இரண்டாவது பிரசவத்திற்காக 2020 ஆகஸ்ட் மாதம் அஞ்சனி யாதவ் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் கணவர் வீட்டிற்கு அவர் திரும்பவில்லை. 31 வயதாகும் அஞ்சனி இரண்டு குழந்தைகளுடன் பீகாரின் கயா மாவட்டம் புத்தகயா வட்டாரம், பக்ரார் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய அவரது கணவரின் கிராமப் பெயரைக் கூட அவர் சொல்ல விரும்பவில்லை.

“அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த இரண்டு நாட்களில், வீட்டை சுத்தப்படுத்தி, சமையல் செய்யுமாறு என் பாபி [கணவரின் அண்ணி] கூறினார். பிரசவம் முடிந்து வந்தவுடன் வீட்டு வேலைகளை, தான் தொடங்கிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். என்னைவிட அவர் 10 வயது மூத்தவர். பிரசவத்தின்போது எனக்கு அதிகளவில் உதிரப்போக்கு ஏற்பட்டது. பிரசவத்திற்கு முன்பே எனக்கு இரத்தசோகை இருப்பதால் நிறைய பழங்கள், காய்கனிகளை செவிலியர் உண்ணச் சொன்னார். கணவர் வீட்டில் இருந்திருந்தால் என் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.”

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கையின்படி (NFHS-5), பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேங்களிலும் கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகள், பெண்களுக்கு இரத்த சோகை அதிகரித்துள்ளது என்கிறது.

குஜராத்தின் சூரத்தில் உள்ள துணி உற்பத்தி ஆலையில் அஞ்சனியின் 32 வயது கணவர் சுகிராமும் வேலை செய்கிறார். அவரால் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிற்கு வர முடியவில்லை. “எனது பிரசவத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் நிறுவனத்தில் அவரை நீக்கி விடுவார்கள். கரோனா காய்ச்சலுக்குப் பிறகு பொருளாதாரமாக, உணர்வுப்பூர்வமாக, உடல்நலமாக நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே அனைத்தையும் நான் தனியாக சமாளித்து வருகிறேன்.”

“அவர் இல்லாதபோது ஏற்படும் மோசமான சூழலில் இருந்து நான் தப்பிக்க நினைத்தேன். பிரசவத்திற்குப் பிறகு குழந்தையை பார்த்து கொள்ளவும், அன்றாட பணிகளில் எனக்கு உதவவும் யாரும் முன்வரவில்லை,” என்று அவர் பாரியிடம் சொன்னார். இம்மாநிலத்தில் லட்சக்கணக்கான பெண்களைப் போலவே அஞ்சனி யாதவும் உயர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பீகாரில் சுமார் 64 சதவீத பெண்கள் இரத்த சோகையில் உள்ளனர் என்கிறது NFHS-5 அறிக்கை.

“குழந்தைப் பெறும் வயதில் உள்ள பெண்களிடம் நிலவும் இரத்த சோகையை குறைக்கும் எந்த முயற்சியையும் இந்தியா இலக்காகக் கொள்ளவில்லை, 15 முதல் 49 வயதிலான 51.4 சதவீதம் பெண்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்கிறது கோவிட்-19 குறித்த 2020 உலக ஊட்டச்சத்து அறிக்கை .

PHOTO • Jigyasa Mishra

கடந்தாண்டு இரண்டாவது குழந்தை பிறந்தது முதல் அஞ்சனி யாதவ் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவர் தொலைவில் வசிப்பதால் புகுந்த வீட்டினர் அவருக்கு உதவுவதோ, கவனிப்பதோ இல்லை

ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தபோது அஞ்சனியும் எல்லா இந்திய பெண்களையும் போன்று அருகமையில் உள்ள அவரது கணவரது கிராமத்திற்கு வாழச் சென்றார். பெற்றோர், இரண்டு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள், குழந்தைகளை கொண்டது கணவரின் குடும்பம். அஞ்சனி 8ஆம் வகுப்பு வரையிலும், அவரது கணவர் 12ஆம் வகுப்பு வரையிலும் படித்துள்ளனர்.

பீகாரின் பதின்பருவ குழந்தைப் பேறு 15-19 வயது பிரிவினர் 77 சதவீதம் என்கிறது NFHS-5. மாநிலத்தின் 25 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் சாதாரண உடல் நிறை குறியீட்டின் (BMI)  கீழ் உள்ளனர். 15 முதல் 49 வயது வரையிலான 63 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகையில் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது.

பக்ராரில் உள்ள பெற்றோர் வீட்டில் தாய், சகோதரர், அவரது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அஞ்சனி வசித்து வருகிறார். கயா நகரில் டெலிவரி செய்யும் பணியில் அவரது 28 வயது சகோதரர் ஈடுபட்டுள்ளார். அஞ்சனியின் தாய் வீடுகளில் வேலை செய்கிறார். “ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.15,000. ஆனால் நான் இங்கு தங்குவதை பிரச்னையாக யாரும் கருதவில்லை, நான் தான் அவர்களுக்கு கூடுதல் பாரமாக உணர்கிறேன்,” என்கிறார் அவர்.

“என் கணவர் சூரத்தில் சக பணியாளர்கள் மூன்று பேருடன் அறையை பகிர்ந்துகொண்டுள்ளார். போதிய பணத்தை சேமித்துக் கொண்டு அங்கு [சூரத்தில்] தனி வாடகை வீட்டில் வாழ்வதற்காக நான் காத்திருக்கிறேன், ” என்கிறார் அஞ்சனி.

*****

“வாருங்கள், என்னைப் போன்று மாமியார் கொடுமைகளை அனுபவிக்கும் என் தோழியிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன்,” என்கிறார் அஞ்சனி. நான் அவரைப் பின்தொடர்ந்து குடியாவின் வீட்டை அடைந்தேன். 29 வயது குடியாவிற்கு நான்கு பிள்ளைகள். அவருக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் மேலும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று அவரது மாமியார் கருத்தடைக்கு அனுமதிக்கவில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த குடியா தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்.

பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகள், பெண்களிடையே இரத்த சோகை அதிகரித்துள்ளது என்கிறது NFHS-5

“மூன்று மகள்களைப் பெற்ற பிறகு என் மாமியார் மகன் வேண்டும் என்றார். எனக்கு மகன் பிறந்த பிறகு வாழ்க்கை எளிதாகும் என நினைத்தேன். இப்போது மூன்று மகள்கள் உள்ளதால் இரண்டு மகன்கள் இருக்க வேண்டும் என்கிறார் அவர். என்னை கருத்தடை செய்து கொள்ளவும் அவர் அனுமதிக்கவில்லை,” என்று குடியா பாரியிடம் தெரிவித்தார்.

2011 கணக்கெடுப்பின்படி, குழந்தைகளின் விகிதாச்சாரத்தில் மூன்றாவது இடத்தில் கயா உள்ளது. 0-6 வயது வரையிலான குழந்தைகளின் மாவட்ட விகிதாச்சாரம் 960. அதுவே மாநிலத்தின் சராசரி 935.

அஸ்பெஸ்டாஸ், தகரம் வேயப்பட்ட இரண்டு அறை கொண்ட மண் வீட்டில் குடியா வசிக்கிறார். அங்கு கழிப்பறை கிடையாது. அந்த சிறிய வீட்டில் அவரது 34 வயது கணவர் சிவ்சாகர், மாமியார் மற்றும் குழந்தைகள் வசிக்கின்றனர். சிவ்சாகர் உள்ளூர் தாபாவில் உதவியாளராக உள்ளார்.

17 வயதில் திருமணமான குடியா பள்ளிக்குச் சென்றதே இல்லை. “எங்கள் குடும்பத்தில் ஐந்து மகள்களில் நான் முதலாவது. என் பெற்றோரால் என்னை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை,” என்று நம்மிடம் அவர் சொல்கிறார். “ஆனால் என் இரண்டு சகோதரிகள், எல்லோருக்கும் இளையவனான ஒரே சகோதரன் ஆகியோர் பள்ளிக்குச் செல்கின்றனர்.”

குடியா வீட்டின் பிரதான அறைக்கு வெளியே குறுகிய தெருவில் வெறும் நான்கடி அகலத்தில் எதிர் வீடு வந்துவிடுகிறது. அறையில் இரண்டு பள்ளி புத்தகப் பைகள் தொங்குகின்றன. “இவை எனது மூத்த மகள்களுடையது. அவர்கள் ஓராண்டாக அதை தொடுவதில்லை,” என்கிறார் குடியா. அவரது 10 வயது மகள் குஷ்புவும், 8 வயது வர்ஷாவும் கற்பதை தொடர்ந்து இழந்து வருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விடுக்கப்பட்ட முதல் தேசிய ஊரடங்கிற்கு பிறகு அங்கு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

PHOTO • Jigyasa Mishra

இன்னொரு ஆண் குழந்தை பெற வேண்டும் என்பதால் குடியா கருத்தடை செய்து கொள்ள அவரது மாமியார் அனுமதிக்கவில்லை

“என் இரு பிள்ளைகளுக்கும் ஒருவேளை மதிய உணவு முறையாக கிடைத்து வந்தது. இப்போது எங்களால் முடிந்ததைக் கொண்டு அனைவரும் வாழ்ந்து வருகிறோம்,” என்கிறார் குடியா.

பள்ளிகள் மூடப்பட்டது அவர்களின் பசியை இன்னும் அதிகரித்துவிட்டது. மூத்த மகள்கள் இருவருக்கும் மதிய உணவு இப்போது கிடைக்காத காரணத்தால் வீட்டிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அஞ்சனியின் குடும்பத்தைப் போன்று குடியா வீட்டிலும் நிலையான வேலை, உணவு பாதுகாப்பு கிடையாது. நிலையற்ற வேலைகளில் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.9,000 வருமானத்தையே ஏழு பேர் கொண்ட குடும்பம் சார்ந்துள்ளது.

2020 உலக ஊட்டச்சத்து அறிக்கையின்படி , “முறைசாரா பொருளாதார பணியாளர்கள் மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளனர். பெரும்பாலானோருக்கு சமூக பாதுகாப்பு, தரமான சுகாதார வசதி, ஆக்கப்பூர்வமான பலன்கள் என எதுவும் கிடைப்பதில்லை. ஊரடங்குகளின்போது வருமானத்திற்கு வழியில்லாத காரணத்தால் பலரும் தங்களது குடும்பத்திற்கு உணவளிக்க முடியாமல் தவிக்கின்றனர். பெரும்பாலானோருக்கு வருவாய் இழப்பு என்றால் உணவு கிடையாது அல்லது சிறந்த, குறைந்த சத்தான உணவு கிடைப்பதில்லை என்று பொருள்.”

அறிக்கையில் கூறப்படும் விஷயங்களுடன் குடியாவின் குடும்பம் கச்சிதமாக பொருந்துகிறது. அவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பசியில் போராடுகின்றனர். அவரது கணவருக்கும் நிலையான வேலை கிடையாது. குடும்பத்திற்குத் தேவையான சுகாதார வசதிகளும் கிடைப்பதில்லை.

*****

புத்தகயா வட்டாரத்தின் முசாஹர் தோலாவில் (பஸ்தி அல்லது காலனி) சூரியன் மறைந்த பிறகும் வாழ்க்கையும் இயல்பாகவே உள்ளது. மாநில பட்டியலினத்தவர்களில் விளிம்பில் உள்ள இச்சமூக பெண்கள் அன்றைய வீட்டு வேலைகளை முடித்த பிறகு மாலையில் ஒன்று திரண்டு குழந்தைகளுக்கு தலையில் பேண் பார்ப்பது, கதை பேசுவது போன்றவற்றைச் செய்கின்றனர்.

இரு பக்கமும் சாக்கடை ஓடும் குறுகிய தெருக்களைக் கொண்ட அவரவரது சிறிய வீடுகளின் வாசலில் அனைவருமே அமர்கின்றனர். “பன்றிகள், நாய்களுக்கு நடுவே வாழ்கிறோம், ஓ, இப்படித்தான் முசாஹர் டோலாஸ் பற்றி சொல்லியிருப்பார்கள் அல்லவா?” என்கிறார் 15 வயதில் திருமணமானது முதல் இக்காலனியில் வசிக்கும் 32 வயது மாலா தேவி.

கயா மாவட்ட தலைநகரில் உள்ள தனியார் சிகிச்சை மையத்தில் அவரது 40 வயது கணவர் லல்லான் அதிபசி தூய்மைப் பணியாளராக உள்ளார். கருத்தடை குறித்து அறியவில்லை என்றும் இப்போது நான்கு குழந்தைகளுக்குப் பதிலாக ஒன்று பெற்றிருக்கவே விரும்புகிறேன் என்கிறார் மாலா.

அவர்களின் மூத்த மகனான 16 வயது ஷம்பு மட்டுமே பள்ளியில் சேர்க்கப்பட்டு 9ஆம் வகுப்பு படிக்கிறான். “3ஆம் வகுப்பிற்கு பிறகு மகள்களை என்னால் படிக்க வைக்க முடியவில்லை. லல்லான் மாதம் ரூ.5,500 வருவாய் ஈட்டுகிறார். நாங்கள் ஆறு பேர் இருக்கிறோம். இது போதும் என்று நினைக்கிறீர்களா?” என்று அவர் கேட்கிறார். மாலாவிற்கு மூத்த மகனும், இளைய மகனும் உள்ளனர். மற்ற இருவரும் மகள்கள்.

PHOTO • Jigyasa Mishra

கருத்தடை குறித்து எனக்கு தெரியாது, இப்போது நான்கு பிள்ளைகளுக்கு பதிலாக ஒன்றை மட்டும் பெற்றிருக்கலாம் என நினைக்கிறேன்

இங்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இக்காலனியில் பள்ளிக்கு சென்று வந்த சில குழந்தைகளும் இப்போது செல்வதில்லை. மதிய உணவு கிடைக்காமல் பசியில் அவர்கள் வாடுகின்றனர் என்று பொருள். சாதாரண நேரங்களில் கூட இச்சமூகத்தின் ஒருசில பிள்ளைகள் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். சமூக பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, பொருளாதார அழுத்தம் போன்ற காரணங்களால் முசாஹர் குழந்தைகள் குறிப்பாக பெண் பிள்ளைகள் பள்ளிகளில் இடை நிற்கின்றனர். இது பிற சமூகத்தினரைவிட மிக அதிகம்.

பீகாரில் சுமார் 27 லட்சத்து 200 முசாஹர்கள் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது. பட்டியலினத்தவர்களில் துசாத்ஸ், சமர்சுகளுக்கு பிறகு மூன்றாவது மிகப்பெரும் குழுவாக இவர்கள் உள்ளனர். மாநிலத்தின் 1 கோடியே 65 லட்சத்து 7ஆயிரம் தலித்துகளில் இவர்கள் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். பீகாரின் மொத்த மக்கள்தொகையான 10 கோடியே 40 லட்சத்தில் 2.6 சதவீதம் பேர் இவர்கள் என்கிறது (2011) கணக்கெடுப்பு.

2018 OXFAM அறிக்கைபடி , 96.3 சதவீதம் முசாஹர்கள் நிலமற்றவர்கள், 92.5 சதவீதம் பேர் விவசாய தொழிலாளர்கள். உயர் சாதியினரால் தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் இச்சமூகத்தில் படித்தவர்கள் 9.8 சதவீதம் மட்டுமே. நாட்டின் தலித் சமூகத்தில் இது மிகவும் குறைவு. இச்சமூக பெண்களின் படிப்பறிவு சுமார் 1-2 சதவீதம் இருக்கும்.

புத்தருக்கு ஞானமளித்த புத்தகயாவில் படிப்பறிவு இவ்வளவு குறைவாக உள்ளது துரதிஷ்டவசமானது.

“நாங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவும், அவர்களுக்கு உணவளிக்கவும் படைக்கப்பட்டோம், பணமின்றி அதை எப்படி செய்வது?” என கேட்கிறார் மாயா. முந்தைய இரவு மீந்த சாதத்தை கிண்ணத்தில் வைத்து அவரது இளைய மகனிடம் தருகிறார். “உனக்கு கொடுக்க இதுதான் உள்ளது. சாப்பிடு அல்லது பட்டினி கிட,” என உதவியற்ற மனநிலையில் மகனிடம் குமுறுகிறார் அவர்.

PHOTO • Jigyasa Mishra
PHOTO • Jigyasa Mishra

இடது: கணவரின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரனையே வாழ்வாதாரத்திற்கு ஷிபானி சார்ந்திருக்கிறார். வலது: புத்தகயா முசாஹர் காலனி பெண்கள் தங்கள் வீடுகளின் வெளியே குறுகிய தெருவில் மாலையில் ஒன்று திரண்டுள்ளனர்

இக்குழுவில் உள்ள மற்றொரு பெண் 29 வயது ஷிபானி அதிபாசி. நுரையீரல் புற்றுநோயினால் அவரது கணவர் இறந்த பிறகு ஷிபானி தனது இரண்டு பிள்ளைகளுடன் எட்டு பேர் கொண்ட கணவர் குடும்பத்தினருடன் வாழ்கிறார். நேரடி வருவாய் ஆதாரம் இல்லாததால் கணவரின் சகோதரரையே அவர் சார்ந்துள்ளார். “எனக்கும், என் குழந்தைகளுக்கும் என தனியாக அவரிடம் நான் காய்கறி, பழங்கள், பால் வேண்டும் என்று கேட்க முடியாது. அவர் எங்களுக்கு அளிக்கும் எதையும் பெரிதாக நினைத்துக் கொள்கிறோம். பெரும்பாலான நாட்கள் நாங்கள் வடித்த சோற்றில் உப்பு, தண்ணீர் சேர்த்து உண்டு வாழ்கிறோம்,” என்று ஷிபானி பாரியிடம் சொல்கிறார்.

“பீகாரின் முசாஹர் மக்கள் தொகையில் கிட்டதட்ட 85 சதவீதம்,” என்று சொல்லும் OXFAM அறிக்கை “ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்” என்கிறது.

பீகாரின் கிராமங்களில் வசிக்கும் எண்ணிலடங்கா பிற தலித் பெண்களின் நிலையைத் தான் மாலா, ஷிபானியின் கதைகள் சொல்கின்றன.

பீகாரின் பட்டியலினத்தவர்களில் சுமார் 93 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். மாநில மாவட்டங்களில் கயாவில் அதிகளவாக30.39 சதவீத தலித்துகள் வாழ்கின்றனர். மஹாதலித் எனும் பிரிவிற்குள் முசாஹர்கள் வருகின்றனர்- பட்டியலினத்தவர்களில் இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் எனலாம்.

அஞ்சனி, குடியா, மாலா, ஷிபானி ஆகியோர் வெவ்வேறு சமூக, பொருளாதார பின்னணிகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவருக்குமுள்ள ஒற்றுமை- அவர்களின் உடல், நலம், வாழ்க்கை குறித்த முழுமையான கட்டுப்பாடு அவர்களிடம் கிடையாது. வெவ்வேறு தளங்களில் இருந்தாலும் வறுமையை எதிர்கொள்கின்றனர்.  மகப்பேற்றுக்குப் பிறகும் பல மாதங்களாக அஞ்சனி இரத்தசோகையுடன் போராடி வருகிறார். கருத்தடை செய்து கொள்ளும் திட்டத்தை குடியா கைவிட்டார். மாலாவும், ஷிபானியும் எவ்வித சிறப்பான எதிர்காலத்தையும் எதிர்பார்க்கவில்லை – வாழ்வதே போராட்டமாக இருக்கிறது.

அடையாளங்களைத் தவிர்ப்பதற்காக இக்கட்டுரையில் வரும் நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் அங்கமாக செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.

இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள். [email protected] என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.

ஜிக்யாசா மிஷ்ரா, பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகளை பற்றிய செய்திகளை சுயாதீன பத்திரிகையாளராக தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியத்தின் கீழ் வழங்கி வருகிறார். இக்கட்டுரையின் உள்ளடக்கம் எதிலும் தாகூர் குடும்ப அறக்கட்டளை தலையிடவில்லை.

தமிழில்: சவிதா

Jigyasa Mishra

جِگیاسا مشرا اترپردیش کے چترکوٹ میں مقیم ایک آزاد صحافی ہیں۔ وہ بنیادی طور سے دیہی امور، فن و ثقافت پر مبنی رپورٹنگ کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jigyasa Mishra
Illustration : Priyanka Borar

پرینکا بورار نئے میڈیا کی ایک آرٹسٹ ہیں جو معنی اور اظہار کی نئی شکلوں کو تلاش کرنے کے لیے تکنیک کا تجربہ کر رہی ہیں۔ وہ سیکھنے اور کھیلنے کے لیے تجربات کو ڈیزائن کرتی ہیں، باہم مربوط میڈیا کے ساتھ ہاتھ آزماتی ہیں، اور روایتی قلم اور کاغذ کے ساتھ بھی آسانی محسوس کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priyanka Borar

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Series Editor : Sharmila Joshi

شرمیلا جوشی پیپلز آرکائیو آف رورل انڈیا کی سابق ایڈیٹوریل چیف ہیں، ساتھ ہی وہ ایک قلم کار، محقق اور عارضی ٹیچر بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز شرمیلا جوشی
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha