மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஐந்து நாட்கள், 200 கிலோமீட்டர் பயணித்து ரூ.27,000 செலவு செய்து ரெம்டெசிவர் ஊசியை ரவி போப்டி தேடியுள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் கடைசி வாரம் அவரது பெற்றோருக்கு கோவிட்-19க்கான அறிகுறிகள் தென்பட்டபோது இத்தேடல் தொடங்கியது. “அவர்கள் பலமாக இருமத் தொடங்கினர், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருந்தது,” என்று பீடின் ஹர்கி நிம்கான் கிராமத்தில் தனது ஏழு ஏக்கர் விளைநிலத்தில் நடந்தபடி நினைவுகூரும் 25 வயதாகும் ரவி. “எனவே நான் அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.”
கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் அன்டி வைரல் மருந்தான ரெம்டெசிவரை மருத்துவர் உடனடியாக பரிந்துரைத்தார். அதற்கு பீடில் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. “நான் ஐந்து நாட்கள் ஓடினேன்,” என்கிறார் ரவி. “எனக்கு நேரம் கடந்துவிட்டது, அடுத்த என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே நான் ஆம்புலன்சை வாடகைக்கு பிடித்து என் பெற்றோரை சோலாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.” பயணம் முழுவதும் அவர் மிகுந்த பதற்றத்துடன் இருந்துள்ளார். “ஆம்புலன்சில் பயணித்த அந்த நான்கு மணி நேரத்தை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்.”
அவரது பெற்றோரான 55 வயது அர்ஜூன், 48 வயது கீதா ஆகியோரை மஜல்கான் தாலுக்காவில் உள்ள தங்களது கிராமத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோலாப்பூர் நகருக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.27,000 கேட்டுள்ளார். “எனக்கு தெரிந்த தூரத்து உறவினர் ஒருவர் சோலாப்பூரில் மருத்துவராக உள்ளார்,” என்கிறார் ரவி. “ஊசியை ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார். பீடில் அனைத்து மக்களும் அந்த மருந்து கிடைக்காமல் திண்டாடினர்.”
எபோலா சிகிச்சைக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்து பெருந்தொற்று கால தொடக்கத்தில் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு பலனளிப்பதாக கண்டறியப்பட்டது. 2020 நவம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பு “ நிபந்தனைக்கு உட்பட்ட பரிந்துரையை ” வெளியிட்டது ரெம்டெசிவர் பயன்பாட்டிற்கு எதிராக வெளியிட்டது. இம்மருந்து கோவிட்-19 நோயாளிகளை உயிர்பிழைக்க வைப்பது, பிற வகையில் பலனளிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சிகிச்சை வழிகாட்டுதல்களில் இந்த அன்டி வைரல் இடம்பெறாத போதிலும் அவை தடைசெய்யப்படவில்லை என்கிறார் மகாராஷ்டிரா சாப்டரின் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் அவினாஷ் போன்டுவி. “முந்தைய கரோனா வைரஸ் [சார்ஸ்-கோவி-1] தொற்றை கையாள ரெம்டெசிவர் பயன்படுத்தப்பட்டது. அதனால் தான் இந்தியாவில் முதலில் தோன்றி புதிய கரோனா வைரசிற்கும் [சார்ஸ்-கோவ்-2 அல்லது கோவிட்-19] நாங்கள் அதை பயன்படுத்தத் தொடங்கினோம்.”
ஒரு தொகுப்பில் ஐந்து நாட்களுக்குள் ஆறு ஊசிகள் உட்பட சில மருந்துகள் இடம்பெற்றிருக்கும். “[கோவிட்-19] தொற்று ஏற்பட்ட தொடக்க நாட்களிலேயே ரெம்டெசிவரை பயன்படுத்த தொடங்கியிருந்தால் உடலில் வைரசின் வளர்ச்சியை தடுத்திருக்கும்,” என்கிறார் டாக்டர் போன்டுவி.
மருந்து தட்டுப்பாடு, கடும் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் பீடில் இருந்த கோவிட் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் கிடைப்பது கடினமானது. மாநில அரசு மற்றும் பிரியா ஏஜென்சி எனும் தனியார் நிறுவனத்திலிருந்து இம்மாவட்டத்திற்கு அவை விநியோகம் செய்யப்படுகின்றன. “மருத்துவர் ஒரு நோயாளிக்கு ரெம்டெசிவரை பரிந்துரைத்தால் அவரது உறவினர் படிவத்தை நிரப்பி மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்,” என்கிறார் மாவட்ட சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ண பவார். “விநியோகத்திற்கு ஏற்ப நிர்வாகம் பட்டியலை தயார் செய்து குறிப்பிட்ட நோயாளிக்கு ரெம்டெசிவரை அளிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் அதற்கு தட்டுப்பாடு இருந்தது.”
பீடின் மாவட்ட நீதிபதி ரவிந்திரா ஜகதப் அளித்த தரவில், ரெம்டெசிவரின் தேவை மற்றும் விநியோகத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது தெரிகிறது. நாட்டில் கோவிட் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த ஏப்ரல் 23 – மே 12ஆம் தேதி வரையிலான காலத்தில் இம்மாவட்டத்திற்கு 38,000 ரெம்டெசிவர் ஊசிகள் தேவைப்பட்டது. ஆனால் தேவையில் 15 சதவீதமான 5,720 மட்டுமே கிடைத்தது.
பீடில் நிலவிய இத்தட்டுப்பாடு கள்ளச் சந்தைக்கு பெருமளவு உதவியது. மாநில அரசு அளிக்கும் ஒரு ஊசியின் விலை ரூ.1,400. அதுவே கள்ளச் சந்தையில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை அதாவது 35 மடங்கு கூடுதலான விலைக்கு விற்றுள்ளது.
பீட் தாலுக்கா பந்தர்யாச்சிவாடி கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி சுனிதா மகர் அதைவிட குறைவாகத் தான் செலவழித்துள்ளார். ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் அவரது 40 வயது கணவர் பரத்திற்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டபோது ரெம்டெசிவர் ஊசி ஒன்றுக்கு ரூ.25,000 கொடுத்தார். அவருக்கு 6 ஊசிகள் தேவைப்பட்ட போதும் ஒன்று தான் சட்டப்பூர்வமாக கிடைத்தது. “ஊசிக்கு மட்டும் நான் ரூ.1.25 லட்சம் செலவிட்டேன்,” என்கிறார் அவர்.
37 வயது சுனிதா ஊசி கேட்டு நிர்வாகத்திடம் சமர்ப்பித்தபோது, கிடைக்கும்போது தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். “நாங்கள் 3-4 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை. எங்களால் மேலும் காத்திருக்க முடியாது,” என்கிறார் அவர். “நோயாளிக்கு நேரத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். எனவே எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம்.”
ரெம்டெசிவர் ஊசியை தேடி நேரம் கழிந்த பிறகு கள்ளச்சந்தையில் கிடைத்தது. இரண்டு வாரங்கள் கழித்து மருத்துவமனையில் பரத் இறந்துவிட்டார். “என் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் கடன் வாங்கியியுள்ளேன்,” என்கிறார் சுனிதா. “10 பேர் சேர்ந்து தலா ரூ.10,000 என கொடுத்துள்ளனர். நான் என் கணவரையும், பணத்தையும் இழந்துவிட்டேன். எங்களைப் போன்ற மக்களுக்கு மருந்துகள்கூட கிடைப்பதில்லை. நீங்கள் பணக்காரராக, செல்வாக்கு மிக்கவராக இருந்தால் தான் அன்பானவர்களை காக்க முடியும்.”
பீடில் சுனிதாவைப் போன்ற பல குடும்பங்களையும் ரெம்டெசிவர் தேடல் சிதைத்துவிட்டது. “படிப்பை தொடர்ந்து கொண்டே என் மகன்தான் வயல் வேலைக்கு உதவ வேண்டும்,” என்கிறார் அவர். கடனை அடைப்பதற்கு பிறரது வயலிலும் வேலை செய்யும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. “சில நாட்களில் வாழ்க்கையே தடம்புரண்டுவிட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இங்கு நிறைய வேலைவாய்ப்புகளும் கிடையாது.”
பீடில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை காரணமாக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை தேடி நகரங்களுக்கு பெருமளவில் புலம்பெயர்ந்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலை அதிகமுள்ள மராத்வாடா பிராந்தியத்தின் இம்மாவட்டத்தில் 94,000 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை 2,500 பேர் இறந்துள்ளனர். பருவநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, கடன் சுமை போன்றவை விவசாயிகளையும், இம்மாவட்ட மக்களையும் பீடித்துள்ள நிலையில் ரெம்டெசிவர் மருந்தை சட்டவிரோதமாகப் பெறுவதற்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாநில அரசின் தொலைநோக்கு பார்வையின்மையே ரெம்டெசிவர் கள்ள வர்த்தகம் செய்யப்படுவதற்கு காரணம் என்கிறார் டாக்டர் போன்டுவி. “கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையின் போது எண்ணிக்கை அதிகரித்ததைக் காண முடிந்தது. ஏப்ரல் மாதம் தினமும் 60,000 பேருக்கு [மாநிலத்தில்] தொற்று உறுதி செய்யப்பட்டது.”
சராசரியாக 10 சதவீதம் கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார் மருத்துவர். “அவர்களில் 5-7 சதவீதம் பேருக்கு ரெம்டெசிவர் தேவைப்படுகிறது.” அதிகாரிகள் தேவையை கணக்கிட்டு சமர்ப்பித்து மருந்தை கையிருப்பு வைக்க வேண்டும், என்கிறார் மருத்துவர் போண்டுவி. “தட்டுப்பாடு வந்தால் கள்ளச்சந்தை விற்பனை சூடுபிடிக்கும். உங்களுக்கு கள்ளச்சந்தையில் ஒருபோதும் குரோசின் விற்கப்படுவதில்லை.”
தனக்கு ரெம்டெசிவர் ஊசிகளை விநியோகத்தவரைப் பற்றி சுனிதா எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் சொல்கிறார்: “அவர் என் தேவைக்கு நேரத்திற்கு உதவினார். என்னால் அவரை காட்டிக்கொடுக்க முடியாது.”
மஜல்கான் தனியார் மருத்துவமனை ஒன்றின் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் மருந்து எப்படி கள்ளச்சந்தைக்கு செல்கிறது என்பது பற்றி குறிப்பளித்தார்: “ஊசி கேட்டவர்கள் பற்றிய பட்டியல் நிர்வாகத்திடம் இருக்கும். பல தருணங்களில் மருந்து வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். அந்த சமயத்தில் நோயாளி குணமடைவார் அல்லது இறந்துவிடுவார். எனவே ஊசி எங்கே சென்றது என்பதை அவர்களின் உறவினர்கள் பின்தொடர்வதில்லை?”
எனினும் பீடில் கள்ளச்சந்தையில் மருந்துகள் பெருமளவு விற்கப்படுவது பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறார் மாவட்ட நீதிபதி ஜகதப்.
பீட் நகர நாளேடான தைனிக் கார்யாரம்பில் வேலை செய்யும் பத்திரிகையாளர் பாலாஜி மர்குடி, அரசியல்வாதிகளின் தொடர்புகளில் தான் பெரும்பாலான ரெம்டெசிவர்கள் சட்டவிரோதமாக கொள்முதல் செய்யப்படுகிறது என்கிறார். “பல்வேறு கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்கள் அவற்றைப் பெறுகின்றனர்,” என்கிறார் அவர். “நான் பேசிய பெரும்பாலானோர் மேற்கொண்டு எந்த தகவலையும் சொல்வதில்லை. அவர்கள் அஞ்சுகின்றனர். திரும்பச் செலுத்த முடியாத அளவிற்கு அவர்கள் பணத்தை கடன் வாங்குகின்றனர். நிலத்தை, நகைகளை விற்கின்றனர். ரெம்டெசிவருக்காக காத்திருக்கும் போது பல நோயாளிகள் இறந்துள்ளனர்.”
கரோனா தொற்று ஏற்பட்டு நோயாளியின் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கும் முன்பான ஆரம்ப நிலைகளில் ரெம்டெசிவர் பயன் தருகிறது என்கிறார் டாக்டர் போண்டுவி. “இது இந்தியாவில் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. நோயாளிகள் தொற்று தீவிரமடைந்த பிறகு தான் மருத்துவமனைக்கு வருகின்றனர்.”
இதுதான் ரவி பாப்டி பெற்றோருக்கும் நிகழ்ந்தது.
பீடில் ரெம்டெசிவருக்கு தட்டுப்பாடு நிலவியதால் கள்ளச்சந்தையில் பெருமளவு கிடைத்தது. மாநில அரசு நிர்ணயித்த ஒரு ஊசியின் விலை ரூ.1,400 என்பது கள்ளச்சந்தையில் ரூ.50,000 வரை உயர்ந்தது
சோலாப்பூர் மருத்துவமனைக்கு அர்ஜூனும், கீதா பாப்டியும் சேர்க்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இறந்துவிட்டனர். “நான்கு மணி நேர பயணம் அவர்களின் நிலைமையை மோசமாக்கிவிட்டது. சாலைகள் மோசமாக இருந்ததும் ஒரு காரணம்,” என்கிறார் ரவி. “ஆனால் எனக்கு வேறு வழியில்லை. பீடில் ரெம்டெசிவர் கிடைக்க நான் ஐந்து நாட்கள் காத்திருந்தேன்.”
பெற்றோர் இறந்ததை அடுத்து ரவி ஹர்கி நிம்கானில் உள்ள வீட்டில் தனியாக இப்போது வசித்து வருகிறார். அவரது மூத்த சகோதரர் ஜலிந்தர் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜல்னாவில் வசிக்கிறார். “நான் வினோதமாக உணர்கிறேன்,” என்கிறார் ரவி. “என் சகோதரர் என்னுடன் வந்து தங்கலாம், ஆனால் அவருக்கு வேலை இருக்கிறது. அவர் ஜல்னா திரும்ப வேண்டி உள்ளதால் நான் தனியாக இருக்க பழகிக் கொள்வேன்.”
ரவி தனது தந்தையின் விளைநிலத்தில் பருத்தி, சோயாபீன், துவரை பயிரிட்டபோது உதவி செய்துள்ளார். “அவர்தான் பெரும்பாலான வேலைகளைச் செய்வார். நான் சிறிளவுக்கு உதவுவேன்,” என்று தனது படுக்கையில் அமர்ந்தபடி சொல்கிறார் ரவி. மிக அதிகமான பொறுப்புகளை விரைவாக சுமத்தப்பட்ட ஒருவரின் கவலையை அவரது கண்கள் காட்டுகின்றன. “என் தந்தை ஒரு தலைவர். நான் அவரை பின்தொடர்ந்தேன்.”
நிலத்தில் விதைத்தல் போன்ற திறன்மிக்க பணிகளில் அர்ஜூன் கவனம் செலுத்துவார். தொழிலாளர்களுக்கு கூலி போன்ற விஷயங்களை ரவி கவனித்துக் கொள்வார். கடந்தாண்டு ஜூன் மத்தியில் தொடங்கிய விதைப்பு காலத்தின்போது, ரவி தனது தந்தையின் பாரத்தையும் சேர்த்தே சுமந்துள்ளார். இதுவே அவருக்கு வழிகாட்டுதலின்றி தனியாக விவசாய வேலைகளைச் செய்வதற்கான அச்சுறுத்தலாக இருந்தது.
ஐந்து நாட்கள், 200 கிலோ மீட்டர் பயணித்து ரூ.27,000 செலவிட்டு தேடி அலைந்தும் ரவிக்கு ரெம்டெசிவர் கிடைக்கவில்லை.
தமிழில்: சவிதா