செப்டம்பர் 10ம் தேதி, பெரும்பாலும் கோண்டு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த சில நூறு விவசாயிகள், பஸ்டர் மாவட்டத்தின் தலைநகரான ஜக்தல்பூரில் இருந்து, சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு டிராக்டரிலும், நடந்தும் பேரணியாக சென்றனர். அதன் தொலைவு 280 கிலோமீட்டர் ஆகும். கொடேபாட் கிராமத்தில் சாலையோரத்தில் அவர்கள் ஓய்வெடுப்பதற்காக தங்கியிருந்தபோது நான் அவர்களை சந்தித்தேன். தரையில் அவர்கள் எடுத்து வந்திருந்த பொருட்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் சிறிய பைகள் இருந்தன. அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது, அவர்கள் ஹல்பி அல்லது கோண்டி மொழி பேசுகிறார்கள்.
“நாங்கள் ஜக்தல்பூரில் உள்ள தண்டேஸ்வரி கோயிலில் இருந்து செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடக்க துவங்கினோம். நாங்கள் செப்டம்பர் 18ம் தேதி ராய்ப்பூர் சென்றடைவோம்“ என்று பாஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனுராம் காஷ்யப் கூறுகிறார். “முதலமைச்சர் ராமன் சிங், எங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் மற்ற கோரிக்கைகளையும் கொடுக்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் அனைவரும் சிறு விவசாயிகள். எங்கள் நிலங்கள் மழையை நம்பியுள்ளது. மழை பொழியாவிட்டால், விவசாயம் செய்ய முடியாது. எங்களின் 2 முதல் 3 ஏக்கருக்கு கடன்கள் உள்ளன. எனது தந்தை மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.60 ஆயிரம், 2012ம் ஆண்டு கடனாக வாங்கினார். அதில் ஒரு பகுதியை திரும்ப செலுத்திவிட்டு, அவர் 2014ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். தற்போது வங்கியில் எங்களுக்கு 2 லட்ச ரூபாய் கடன் உள்ளதாக கூறுகிறார்கள். எனவே ராய்ப்பூர் நோக்கிய இந்த பேரணியில் நான் கலந்துகொண்டுள்ளேன்“ என்கிறார்.
பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள புருங்பால் கிராமத்தைச் சேர்ந்த குணா நாக், தான் எவ்வாறு டிராக்டர் வாங்கிவிட்டு, நிதிநிறுவனத்தால் ஏமாற்றப்பட்டேன் என்றும், அவர்கள் எவ்வாறு டிராக்டரை திரும்ப எடுத்துக்கொண்டார்கள் என்ற கதையை என்னிடம் கூறினார். இதுபோன்ற கதைகள் பாஸ்டரில் வழக்கமான ஒன்றுதான். படிக்காத விவசாயிகள் அவர்களுக்கு உதவக்கூடிய இடைத்தரகர்களால் வங்கி அல்லது நிதிநிறுவனங்களிடம் அதிகமான வட்டிக்கு கடன் பெற்று ஏமாந்து விடுகிறார்கள். பின்னர் கொஞ்சம் பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். இதுபோன்ற முறைகேடுகளை விசாரிப்பதற்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட டிராக்டர்களை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, பயிர் காப்பீட்டுக்கு முழு தொகை, விவசாய வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் ரத்து ஆகியவை அவர்களின் மற்ற கோரிக்கைகள். “நாங்கள் எங்களின் கோரிக்கைகளை அமைதியான முறையில் முதலமைச்சரிடம் எடுத்துரைப்போம். எங்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைத்தரகர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்கிறோம்“ என்று சோனு கஷ்யப் கூறுகிறார். “எங்களின் பிரச்னைகளை நாங்கள் அவரிடம் கூறுவோம்“ என்று அவர் மேலும் கூறினார்.
தமிழில்: பிரியதர்சினி. R.