சிறந்த பண்பாடுடைய ஒரு சிறு நகரம் அது. தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் நகரம், 17-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட ஆட்சியாளரான நிம்ம நாயுடுவின் பெயரை தனதாக்கிக் கொண்டது. நிம்ம நாயுடுவுக்கு கலையிலும், பொம்மைகளை செய்யும் கலையிலும் ஆர்வம் அதிகம். அந்தக் காலத்தில், 80 கலைஞர்களை அவரின் நகரத்துக்கு பொம்மை செய்யும் கலையை சிறப்பாக்குவதற்காகவே அழைத்து வந்திருக்கிறார்.
இன்று, அதிலாபாத்துக்கு செல்பவர்களும், அதற்கு அருகில் இருக்கும் குண்டலா நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்களும் மறக்காமல் இறங்கி பொம்மைகள் வாங்கிச்செல்லும் இடமாக இருக்கிறது நிர்மல் நகர்ப்பகுதி. ஆனால் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம் உள்ளது. ஒரு லட்சத்துக்குக் குறைவான நபர்கள் வாழும் நிர்மல் நகரில், மென்மரங்களை வைத்து செய்யும் பொம்மைக் கலையை 40 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகிறது.
நிர்மல் நகர் பொம்மைக் கலைஞர்களின் சிறப்பே அவர்களது தயாரிப்புகளின் சிறப்பம்சமாக பூக்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் வைத்திருக்கிறார்கள். மரங்களைப் பயன்படுத்துவதோடு, விலங்கு பொம்மைகளோ, பழங்களின் பொம்மைகளோ அவற்றின் வடிவத்தையும், அளவையும் மிகக் கச்சிதமான ஆய்ந்து அதை அப்படியே வடிக்கிறார்கள்.
பெயருக்கு ஏற்றாற்போல ‘கலாநகர்’ என்னும் காலணியில்தான் இந்த பொம்மைக் கலைஞர்கள் வசிக்கிறார்கள். (’கலா’ என்றால் கலை) பொம்மை செய்யும் இடத்துக்கு அருகிலேயே இந்தக் காலணியும் இருக்கிறது. நம்பள்ளி லிம்பையா என்பவர் இங்கு பிரசித்திபெற்ற கலைஞர். மிகச் சிறந்த பொம்மைக் கலைஞரான தனது தந்தையிடம் இருந்து இதைக் கற்றுக்கொண்டதைப் பெருமையாக சொல்கிறார். “பிறந்ததில் இருந்து இந்தக் கலையை பார்த்தும், கற்றுக்கொண்டும், வாழ்க்கையாகவே வாழ்ந்தும் வருகிறேன். இந்த கலை எனக்கு எளிமையாகவே வந்துவிட்டது. ஆனால், இந்தக் கலையைப் பற்றி அறிந்துகொண்டு இதை மட்டுமே பழகுவது கடினமானது. இப்போது இதைக் கற்றுக்கொள்ள நினைத்தால், அது அவ்வளவு எளிதல்ல. இந்த கலையுடனே நீங்கள் வாழவேண்டும்” என்கிறார்.
லிம்பையா களைப்பாக இருப்பதாகத் தோன்றினாலும், அவரது கைகள் இடைவிடாமல் வேலையைச் செய்கிறது. ‘பொனிக்கி செக்க’ (பொனிக்கி மரங்களின் தண்டுகள்) என்னும் சிறப்பு வகை மரத்தால் பொம்மைகள் தயாராகின்றன. இந்த பொம்மைகள் உடையவோ, சிதையவோ வாய்ப்பில்லை. பசையைப்போன்று இருக்கும் ‘லப்பம்’ என்னும் திரவத்தை எடுத்து, பொம்மைகளின் மேல் பூசுகிறார். இது பளபளப்பைக் கொடுப்பதுடன், பொம்மைகள் திடமாக இருப்பதற்கும் உதவுகிறது. “புளியின் விதைகளை அரைத்து செய்யப்படும் பசை போன்ற பொருள்தான் “லப்பம்”.
பல பத்தாண்டுகளுக்கு முன்பாக, நிர்மலில் இருக்கும் பல பொம்மைக் கலைஞர்கள் ஒன்றாகக் கூடி, மாநில அரசால் அளிக்கப்பட்ட நிலத்தில் பணியகத்தை அமைத்தார்கள். செய்யப்படும் பொம்மைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 6000 முதல் 7000 ரூபாய் வரை மாத வருமானமாக பெறுகிறார் லிம்பையா.
அவர் செய்துகொண்டிருந்த பொம்மையை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கினார். “இது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவருகிறது. உதிரிப் பொருட்களைப் பெறுவது கஷ்டமான வேலையாக மாறிவிட்டது. காட்டுக்குள் சென்று சிரமப்பட்டுதான் இந்த மரத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. இந்தக் கலையை என் குழந்தைகளுக்கு கற்றுத்தருவேன். ஏனெனில், இது எங்களின் முன்னோர்களின் கலை. ஆனால் இதையே அவர்கள் வாழ்வாதாரத்துக்கான தொழிலாக செய்வதற்கு நான் அறிவுறுத்தமாட்டேன். அவர்கள் நன்றாகப் படித்து நகரத்துக்குச் சென்று நல்ல வேலைகளில் இருக்கவேண்டும். அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிதான் கவலை கொள்கிறேன்.” என்கிறார்.
பொனிக்கி மரங்கள் மென்மரங்கள் வகையைச் சார்ந்தது. இவ்வகைக் காடுகள் நிர்மலில் உள்ளது. இதற்கு முன்பாக, அவர்களுக்கு சிறப்பான மரம் நடுதல்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவையான அனைத்தும் காடுகளில் கிடைத்தது. இப்போது பொம்மை செய்வதற்கான மரங்கள் கிடைக்காததாலும், காடுகளில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் வந்துவிட்டதாலும், பல கலைஞர்கள் இந்தத் தொழிலுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என நினைக்கிறார்கள்.
காலணியில் வாழும் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரும், இத்தொழிலில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றிப் பேசுகிறார். பணியகத்தில் இருக்கும் ஆண் மரத்தைச் சேகரித்து வர, இப்பெண் எந்த இயந்திரங்களும், கருவிகளும் இல்லாமல் பொம்மைகளை இழைப்பார்.
பூசானி லஷ்மி, இக்காலணியில் வசிக்கும் இவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்தவர். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாததால், அவருக்கு வேறு தொழில் வழிகள் இல்லை. திருமணம் ஆனதிலிருந்து, இந்த பொம்மைகளைச் செய்வதற்கு அவருடைய கணவர் உதவி செய்திருக்கிறார். இந்த வேலை மட்டுமே அவருக்குத் தெரிந்த வேலை.
“சில சமயங்களில் இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. மரங்கள் குறைவாகக் கிடைப்பதால், பணியகங்கள் அதற்குத் தேவையான மரத்தை எடுத்துக்கொண்டு மீதியை எங்களிடம் தருகின்றன. ஒரு பொம்மைக்கு எங்களுக்கு 20 ரூபாய் கிடைக்கும், அதைவைத்து எங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார். அவர் செய்த சீதாப்பழ பொம்மைகளை காயவைப்பதற்காக வெளியே செல்கிறார். ஒரு வாரத்துக்கு 50 பொம்மைகள் வரை செய்வதால், அவருக்கு 4000 ரூபாய் மாத வருமானமாகக் கிடைக்கிறது.
லஷ்மிக்கு தேவையாக இருப்பதெல்லாம் பொம்மை செய்வதற்கான மரத்தண்டுகள்தான். மரம் இருந்தவரை அது எனக்குக் கிடைத்தது. ”ஒருமுறை அது நின்றுவிட்டால், நானும் பொம்மைகள் செய்வதை நிறுத்திவிடவேண்டியிருக்கும்” என்று புன்னகைக்கிறார்.
தமிழில்
: குணவதி