அவர்களும் விவசாயிகள் தான். டெல்லியில் போராட கடலென திரண்டுள்ள விவசாயிகளில் அவர்களும் அடங்குவர். ஆனால் அவர்களின் நெஞ்சில் பதக்கங்களை வரிசையாக அணிந்துள்ளனர். அவர்கள் முன்னாள் இராணுவ வீரர்கள். 1965, 1971 காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போர்களிலும், 1980களில் இலங்கையிலும் பணி புரிந்தவர்கள். போராடும் விவசாயிகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள், காலிஸ்தானிஸ் என்று அரசும், ஊடகத்தின் சக்தி வாய்ந்த பிரிவினரும் சொல்லி வருவது அவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் லூதியானா மாவட்டம் கில் கிராமத்திலிருந்து வந்துள்ள பிரிகேடியர் எஸ்.எஸ். கில் (ஓய்வு) என்னிடம் பேசுகையில், “அமைதியாகப் போராடும் விவசாயிகளிடம் அரசு அடக்குமுறைகளைக் கையாள்வது துயரமானது. அவர்கள் டெல்லி செல்ல விரும்பினார்கள், அரசு அவர்கள் தடுத்து நிறுத்தியது தவறானது, அராஜகமானது. தடுப்புகள், சாலைகளை தோண்டுதல், தடியடி பிரயோகம், பீரங்கிகளைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சுவது என விவசாயிகள் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது. எதற்காக? ஏன்? இப்படி செய்வதற்கு என்ன காரணம்? விவசாயிகளின் உறுதியால் இதுபோன்ற அனைத்து தடைகளும் உடைபட்டுள்ளன.”
பணியில் இருந்தபோது 13 பதக்கங்களை வென்ற 72 வயது முன்னாள் இராணுவ வீரர் 16 பேர் கொண்ட குடும்பத்திலிருந்து வந்துள்ளார். அவருக்கு என கில்லில் சில ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. 1971 போர், பிற இராணுவ நடவடிக்கைகள், 1990களில் பஞ்சாபில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் சேவையாற்றி உள்ளார்.
“இச்சட்டங்களைக் குறித்து விவசாயிகளிடம் எவ்வித ஆலோசனையும், கருத்தும் கேட்கவில்லை,” என்கிறார் பிரிக். கில். “டெல்லியின் வாயில்களில் தற்போது நடப்பது உலகின் மிகப்பெரும் புரட்சி. ஏன் அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற மறுக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு 2020 ஜூன் 5ஆம் தேதி அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது. செப்டம்பர் 14ஆம் தேதி இவற்றை மசோதாக்களாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. அதே மாதம் 20 ஆம் தேதி சட்டமாக இயற்றியது. அந்த மூன்று சட்டங்களும் பின்வருமாறு: விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 .கார்ப்ரேட்டுகளின் லாபத்திற்காக தங்களின் வாழ்வாதாரத்தை தியாகம் செய்வதற்கு இச்சட்டம் வழிவகை செய்வதாக விவசாயிகள் கருதுகின்றனர். அனைத்து குடிமக்களுக்கும் சட்ட பாதுகாப்பு உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 32 வது பிரிவினை இச்சட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இச்சட்டத்தை விமர்சிக்கின்றனர்.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழு, மாநில அளவிலான கொள்முதல் மற்றும் பல அம்சங்களை புதிய சட்டம் மறுக்கிறது. அதேநேரம் வேளாண் துறையில் கார்ப்ரேட்டுகளுக்கான இடத்தை விரிவுப்படுத்துகிறது. மேலும் ஏற்கனவே குறைக்கப்பட்ட விவசாயிகளின் பேரம் பேசும் அதிகாரத்தையும் பறிக்கிறது.
“அரசின் இந்த தவறான முடிவுகளால் அனைத்தும் கார்ப்ரேட்டுகளின் கைவசம் செல்கிறது,” என்கிறார் பஞ்சாபின் லூதியானவைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் ஜெகதிஷ் சிங் பிரார் (ஓய்வு).
அரசின் இந்த முடிவும், ஊடகங்களின் அணுகுமுறையும் முன்னாள் இராணுவ வீரர்களை ஆழமாக பாதித்துள்ளது.
“இந்நாட்டிற்காக நாங்கள் போரிட்டபோது இந்த தொழிலதிபர்கள் அங்கில்லை,” என்கிறார் இராணுவப் பணியில் 10 பதக்கங்களை வென்ற லெப். கர்னல் பிரார். “ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கமோ, பாரதிய ஜனதா கட்சியோ யாரும் [அப்போர்களில்] பங்கு வகிக்கவில்லை.” 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பங்கேற்ற இந்த 75 வயதாகும் முன்னாள் இராணுவ வீரரின் 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு மோகா மாவட்டம் கோட்டி கிராமத்தில் சொந்தமாக 11 ஏக்கர் நிலம் உள்ளது.
சிங்கு போராட்ட களத்தில் விவசாயத்தில் ஈடுபடாத பல ஒய்வுப் பெற்ற அலுவலர்களும் உள்ளனர். ஆனால் விவசாயிகளுடன் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொள்கின்றனர்.
“போராடும் விவசாயிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், நாங்கள் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்,” என்கிறார் லூதியானா மாவட்டம் முல்லான்பூர் தக்காவில் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள கர்னல் பகவந்த் எஸ். தத்லா (ஓய்வு). “இந்த விவசாயிகளால் தான் 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு மிகப் பெரிய போர்களில் வென்றோம்,” என்கிறார் பதக்கங்களை வென்ற 78 வயது தத்லா. இராணுவ சேவையில் சிறப்பாக செயல்பட்டு ஹவில்தாரிலிருந்து கர்னலுக்கு முன்னேறியவர்.
“நீங்கள் இளைஞர்கள்,” என்கிறார் லெப். கர்னல் பிரார். “இந்தியா அப்போர்களில் வென்றதற்குக் காரணம் விவசாயிகள் எங்களுக்கு செய்த உதவி என்பது உங்களுக்கு எப்படி தெரியும்! 1965ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் அப்போது மிகவும் அழகான, வேகமான, உலகிலேயே வேறெங்குமில்லாத பட்டான் டாங்கிகள் இருந்தன. நம்மிடம் எதுவுமில்லை; எங்களிடம் ஷூக்கள் கூட இல்லை. மேலும் இந்திய இராணுவத்திடம் வெடிப்பொருட்களை ஏற்றிச் செல்ல லாரிகளோ, படகுகளோ கிடையாது. உண்மையை சொல்லப் போனால், நம்மிடம் பாகிஸ்தானுக்கு எதிராக எல்லையை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு போதிய சக்தி கிடையாது.”
“இதுபோன்ற சூழலில் தான் ‘இதுபற்றி கவலைப்படாதீர்கள் முன்னேறிச் செல்லுங்கள், நாங்கள் உணவு அளிக்கிறோம், உங்களது வெடிப்பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறோம்,’ என்று பஞ்சாப் மக்களும், விவசாயிகளும் எங்களிடம் சொன்னார்கள்,” என்கிறார் அவர். பஞ்சாபின் அனைத்து லாரிகளும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வெடிப்பொருட்களை சுமந்து கொண்டுவந்து உதவின. இந்திய இராணுவமும் தாக்குபிடித்து வென்றது. இதே நிலைதான் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரான கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் தற்போதைய வங்கதேசத்திற்கும். உள்ளூர் மக்கள் உதவி செய்யாவிட்டால் வெல்வது கடினமாகி இருக்கும். “பிரிவினையின்போது வாரன்ட் அலுவலர் (ஓய்வு) குர்திக் சிங் வீர்க் குடும்பம் மல்யுத்த நகரம் என அறியப்படும் பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்திற்கு வந்தது. 18 பேர் கொண்ட அவரது மிகப்பெரும் குடும்பத்திற்கு அம்மாவட்டத்தின் புரான்பூர் கிராமத்தில் சொந்தமாக 17 ஏக்கர் நிலம் இருந்தது. அவரது தாத்தா மற்றும் தந்தை என இருவரும் (ஆங்கிலேயர் ஆட்சியின்போது) காவல்துறை துணை கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள். அவரது சகோதரர் ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர். வீர்க்கும் இந்திய விமானப் படையில் பணியாற்றியவர்.
“விவசாயிகள் எனும் நம் வேரை ஒருபோதும் நாங்கள் மறப்பதில்லை,” என்கிறார் முன்னாள் ஐஏஎஃப் அலுவலர். எல்லைக்கு மறுபுறம் தாங்களும் விவசாயிகளாக இருந்தவர்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். “இங்கு 70 ஆண்டுகள் கழித்து - இந்திய அரசு எங்களை மீண்டும் நிலங்களை இழக்கச் செய்யும் விதமாக [இதுபோன்ற] சட்டங்களை இயற்றியுள்ளது. தனது சொந்த லாபத்திற்காக மனித விழுமியங்களை பற்றி சிந்திக்காமல் வணிக நோக்கத்தில் நடைபெற்றுள்ளது.”
“நாங்கள் போரில் பங்கேற்றபோது, எங்கள் பெற்றோர் நிலத்தில் இருந்தார்கள், விவசாயம் செய்தார்கள். இப்போது எங்கள் பிள்ளைகள் எல்லைகளில் இருக்கிறார்கள், நாங்கள் விவசாயம் செய்கிறோம்,” என்கிறார் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் ஜஸ்விந்தர் சிங் கர்ச்சா. 1971ஆம் ஆண்டு போரில் பங்கேற்று தனது பெயருக்கு ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார். இப்போது 70களில் உள்ள கர்ச்சா பொறியாளராக இருந்தாலும் தனது முதல் அடையாளமாக விவசாயி என கருதுகிறார். ஜஸ்சோவால் கிராமத்தில் தனது மகனின் உதவியோடு விவசாயம் செய்கிறார்.
“நம் எல்லைக்குள் சீனாவோ, பாகிஸ்தானோ வந்துவிடும் என ஒவ்வொரு நாளும் அரசு கூக்குரலிடுகிறது. அந்த குண்டுகளை தாங்கப் போவது யார்? அமிஷ் ஷா அல்லது மோடி யார் செய்வார்களா? ஒருபோதும் இல்லை. நம் பிள்ளைகள் தான் அவற்றைச் சந்திக்க வேண்டும்,” என்கிறார் லெப். கர்னல் பிரார்.
“நான் நரேந்திர மோடியை ஆதரித்து வந்தேன்,” என்கிறார் லெப். கர்னல் எஸ்.எஸ். சோஹி, “இந்த முடிவு முற்றிலும் தவறானது. இந்த அரசு ஏற்கனவே விவசாயத்தை அழித்து வருகிறது” என்று மேலும் சொல்கிறார். பஞ்சாபில் உள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் துயர்துடைப்புப் பிரிவின் தலைவராக இருக்கும் சோஹி மறைந்த வீரர்களின் மனைவிகளுக்கு உதவுவதற்கும், முன்னாள் இராணுவ வீரர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நலச்சங்கத்தை நடத்தி வருகிறார்.
லெப். கர்னல் சோஹி 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு போர்களில் சண்டையிட்டவர். அவசர நிலை மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகளிடம் இருந்து ஒன்று என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளார். ஹரியானாவின் கர்னல் மாவட்டம் நிலோகெரி கிராமத்தில் அவரது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்குச் சொந்தமாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் ஓய்வு பெறுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன் அவர் விற்றுள்ளார்.
“கார்ப்பரேட்டுகளிடம் அரசியல்வாதிகள் அதிகம் பெற்றுவிட்டனர். அப்பணத்தை கொண்டு தேர்தலிலும் போட்டியிட்டனர். இதுபோன்ற சட்டங்களின் மூலம் அவர்களுக்கு இவர்கள் திருப்பிச் செலுத்த விரும்புகின்றனர்,” என்று அவர் நம்புகிறார். இதில் சோகம் என்னவென்றால், “இந்தியாவின் முக்கிய ஆட்சியாளர்கள் தொழிலதிபர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தொழிலதிபர்களின் குடும்பங்கள் பற்றி தான் கவலை கொள்கின்றனர்.” என்கிறார் அவர்.
“தங்களுக்கு எதிராக யாரும் பேசுவதை கார்ப்ப்ரேட்டுகள் விரும்புவதில்லை,” என்கிறார் லெப். கர்னல் பிரார். “விவசாயிகளின் நலனுக்காகவே இச்சட்டங்கள் என்று சொல்லி பிரதமர் உங்களை ஏமாற்றுகிறார். இதற்கு பீகாரை நான் உதாரணமாக சொல்வேன். மண்டி முறையை அந்த ஏழை மாநிலம் 14 ஆண்டுகளுக்கு முன் [பயங்கரமான விளைவுகளுடன்] நீக்கியது.” “கிராமத்தில் உள்ள எனது 11 ஏக்கர் நிலத்தை என் சகோதரிடம் விவசாயித்திற்கு கொடுத்துள்ளேன். என்னால் இந்த வயதில் விவசாயம் செய்ய முடியாது” அவர் மேலும் சொல்கிறார்.
“தங்கள் சொந்த மாநிலத்தில் 10 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள் பஞ்சாபில் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிடம் விவசாய கூலி வேலை செய்வதற்கு வருகின்றனர்,” எனக் குறிப்பிடுகிறார் லெப். கர்னல் பிரார். “சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் பிச்சை எடுப்பதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா? அவர்களை நிலமற்றவர்களாகச் செய்கின்றனர்,” இவையெல்லாம் இச்சட்டங்களின் விளைவுகள் என்கிறார் அவர்.
லூதியானாவில் ஷாஹித் பகத் சிங் படைப்பாற்றல் மையம், அனைத்திந்திய கல்வி உரிமை கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜக்மோகன் சிங்கிடம் இப்படி நடக்குமா என்று நான் கேட்டேன். “ஆம், இச்சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும். கார்ப்பரேட்டுகளின் நலன் என்று வரும்போதெல்லாம் விவசாயிகளை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் பிரேசில், அங்கு 1980களில் நில பறிப்பு போன்றவற்றிற்கு எதிராக பெருந்திரள் போராட்டத்தை தொடங்கினர்,” என்று அவர் என்னிடம் சொன்னார்.
“எங்களின் போராட்டத்தில் பிளவு ஏற்படுத்த போலி விவசாயிகளைக் கொண்டு இச்சட்டங்களை ஆதரவு தெரிவிப்பது போல அரசு சித்தரிக்கிறது. இதற்கு எந்த விவசாயியும் ஆதரவு அளிப்பார்களா எனத் தெரியவில்லை,” என்கிறார் பிரிக். கில்.
போராளிகளைப் பிரிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன, என எச்சரிக்கிறார் கர்னல் கர்ச்சா, “சமயத்தின் வழியில் நீ ஒரு சீக்கியன், அல்லது இஸ்லாமியன், அல்லது இந்து என்ற பெயரில். இல்லாவிட்டால், பிராந்தியத்தின் வழியில் நீ பஞ்சாபி, ஹரியானி அல்லது பீகாரி என.”
லெப். கர்னல் பிரார் சொல்கிறார், “பஞ்சாப், ஹரியானாவிற்கு இடையே இருந்த பழைய தண்ணீர் பிரச்சனையைக் கொண்டு இரு மாநில மக்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்தவும் அரசு முயற்சிக்கிறது. நிலமே இல்லாதபோது, இங்கு நீரினால் என்ன பயன் என இரு மாநில மக்களும் புரிந்துகொண்டுள்ளனர்.”
முன்னாள் இராணுவ வீரர்களும், போர் வீரர்களும் நாட்டைப் பாதுகாப்பதில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். அரசு தொடர்ந்து அக்கறையின்றி, பிடிவாத போக்கை கடைப்பிடித்தால், முப்படைகளின் முதன்மை கமாண்டரான குடியரசுத் தலைவரிடம் பதக்கங்களை திருப்பி அளிக்க அவர்கள் இப்போது திட்டமிட்டுள்ளனர்.
“இச்சட்டங்களை திரும்பப் பெற்று விவசாயிகளை அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவார்கள், இதற்கான நல்லுணர்வை அரசுப் பெற வேண்டும் என்பதே என் ஆசையும், வேண்டுதலும்,” என்கிறார் பிரிக். கில். “இதுவே இதற்கு தீர்வு.”
தமிழில்: சவிதா