“இப்பாடல்களை யாரேனும் வாசிக்க சொல்லுங்கள். பிறகு நான் இசையமைத்து உங்களுக்காக அவற்றை மீண்டும் பாடுகிறேன்,” என என்னிடம் சொல்கிறார் தாது சால்வே.
எழுபது வயதுகளில் இருக்கிறார். வயதாகிக் கொண்டிருந்தாலும் அம்பேத்கரிய இயக்கத்தின் உறுதிமிக்க சேவகராக அவர் தன் குரலை பயன்படுத்தி அசமத்துவத்துடன் ஹார்மோனிய இசை கொண்டு போராடி சமூகமாற்றத்தை கொண்டு வரத் தயாராக இருக்கிறார்.
அகமது நகரின் ஓரறை வீட்டில், அம்பேத்கருக்கான வாழ்நாள் இசை அஞ்சலி நம் முன் வெளிப்படுகிறது. அவரது குருவான பிரபல பீம் ஷாஹிர் வாமன்தாதா கர்தாக்கின் புகைப்படம் ஒரு சிறு அலமாரியை அலங்கரிக்கிறது. அந்த அலமாரிக்கும் அவரின் நம்பிக்கைக்குரிய துணைகளான ஹார்மோனியமும் தபலாவும் தோலகியும் இருக்கின்றன.
அறுபது வருடங்களுக்கும் மேலாக பீம் பாடல்களை பாடி வரும் தன் பயணத்தை தாது சால்வே சொல்லத் தயாராகிறார்.
ஜனவரி 9, 1952 அன்று மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள நலெகாவோனில் (கவுதம் நகர் என்றும் அழைக்கப்படுகிறது) சால்வே பிறந்தார். அவரின் தந்தை நானா யாதவ் சால்வே ராணுவத்தில் இருந்தார். அம்மா துளசிபாய் வீட்டை கவனித்துக் கொண்டு, தினக்கூலி வேலைக்கும் சென்று கொண்டிருந்தார்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த அவரது தந்தை போன்றோர்தான் தலித் உளவியலில் மாற்றம் கொண்டு வர முக்கியமான காரணகர்த்தாக்கள். உறுதியான ஊதியத்துடன் கூடிய நிலையான வேலையும் நல்ல உணவும் உலகத்துக்கான ஜன்னலை திறந்து விடும் முறையான கல்வியை அவர்களுக்கு கொடுத்தன. அது அவர்களின் பார்வையை மாற்றியது. ஒடுக்குமுறையை எதிர்க்கவும் போராடவும் அவர்கள் ஊக்கம் கொண்டனர்.
தாதுவின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய தபால் துறையில் தபால்காரராக வேலைக்கு சேர்ந்தார். அந்த காலக்கட்டத்தில் உச்சம் பெற்றிருந்த அம்பேத்கரிய இயக்கத்தில் அவரும் இணைந்து இயங்கினார். தந்தையின் ஈடுபாட்டால், இயக்கத்தை உள்ளிருந்து பார்க்கவும் அனுபவிக்கவும் தாதுவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பெற்றோரை தாண்டி குடும்பத்தில் தாதுவிடம் செல்வாக்கு செலுத்திய இன்னொரு நபர் அவருடைய தாத்தா யாதவ் சால்வே. கடுபாபா என அழைக்கப்பட்டவர்.
அலைபாயும் தாடி கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம், “ஏன் நீண்ட தாடி வளர்த்திருக்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்ட ஒரு வெளிநாட்டு ஆய்வாளர் பற்றிய கதையை நமக்கு சொல்கிறார். கேள்வி கேட்டதும் 80 வயது முதியவர் அழத் தொடங்கினாராம். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவர் ஆய்வாளரிடம் தன் கதையை சொல்கிறார்.
“பாபாசாகெப் அம்பேத்கர் ஒருமுறை அகமதுநகர் மாவட்டத்துக்கு வந்தார். அவரைப் பார்க்க பெரிய கூட்டம் காத்துக் கொண்டிருந்த எங்கள் கிராமம் ஹரெகாவோன் கிராமத்துக்கு வாருங்கள் என அவரிடம் வேண்டினேன்.” ஆனால் பாபாசாகெப்புக்கு நேரமில்லை. இன்னொரு முறை வருவதாக உறுதி அளித்தார். அவர் கிராமத்துக்கு வரும்போதுதான் தாடி எடுப்பேனென அந்த நபர் உறுதி பூண்டார்.
பல வருடங்கள் காத்திருந்தார். தாடி வளர்ந்து கொண்டிருந்தது. 1956ம் ஆண்டில் பாபாசாகெப் மறைந்தார். “தாடி தொடர்ந்து வளர்ந்தது. நான் இறக்கும் வரையில் இது இப்படிதான் இருக்கும்,” என்றார் அந்த முதியவர். அந்த ஆய்வாளர் வேறு யாருமில்லை. அம்பேத்கரிய இயக்கத்தின் பெயர் பெற்ற அறிஞரான எலெனார் செலியட்தான் அவர். அந்த முதியவர், தாது சால்வேவின் தாத்தாவான கடுபாபா ஆவார்.
*****
பிறந்து ஐந்து நாட்களே ஆகியிருந்தபோது தாது பார்வை இழந்தார். யாரோ ஒருவர் ஒரு சொட்டு மருந்தை கண்ணில் போட்டதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பார்வை பறிபோனது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அவர் மீண்டும் பார்க்க முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவருக்கு, பள்ளிக் கல்விக்கும் வாய்ப்பிருக்கவில்லை.
அவர் வசித்த பகுதியில் இருந்த ஏக்தாரி பஜனை பாடகர்களுடன் இணைந்தார். தோல், உலோகம் மற்றும் கட்டை ஆகியவற்றுடனான மேள வாத்தியமான திம்தியை இசைப்பவராக இருந்தார்.
“யாரோ ஒருவர் வந்து பாபாசாகெப் மறைந்த விஷயத்தை சொன்னது நினைவில் இருக்கிறது. அவர் யாரென அப்போது எனக்கு தெரியவில்லை. ஆனால் மக்கள் அழுததை பார்த்ததும் அவர் பெரிய மனிதர் என புரிந்து கொண்டேன்,” என தாது நினைவுகூருகிறார்.
பாபாசாகெப் தீக்ஷித், தத்தா கயான் மந்திர் என்கிற இசைப் பள்ளியை அகமது நகரில் நடத்தினார். ஆனால் அதற்கான கட்டணத்தை கொடுக்கும் வசதி தாதுவுக்கு இல்லை. அச்சமயத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஆர்.டி.பவார் நிதியுதவி செய்தார். தாதுவும் பள்ளியில் இணைந்தார். அவருக்காக பவார் ஒரு புது ஹார்மோனியமும் கூட வாங்கிக் கொடுத்தார். 1971ம் ஆண்டு நடந்த சங்கீத் விஷாராத் தேர்வில் தாது தேர்ச்சியடைந்தார்.
அதற்குப் பிறகு, அச்சமயத்தில் பிரபலமான கவாலி இசைக் கலைஞராக இருந்த மெஹ்மூது கவ்வால் நிசாமியிடம் சேர்ந்தார். அவரின் நிகழ்ச்சிகளில் பாடத் துவங்கினார். தாதுவுக்கு அது மட்டும்தான் வருமானமாக இருந்தது. பிறகு, கலா பதக் என்கிற இசைக்குழுவில் இணைந்தார். அந்தக் குழுவை தொடங்கியவர் சங்கம்னெரை சேர்ந்த தோழர் தத்தா தேஷ்முக் ஆவார். இன்னொரு தோழரான பாஸ்கர் ஜாதவ் இயக்கிய வசுதேவசா தாரா நாடகத்துக்கு பாடல்கள் உருவாக்கிக் கொடுத்தார்.
மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்ட கேஷவ் சுகா அஹெரின் பாடல்களை தாது கேட்பார். நாசிக்கின் கலாராம் கோவிலுக்குள் நுழைய இருந்த தடையை எதிர்த்து போராடிய மாணவர் குழுவுடன் அஹெரும் இருந்தார். அம்பேத்கரிய இயக்கத்தை தன் பாடல்கள் கொண்டு ஆதரித்தார். பீம்ராவ் கர்தாக்கின் ஜல்சா பாடல்களை அஹெர் கேட்டு ஈர்க்கப்பட்டு சில பாடல்களை எழுதினார்.
பின்னர், அஹெர் முழுநேரமாக ஜல்சா பாடல்கள் எழுதத் தொடங்கி, தலித் உளவியலை வளர்த்தெடுத்தார்.
1952ம் ஆண்டு தேர்தலில் பட்டியல் சாதி கூட்டமைப்பின் சார்பாக மும்பையில் அம்பேத்கர் போட்டி போட்டார். ‘நவ பாரத் ஜல்சா மண்டல்’ தொடங்கினார் அஹெர். புது பாடல்களை எழுதி டாக்டர் அம்பேத்கருக்காக பிரசாரம் செய்தார். இந்த அமைப்பு நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து சால்வே கேள்விப்பட்டார்.
சுதந்திர காலக்கட்டத்தில் அகமதுநகர் இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாக இருந்தது. “பல தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. என் தந்தை அவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். அச்சமயத்தில் தாதாசாகெப் ருபாவடே, ஆர்.டி.பவார் போன்றோர் அம்பேத்கரிய இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்தனர். அகமது நகரில் இயக்கத்தை அவர்கள்தான் நடத்தினர்,” என்கிறார் தாது சால்வே.
தாது பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். பி.சி.காம்ப்ளே மற்றும் தாதா சாகெப் ருபாவடே போன்றோரின் உரைகளை கேட்டார். பிறகு இந்த இரு பெரும் தலைவர்களுக்கும் முரண் ஏற்பட்டு, அம்பேத்கரிய இயக்கம் இரண்டாக பிரிய நேர்ந்தது. இந்த அரசியல் நிகழ்வு பல பாடல்கள் உருவாகக் காரணமாக இருந்தது. “இரண்டு பிரிவுகளும் கேள்வி கேட்டு பதில் சொல்லும் வகை பாடல்களில் திறன் பெற்றவையாக இருந்தன,” என்கிறார் தாது.
लालजीच्या घरात घुसली!!
முதிய வயதில் கலங்கிப் போன பெண்
லால்ஜியின் வீட்டுக்குள் நுழைந்தாள்!
தாதாசாகெப் சிந்தனை தவறி இடதுசாரிகளுடன் சேர்ந்துவிட்டார் எனக் குறிக்க சொல்லப்பட்ட வரிகள் இவை.
தாதாசாகெப்பின் பிரிவு பதிலுரைத்தது:
तू पण असली कसली?
पिवळी टिकली लावून बसली!
உன்னை கொஞ்சம் பார்த்துக் கொள் பெண்ணே!
உன் நெற்றியில் சூடியிருக்கும் மஞ்சள் நிறப் பொட்டையும் பார்த்துக் கொள்!
“கட்சிக் கொடியில் இருந்த நீல நிற அசோகச்சக்கரத்தை எடுத்துவிட்டு பி.சி.காம்ப்ளே மஞ்சள் நிற முழு நிலவை வைத்தார். அதைக் குறிப்பிட்டுதான் அந்த வரிகள்,” என்கிறார் தாது.
தாதாசாகெப் ருபாவடே பி.சி.காம்ப்ளேவின் பிரிவில் இருந்தார். பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரும் ஒரு பாடல் வழியாக விமர்சிக்கப்பட்டார்.
अशी होती एक नार गुलजार
अहमदनगर गाव तिचे मशहूर
टोप्या बदलण्याचा छंद तिला फार
काय वर्तमान घडलं म्होरं S....S....S
ध्यान देऊन ऐका सारं
பிரபலமான அகமது நகர் டவுனைச் சேர்ந்த
இனிமையான இளம்பெண் ஒருத்திக்கு
முகாம் மாற்றுவது மிகவும் பிடிக்கும்.
அவளுக்கு என்னவானது என தெரிந்து கொள்ள வேண்டுமா?
நன்றாக கவனித்து தெரிந்து கொள்ளுங்கள்…
“அம்பேத்கரிய இயக்கத்தின் கேள்வி-பதில் ரக பாடல்களை கேட்டு நான் வளர்ந்தேன்,” என்கிறார் தாது.
*****
1970ம் ஆண்டுதான் தாது சால்வேவின் வாழ்க்கையின் திருப்புமுனை நேர்ந்தது. மகாராஷ்டிராவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் டாக்டர் அம்பேத்கரின் சமூக, பண்பாட்டு, அரசியல் இயக்கத்தை கொண்டு சென்று கொண்டிருந்த பாடகரான வாமன்தாதா கர்தாக்கை அவர் சந்தித்தார். கர்தாக் அப்பணியை தன் இறுதிமூச்சு வரை செய்து கொண்டிருந்தார்.
75 வயது மாதவ்ராவ் கெயிக்வாட், வாமன்தாதா கர்தாக் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். வாமன்தாதாவை சந்திக்க தாதுவை அழைத்துச் சென்றவர் அவர்தான். மாதவ்ராவும் அவரின் 61 வயது மனைவியும் வாமன்தாதா கைப்பட எழுதிய 5,000 பாடல்களை சேகரித்துள்ளனர்
மாதவ்ராவ் சொல்கையில், “அவர் நகருக்கு 1970-ல் வந்தார். அம்பேத்கரின் பணியையும் செய்தியையும் பரப்பவென ஒரு பாடகர் குழுவை உருவாக்க ஆர்வத்துடன் இருந்தார். தாது சால்வே அம்பேத்கரை பற்றி பாடினார். ஆனால் அவரிடம் நல்ல பாடல்கள் இருக்கவில்லை. எனவே நாங்கள் சென்று வாமன்தாதாவை சந்தித்து, ‘உங்களின் பாடல்கள் எங்களுக்கு வேண்டும்,’ என்றோம்,” என்கிறார்.
தன் பணியை எப்போதும் ஒரு இடத்தில் வைத்துக் கொண்டதில்லை எனக் கூறியிருக்கிறார் வாமன்தாதா: “நான் எழுதுகிறேன், பாடுகிறேன், பிறகு அதை அங்கேயே விட்டு விடுகிறேன்.”
“அத்தகைய பொக்கிஷம் வீணாகப் போகிறதே என நாங்கள் கவலைப்பட்டோம். அவர் (வாமன்தாதா) தன் மொத்த வாழ்க்கையையும் அம்பேத்கரிய இயக்கத்துக்கு அர்ப்பணித்தார்,” என மாதவ்ராவ் நினைவுகூருகிறார்.
அவரது பணியை தொடரும் ஆர்வத்தில் மாதவ்ராவ், வாமன்தாதா பாடும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தாது சால்வேவை அழைத்துச் செல்லத் தொடங்கினார்: “தாது அவருக்கு ஹார்மோனியம் வாசிப்பார். அவர் பாடுவதை நான் உடனே எழுதுவேன். அப்பப்போதே அவை நடந்தன.”
5,000-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பதிப்பிக்க முடிந்தது. அவையன்றி, 3,000 பாடல்கள் வெளிவரவே இல்லை. “பொருளாதாரப் பிரச்சினையால் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆனால், தாது சால்வே இருந்ததால் மட்டும்தான் அம்பேத்கரிய இயக்கம் பற்றிய இந்த அறிவையும் ஞானத்தையும் என்னால் பாதுகாக்க முடிந்தது,” என்கிறார் அவர்.
வாமன்தாதாவின் பணியால் ஈர்க்கப்பட்ட தாது சால்வே, கலா பதக் என்கிற பெயரில் ஒரு குழு தொடங்க முடிவெடுத்தார். ஷங்கர் தபாஜி கெயிக்வாட், சஞ்சய் நாதா ஜாதவ், ரகு கங்காராம் சால்வே மற்றும் மிலிந்த் ஷிண்டே ஆகியோரை ஒப்புக் கொள்ள வைத்தார். பீம் சந்தேஷ் கயான் குழு என குழுவுக்கு பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரின் செய்தியை பரப்பும் இசைக்குழு என அர்த்தம்.
ஒரு நோக்கத்தை நிறைவேற்றவென அவர்கள் பாடியதால், அவர்களின் நிகழ்ச்சிகள் யாரையும் குறைத்து பேசுவதாக இருக்கவில்லை.
இப்பாடலை தாது நமக்காக பாடுகிறார்:
उभ्या विश्वास ह्या सांगू तुझा संदेश भिमराया
तुझ्या तत्वाकडे वळवू आता हा देश भिमराया || धृ ||
जळूनी विश्व उजळीले असा तू भक्त भूमीचा
आम्ही चढवीला आता तुझा गणवेश भिमराया || १ ||
मनुने माणसाला माणसाचा द्वेष शिकविला
तयाचा ना ठेवू आता लवलेश भिमराया || २ ||
दिला तू मंत्र बुद्धाचा पवित्र बंधुप्रेमाचा
आणू समता हरू दीनांचे क्लेश भिमराया || ३ ||
कुणी होऊ इथे बघती पुन्हा सुलतान ह्या भूचे
तयासी झुंजते राहू आणुनी त्वेष भिमराया || ४ ||
कुणाच्या रागलोभाची आम्हाला ना तमा काही
खऱ्यास्तव आज पत्करला तयांचा रोष भिमराया || ५ ||
करील उत्कर्ष सर्वांचा अशा ह्या लोकशाहीचा
सदा कोटी मुखांनी ह्या करू जयघोष भिमराया || ६ ||
कुणाच्या कच्छपी लागून तुझा वामन खुळा होता
तयाला दाखवित राहू तयाचे दोष भिमराया || ७ ||
உங்களின் செய்தியை நாங்கள் உலகுக்கு கொண்டு செல்கிறோம் பீம்ரயா
அவர்கள் அனைவரையும் உங்களின் கொள்கைகள் நோக்கி திருப்புகிறோம் பீம்ரயா
நீங்கள் எரிந்தீர்கள், பிரபஞ்சம் ஞானம் பெற்றது, ஓ மண்ணின் மைந்தனே
உங்களை பின்பற்றி, உங்களின் உடையை அணிகிறோம் (சீடரின் சீருடை) பீம்ரயா
பிறரை வெறுக்கும்படி மநு எங்களுக்கு கற்றுக் கொடுத்தான்
அவனை அழிக்க நாங்கள் இப்போது உறுதி கொள்கிறோம் பீம்ரயா
புத்தர் சொன்ன சகோதரத்துவத்தை நீங்கள் எங்களுக்கு போதித்தீர்கள்
சமத்துவத்தை கொண்டு வந்து, ஏழைகளின் வலியை நாங்கள் போக்குவோம் பீம்ரயா
இந்த மண்ணை சிலர் மீண்டும் ஆள விரும்புகின்றனர்
எங்களின் எல்லா வலுவையும் கொண்டு நாங்கள் போராடுவோம் பீம்ரயா
அவர்கள் சந்தோஷமாகட்டும், கோபம் கொள்ளட்டும் எங்களுக்கு கவலை இல்லை
எங்களின் உண்மையை வலியுறுத்த, எந்த கோபத்தையும் எதிர்கொள்ள தயார் பீம்ரயா
அவர்களின் வார்த்தைகளில் சிக்கிக் கொள்ள வாமன் (கர்தாக்) என்ன முட்டாளா?
அவர்களுக்கு கண்ணாடியை தொடர்ந்து காட்டிக் கொண்டிருப்போம் பீம்ரயா
நிகழ்ச்சிக்கென அழைக்கப்படும் போதெல்லாம், வாமன்தாதா பாடல்களை பாடுவார் தாது. குழந்தை பிறப்பு தொடங்கி, இறப்பு வரையிலான குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அம்பேத்கரிய பாடல்களை பாட மக்கள் அவரின் கலா பதக் குழுவை அழைப்பார்கள்.
தாது போன்றோர் அம்பேத்கரிய இயக்கத்துக்கு பங்களிக்கவென பாடினார்கள். பணம் எதையும் குழு எதிர்பார்க்கவில்லை. பாராட்டும்விதமாக நிகழ்ச்சியின் பிரதான பாடகருக்கு இளநீரையும் பிறருக்கு தேநீரையும் மக்கள் கொடுப்பார்கள். அவ்வளவுதான். "என்னால் பாட முடியும். இயக்கத்துக்கான என் பங்களிப்பாக அதை செய்கிறேன். வாமன்தாதாவின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல முயற்சிக்கிறேன்," என்கிறார் தாது.
*****
மகாராஷ்டிராவின் பல பாடகர்களுக்கு வாமன்தாதா குரு என்றாலும் தாதுவின் வாழ்க்கையில் அவருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பார்க்க முடியாத தாதுவுக்கு, அவரின் பாடல்களை கவனித்து, மனப்பாடம் செய்வது மட்டுமே அவற்றை காப்பதற்கு இருந்த வழி. 2,000 பாடல்களுக்கு மேல் அவருக்கு தெரியும். ஒரு பாடல் எழுதப்பட்ட காலம், அதன் பின்னணி, மூல ராகம் என பாடல் பற்றிய எல்லாமுமே அவருக்கு தெரியும். தாதுவால் எல்லாவற்றையும் சொல்ல முடியும். மகாராஷ்டிராவில் பரவலாக பாடப்படும் வாமன்தாதாவின் சாதி எதிர்ப்பு பாடல்கள் அவர் இசைத்தவைதான்.
இசைப்பயிற்சி பெற்றதால் தாது, வாமன்தாதாவை விட ஓரடி முன் இருக்கிறார். ராகம், சுருதி, தாளம், கவிதை அல்லது பாடலின் சந்தம் ஆகியவற்றின் நுணுக்கங்கள் அவருக்கு தெரியும். இவற்றை பற்றி அவர் குருவிடம் பேசியது உண்டு. அவரது மரணத்துக்கு பின் அவர் பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்திருக்கிறார். பலவற்றை வேறு ராகம் கொண்டு இசைப்படுத்தியிருக்கிறார்.
வித்தியாசத்தை காண்பிக்க, வாமன்தாதா பாடிய பாடலை அதே போல பாடி விட்டு, பிறகு அவரது இசையுடன் சேர்த்தும் பாடிக் காண்பித்தார். வித்தியாசம் புலப்பட்டது.
भीमा तुझ्या मताचे जरी पाच लोक असते
तलवारीचे तयांच्या न्यारेच टोक असते
ஓ பீம்! உங்களுடன் ஒத்துப் போகிறவர்கள் ஐந்து பேரே என்றாலும்
அவர்களின் போர்க்கருவி பிறருடையதைக் காட்டிலும் கூராக இருக்கும்
தன்னுடைய சொந்த மரணத்தை பற்றிய பாடலையே வாமன்தாதா கொடுக்குமளவுக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளராக அவர் இருந்திருக்கிறார்.
राहील विश्व सारे, जाईन मी उद्याला
निर्वाण गौतमाचे, पाहीन मी उद्याला
உலகம் நீடிக்கும், நான் கிளம்புகிறேன்
கவுதமனின் நிர்வாணத்தைப் பார்க்கிறேன்
தாது இப்பாடலை மெல்லிசை கொண்டு உருவாக்கி அவரின் ஜல்சா நிகழ்வில் இசைத்தார்.
*****
தாதுவின் வாழ்க்கையிலும் அரசியலிலும் இசை முக்கிய அங்கம்.
பிரபல நாட்டுப்புற பாடலும் அம்பேத்கர் பாடல்களும் புகழ் பெறத் தொடங்கிய காலத்தில் அவர் பாடத் தொடங்கினார். பீம்ராவ் கர்தாக், லோககவி அர்ஜுன் பலேராவ், புல்தானாவின் கேதார் சகோதரர்கள், புனேவின் ராஜானந்த் கட்பாயலே, ஷ்ராவன் யஷ்வந்தே மற்றும் வாமன்தாதா கர்தாக் ஆகியோர் இந்த பிரபல பாடல்களை பாடினார்கள்.
தன் இசைத் திறமையையும் குரலையும் இப்பாடல்களுக்கு அவர் கொடுத்துள்ளார். அம்பேத்கரின் மறைவுக்கு பிறகு பிறந்த தலைமுறை, அவரது வாழ்க்கை, பணி மற்றும் செய்தி ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம்தான் தெரிந்து கொண்டது. இயக்கத்தை இந்த தலைமுறையிடம் வளர்க்கவும் அவர்களை அதில் இணைக்கவும் தாது கணிசமாக பங்காற்றியிருக்கிறார்.
நிலத்தில் உழைக்கும் விவசாயியின் போராட்டங்கள் பற்றியும் கண்ணியத்துக்காக போராடும் தலித் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் பாடியிருக்கின்றனர். தத்தகாத் புத்தா, கபீர், ஜோதிபா புலே மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கைகள் மற்றும் ஆளுமைகள் பற்றி அவர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர். எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு இந்த பாடல்கள்தான் கல்வி. இசையையும் ஹார்மோனியத்தையும் கொண்டு தாது சால்வே இவற்றை அதிகமான மக்களுக்கு கொண்டு சென்றார். மக்களது உளவியலின் அங்கமாக இப்பாடல்கள் மாறின.
இப்பாடல்களின் பொருளும் அவற்றை ஷாஹிர்கள் பாடும் விதமும் சாதி எதிர்ப்பு இயக்கத்தை கிராமப்புறமெங்கும் கொண்டு சென்று சேர்த்தது. இப்பாடல்கள், அம்பேத்கர் இயக்கத்தின் நேர்மறை வாழ்க்கை விசையாக செயல்பட்டன. சமத்துவத்துக்கான போராட்டத்தில் ஒரு சிறு போர் வீரனாக தாது தன்னை கருதிக் கொள்கிறார்.
இப்பாடல்களை வருமானம் ஈட்டும் வழியாக அவர் என்றுமே கருதியதில்லை. அவரை பொறுத்தவரை அது ஒரு லட்சியத்துக்கானது. ஆனால் இன்று, அவரின் 72 வயதில் ஊக்கத்தையும் வேகத்தையும் கிட்டத்தட்ட அவர் இழந்துவிட்டார். 2005ம் ஆண்டு அவரின் ஒரே மகன் விபத்தில் இறந்தபிறகு, மருமகளையும் மூன்று பேரக் குழந்தைகளையும் அவர்தான் பார்த்துக் கொண்டார். பின்னர் மருமகள் மறுமணத்துக்கு முடிவு செய்தபோது, தாது அவரின் விருப்பத்தை மதித்தார். அவரும் அவரது மனைவி தேவ்பாயும் இந்த ஓரறை வீட்டுக்கு இடம்பெயர்ந்தனர். 65 வயது தேவ்பாய், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் குறைவான உதவித் தொகையை கொண்டு இருவரும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். கஷ்டங்களுக்கு மத்தியிலும், இசை மற்றும் அம்பேத்கரிய இயக்கம் ஆகியவை மீது அவர் கொண்டிருக்கும் உறுதி குறையவில்லை.
தற்கால பாடல்களை தாது ஏற்கவில்லை. “இன்றைய கலைஞர்கள் இப்பாடல்களை விற்பனைக்கு போட்டுவிட்டனர். புகழ் மற்றும் வருமானத்தில்தான் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அவர் சோகமான குரலில்.
அம்பேத்கர் மற்றும் வாமன்தாதா பற்றி பேசுகையில் மனப்பாடமாக தெரியும் பாடல்களை நினைவுகூர்ந்து ஹார்மோனியத்தில் இசைத்து தாது சால்வே பாடுவதை பார்க்க முடிந்த எங்களுக்குள் இருளையும் விரக்தியையும் விரட்ட உதவும் நம்பிக்கை நிரம்பியது.
ஷாஹிர்களின் வார்த்தைகள் மற்றும் சொந்தப் பாடல்களை கொண்டு, பாபாசாகெப் அம்பேத்கர் கொண்டு வந்த புது மனப்பான்மையை தாது காத்து நின்றார். பிற்கால வருடங்களில் இந்த தலித் ஷாஹிரி, பிற பல சமூக பிரச்சனைகளையும் கையிலெடுத்து, அநியாயம் மற்றும் பேதம் ஆகியவற்றுக்கு எதிராக போராடினார். எல்லாவற்றிலும் தாது சால்வேவின் குரல் ஒலிக்கிறது.
நேர்காணலின் முடிவை நாம் எட்டிய நிலையில், தாது சோர்வாகி படுக்கையில் சாய்ந்து கொண்டார். புதிய பாடல்கள் பற்றி நான் கேட்டபோது, அவர் கவனமாகி, “இப்பாடல்களை வாசிக்கும் ஒருவரை கொண்டு வாருங்கள். நான் இசையமைத்து உங்களுக்காக மீண்டும் பாடிக் காட்டுகிறேன்,” என்றார்.
அம்பேத்கரிய இயக்கத்தின் இந்த வீரர், தன் குரலையும் ஹார்மோனியத்தையும் இன்றும் பயன்படுத்தி அசமத்துவத்துக்கு எதிராக போராடி, நிலைத்து நீடிக்கும் சமூக மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார்.
இக்கட்டுரை முதலில் மராத்தி மொழியில் எழுதப்பட்டு பின் மேதா கலேவால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது
இந்தக் காணொளி, இந்தியக் கலைக்கான இந்திய அறக்கட்டளை, ஆவணக் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகத் திட்டத்தின் கீழ், PARI-யுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டமான ‘Influential Shahirs, Narratives from Marathwada’ என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகும். புது தில்லியின் கோத்தே நிறுவனம்/மேக்ஸ் முல்லர் பவன் ஆகியவற்றின் ஆதரவுடன் இது சாத்தியமானது.
தமிழில்: ராஜசங்கீதன்