பிப்ரவரி 7 2021 அன்று 10:30 மணிக்கு தனது கணவர் அனஸ் ஷேக்கிற்கு தொலைபேசி தொடர்பு கிடைக்காத போது ரிஹானா அதிகம் யோசிக்கவில்லை. அவர்கள் 2 மணி நேரத்திற்கு முன்பாகத்தான் பேசியிருந்தார். "அன்று காலை அவரது பாட்டி இறந்து இருந்தார்", அந்தத் தகவலைச் சொல்வதற்காக காலை 9 மணிக்கு அவரை அழைத்திருந்தேன் என்று கூறினார் ரிஹானா.
"அவரால் இறுதிச்சடங்கிற்கு வர முடியவில்லை. அதனால் அடக்கம் செய்யும் நேரத்தில் என்னை வீடியோ கால் செய்ய சொல்லியிருந்தார்", என்று மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இருக்கும் பகபான்பூர் கிராமத்தில் இருக்கும் தனது ஒரு அறை கொண்ட வீட்டின் முன்பு அமர்ந்திருக்கும் 33 வயதாகும் ரிஹானா கூறினார். அனஸ் 1700 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உத்தரகாண்டின் கார்வால் மலைகளில் இருந்தார். ரிஹானா அவரை இரண்டாவது முறை அழைத்தபோது அவருக்கு அழைப்பு போகவில்லை.
அன்று காலை ரிஹானாவின் இரண்டு தொலைபேசி அழைப்புகளுக்கு இடையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அந்தப் பேரழிவு ஏற்பட்டு இருந்தது. நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து அலக்நந்தா, தௌலி கங்கா மற்றும் ரிஷி கங்கா நதிகளில் வெள்ளத்தை தூண்டியிருந்தது. அந்தப் பெருவெள்ளம் ஆற்றங்கரையில் இருந்த வீடுகளை அடித்துச் சென்றது, அப்பகுதியில் உள்ள நீர் மின் நிலையங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அதில் சிக்கிக்கொண்டனர்.
சிக்கிக்கொண்டவர்களில் ஒருவராக அனஸ் இருந்தார். ஆனால் ரிஹானாவுக்கு அது தெரியாது. அவர் மீண்டும் சில முறை தனது கணவரை அழைக்க முயற்சித்தார். அவர் கவலைப்பட ஆரம்பித்தார், பின்னர் அது பீதியானது. "நான் மீண்டும் மீண்டும் அவரை அழைத்தேன், வேறு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை", என்று கூறி அவர் அழ ஆரம்பித்தார்.
இமாச்சல பிரதேசத்தின் சமோலியிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கின்னாவூர், அங்குதான் அனசின் சகோதரர் அக்ரம் வேலை பார்த்து வந்தார் அந்தச் செய்தியை தொலைக்காட்சி செய்திகளை பார்த்து தெரிந்து கொண்டார். "வெள்ளம் வந்த இடம் எனது சகோதரர் வேலை செய்து வரும் இடத்தில் இருந்து தொலைவில் இல்லை. நான் மிகவும் பயந்து போய் இருந்தேன்", என்று அவர் கூறினார்.
அடுத்தநாள் கின்னார் மாவட்டத்தில் உள்ள தாப்ரி கிராமத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்ட 26 வயதாகும் அக்ரம், அனஸ் பணிபுரிந்த சமோலியில் உள்ள ரிஷி கங்கா நீர்மின் நிலையம் இருக்கும் இடமான ரெய்னியை (ரெய்னி சக் லதா கிராமத்திற்கு) சென்று சேர்ந்தார். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிக்கிப்பிழைத்தவர்களை தேடிக்கொண்டிருந்தனர். "நான் என் சகோதரருடன் பணிபுரிந்த ஒருவரை சந்தித்தேன். 57 பேர் கொண்ட குழுவில் மிஞ்சி இருப்பது இவர் ஒருவர் மட்டுமே. மீதம் உள்ள அனைவரும் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர்", என்று கூறினார்.
அக்ரம் சமோலியிலிருந்து ரிஹானாவை அழைத்தார் ஆனால் அந்த செய்தியை உடைத்துக் கூற அவருக்கு மனம் இல்லை. "எனக்கு அனஸின் ஆதார் அடையாள அட்டை நகல் தேவைப்பட்டது, அதனால் ரிஹானாவிடம் அதை எனக்கு அனுப்பி வைக்கும்படி கூறினேன். அவர் உடனே எனக்கு எதற்காக அது தேவைப்பட்டிருக்கும் என்று புரிந்துகொண்டார்", என்று கூறினார். "போலீசாரிடம் எனது சகோதரர் பற்றி தெரிவிக்க வேண்டியிருந்தது ஒருவேளை அவர்கள் எனது சகோதரரின் உடலை கண்டுபிடித்தால் அது தேவையாய் இருக்கும்", என்று கூறினார்.
35 வயதாகும் அனஸ், ரிஷி கங்கா மின் திட்டத்தில் உயர் மின் அழுத்த பரிமாற்ற வரிசையில் லைன்மேன் ஆக பணியாற்றி வந்தார். மாதம் ஒன்றுக்கு 22,000 ரூபாய் சம்பாதித்து வந்தார். மால்டாவின் கலியாசக் 3 வட்டத்தில் உள்ள அவரது கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களைப் போல, தனது 20 ஆவது வயதிலிருந்து வேலைக்காக புலம்பெயர்ந்து வருகிறார், வருடத்திற்கு ஒரு சில நாட்களே தனது கிராமத்திற்கு வருவார். அவர் காணாமல் பேயிருந்த போது பகபான்பூருக்கு அவர் வந்து 13 மாதமாகியிருந்தது.
மின் நிலையத்தில் மின் கோபுரங்கள் அமைப்பது, வயரிங் சரி பார்ப்பது மற்றும் தவறுகளை சரி செய்வது ஒரு லைன் மேனின் வேலையாகும் என்று கூறினார் அக்ரம். 12 வகுப்பு வரை படித்த அக்ரமும் அதே பணியே செய்து வருகிறார். அவரும் தனது 20 ஆவது வயதிலிருந்து வேலைக்காக புலம்பெயர்ந்து வருகிறார். "நாங்கள் எங்கள் வேலையிலேயே கற்றுக்கொண்டோம்", என்று கூறினார். அவர் இப்போதும் பணிபுரியும் கின்னாரில் உள்ள நீர் மின்நிலையத்தில் மாதம் 18,000 ரூபாய்க்கு சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்.
பல ஆண்டுகளாக பகபான்பூரைச் சேர்ந்த ஆண்கள் உத்தர்காண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மின் திட்டங்களில் பணியாற்றுவதற்காக புலம் பெயர்ந்து வருகின்றனர். 53 வயதாகும் அக்கிமுதீன், 25 ஆண்டுகளுக்கு முன்பு லைன் மேன் ஆக பணியாற்றுவதற்காக முதல் முதலில் அங்கு சென்றார். "நான் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்தேன். நாள் ஒன்றுக்கு இரண்டரை ரூபாய் ஆரம்பத்தில் எனக்கு சம்பளமாக கிடைத்தது", என்று கூறினார். எங்களால் என்ன சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதித்து எங்களுக்கு கொஞ்சம் வைத்துவிட்டு மீதமுள்ளதை வீடுகளுக்கு அனுப்பினோம் அதன் மூலம் எங்களது குடும்பமும் பிழைக்க முடிந்தது என்று கூறினார். இவரது தலைமுறையை சேர்ந்த பணியாளர்களால்
இப்போது அனஸ் மற்றும் அக்ரம் ஆகியோருக்கு இவர்களது அடிச்சுவட்டை பின்பற்றுவது எளிதாகிவிட்டது.
ஆனால் அவர்களின் பணி ஆபத்தாக இருந்தது. அக்ரம் தனது சக ஊழியர்கள் பலர் மின்சாரம் தாக்கி காயம் ஏற்படுவது அல்லது இறந்து போவதையோ கூட கண்டிருக்கிறார். "இது பயமாக இருக்கிறது. எங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்", என்று கூறினார். உதாரணமாக சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக தனது சகோதரர் அடித்துச் செல்லப்பட்டதை போல் (அடித்துச்செல்லப்பட்ட அனஸின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை). ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. உயிர்பிழைக்க நாங்கள் சம்பாதிக்க வேண்டி உள்ளது. மால்டவில் எந்த வேலையும் கிடைப்பதில்லை. அதனால் அங்கிருந்து நாங்கள் புலம்பெயர்ந்தாக வேண்டியிருக்கிறது", என்று கூறினார்.
நாட்டின் மிகவும் வறிய மாவட்டங்களில் ஒன்றாக மால்டாவும் இருக்கிறது. அதன் கிராமப்புற மக்களில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்களாகவும், சம்பளத்தை சார்ந்திருப்பவர்களாகவும் இருக்கின்றனர். "விவசாயம் தான் வேலை வாய்ப்பிற்கான பிரதான மூலமாக இம்மாவட்டத்தில் இருக்கிறது", என்று மால்டாவில் இருக்கும் மூத்த பத்திரிகையாளரான சுப்ரோ மைத்ரா கூறுகிறார். "ஆனால் பெரும்பாலானவர்கள் குறுநிலங்களைத் தான் வைத்திருக்கின்றனர். அதிலும் பெரும்பாலானவை தொடர்ந்து ஏற்படும் வெள்ளத்தால் மூழ்கிவிடுகிறது. எனவே அது விவசாயிகளுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் பயன்படவில்லை". இம்மாவட்டத்தில் எந்த தொழில் நிறுவனமும் இல்லை. எனவே மக்கள் மாநிலத்திற்கு வெளியே வேலைக்கு செல்கின்றனர் என்று அவர் கூறினார்.
2007 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு வெளியிட்ட மாவட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் மால்டாவிலிருந்து
தொழிலாளர்கள் புலம்பெயர்வதற்கான காரணங்களை சுட்டிக்காட்டுகிறது . நீர் வளத்தின் சீரற்ற வினியோகம் மற்றும் சாதகமற்ற வேளாண் காலநிலை ஆகிய நிலைமைகள் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை மோசமாக பாதிக்கிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது. மெதுவான நகரமயமாக்கல் தொழில்துறை நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பது மற்றும் விவசாய பருவங்களில் மட்டுமே கிராமப்புறத்தில் வேலைகள் இருப்பதால் குறைந்த அளவிலான ஊதியம் ஆகியவை விளிம்புநிலை தொழிலாளர்களை வேலை தேடி வெகு தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்துகிறது என்று அவ்அறிக்கை குறிப்பிடுகிறது.
ஏப்ரல் முதல்வாரத்தில் நாட்டில் covid-19 தொற்று அதிகரித்த போதிலும், 37 வயதாகும் நீரஜ் மொண்டல் தில்லியில் வேலைதேடி மால்டாவில் இருந்து புறப்பட்டார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பதின்பருவ குழந்தைகளை மால்டாவின் மாணிக்சக் வட்டத்திலுள்ள பூடானி தைராவில் (நதி தீவு) இருக்கும் வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார். "நீங்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு, வாழ்க்கையைத் தொடருங்கள்", என்று அவர் கூறுகிறார். (2020ன்) ஊரடங்குக்குப் பின்னர் ஏதாவது ஒரு வேலை கிடைப்பது கூட சிரமமாக இருக்கிறது. நாங்கள் அரசாங்கம் கொடுத்ததை வைத்து சமாளித்து வந்தோம் ஆனால் கையில் பணம் இல்லை. எப்படியும் சில வேலைகள் தான் இருக்கிறது", என்று கூறினார்.
மால்டாவில் தினக்கூலியாக 200 ரூபாய் சம்பாதித்து வரும் நீரஜ் தான் தில்லிக்கு சென்றால் நாளொன்றுக்கு 500 முதல் 550 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறார். உங்களால் அதிகம் சேமிக்கவும் முடியும் வீட்டிற்கும் அனுப்பவும் முடியும் என்று கூறுகிறார். "நிச்சயம் எனது குடும்பத்தினரை நான் பிரிந்து வாடுவேன். யாரும் வீட்டைவிட்டு விரும்பி வெளியேறுவதில்லை", என்று கூறினார்.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன ஆனால் வாக்களிக்காமல் இருப்பது குறித்து நீரஜ் பொருட்படுத்தவில்லை. "இங்கு எதுவும் மாறப் போவதில்லை", என்று அவர் கூறுகிறார். "எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் மக்கள் எங்கள் கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். அதை நிறுத்துவதற்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கும் என்ன செய்திருக்கின்றனர்? மால்டாவில் வேலை செய்பவர்களை அரிதாகவே பார்க்க முடியும்", என்று கூறினார்.
குல்நூர் பீபீயின் கணவருக்கு அது எப்படி இருக்கும் என்று தெரியும். 35 வயதாகும் நிஜ்மில் ஷேக், 17,400 பேர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) கொண்ட கிராமமான பகபான்பூரில் இருந்து வெளியேறாத இவர் ஒரு அரிய மனிதர். அவரது குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது, ஆனால் நிஜ்மில் கிட்டதட்ட 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மால்டா நகரில் கட்டுமான இடங்களில் வேலை செய்கிறார். "நாளொன்றுக்கு 200 முதல் 250 ரூபாய் வரை அவருக்கு வருமானம் வரும்", என்று 30 வயதாகும் குல்நூர் கூறுகிறார். "ஆனால் வேலை எப்போதாவது தான் கிடைக்கும். பல நேரத்தில் அவர் வீட்டிற்கு பணமில்லாமல் திரும்பியிருக்கிறார்".
சமீபத்தில் குல்நூர் அவர்கள் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. "அதற்காக எங்களது நிலத்தில் ஒரு பகுதியை நாங்கள் விற்று விட்டோம்", என்று அவர் கூறினார். "அவசரத் தேவைக்கு எங்களிடம் பணம் இல்லை. எங்களது குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது?" குல்நூர் மற்றும் நிஜ்மில் ஆகியோருக்கு 6-16 வயது வரையில் மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
அனஸ் காணாமல் போகும் வரை ரிஹானா அவரது குழந்தைகளின் படிப்பை பற்றி கவலைப்படவே இல்லை. அவர்களது 16 வயது மகள் நஸ்ரீபா மற்றும் 15 வயது மகன் நசீப் அவர்களது தந்தை வீட்டிற்கு அனுப்பிய பணத்தில் படித்து வந்தனர். "அவருக்கு என்று அவர் எதையும் வைத்துக் கொள்ளவில்லை", என்று ரிஹானா கூறினார். "தினக்கூலிக்கு தான் முதலில் சேர்ந்தார் ஆனால் சமீபத்தில் தான் அவருக்கு நிரந்தர வேலை கிடைத்தது. அவரை எண்ணி நாங்கள் பெருமைபட்டோம்", என்று கூறினார்.
சமோலி பேரழிவு ஏற்பட்டு இரண்டு மாதமாகிவிட்டது ஆனாலும் அனஸின் இழப்பு இன்னும் மறையவில்லை என்று ரிஹானா கூறுகிறார். குடும்பத்தினருக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க நேரமில்லை. இதுவரை வீட்டில் இருந்த ரிஹானா தன்னால் அங்கன்வாடி பணியாளராகவோ அல்லது சுகாதாரப் பணியாளராகவோ கிராமத்தில் பணியாற்ற முடியும் என்று கூறுகிறார். அவர் ஒரு வேலையை பெற்று அதற்கான பயிற்சியும் பெற வேண்டும் என்று அவருக்குத் தெரியும். "என் குழந்தைகளின் படிப்பு தடைபடுவதை நான் விரும்பவில்லை", என்று அவர் கூறுகிறார். "அதைச் செய்வதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்", என்று கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்