சாலையில் நான்கு நாட்கள் கழித்து 750 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, டெம்போஸ் மற்றும் ஜீப்புகளின் கூண்டுவண்டி, ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு குருத்வாராவில் மதிய உணவிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதியன்று மதியம் குளிர்ச்சியாக இருக்கிறது. பயணிகள் - மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் - இரவு நேர பயணத்திற்குப் பிறகு சோர்வாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் குருத்வாராவின் சமுதாய சமையலறையின் உணவுக்காகக் காத்திருக்கும்போது, சவிதா குஞ்சலின் பாடல்கள் அவர்களின் மனநிலையை உற்சாகப்படுத்துக்கின்றது. கம்கார் ச்யா கஷ்டனா நடவ்லா ஜகலா, ஜீவன் நஹி பொட்டாலா, கப்டா நஹி நேசெய்லா ('தொழிலாளர்களின் உழைப்பு உலகை அழகாக ஆக்குகிறது, ஆனால் அவர்களுக்கு சாப்பிட ரொட்டியும் இல்லை’; அணிய ஆடைகளும் இல்லை).
“நான் இங்கு பாட வந்திருக்கிறேன்”, அடர் சிவப்பு சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் உடையணிந்த 16 வயதான பில் ஆதிவாசி பாடகர் கூறுகிறார். "விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். எங்கள் நிலை குறித்து நான் உலகுக்கு சொல்ல விரும்புகிறேன், ”என்கிறார் நாசிக் மாவட்டம் சந்த்வாட் தாலுகாவில் உள்ள சந்த்வாட் கிராமத்தைச் சேர்ந்த சவிதா. டெல்லியின் எல்லையில் நடக்கும் போராட்டங்களில் சேர அவர் டிசம்பர் 21ம் தேதி விவசாயிகளின் வாகனமான ’ஜாதா’வில் நாசிக்கிலிருந்து புறப்பட்டார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடந்தி வருகின்றனர், முதலில் 2020ம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் செப்டம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, அம்மாதம் 20 ஆம் தேதிக்குள் சட்டங்களாக மாறியன.
தனது கிராமத்தில், சவிதா வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்கிறார், நாள் ஒன்றுக்கு 150-200 ரூபாய் சம்பாதிக்கிறார். "வேலை இருந்தால் நான் வயலுக்கு செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். கோவிட் -19 ஊரடங்கின் போது, அவர் சந்த்வாட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிட்டார். “ஊரடங்கு காலத்தில் மிகவும் குறைந்த வேலையே இருந்தது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைகளை எடுத்துக்கொண்டு, முடிந்த அளவு சம்பாதித்தேன்,”என்று அவர் கூறுகிறார். அவர் இந்த ஆண்டு (2020) உயர்நிலைப் பள்ளியை முடித்தார், ஆனால், தொற்றுக்காலம் காரணமாக கல்லூரிப்படிப்பைத் தொடங்க முடியவில்லை.
சவிதா சந்த்வாட் சுற்றி நடக்கும் பொதுக் கூட்டங்களில், தனது குழுவுடன் அடிக்கடி பாடுவார், அக்குழுவில் அவரது மூத்த சகோதரர் சந்தீப் மற்றும் அவரது நண்பர்கள் கோமல், அர்ச்சனா மற்றும் சப்னா ஆகியோர் அடங்குவர். அவருடைய எல்லா பாடல்களையும் அவரே எழுதுகிறார், கொஞ்சம் தன் சகோதரனின் உதவியையும் நாடுவார். 24 வயதான சந்தீப் ஒரு விவசாயத் தொழிலாளி, ஒரு டிராக்டரை உழவு முதல் நிலம் வரை ஓட்டுகிறார். “இது கடின உழைப்பு”, என்று சவிதா கூறுகிறார். மேலும், அவரது வருமானம் நிலத்தின் அளவு மற்றும் அதில் வேலை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்தது. உதாரணமாக, 6-7 ஏக்கர் நிலத்தை உழுவதற்கு அவருக்கு இரவு, பகல், பாராமல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிறது, இதற்காக அவர் சுமார் ரூ. 4,000 ஈட்டுவார்.
தனது சகோதரர் செய்யும் கடுமையான வேலையைப் பார்த்துதான் அவருக்கு பாடல்களை உருவாக்கத் தூண்டுகிறது. “விவசாயிகளின் அன்றாட பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நான் பாடுகிறேன். நாளுக்கு நாள், அவர்கள் வயல்களில் கடின உழைப்பைச் செய்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் பயிரிடும் தானியங்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இதனால்தான் விவசாயிகள் பின்தங்கியுள்ளனர். நம் நாட்டில் ஏழைகள் ஏழைகளாகி வருகிறார்கள், பணக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.”.
மூன்று புதிய சட்டங்கள் மேலும் அழிவை ஏற்படுத்தும் என்று போராடும் விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டங்கள்:
விவசாயிகள் உற்பத்தி வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020
;
விலை உறுதி மற்றும் வயல் சேவைகள் மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தச் சட்டம். 2020
; மற்றும்
அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020.
இந்திய அரசியலமைப்பின் 32வது பிரிவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அனைத்து குடிமக்களுக்கும்
சட்டரீதியான உதவிக்கான உரிமையை முடக்குவதால்
, இவை ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும் என்று இந்த சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
சவிதாவின் குடும்பத்திற்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அவை வாழ்வாதார விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். அவரது தந்தை, ஹனுமந்த் குஞ்சல், 45, மற்றும் தாய், டாய் குஞ்சல், 40, இருவரும் விவசாயிகள். அவர்கள் கோதுமை, கம்பு, அரிசி மற்றும் வெங்காயத்தை வளர்கின்றனர். 5ஆம் வகுப்பில் படிக்கும் சவிதாவின் தங்கை அனிதா, தங்கள் நிலத்தை பயிரிட தாய்க்கு உதவுகிறார். அவரது மற்றொரு சகோதரர் சச்சின், 18, சந்த்வாட்டில் பொறியியல் படிக்கிறார். சந்தீப்பைப் போலவே, அவர் நிலத்தை உழுது உழவு செய்கிறார், ஆனால் பகுதிநேரமாகச் செய்கிறார்.
சவிதாவின் 66 வயதான பாட்டி (மேல் அட்டைப் படத்தில் மிகவும் இடதுப்புறப்பாக இருப்பவர்) கலேபாய் குஞ்சல், அவருடன் ’ஜாதா வாகனத்தில் இருக்கிறார். கலேபாய்க்கு 16 வயதாக இருந்தபோது, அவர் சந்த்வாட்டில் அகில இந்திய கிசான் சபையின் முதல் பெண் தலைவரானார். “என் ஆஜி (பாட்டி) என்னை மேலும் பாட ஊக்குவிக்கிறார். அஜோபா (தாத்தா) அவருக்குப் பாடக் கற்றுக் கொடுத்தார், பின்னர் அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். என் சொந்த பாடல்களை எழுத வேண்டும் என்று அவர் கூறுகிறார்,” என்கிறார் சவிதா.
கவிஞர் அன்னபாவ் சாத்தே மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரமேஷ் கைய்சோர் ஆகியோரும் சவிதாவுக்கு தூண்டுக்கோலாக இருக்கின்றனர். “நான் இசை எழுதும் போது அண்ணாபாவைப் பற்றி நினைப்பேன். அவரது பாடல், மாட் குட்குட் கர் ரெஹ்னா, செஹ்னே சே ஜுலம் பத்தா ஹை (‘நீங்கள் எவ்வளவு அமைதியாக கஷ்டப்படுகிறீர்களோ, நீங்கள் அவ்வளவு அதிகமாக தாங்கிக்கொள்வீர்கள்’), எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். அவர் ஒரு புரட்சியாளர். அவரைப் போலவே, என் சகோதரிகளும் தங்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாடு பெண்களை மதிக்கவில்லை. நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறோம், யாரும் கண்டுக்கொள்வதில்லை. அவரது பாடல்களைப் பாடுவதன் மூலம், பெண்கள் போராட ஊக்குவிக்க விரும்புகிறேன், ஏனென்றால் அப்போதுதான் எங்கள் சுதந்திரம் கிடைக்கும்.”
“நான் பாடும்போது, என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருப்பதைப் போல உணர்கிறேன். நான் டெல்லிக்கு செல்லும் வழியெல்லாம் பாடுவேன்,”என்று அந்த பாடகர் கூட்டத்தை வழிநடத்த அவருக்காக டெம்போவில் காத்திருந்த 20 விவசாயிகள் நோக்கி நடந்தவாறே அவர் கூறுகிறார்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்