்கரி கிராமத்தில் உள்ள வாய்க்கால்களின் குறுகலான கரைகளில் மெல்ல, மெல்ல நடந்து, மக்கள் தங்களை உடைமைகளை காய வைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் கவனித்தோம். வீட்டு உபயோகப்பொருட்கள், மெத்தைகள், குளிர்சாதன பெட்டிகள், பள்ளி புத்தகங்கள், குழந்தைகளின் வீட்டுபாட பொருட்கள், போர்வைகள், துணிகள் என்று அனைத்தையும் உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஒரு பைபிள், இங்கு ஒரு பகவத் கீதை, ஒரு விவசாய கடன் அட்டை கூட அதில் ஆங்காங்கே காயவைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த குழப்பங்கள் அனைத்திலிருந்தும் இம்மக்கள் மீளக்கூடியவர்கள். ஒவ்வொருவரும் இந்த குழப்பங்களிலிருந்து மீண்டு, இயல்புவாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். வங்கிக்குள், முழுவதும் சிதறிக்கிடக்கும் பொருட்களை ஒரு ஒழுங்கில் அடுக்கி வைப்பதற்கு பல மணி நேரங்கள் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். அவர்கள் பெட்டகத்திலிருந்த தண்ணீரை வெளியேற்றி, சுத்தம் செய்து, பல பேரேடுகள் மற்றும் ஆவணங்களை காயவைத்து, அலுவலகத்தை மீண்டும் ஒழுங்குபடுத்தி வைத்துள்ளனர். இந்த சூழலில் அவர்களால் முடிந்தளவு சிறப்பாக வேலை செய்துள்ளனர். இது ஒரு கடுமையான போராட்டம். பெரும்பாலான கோப்புகள் மற்றும் பேரேடுகளில் துர்நாற்றம் வீசுகிறது. அவை பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது.

வெள்ள காலகட்டம் முழுவதுமே, வங்கியின் ஊழியர்கள் அவர்களால் முடிந்தளவு மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 5.5 கிலோ தங்கம், சிறிதளவு பணம், பல்வேறு சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை ஆலப்புழா நகரில் உள்ள அவர்கள் வங்கியில் தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று பாதுகாப்பாக வைத்தனர். இத்தகவல்களை வங்கியின் தலைவர் P.G. சணல்குமார் என்னுடன் பணிபுரியும் (பாரியின் நல்கையைப் பெற்றவர்) சசிக்குமார். V.யிடம் தெரிவித்தார். போனில் உள்ள அவர்களின் கணக்குகள் மற்றும் மிக முக்கியமான ஆவணங்கள் பெங்களூருவில் உள்ள சர்வரில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கேரளாவில் மீண்டுமொருமுறை கடும் மழை பெய்யக்கூடிய அச்சுறுத்தல் உள்ள நிலையில் இவ்வாறு முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வது திருப்தியாக உள்ளது.

Girish Kumar H, the cashier, standing next to records full of fungus and mould
PHOTO • P. Sainath

வெள்ளத்திற்கு பின்னர், குட்டமங்கலம் கூட்டுறவு வங்கியை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காசாளர் கிரிஷ்குமார்

Documents and books stacked up on shelves
PHOTO • P. Sainath

பெரிய, பெரிய திறந்த இரும்பு அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த, எண்ணிலடங்கா பேரேடுகள், கோப்புகள் அனைத்தும் இன்னும் காயவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன

Two cast-iron safes bear the rust, corrosion and marks wrought by the waters that engulfed them.
PHOTO • P. Sainath

வங்கி பெட்டகத்தில் உள்ள இரண்டு பாதுகாப்பு இரும்பு அறைகளும் எத்தனை நாள் நீரில் முழ்கிகிடந்தன என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுமளவு சேதமடைந்துள்ளன

Fungus and mould on records
PHOTO • P. Sainath

பழைய பேரேடுகளில் பூஞ்சைகள் படர்ந்துள்ளன

Documents and books stacked in a cupboard
PHOTO • P. Sainath
Documents and books stacked on a shelf
PHOTO • P. Sainath
Documents and books drying on the banks of the river outside the bank
PHOTO • P. Sainath

இரும்பு பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், கோப்புகள், புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள், அலமாரிகளின் மேற்புறத்தில் இருந்த அனைத்து ஆவணங்களும் வங்கிக்கு வெளியே காய வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அது ஏரியில் இருந்து சில அடிகள் தொலைவே இருக்கும்

People's belongings lining the banks
PHOTO • P. Sainath

கைனக்கரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது படகை ஓட்டிச்செல்கிறார். கரையில் வெள்ளத்தால் பழுதடைந்த வீட்டு உபயோகப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வங்கியிலிருந்து இது மிகத்தொலைவில் இல்லை.

Books, including a Kisan Credit Card
PHOTO • P. Sainath

ஒரு விவசாய கடன் அட்டை, அருகில் பைபிள், பகவத்கீதை ஆகிய அனைத்தும் வெயிலில் காய வைக்கப்பட்டுள்ளன

People's belongings lining the banks
PHOTO • P. Sainath

வாய்க்கால் வழியாக ஏரியில் தனது படகை ஓட்டிச்செல்லும், கடல் மட்டத்திற்கு கீழே உள்ள இந்தப்பகுதியில் வசிக்கும் இன்னொருவர், பெருமளவில் குவித்து வைக்கப்பட்டுள்ள, வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டு உபயோகபொருட்கள் குவியலை பார்த்துக்கொண்டே செல்கிறார்

தமிழில்: பிரியதர்சினி. R.

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

کے ذریعہ دیگر اسٹوریز Priyadarshini R.