உங்களின் பல்கலைக்கழகம் கிராம நிலத்தில் அமைந்திருக்கிறது என 2011ம் ஆண்டில், நான் கூறினேன். அந்த கிராமத்தின் மக்கள் பல முறை அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். எந்த வகையிலும் இது உங்களின் தவறோ பொறுப்போ கிடையாது. ஆனால் அதற்கு மதிப்பு கொண்டவர்களாக இருங்கள்.
அவர்கள் அதை மதித்தார்கள். . ஆனாலும் அந்த உண்மை ஒடிசாவின் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் இதழியல் மற்றும் வெகுஜன ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவர்கள். சிகாபார் பற்றியக் கதை அவர்களை உலுக்கி விட்டது. மூன்று முறை இடம் மாறிய ஒரு கிராமம். ஒவ்வொரு முறையும் வளச்சி என்ற பெயராலேயே இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
என்னுடைய மனம் 1994ம் ஆண்டுக்கு சென்றது. 1960களின் ஓர் ஆவேசமான மழை நாள் இரவில் எப்படி இடம்பெயர்த்தப்பட்டார்கள் என சொன்ன கடாபா பழங்குடியான முக்தா கடம் (முகப்புப் படத்தில் பேரக் குழந்தையுடன் இருப்பவர்) நினைவுக்கு வந்தார். ஐந்து குழந்தைகளை முன்னே நடக்கவிட்டு, மழை கொட்டும் இருளில் ஒரு காட்டை நோக்கி தலையில் உடைமைகளை சுமந்தபடி அவர் சென்றார். “எங்கு செல்வதென எனக்குத் தெரியவில்லை. சார் சொன்னதால்தான் நாங்கள் கிளம்பிச் சென்றோம். அது பயங்கரமானதாக இருந்தது.”
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடடின் ’மிக்’ ரக விமானத் திட்டத்துக்காக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒடிசாவில் அந்தத் திட்டம் முழுமையாகக் கூட அப்போது வந்திருக்கவில்லை. நிலமும் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படவில்லை. நஷ்ட ஈடு? “என்னுடைய குடும்பத்துக்கு 60 ஏக்கர் நிலம் இருந்தது,” என்கிறார் ஜோதிர்மாய் கோரா. பல பத்தாண்டுகளுக்கு முன் இடம்பெயர்த்தப்பட்ட சிகாபாருக்காக நீதி கேட்கும் போராட்டத்தை நடத்திய செயற்பாட்டாளர் அவர். தலித் ஆவார். “பற்பல வருடங்களுக்கு பிறகு, 60 ஏக்கர் நிலத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.15,000 எங்களுக்கு வழங்கப்பட்டது.” வெளியேறியவர்கள் அவர்களுக்குரிய நிலத்தில் மீண்டுமொரு கிராமத்தைக் கட்டினர். அரசு கட்டிக் கொடுக்கவில்லை. அந்த கிராமத்தையும் அவர்கள் ‘சிகாபார்’ என்ற பெயர் கொண்டே அழைத்தனர்.
சிகாபாரின் கடபாக்கள், பரோஜாக்கள் மற்றும் டோம்கள் (தலித் சமூகம்) வறுமையில் உழலுபவர்கள் இல்லை. பெரிய அளவில் நிலமும் கால்நடைகளும் வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் பிரதானமாக பழங்குடிகள். கொஞ்சம் தலித்களும் இருக்கின்றனர். எனவே அவர்களை வெளியேற்றுவது சுலபமாகி விடுகிறது. வளர்ச்சிக்கான கட்டாய வெளியேற்றங்கள் பலவற்றை பழங்குடியினர் எதிர்கொண்டிருக்கின்றனர். 1951லிருந்து 1990 வரை ‘வளர்ச்சித் திட்டங்களுக்கென’ 2.5 கோடி பேர் இடம்பெயர்த்தப்பட்டிருக்கின்றனர். (அவர்களில் 75 சதவிகிதம் பேர் ”இன்னும் புனரமைப்புக்காக காத்திருக்கின்றனர்” என 90களின் தேசியக் கொள்கை வரைவு ஒப்புக் கொண்டது.)
அந்தக் காலக்கட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் 7 சதவிகிதம் பழங்குடிகள். ஆனால் வளர்ச்சித் திட்டங்களுக்காக அப்புறப்படுத்தப்பட்டவர்களில் அவர்கள்தான் 40 சதவிகிதம். முக்தா கடம் மற்றும் சிகாபாரியர்களுக்கு இன்னும் பிரச்சினைகள் காத்திருந்தன. இச்சமயம் “என்னுடைய குழந்தைகளை முன் செலுத்தியபடி நான் கிளம்பினேன்,” என்கிறார் முக்தா. சிகாபார்-3 என அழைக்க முடிகிற இடத்தில் மீண்டும் அவர்கள் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
1994ம் ஆண்டில் அங்கு சென்று நான் வசித்தபோது, மூன்றாவது வெளியேற்றத்துக்கான பல நோட்டீஸ்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. ஒரு கோழிப் பண்ணைக்காகவோ அல்லது ராணுவப் பொறியியல் சேவைகள் மையத்துக்காகவோ அவர்கள் வெளியேற்றப்படவிருந்தனர். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றை எதிர்கொண்ட சிறு கிராமமாக உலகத்திலேயே சிகாபார்தான் இருக்கும். அந்தப் போராட்டத்தில் கிராமம் வீழ்த்தப்பட்டது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட்டுக்காக பறிக்கப்பட்ட நிலம், அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட காரணத்துக்கு பயன்படுத்தப்படவில்லை. அந்த நிலத்தின் சில பகுதிகளும் சிகாபாரிகள் வசித்தப் பிற இடங்களும் பிற பல்வேறு காரணங்களுக்கு அளிக்கப்பட்டன. சில பகுதிகள் ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டதாக 2011ம் ஆண்டில் தெரிந்து கொண்டேன். ஜோதிர்மாய் கோரா நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சமாக இந்துஸ்தான் ஏரோநாட்டிகஸ்ஸில் வேலைகள் வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்.
1995ம் ஆண்டுடன் முடியும் இக்கட்டுரையின் விரிவான பதிப்பு ‘ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்’ என்கிற என் புத்தகத்தில் இரு பகுதிகளாக இடம்பெற்றிருக்கிறது.
தமிழில் : ராஜசங்கீதன்