அதிகாலை 4 மணிக்கும் கூட, மக்கத்தில் (தறி) அந்த பெண் வேலை செய்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அவருக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு தறியில் அவரின் குழந்தைகள் நெய்து கொண்டிருப்பார்கள். “மின்சாரம் வருவதைப் பொறுத்தே இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே புன்னகைக்கிறார் அவர். “சரியான நேரத்துக்குள் மூன்று சேலைகளை நெய்து முடிப்பதற்கு நாங்கள் பல மணிநேரம் வேலை செய்யவேண்டும். இங்கு எவ்வளவு இருட்டாக இருக்கிறதென்று பாருங்கள்” என்றார்.
”இங்கு” என்று அவர் சுட்டிக்காட்டிய இடம் ஒன்பதுக்கு எட்டு அடி அறைதான். அதில் இரண்டு தறிகளும், கிருஷ்ணம்மாவும், அவரது இரு குழந்தைகளும் வாழ்கிறார்கள். பெரும்பகுதி இடத்தை தறிகளே எடுத்துக்கொள்கின்றன. வணிகர்கள் வந்து அந்த தறிகளை அமைத்துவிட்டு, சேலை நெய்வதற்கான நூலைக் கொடுத்து விடுகிறார்கள். கிருஷ்ணம்மாவும் அவரது மகள் அமிதாவும் நெய்து தரும் சேலைகளை அவர்கள் எப்போதும் உடுத்தமுடியாது. ஒரு சேலைக்கு அவர்களுக்கு 600 ரூபாய் கிடைத்தது. கிருஷ்ணம்மாவின் மகனான புலண்ணாவும் வேலை செய்வதால், “இருவரும் பணிபுரிகிறார்கள். எனினும் சொற்ப அளவிலான வேலையே கிடைக்கிறது.” யூகிக்க முடியாத, மின்சாரம் இல்லாத நிலை என அனைத்து கடினமான நிலையிலும் இதை அவர்கள் செய்துவருகிறார்கள். இதுதான் அனந்தபூர் மாவட்டத்தில் சுப்பராயணபள்ளி கிராமத்தில் அவர்களின் வாழ்க்கை.
”அதனால், மின்சாரம் வரும்போது எந்த நேரம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலை செய்வோம்’’, என்றார் கிருஷ்ணம்மா. குழந்தைகளுக்கான உதவியைச் செய்துகொண்டே அவருடைய வேலைகளை செய்யவேண்டியிருந்தது. சுத்தம் செய்வது, சமைப்பது போன்ற வேலைகளையும் அவர் செய்யவேண்டியிருந்தது. சில சமயங்களில் அவர்களுக்கு மற்ற வேலையையும் கிடைத்தது. எனினும் அவருக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய்தான் கிடைத்தது. ”நான் சிறு பெண்ணாக இருந்தபோதே நெய்வதற்குக் கற்றுக்கொண்டேன்” என்றார் அவர். இதற்கிடையில், அதிக நேரம் நின்று பணியாற்றியதாலும், குழந்தைகளுக்கு வேலைகளை எளிதாக மாற்றியதாலும் அவருக்கு கால்கள் வீங்கியிருந்தன. இரு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவிட்டார்கள். தாயுடன் சேர்ந்து உழைப்பதற்காக புலண்ணா 14 வயதிலும், அமிதா 15 வயதிலும் கல்வியை விட்டிருக்கிறார்கள்.. அமிதாவுக்கு பள்ளிகூடம் போக வேண்டும் என்று பெருவிருப்பம் ஆனால் அம்மாவின் மீதுள்ள பாசத்தின் காரணமாக வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.
கடந்த 14 வருடங்களில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட 100,000 பெண்களில் கிருஷ்ணம்மாவும் ஒருவர். கணவரை இழந்தவர். விவசாயிகள் தற்கொலைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனந்தபூரும் ஒன்று. 2005-இல் அவரது கணவர் நேத்தி ஸ்ரீநிவாசலு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 60000 ரூபாய் செலவில் அவரது மூன்றரை ஏக்கர் நிலத்தில் அவர் அமைத்த நான்கு போர்வெல்கள் பொய்த்ததால் அந்த முடிவைத் தேடிக்கொண்டார். “கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து என்னைக் கடனைத் திருப்பித்தரும்படி கேட்டார்கள்” என்றார் கிருஷ்ணம்மா. “என்னால் கடனைத் திருப்பித் தரமுடியவில்லை. பணம் எங்கிருக்கிறது?” அரசிடமிருந்து எந்தப் பணமும் கிடைக்கவில்லை. “அவரின் இறப்புக்கு எந்த இழப்பீடும் எனக்குக் கிடைக்கவில்லை” என்றார். கிருஷ்ணம்மாவுக்கு விவசாயத்தில் நம்பிக்கையில்லை. “நிறைய இழந்துவிட்டோம். நீண்ட நாட்களாகவே நிறைய இழந்துவிட்டோம்” என்றார். கவலைப்படுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. குடும்பத்துக்கு உணவளிப்பதற்காக அவர் உழைத்துக்கொண்டே இருக்கிறார்.
சின்ன முஸ்துரு கிராமத்தில் பார்வதி மல்லப்பா அவரது தையற்பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். ஆற்றல் நிரம்பிய இப்பெண் அவரது கணவருக்கு தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வூட்டினார். மொத்த கிராமமும் சோகத்திலும், ஏமாற்றத்திலும்தான் இருக்கிறது என்பதைப் புரியவைத்து, கடன் கொடுத்தவர்களின் அழுத்தத்துக்கு பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். எனினும் துக்கலா மல்லப்பா தற்கொலை செய்துகொண்டார். பார்வதி தனது தாய்வீடான கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்துக்கு திரும்பிச் செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். நான்கு, எழு, ஒன்பது வயதுடைய அவரது மகள்கள் பிந்து, விடி மற்றும் திவ்யா ஆகியோரைப் படிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தார். பத்தாம் வகுப்பு முடித்திருந்த பார்வதி மல்லப்பா அந்த கிராமத்தைப் பொறுத்தவரை நன்றாகப் படித்தவர்.
அவரது 12 ஏக்கர் நிலத்தை சொற்ப பணத்திற்கு ஒத்திக்கு விட்டு, சுயமாக தையல் கற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். “சின்ன வயதில் கொஞ்சம் தையல் கற்றிருக்கிறேன்” என்கிறார் அவர். “அதனால் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என நினைத்தேன்”. மல்லப்பாவின் கடனையும் அவர் அடைக்க வேண்டியிருந்தது. அவர் இழந்த சொற்ப இழப்பீட்டுப் பணத்தையும், கால்நடைகளையும் மற்ற சில உடைமைகளையும் விற்று கடனை அடைத்தார். அவர் பாதுகாத்து வளர்க்க வேண்டிய மூன்று சிறு மகள்களையும் வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. முதல் இரு மகள்களையும் நன்றாக படித்து வந்தார்கள். அறிவியல் தேர்வில் 50-க்கு 49 மதிப்பெண் பெற்றிருந்தார் ஒரு மகள். அவர்கள் விரும்பும் வரை உயர்ந்த படிப்பை படிக்க வைப்பதுதான் பார்வதியின் குறிக்கோளாக இருந்தது.
எதற்காக தையல் கலை? கிராமத்தில் படித்து தையலையும் கற்றுக்கொண்டார். “இங்கு 800 குடும்பங்கள் உள்ளன. ஏறத்தாழ அனைவருக்குமே மகள்கள் இருக்கிறார்கள். தையல் தொழிலில் குறைவாக பணம் கிடைத்தாலும், தையலைக் கற்றுத்தருவதில் கொஞ்சம் அதிகமான பணம் கிடைக்கிறது. இங்கிருக்கும் 10 சதவிகிதம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தையலைக் கற்றுத்தர விரும்பினாலும் கூட என்னால் கையாள முடியும்” என்றார். ”கொஞ்சம் உதவியுடன் கூடுதலாக இரண்டு தையல் இயந்திரங்களுடன் அந்த பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறேன்” என்று கூறினார். “மகள்கள் பள்ளியில் இருக்கும் போது கொஞ்சம் அதிகம் வேலை பார்க்கலாம். . அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால், ஓரே குழப்பம்தான்” என்றார்.
“அவரது துணிச்சல் அபூர்வமானது” என்கிறார் மல்லா ரெட்டி. அனந்தபூரின் கிராம முன்னேற்ற அறக்கட்டளையின் சூழல் மையத்தின் நிர்வாக இயக்குநர் மல்லா ரெட்டி. பெண் கல்வியை முன்னேற்றும் அமைப்புடன் அவர் தொடர்பில் இருக்கிறார். “மூன்று மகள்களை வளர்த்துக்கொண்டு இந்த சவால்களைச் சந்திப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், அவர் அதைச் செய்கிறார். அவருக்கு அவருடைய வேலைகளைப் பற்றிய திட்டம் தெளிவாக இருக்கிறது. அவரின் குழந்தைகளின் கண்களில் அவரது கனவினைக் காண்கிறார். அவர்கள்தான் அவரது உந்துசக்தி” என்றார்.
இதே மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வதிகளும், கிருஷ்ணம்மாக்களும் இருக்கிறார்கள். பலரும் கடனை அடைப்பதற்காக கால்நடைகளையும், உடைமைகளையும் விற்றுவிட்டார்கள். தன் குழந்தைகள் கல்விகற்பதை நிறுத்திவிட்டு வீட்டில் தங்கியதைப் பார்த்தவர்கள். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விட குறைவான கூலிக்காக மிக கடினமாக உழைத்தார்கள் பலர். மற்ற இடங்களில் நிகழ்ந்த விவசாய இழப்புகளைப் போலவே, இவ்விடங்களிலும் பசியும், வலியும் நிறைந்தன. தற்கொலைகளைப் பார்த்த சோகத்தில் மறுபடியும் தற்கொலைகள் நடந்தன. 100,000 மேற்பட்ட மக்கள் அடுத்த தலைமுறையாவது வாழ வேண்டுமே என்னும் நோக்கத்தில் பாடுபடுகிறார்கள். “எங்கள் கதை முடிந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளுக்காக உழைக்கிறோம்” என்றார் பார்வதி மல்லப்பா.
ஜூன் 26, 2007-இல் தி இந்துவில் இந்த
கட்டுரையின்
ஒரு வடிவம் முதலில் வெளியிடப்பட்டது.
தமிழில்: குணவதி