காதலிக்க ஏன் பயப்பட வேண்டும்... காதல் குற்றமல்ல... இது போல் மூச்சுத்திணறி ஏன் இறக்க வேண்டும்…
60களில் வெளியான முகல் இ ஆசாம் படத்தில் இடம்பெற்றிருக்கும் இப்பாடலை வித்தி முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். மத்திய மும்பையில் புதிதாக வாடகைக்கு எடுத்திருக்கும் அறையிலுள்ள அவர், பாடலை நடுவே நிறுத்திவிட்டு கேட்கிறார், “நாங்களும் குற்றம் ஏதும் செய்யவில்லை. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என.
அவரது கேள்வி வெற்றுப் பேச்சுக்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. பதிலை வேண்டும் கேள்வி அது. கொல்லப்படுவோம் என்கிற அச்சம் அவரைப் பொறுத்தவரை நிஜம். வகுப்புத் தோழரான ஆருஷியை காதலித்து குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்தே அந்த அச்சத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார். காதலில் இருக்கும் இருவரும் மணம் முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் சட்டப்பூர்வமாக அவர்கள் இணைவதற்கான பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் கடும் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அவர்களின் உறவை அவர்களது குடும்பங்களும் அங்கீகரிக்காது; பிறப்பால் நேர்ந்த பெண் என்கிற அடையாளத்துடன் ஆருஷி நடத்தும் போராட்டத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆருஷி திருநம்பியாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். தற்போது ஆருஷ் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
மெட்ரோ நகரத்துக்கு இடம்பெயர்ந்த பின்னர் பெற்றோரிடமிருந்து தப்பி விட்டதாக நினைத்தார்கள். வித்தியின் குடும்பம் தானே மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருக்கிறது. அங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பல்கர் மாவட்டத்தில் ஆருஷின் கிராமம் இருக்கிறது. 22 வயது வித்தி, மகாராஷ்டிராவின் பிற்படுத்தப்பட்ட சமூகமான அக்ரி சமூகத்தைச் சேர்ந்தவர். 23 வயது ஆருஷ் பிற்படுத்தப்பட்ட சமூகமான குன்பி சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் கிராமங்களில் வழங்கப்படும் படிக்கிரமத்தின்படி அவரது சமூகம் அக்ரி சமூகத்தை விட கீழ் நிலையிலிருப்பதாக கருதப்படுகிறது.
வீட்டை விட்டு இருவரும் மும்பைக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. திரும்பிச் செல்லும் திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லை. ஆருஷ், அவரது குடும்பம் குறித்து அதிகம் பேசவில்லை. எனினும் “நான் ஒரு மண்வீட்டில்தான் வாழ்ந்தேன். எப்போதும் அது எனக்கு அவமானகரமாக இருந்திருக்கிறது. என் தாயுடன் அதைக் குறித்து சண்டை போட்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.
ஆருஷின் தாய் ஒரு முட்டை ஆலையில் பணிபுரிகிறார். மாதந்தோறும் 6,000 ரூபாய் ஈட்டுகிறார். “அப்பாவை பற்றி கேட்காதீர்கள். அவர் கிடைத்த வேலைகளை செய்தார். தச்சு வேலை, விவசாயக் கூலி வேலை போன்றவற்றை செய்தார். சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் குடித்தே அழிப்பார். வீட்டுக்கு வந்து எங்களையும் அம்மாவையும் அடிப்பார்,” என்கிறார் ஆருஷ். பின்னர் அவரது அப்பா நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்வதை நிறுத்தி அம்மாவின் வருமானத்தில் வாழ்ந்தார். இந்தச் சமயத்தில்தான் ஆருஷும் பள்ளி விடுமுறை காலத்தில் செங்கல் சூளை, ஆலைகள், மருந்தகம் போன்ற இடங்களில் கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார்.
*****
வித்தியை முதன்முதலில் சந்திக்கும்போது ஆருஷ் 8ம் வகுப்பில் இருந்தார். அவர் சேர்ந்த புதிய பள்ளியில் வித்தியை சந்தித்தார். இப்பள்ளிக்கு செல்ல அவர் நான்கு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். “என் கிராமத்திலிருந்த ஜில்லா பரிஷத் பள்ளியில் 7ம் வகுப்பு வரைதான் இருந்தது. அதற்குப் பிறகு வேறு பள்ளிக்கு நாங்கள் செல்ல வேண்டும்,” என்கிறார் அவர். புதுப்பள்ளியில் சேர்ந்த முதல் வருடத்தில் இருவரும் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. “அக்ரி சமூக மக்களுடன் நாங்கள் பழகுவதில்லை. அவர்களுக்கென தனிக்குழு உண்டு. அதில்தான் வித்தி இருந்தார்,” என்கிறார் ஆருஷ்.
9ம் வகுப்பு படிக்கும்போது அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. ஆருஷ் வித்தியை விரும்பத் தொடங்கினார்.
ஒருநாள் வித்தி விளையாடும்போது அவருடன் இணைந்த ஆருஷ் தன் உணர்வுகளை அவரிடம் ரகசியமாக வெளிப்படுத்தினார். தயக்கத்துடன் தன் விருப்பத்தைக் கூறினார். என்ன சொல்வதென வித்திக்கு தெரியவில்லை. அவர் ஊசலாட்டம் கொண்டார். “ஒரு பெண்ணுடன் இருந்த உறவை குறித்து ஆருஷ் சொன்னார். அதில் தப்பில்லை. ஆனால் அவர்களுக்கு (இரு பெண்களுக்கு) உறவு இருந்தது புதிதாக இருந்தது,” என்கிறார் வித்தி.
”முதலில் மறுத்தேன். கொஞ்ச காலம் கழித்து இறுதியில் நான் ஒப்புக் கொண்டேன். ஏன் ஒப்புக் கொண்டேன் எனத் தெரியவில்லை. ஆனால் ஒப்புக் கொண்டுவிட்டேன். எனக்கு அவரைப் பிடித்திருந்தது. நல்லது கெட்டது பற்றி என் மனம் யோசிக்கவில்லை,” என்கிறார் வித்தி. “எங்களைப் பற்றி எங்கள் வகுப்பில் யாருக்கும் தெரியாது,” என்னும் அவர் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். “உலகைப் பொறுத்தவரை இரண்டு பெண்களான நாங்கள் நல்ல தோழிகள். அவ்வளவுதான்.”
விரைவிலேயே இருவரின் சாதிகளை குறிப்பிட்டு உறவினர்கள் அவர்களது நட்பை விமர்சிக்கத் தொடங்கினர். “எங்களின் (குன்பி) மக்கள் ஒரு காலத்தில் அக்ரி வீடுகளின் பணியாளர்களாக பார்க்கப்பட்டார்கள். தாழ்ந்த சாதியாக கருதப்பட்டார்கள். அது ரொம்ப காலத்துக்கு முந்தைய நிலை. ஆனால் சிலர் அதே மனநிலையை இன்னும் கொண்டிருக்கின்றனர்,” என விளக்குகிறார் ஆருஷ். சில வருடங்களுக்கு முன் எதிர்பாலின ஈர்ப்பு காதலர்கள் ஊரை விட்டு ஓடியபோது நேர்ந்த பயங்கரமான சம்பவத்தை அவர் நினைவுகூருகிறார். ஒருவர் குன்பி சமூகத்தை சேர்ந்தவர். இன்னொருவர் அக்ரி சமூகத்தை சேர்ந்தவர். அவர்களின் குடும்பங்கள் அவர்களை விரட்டிச் சென்று அடித்துப் போட்டனர்.
தொடக்கத்தில் ஆருஷின் தாய்க்கு அவர்களின் நட்பில் ஒன்றும் பிரச்சினை இருக்கவில்லை. இரு சிறுமிகள் தோழிகளாக இருப்பதாக மட்டுமே அவர் பார்த்தார். ஆனால் ஆருஷ் அடிக்கடி வித்தி வீட்டுக்கு செல்வது அவருக்கு கவலையைக் கொடுத்தது. அந்த வழக்கத்தை முறியடிக்க அவர் முயற்சித்தார்.
வீட்டு கட்டுமானங்களுக்கான மூலப்பொருட்களை வழங்கும் வேலையில் வித்தியின் தந்தை இருந்தார். வித்திக்கு வயது 13 ஆக இருக்கும்போதே பெற்றோர் பிரிந்துவிட்டனர். தந்தை மறுமணம் செய்து கொண்டார். அவர் தந்தையுடனும் சித்தியுடனும் நான்கு உடன் பிறந்தோருடனும் வசிக்கிறார். ஒரு மூத்த சகோதரர், இரண்டு சகோதரிகள் ஒரு தம்பி ஆகியோர் அவருக்கு இருக்கின்றனர். சித்திக்கு ஆருஷை பிடிக்காது. அடிக்கடி அவருடன் வாக்குவாதம் வரும். வித்தியின் மூத்த சகோதரர் 30 வயதுகளில் இருக்கிறார். அவ்வப்போது தந்தையுடன் பணியாற்றுவார். குடும்பத்தை கட்டுப்படுத்தும் ஆதிக்கம் கொண்டவர். சகோதரிகளை அடிக்கக் கூடியவர் அவர். துன்புறுத்தும் தன்மை கொண்டவர்.
அதே சகோதரர்தான் வித்தி ஆருஷை பார்க்க விரும்பும் சில நேரங்களில் வித்தியைக் கொண்டு சென்று ஆருஷ் வீட்டில் விடுவார். “என் சகோதரர் சில கருத்துகளை சொல்வார். ஆருஷை அவருக்கு பிடித்திருக்கிறது என்பார். எரிச்சலாக இருக்கும். என்ன செய்வதென எங்களுக்கு தெரியவில்லை,” என வித்தி நினைவுகூருகிறார். “ஆருஷ் அமைதி காத்தார். நாங்கள் சந்திக்க வேண்டுமென்பதற்காக சகோதரரின் முனைப்பை சகித்துக் கொள்வார்.”
ஒரு கட்டத்தில் வித்தியின் சகோதரரும் ஆருஷின் வீட்டுக்கு வித்தி செல்வதை தடுக்கத் தொடங்கினார். “ஆருஷிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததாலா அல்லது எங்களின் நெருக்கம் அதிகரித்ததாலா எனத் தெரியவில்லை. அவர் எதிர்க்கத் தொடங்கினார்,” என்கிறார் அவர். சகோதரியும் அவரிடம் ஆருஷ் ஏன் அடிக்கடி வீட்டுக்கு வருகிறார் என்றும் செல்பேசியில் அதிகம் தொடர்பு கொள்கிறார் என்றும் பல குறுந்தகவல்கள் அனுப்புகிறார் என்றும் கேட்கத் தொடங்கினார்.
இச்சமயத்திலெல்லாம் ஆருஷ் தன்னுடைய பாலின விருப்பத்தை வெளிப்படையாக பேசத் தொடங்கி, ஆணின் உடலுக்கான தன் விருப்பத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார். அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரே நபராக வித்தி மட்டும்தான் இருந்தார். “திருநம்பி என்றால் என்னவென எனக்கு அப்போது தெரியவில்லை,” என்கிறார் ஆருஷ். “ஆண் உடலுக்குள் இருக்க வேண்டுமென உள்ளூர நான் உணரத் தொடங்கி விட்டேன்.”
ட்ராக் பேண்ட்கள், கார்கோ பேண்ட்கள், டி ஷர்ட்கள் போன்றவற்றை உடுத்த அவர் விரும்பினார். ஆணைப் போல் வெளிப்படையாக உடை அணிய அவர் எடுத்த முயற்சிகள் அவரது தாயை கலக்கத்துக்குள்ளாக்கியது. அந்த உடைகளை அவர் ஒளித்து வைக்கவும் கிழித்து போடவும் முயன்றார். ஆணைப் போல் அவர் உடை அணியும்போது அவரது தாய் அவரை அடிக்கவும் திட்டவும் கூடத் தொடங்கினார். பெண்ணுக்கான உடைகளை அவர் வாங்கிக் கொடுத்தார். “சல்வார் கமீஸ் அணிய எனக்கு விருப்பம் இல்லை,” என்கிறார். அவர் சல்வார் கமீஸ் அணிந்த ஒரே இடம் பள்ளிக்கூடம். ஏனெனில் அதுதான் அங்கு பெண்களுக்கான சீருடை. அது அவரை “திணற வைத்ததாக” ஒப்புக் கொள்கிறார்.
ஆருஷ் 10ம் வகுப்பு படிக்கும்போது மாதவிடாய் தொடங்கியது. அவரது தாய் ஓரளவுக்கு நிம்மதி அடைந்தார். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. ஒரு வருடத்தில் ஆருஷின் மாதவிடாய் சுழற்சி மாறத் தொடங்கி ஒரு கட்டத்தில் நின்று போனது. தாய் அவரை மருத்துவர்களிடமும் ஹீலர்களிடமும் அழைத்துச் சென்றார். ஒவ்வொருவரும் பல்வேறு மாத்திரைகளையும் மருந்துகளையும் கொடுத்தனர். ஆனால் நிலை மாறவில்லை.
அண்டை வீட்டாரும் ஆசிரியர்களும் பள்ளி தோழர்களும் அவரை கேலி செய்தனர். “’பெண்ணை போல் இரு. எல்லைகளுக்குள் நில்’ என அவர்கள் சொல்வார்கள். திருமணமாகும் வயது வந்துவிட்டது என்பது எனக்கு உணர்த்தப்பட்டுக் கொண்டே இருந்தது.” வித்தியாசமாக உணரக் கட்டாயப்படுத்தப்பட்டதால் ஆருஷ் அவர் மீதே சந்தேகம் கொள்ளத் தொடங்கினார். அவரையே அவர் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். “தவறாக ஏதோ செய்துவிட்டதைப் போன்ற உணர்வுக்கு ஆட்பட்டேன்,” என்கிறார் அவர்.
11ம் வகுப்பு படிக்கும்போது ஆருஷ் ஒரு செல்பேசி வாங்கினார். ஆணாக மாறுவதற்கான பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை பற்றிய தகவல்களை பல மணி நேரங்கள் இணையத்தில் செலவழித்து தெரிந்து கொண்டார். தொடக்கத்தில் வித்திக்கு தயக்கம் இருந்தது. “அவர் இருக்கும் நிலையிலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்தது. அவர் ஆரம்பத்திலிருந்து நேர்மையாக இருந்தார். உடல்ரீதியாகவே அவர் மாற விரும்பினார். ஆனால் அது அவரது இயல்பை மாற்றாது,” என்கிறார் அவர்.
*****
2019ம் ஆண்டில் 12ம் வகுப்புக்கு பிறகு வித்தி படிப்பை நிறுத்தினார். காவல்துறை அதிகாரியாக விரும்பிய ஆருஷ், பல்கரின் காவலர் நியமனத் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அவர் ஆருஷி என பெண்ணாகதான் விண்ணப்பிக்க முடிந்தது. 2020ம் ஆண்டில் நடக்கவிருந்த தேர்வுகள் கோவிட் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. எனவே அவர் தொலைதூரக் கல்வியில் இளங்கலை படிப்பு படிப்பதென முடிவெடுத்தார்.
ஆருஷுக்கும் வித்திக்கும் ஊரடங்கு கடுமையானதாக இருந்தது. வித்தியின் வீட்டில் திருமணத்துக்கான பேச்சைத் தொடங்கினார்கள். ஆனால் ஆருஷுடன் இருக்க அவர் விரும்பினார். வீட்டை விட்டு ஓடுவதுதான் ஒரே வழியாக இருந்தது. அதற்கு முன்பெல்லாம் ஓடிப் போய் விடலாமென ஆருஷ் சொன்ன போது அவர் ஒப்புக் கொள்ளவில்லை. “அச்சத்தை அளிப்பதாக அது இருந்தது. வீட்டை விட்டு வெளியேறுவது அத்தனை சுலபமான காரியமல்ல,” என்கிறார் அவர்.
ஊரடங்குக்கு பிறகு ஆகஸ்ட் 2020லிருந்து ஓர் உற்பத்தி ஆலையில் ஆருஷ் பணிபுரியத் தொடங்கினார். 5000 ரூபாய் மாத வருமானம் ஈட்டினார். “நான் வாழ விரும்பிய விதத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. மூச்சுத்திணறுவது போல் இருந்தது. ஓடிப் போவது மட்டும்தான் ஒரே வழியாக தெரிந்தது,” என்கிறார் அவர். தனக்கும் வித்திக்கும் அடைக்கலம் கேட்டு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் தரும் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை அவர் அணுகத் தொடங்கினார்.
அவமதிப்பு மற்றும் துன்புறுத்துதல் ஆகியவை பல மாற்றுப்பாலினத்தவர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வைக்கின்றன. மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்டு தேசிய மனித உரிமை ஆணையம் 2021ம் ஆண்டில் வெளியிட்ட மாற்றுப்பாலினத்தவர் குறித்த ஆய்வு ஒன்றில் “பாலின வெளிப்பாட்டை மறைக்கும்படி அவர்களின் குடும்பங்கள் அழுத்தம் கொடுக்கின்றன,” எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகம் காட்டும் இத்தகைய பாரபட்சத்தால் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் குடும்பத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.
ஆருஷுக்கும் வித்திக்கும் மும்பை செல்வது எளிதாக இருந்தது. ஆருஷால் அங்கு சுலபமாக அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள முடியும். எனவே 2021ம் ஆண்டின் மார்ச் மாதத்தின் ஒரு பிற்பகலில் மருத்துவமனைக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு வித்தி வீட்டை விட்டு வெளியேறினார். ஆருஷ் வேலைக்கு செல்வதாக சொல்லி வெளியே வந்தார். இருவரும் பேருந்து பிடிக்க ஒரு பொது இடத்தில் சந்தித்தனர். வருமானத்தின் மூலம் சேமித்த 15,000 ரூபாய் பணம் ஆருஷ் வைத்திருந்தார். தாயிடமிருந்த ஒரே தங்கச் சங்கிலி மற்றும் கம்மல்களையும் அவர் வைத்திருந்தார். தங்கத்தை விற்றதில் 13,000 ரூபாய் கிடைத்தது. “அதை விற்பதில் எனக்கு உடன்பாடில்லை. பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற கவலையும் இருந்தது. வீட்டுக்கு திரும்பும் வாய்ப்பு இல்லாததால் நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது,” என விளக்குகிறார்.
*****
மும்பையிலிருந்த தொண்டு நிறுவன தன்னார்வலர் சிலர், இருவரையும் உர்ஜா அறக்கட்டளை நடத்தும் பெண்களுக்கான காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. “இருவரும் வயது வந்தவர்கள் என்பதால், காவல்துறைக்கு செல்ல வேண்டிய சட்டரீதியான அவசியம் கிடையாது. ஆனால் பால்புதுமையரை உள்ளடக்கிய சிக்கலான வழக்குகளில், குடும்பங்களால் அதிக பாதிப்பு நேரும் வாய்ப்பு உண்டு என்பதால், பாதுகாப்புக்காக உள்ளூர் காவல்துறையின் பங்கையும் நாடினோம்,” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளரும் உர்ஜா அறக்கட்டளையின் திட்ட மேலாளருமான அன்கிதா கோஹிர்கர்.
ஆனால் அந்த நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தில் அதிகாரிகள் அவர்களை கேள்வி கேட்கத் தொடங்கினர். “கிராமத்துக்கு திரும்பும்படி அவர்கள் எங்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தனர். இத்தகைய உறவு நீடிக்காது எனக் கூறினர். இது தவறு என்றும் கூறினர்,” என நினைவுகூருகிறார் ஆருஷ். இருவரும் வெளியேறியதில் கோபத்துடன் இருந்த இரு தரப்பு பெற்றோருக்கும் காவல்துறை தகவல் கொடுத்தது. ஆனால் அதற்குள் ஆருஷை காணவில்லை என அவரது தாய் காவல்துறையில் புகாரளித்திருந்தார். வித்தியின் குடும்பம் ஆருஷின் குடும்பத்தினரை மிரட்ட சென்றது.
இருவரும் இருக்கும் இடம் தெரிந்ததும் அதே நாளில் குடும்பங்கள் மும்பைக்கு வந்து சேர்ந்தன. “அமைதியாக திரும்பும்படி அண்ணன் கூறினார். அவரை அதற்கு முன் அப்படி நான் பார்த்ததே இல்லை. காவலர்கள் இருந்த காரணத்தால் அவர் அப்படி பேசினார்,” என்கிறார் வித்தி.
ஆருஷின் தாயும் அவர்கள் திரும்ப வேண்டுமென வற்புறுத்தினார். “பெண்கள் காப்பகம் எங்களுக்கான சரியான இடம் கிடையாது எனச் சொல்லி காவலர்களும் அம்மாவிடம் எங்களை அழைத்துச் செல்லும்படி கூறினர்,” என ஆருஷ் நினைவுகூருகிறார். நல்லவேளையாக உர்ஜாவின் செயற்பாட்டாளர்கள் தலையிட்டு, இருவரையும் பெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லவிருந்ததை தடுத்து நிறுத்தினர். அம்மாவின் தங்கத்தை விற்று கிடைத்த பணத்தையும் ஆருஷ் திரும்பக் கொடுத்தார். “அது என்னிடம் இருப்பது நல்லதாக படவில்லை,” என்கிறார் அவர்.
கிராமத்தில் வித்தியின் குடும்பம் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக ஆருஷின் குடும்பத்தை சொல்லி, வித்தியை கட்டாயப்படுத்தி கொண்டு சென்று விட்டதாக குற்றம் சுமத்தியது. அவரின் சகோதரரும் உறவினர்களும் ஆருஷின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தனர். “பிரச்சினையை தீர்க்க என் சகோதரரை சந்திக்க அவர் (வித்தியின் சகோதரர்) கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் செல்லவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ஆருஷ்.
*****
மத்திய மும்பையின் காப்பகத்தில் வாழ்ந்தபோதும் ஆருஷும் வித்தியும் பாதுகாப்பாக உணரவில்லை. “யாரையும் எங்களால் நம்ப முடியவில்லை. கிராமத்திலிருந்து யாரேனும் வருவது எப்படி தெரியும்,” என்கிறார் ஆருஷ். எனவே அவர்கள் 10,000 ரூபாய் இருப்புத் தொகை செலுத்தி ஒரு வாடகை அறைக்கு குடிபுகுந்தனர். வாடகையாக 5,000 ரூபாய் மாதந்தோறும் கட்டுகின்றனர். “எங்களின் உறவை பற்றி அறை உரிமையாளருக்கு தெரியாது. நாங்கள் அந்த உண்மையை மறைத்திருக்க வேண்டும். அறையை காலி செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை,” என்கிறார் அவர்.
ஆருஷ் தற்போது பாலினத்தை உறுதி செய்யும் அறுவை சிகிச்சையில் கவனம் செலுத்த விரும்புகிறார். அறுவை சிகிச்சையும் மருத்துவ சிகிச்சையும் செய்ய வேண்டும். அந்த முறை, மருத்துவர்கள், கட்டணம் முதலியவற்றை பற்றி அவருக்கு தகவல் கிடைக்கும் இடங்கள் கூகுளும் வாட்சப் குழுக்களும் மட்டும்தான்.
ஒருமுறை அவர் மும்பை அரசு மருத்துவமனையை அணுகினார். ஆனால் மீண்டும் திரும்பிச் செல்லவில்லை. “எனக்கு உதவுவதற்கு பதிலாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெற்றோரை அழைத்து அவர்களின் ஒப்புதலை பெறும்படி கூட அவர் கூறினார். எனக்கு கடுமையான கோபம் வந்தது. அவர் இன்னும் பிரச்சினையை எனக்கு கடினமாக்கினார்,” என்கிறார் அவர்.
ஆருஷ் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அணுகியிருக்கிறார். ஆலோசனைக்கு பிறகு அவருக்கு பாலினம் குறித்த நிம்மதியற்ற மனநிலை இருப்பது கண்டறியப்பட்டது. உயிரியல் ரீதியிலான பாலினம் மற்றும் பாலின விருப்பம் ஆகிய இரண்டுக்கும் இடையே இருக்கும் பொருந்தா தன்மை கொடுக்கும் மன அழுத்தமும் நிம்மதியின்மையும் அவருக்கு இருந்தது. ஹார்மோன் சிகிச்சைக்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால் பாலின மாற்றம் அதிக செலவையும் காலத்தையும் வேண்டியது.
டெஸ்டோஸ்டெரோன் ஊசிகள் 21 நாட்களுக்கு ஒருமுறை போடப்பட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ.420. அதை செலுத்தும் மருத்துவருக்கான கட்டணம் ரூ.350. இன்னொரு 200 ரூபாய் இரு வாரத்துக்கு ஒரு முறை எடுக்க வேண்டிய மருந்துக்கு செலவாகி விடும். 2-3 மாதங்களுக்கு ஒருமுறை ஹார்மோன் சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளை பரிசோதிக்க ரத்தப் பரிசோதனைகளை ஆருஷ் செய்ய வேண்டும். பரிசோதனைகளுக்கான செலவு கிட்டத்தட்ட ரூ.5000. மனநல ஆலோசகருக்கான கட்டணம் ரூ.1,500. மருத்துவருக்கான கட்டணம் ஒவ்வொரு முறையும் ரூ.800லிருந்து ரூ.1000 ஆகும்.
சிகிச்சை பலன்களை கொடுத்தது. “எனக்குள் மாற்றங்களை உணர முடிந்தது,” என்கிறார் அவர். “என் குரல் இப்போது கனத்து விட்டது. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது,” என்னும் அவர் மேலும், “எரிச்சல் ஏற்பட்டு சில நேரங்களில் கட்டுப்பாட்டை நான் இழப்பதுண்டு,” என மருந்துகளின் பக்கவிளைவை விளக்குகிறார்.
வித்தி ஆருஷுடன் வந்தது குறித்து வருத்தப்பட்டு அவரை விரும்பாமல் போய்விடுவாரோ என்கிற அச்சம் ஆருஷுக்கு இருக்கிறது. “அவர் நல்ல (ஆதிக்க சாதி) குடும்பத்திலிருந்து வந்தவர்,” என்கிறார் ஆருஷ். “ஆனால் அவர் எப்போதும் என்னை கீழாக உணர வைத்ததில்லை. அவரும் வேலைக்கு சென்று எங்களுக்காக வருமானம் ஈட்டுகிறார்.”
ஆருஷின் இயல்பில் ஏற்படும் மாற்றங்களை குறித்து பேசுகையில் வித்தி, “எங்களுக்குள் சண்டைகள் வரும். ஆனால் நாங்கள் அப்பிரச்சினைகளை ஒன்றாக அமர்ந்து பேசி விடுவோம். இது என்னையும் பாதிக்கிறது. ஆனாலும் நான் அவர் பக்கம்தான்,” என்கிறார். கணிணி அல்லது செவிலியர் படிப்பு படிக்கும் யோசனையை அவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். பதிலாக குடும்பம் நடத்துவதற்கான வருமானம் ஈட்ட கிடைக்கும் வேலைகளை செய்கிறார். ஒரு தென்னிந்திய உணவகத்தில் பாத்திரம் கழுவி மாதம் 10,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் (2022ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்த வேலை பறிபோனது). இந்த வருமானத்தின் ஒரு பகுதி ஆருஷின் சிகிச்சைக்கு பயன்படுகிறது.
ஒரு கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்த்து ஈட்டும் 11,000 ரூபாய் வருமானத்தில் ஆருஷ் சேமிக்கிறார். அவருடன் பணிபுரிபவர் அவரை ஆணாக அடையாளம் கொள்கின்றனர். மார்பு சுருங்கவென ஒரு கச்சையை அவர் அணிகிறார். அது அவருக்கு வலி கொடுக்கிறது.
“நாங்கள் பணிகளுக்கு வேகமாக கிளம்பி விடுவதால், இருவரும் ஒன்றாக செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது. வேலையிலிருந்து அலுப்புடன் திரும்பி வருகிறோம். வாக்குவாதம் ஏற்படுகிறது,” என்கிறார் வித்தி.
செப்டம்பர் 2022 தொடங்கி டிசம்பர் 2022 வரை ஆருஷ் தன் சிகிச்சைக்கென 25,000 ரூபாய் செலவழித்திருக்கிறார். ஹார்மோன் சிகிச்சை முடிந்ததும் அவர் பாலினம் உறுதி செய்யும் அறுவை சிகிச்சை (பாலின மறுதேர்வு அறுவை சிகிச்சை என்றும் அறியப்படுகிறது) எடுத்துக் கொள்ள விரும்புகிறார். மார்பு மற்றும் பாலுறுப்பு மறுவடிவமைப்பை கொண்ட அந்த சிகிச்சைக்கு 5லிருந்து 8 லட்ச ரூபாய் வரை தேவைப்படும். அவரும் வித்தியும் கொண்டிருக்கும் வருமானத்தில் சேமிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் அவரால் அந்த தொகையைக் கட்ட முடியாது.
அறுவை சிகிச்சை முடியும்வரை தன் சிகிச்சை குறித்து குடும்பம் தெரிந்து கொள்ள வேண்டாமென ஆருஷ் விரும்புகிறார். முடியை வெட்டியது தெரிந்ததும் அம்மாவுடன் தொலைபேசியில் நேர்ந்த நீண்ட விவாதம் அவருக்கு நினைவில் இருக்கிறது. “மும்பையில் இருப்பவர்கள் என் தலைக்குள் தவறான எண்ணங்களை ஏற்றுவதாக அவர் கருதினார்,” என்கிறார் ஆருஷ். அவரை ஏய்த்து அவரின் தாய் கிராமத்துக்கு அருகே வரச் செய்து ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றார். “சாமியார் என்னை தாக்கத் தொடங்கி விட்டார். என் தலையில் அடித்தார். ‘நீ ஒரு பெண், ஆணல்ல’ என தொடர்ந்து அடித்தார்.” பயம் கொண்டு ஆருஷ் அங்கிருந்து தப்பி விட்டார்.
*****
“அரசாங்க மருத்துவர் நல்லபடியாக இருந்திருந்தால், இந்தளவுக்கு விலையுயர்ந்த சிகிச்சையை நான் நாடியிருக்க மாட்டேன்,” என்கிறார் ஆருஷ். மாற்றுப்பாலினத்தவர் (உரிமை பாதுகாப்பு) சட்டம் 2019 , மருத்துவப் பராமரிப்பு மற்றும் வசதி ஆகியவற்றை அரசாங்கம் அளிப்பதை உறுதி செய்கிறது. பாலினத்தை உறுதி செய்யும் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னுமான மனநல ஆலோசனை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவற்றையும் அரசாங்கம் கொடுக்க சட்டம் வழிவகை செய்கிறது. செலவுகள், மருத்துவக் காப்பீடு திட்டத்தின் வழியாக ஏற்கப்படுமென சட்டம் சொல்கிறது. அச்சட்டத்தின்படி அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்கான உரிமையை நிராகரிக்க முடியாது.
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சமூகநீதி மற்றும் நல்வாழ்வுக்கான ஒன்றிய அமைச்சகம் மாற்றுப்பாலினத்தவருக்கான பல நலத்திட்டங்களை 2022ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. மாற்றுப்பாலினத்தவருக்கான தேசிய இணையதளத்தையும் அது 2020ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அந்த தளத்தில் மாற்றுப்பாலினத்தவர் தங்களுக்கான அடையாளச் சான்றிதழையும் அடையாள அட்டையும் எந்த அலுவலகத்துக்கும் செல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்திட்டங்களில் பலவற்றை பற்றி தெரியாத ஆருஷ், அடையாள ஆவணங்களுக்காக விண்ணப்பித்திருக்கிறார். இதுவரை எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த இணையதளம் “மாவட்ட அதிகாரிகள் மாற்றுப்பாலினத்தவருக்கு அடையாளச் சான்றிதழ்களையும் அடையாள அட்டைகளையும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தியும் இதுதான் நிலை. 2023ம் ஆண்டின் ஜனவரி 2ம் தேதி வரை மகாராஷ்டிர அரசு 2080 விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது. அவற்றில் 452 விண்ணப்பங்களுக்கு இன்னும் தீர்வுகள் வழங்கப்படவில்லை.
அடையாளச் சான்றிதழ் இல்லாமல் இளங்கலைப் பட்டம் ஆருஷி என்கிற பெயரில் வழங்கப்படும் என ஆருஷ் கவலைப்படுகிறார். நிறைய ஆவணங்களை பிறகு திருத்த வேண்டியிருக்கும். இப்போதும் அவர் காவல் படையில் சேருவதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் ஓர் ஆணாக, அவரின் பாலினத்தை உறுதி செய்யும அறுவை சிகிச்சை முடித்து சேர விரும்புகிறார். பிகார் மாநிலத்தில் காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநம்பி பற்றிய செய்தி அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. ”அதைக் காணும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்குள் நம்பிக்கை பிறக்கிறது,” என்கிறார் ஆருஷ். அறுவை சிகிச்சைகளுக்காக அவர் வேலை பார்த்து சேமித்துக் கொண்டிருக்கிறார்.
மக்கள் அனைவரையும் ஏற்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார். அப்போதுதான் அவர்கள் ஊரையும் வீட்டையும் விட்டு ஓடி வந்து இப்படி ஒளிந்து வாழத் தேவையில்லை. “நான் நிறைய அழுதிருக்கிறேன். வாழ வேண்டாமென நினைத்திருக்கிறேன். ஆனால் ஏன் நாம் அச்சத்தில் வாழ வேண்டும்? ஒருநாள் எங்களின் பெயர்களை மறைக்காமல் உண்மையை சொல்ல நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார் ஆருஷ்
”முகல் இ ஆசாம் படத்தின் முடிவு துயரமானது. எங்களின் முடிவு அப்படி இருக்காது,” என்கிறார் வித்தி புன்னகையுடன்.
வித்தி மற்றும் ஆருஷின் பெயர்கள் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டிருக்கிறது
தமிழில் : ராஜசங்கீதன்