பருத்தி நிலத்தின் ஒரு தனித்தப் பகுதியில்தான் சம்பட் நாராயன் ஜாங்க்ளே விழுந்து இறந்தார்.
மகாராஷ்ட்ராவின் இப்பகுதிகளில் அதை ஆழமற்ற நிலம் என அழைப்பார்கள். கிராமத்திலிருந்து தள்ளியிருக்கும் இந்தத் தனி விவசாய நிலம் அந்த் குலத்துக்கு சொந்தமானது. அலையலையாய் இருக்கும் நிலத்தின் பின்னணியில் பசுமையான குன்று காட்சியளிக்கிறது.
காட்டுப் பன்றிகளிடமிருந்து விளைச்சலை காவல் காக்கவென, இரவுபகலாக நிலத்திலேயே சம்பட் தங்குவார். வெயில் மற்றும் மழையிலிருந்து காத்துக் கொள்ள ஓலை வேயப்பட்டு படுதா தொங்கும் இடத்தில்தான் அவர் தங்கியிருப்பார். கற்கள் நிரம்பிய இப்பரப்பில் இன்னும் அந்த குடிசை இருக்கிறது. எப்போதும் அங்கேயே இருந்து நிலத்தைப் பார்த்துக் கொள்வார் என அண்டைவீட்டார் நினைவுகூருகின்றனர்.
40 வயதுகளிலிருந்த, பழங்குடி விவசாயியான சம்பட், அக்குடிசையில் இருந்து பார்க்கும்போது வளர்ச்சிக் குன்றி காய்களற்ற செடிகளும் முழங்கால் உயர துவரைச் செடிகளும் முழுமையாகத் தெரிந்திருக்கும். கூடவே, முடியாமல் தொடரும் நஷ்டங்களும் பூதாகரமாக தெரிந்திருக்கும்.
அறுவடை தொடங்கி விளைச்சல் ஒன்றுமில்லை என்றதுமே உள்ளூர அவருக்கு இரண்டு மாதங்களிலேயே தெரிந்திருக்க வேண்டும்.கடன்கள் இருந்தன. வீட்டுச் செலவுகளும் இருந்தன. அவரிடம் பணம் இல்லை.
ஆகஸ்டு 29, 2022 அன்று அவரது மனைவி துருபதாவும் குழந்தைகளும் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் நோயுற்றிருந்த அப்பாவை பார்க்க சென்றிருந்தனர். முதல் நாளே ஒரு கேன் மோனசில்லை கடனுக்கு வாங்கியிருந்தார் சம்பட். பூச்சிமருந்தான மோனசில்லை வீட்டில் யாருமில்லாத அன்று அவர் குடித்தார்.
பிறகு எதிரே இருந்த நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உறவினரை சத்தமாக அழைத்து விடைபெறுவது போல பூச்சிமருந்து புட்டி இருந்த கையை அசைத்திருக்கிறார். பிறகு நிலத்தில் விழுந்தார். உடனே இறந்துவிட்டார்.
அருகே இருக்கும் இன்னொரு விளைச்சலற்ற நிலத்தின் உரிமையாளரான சம்பட்டின் உறவினர் 70 வயது ராம்தாஸ் ஜாங்க்ளே நினைவுகூர்கையில், “நான் எல்லாவற்றையும் போட்டுவிட்டு அவனிடம் ஓடினேன்,” என்கிறார். கிராமவாசிகளும் உறவினர்களும் ஒருவழியாய் ஒரு வாகனம் பிடித்து 30 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ‘இறந்துவிட்டார்’ என்றார்கள்.
*****
மேற்கு மகாராஷ்டிராவின் யாவத்மால் மாவட்ட்டத்தின் உமர்கெத் தாலுகாவில் நிங்கனூர் கிராமம் இருக்கிறது. அந்த் பழங்குடியினத்தை சார்ந்த சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள்தாம் பெரும்பாலும் அங்கு வசிக்கின்றனர். குறைந்தபட்ச வாழ்க்கையுடன் ஆழமற்ற நிலங்களுடன் வாழ்கின்றனர். அங்குதான் சம்பட் வாழ்ந்து இறந்தார்.
ஜூலையிலும் ஆகஸ்ட் மாத மத்தியிலும் பெய்த கடும் மழையால் நேர்ந்த கடும் சேதத்தின் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் விதர்பா பகுதி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
“கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு நாங்கள் சூரியனைப் பார்க்கவில்லை,” என்கிறார் ராம்தாஸ். முதலில் கடும் மழை நடவை நாசமாக்கியது என்கிறார் அவர். மழையில் தப்பிய பயிர் பின் வந்த வறட்சியால் குன்றிய வளர்ச்சியைக் கண்டது. “உரம் போட விரும்பியபோது மழை நிற்கவில்லை. இப்போது நாங்கள் மழை வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் மழை இல்லை.”
விவசாயத்தில் நிலவும் சூழலியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளால் அதிகரித்து வரும் மேற்கு விதர்பாவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பற்றிய செய்திகள் கடந்த இருபது வருடங்களாகவே வந்து கொண்டிருக்கிறது.
19 மாவட்டங்களைக் கொண்ட விதர்பா மற்றும் மராத்வடா பகுதிகள் தற்போதை மழைப்பருவத்தில் கூடுதலாக 30 சதவிகித மழையைப் பெற்றிருப்பதாக மாவட்ட வாரியிலான மழை அறிக்கை குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலான மழை ஜூலை மாதத்தில் பெய்திருக்கிறது. மழைக்காலம் முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், இப்பகுதி 1100 மிமீ மழையை ஏற்கனவே ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் 10, 2022 வரை (முந்தைய வருடங்களில் இப்பகுதி பெற்ற சராசரி மழையின் அளவு 800 மிமீ) பெற்றுவிட்டது. இந்த வருடம் விதிவிலக்காக மாறிக் கொண்டு வருகிறது.
ஆனால் புள்ளிவிவரம் மாற்றங்களை காட்டவில்லை. ஜூன் மாதம் கிட்டத்தட்ட வறட்சியாக இருந்தது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் மழை தொடங்கியது. சில நாட்களிலேயே பற்றாக்குறை சரியானது. ஜூலை மாதத்தின் நடுவிலெல்லாம் மகாராஷ்டிராவின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மராத்வடா மற்றும் விதர்பா பகுதிகளில் கடும் மழை (24 மணி நேரங்களில் 65 மிமீ-க்கும் அதிகமாக) பெய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.
இறுதியில் மழை ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் குறைந்தது. யாவத்மால் உட்பட பல மாவட்டங்கள் செப்டம்பர் மாதத் தொடக்கம் வரை வறட்சியை எதிர்கொண்டன. பிறகு மீண்டும் மகாராஷ்டிரா முழுக்க மழை பெய்யத் தொடங்கியது.
கடுமையான மற்றும் மிகக் கடுமையான மழைப்பொழிவுக்கு பின் தொடரும் நீண்ட வறட்சிக் காலம் இப்பகுதியின் பாணியாக மாறிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் நிங்கனூரின் விவசாயிகள். இந்த பாணி, எந்த பயிர் வளர்ப்பது என உறுதியாக தெரியாத இடத்தில் அவர்களை நிறுத்தியிருக்கிறது. எந்தப் பயிர்கள் தகவமைத்துக் கொள்ளும் என அவர்களுக்குத் தெரியவில்லை. நீரையும் மண்ணில் ஈரத்தையும் எப்படி தக்க வைப்பது எனவும் தெரியவில்லை. விளைவு, சம்பட் போன்றோரை தற்கொலைக்கு தள்ளுமளவுக்கான தீவிர நெருக்கடி.
விவசாய நெருக்கடியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடத்தும் வசந்த்ராவ் நாய்க் ஷெத்கரி ஸ்வவலம்பன் மிஷன் அமைப்பின் தலைவரான கிஷோர் திவாரி, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை சமீபமாக அதிகமாகிக் கொண்டு வருகிறது என்கிறார். ஆகஸ்ட் 25-லிருந்து செப்டம்பர் 10 வரை மட்டும் விதர்பாவில் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடுகிறார் அவர். ஜனவரி 2020லிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மழையையும் பொருளாதார நெருக்கடியையும் காரணங்களாக சொல்கிறார் அவர்.
யவத்மாலின் ஒரு கிராமத்தில் இரு சகோதரர்கள் ஒரு மாத இடைவெளியில் தற்கொலை செய்து கொண்டனர்.
“எந்த அளவு உதவியும் போதாது. இந்த வருடத்தின் அழிவு மோசமான அளவில் இருக்கிறது,” என்கிறார் திவாரி.
*****
வயல்களில் வெள்ளம் வந்து பயிர்கள் அழிந்தன. மகாராஷ்டிராவின் சிறு விவசாயிகளில் பெருமளவிலானோர் நெருக்கடி இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்குமென எதிர்பார்க்கின்றனர்.
விதர்பா, மராத்வடா மற்றும் வடக்கு மகாராஷ்டிரா பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 20 லட்ச ஹெக்டேர்கள் இந்தப் பருவகாலத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா விவசாய ஆணையர் அலுவலகம் தெரிவிக்கிறது. சம்பா பயிரை முற்றிலும் இழந்துவிட்டதாக அப்பகுதியின் விவசாயிகள் சொல்கின்றனர். சோயாபீன், பருத்தி, துவரை போன்ற பெரும்பயிர்களும் பாதிப்பைக் கண்டன. வறண்ட நிலப்பகுதிகளில் பிரதானமாக சம்பாப் பயிரையே சார்ந்திருக்கின்றனர். இந்த வருடத்தின் அழிவு துன்புறுத்துவதாக இருக்கும்.
ஆறுகள் மற்றும் ஓடைகள் அருகே இருக்கும் அர்த்பூர் தாலுகாவின் ஷெல்காவோன் போன்ற கிராமங்கள்தான் எதிர்பாராத வெள்ளத்தின் முழுச் சீற்றத்தையும் எதிர்கொண்டன. “ஒரு வாரத்துக்கு நாங்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்கிறார் ஷெல்காவோனின் ஊர்த் தலைவரான பஞ்சாப் ரஜெகோர். “கிராமத்துக்கு அருகே ஓடும் உமா ஆற்றின் சீற்றத்தால் எங்களின் வீடுகளிலும் நிலங்களிலும் வெள்ளம் புகுந்தது.” கிராமத்தை தாண்டி சில மைல் தொலைவில் உமா ஆறு ஆஸ்னா ஆற்றுடன் இணையும். இரண்டும் சேர்ந்து நந்தெடுக்கு அருகே கோதாவரியில் இணைகின்றன. இந்த ஆறுகள் எல்லாமும் கடும் மழைப்பொழிவின்போது கரை கடந்து ஓடிக் கொண்டிருந்தன.
“மொத்த ஜூலை மாதமும் கடும் மழைப்பொழிவு இருந்ததால் எங்களால் வயலில் வேலை பார்க்க முடியவில்லை,” என்கிறார் அவர். அரிக்கப்பட்ட மண்ணும் நைந்து கிடந்த பயிரும் அதற்கு சாட்சியாகக் காட்சியளித்தன. நிலத்தில் மிஞ்சிக் கிடக்கும் அழிந்த பயிர்களை சில விவசாயிகள் அகற்றி, அக்டோபர் மாதத்தில் குறுவை நடவுக்கு தயாராகின்றனர்.
வார்தா மாவட்ட சந்த்கியில், கடும் மழை ஏழு நாட்களுக்குப் பொழிந்து யஷோதா ஆறு மொத்த கிராமத்திலும் ஜுலை மாதம் புகுந்த பிறகு,கிட்டத்தட்ட 1200 ஹெக்டேர் நிலம் இன்றும் நீருக்கடியில்தான் இருக்கிறது. உள்ளே மாட்டிக் கொண்ட பல கிராமவாசிகளை மீட்க தேசியப் பேரிடர் மீட்புப் படை அழைக்கப்பட வேண்டிய நிலை இருந்தது.
”என்னுடைய வீடு உட்பட 13 வீடுகள் சரிந்து விழுந்தன,” என்கிறார் 50 வயது விவசாயியான தீபக் வார்ஃபதே. வீடு அழிந்த பிறகு அவர் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். “தற்போது விவசாய வேலை இல்லையென்பதே எங்களின் பிரச்சினை. வேலையின்றி நான் இருப்பது இதுவே முதல் முறை.”
“ஒரே மாதத்தில் ஏழு வெள்ளங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம்,” என்கிறார் தீபக். “ஏழாவது முறைதான் இறுதி அடியாக இருந்தது. தேசியப் பேரிடர் மீட்புப் படை சரியான நேரத்தில் வந்து காப்பாற்றிய நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இல்லையெனில் நான் இருந்திருக்க மாட்டேன்,”
சம்பா பயிர் அழிந்துவிட்ட நிலையில், சந்த்கி கிராமவாசிகளை ஒரு கேள்விதான் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது: அடுத்தது என்ன?
வளர்ச்சி பாதிக்கப்பட்ட பருத்திச் செடிகளும் நீளமான நிலப்பரப்பும் 64 வயது பாபாராவ் பாட்டிலின் நிலம் சந்தித்திருக்கும் அழிவை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மிச்சமுள்ள பயிரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார் அவர்.
”இந்த வருடம் நான் மீளலாம். மீளாமலும் போகலாம்,” என்கிறார் அவர். “வீட்டில் சும்மா அமர்ந்திருப்பதற்கு பதிலாக இந்தச் செடிகளை மீட்க முயலுகிறேன்.” பொருளாதாரப் பிரச்சினை கொடுமையாக இருக்கிறது. இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்கிறார் அவர்.
மகாராஷ்டிராவின் எல்லாத் திக்கில் இருக்கும் நிலங்களும் பாபாராவின் நிலம் கொண்டிருந்த நிலையைத்தான் கொண்டிருக்கின்றன. ஆரோக்கியமாக நின்று கொண்டிருக்கும் பயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
”இந்த நெருக்கடி அடுத்த 16 மாதங்களில் அதிகமாகும் என்கிறார் உலக வங்கி ஆலோசகரும் வர்தா வட்டார வளர்ச்சி வல்லுநருமான ஷ்ரீகாந்த் பர்ஹாதே. “அப்போதுதான் அடுத்த பயிர் அறுவடைக்கு தயாராகும்.” கேள்வி என்னவென்றால் எப்படி விவசாயிகள் 16 மாதங்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்பதுதான்.
பர்ஹாதேவின் சொந்த கிராமமான ரோஹன்கெத் பெரும் நஷ்டங்களை சந்தித்திருக்கிறது. “இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. தங்கத்தையோ பிற சொத்துகளையோ அடமானம் வைத்தோ தனியாரில் கடன் வாங்கியோ மக்கள் வீட்டுச் செலவுகளை சமாளிக்கின்றனர். இளையோர் வேலை தேடி இடம்பெயருகின்றனர்.”
வருடம் முடிகையில் நிச்சயமாக பயிர்க் கடன்கள் எதிர்பாராத அளவுக்கு நிலுவையில் இருக்கும் என்கிறார் அவர்.
சந்த்கியில் அழிந்த பருத்திப் பயிரின் மதிப்பு மட்டும் 20 கோடி ரூபாய். இந்த ஒரு கிராமத்தில் மட்டும் நிலவரம் சரியாக இருந்திருந்தால் பருத்தி அவ்வளவு வருமானத்தைக் கொண்டு வந்திருக்கும். இப்பகுதியில் ஒரு ஏக்கரின் சராசரி பருத்தி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கணக்கீடு.
”47 வயது நம்தேவ் போயர் சொல்கையில், “நாங்கள் எங்களின் பயிரை மட்டும் இழக்கவில்லை. நடவுக்கு நாங்கள் செலவழித்தப் பணத்தையும் மீட்க முடியாது,” என்கிறார்.
”இந்த நஷ்டம் ஒருமுறையோடு முடிவதல்ல,” என எச்சரிக்கிறார் அவர். “மண் அரிப்பு என்பது நீண்ட கால சூழலியல் பிரச்சினை.”
லட்சக்கணக்கான மகாராஷ்டிரா விவசாயிகள் ஜூலை தொடங்கி ஆகஸ்ட் வரையிலான மழைப்பொழிவில் உழன்று கொண்டிருந்தபோது, மாநிலத்தின் அரசாங்கம் இயக்கத்தில் இல்லை. சிவசேனா கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு மகா விகாஸ் அகாதியின் அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.
செப்டம்பர் தொடக்கத்தில், ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் 3500 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்தது. இழந்த உயிர்களுக்கும் பயிர்களுக்கும் ஈடு செய்ய முடியாதளவுக்கான குறைந்தபட்ச உதவிதான் அது. மேலும் கணக்கெடுப்பின் வழியாக பயனர்கள் கண்டறியப்பட்டு வங்கிகளில் அவர்கள் பணம் பெற குறைந்தபட்சம் ஒருவருடம் ஆகிவிடும். ஆனால் மக்களுக்கு உதவி இன்றையத் தேவை.
*****
“என் நிலத்தைப் பார்த்தீர்களா?” எனக் கேட்கிறார் கலங்கி பலவீனமாக இருக்கும் துருபதா சம்பட்டின் விதவை மனைவி. அவரைச் சுற்றி மூன்று குழந்தைகள் இருக்கின்றன. எட்டு வயது பூனம், ஆறு வயது பூஜா, மூன்று வயது கிருஷ்ணா. “இத்தகைய நிலத்தில் என்ன விளைவிக்க முடியும்?”. சம்பட்டும் துருபதாவும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்த்துதான் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தனர்.
கடந்த வருடம் அவர்களின் மூத்த மகளான தஜுலியை மணம் முடித்துக் கொடுத்தனர். 15 வயதாக தோற்றமளிக்கும் தஜூலி தனக்கு 16 வயது எனக் கூறுகிறார். மூன்று மாதக் குழந்தை அவருக்கு இருக்கிறது. மகளின் திருமணக் கடன்களை அடைப்பதற்காக நிலத்தை ஓர் உறவினருக்குக் சொற்பமான விலைக்குக் குத்தகை விட்டுவிட்டு, இருவரும் கடந்த வருடம் கரும்பு வெட்டும் வேலை பார்க்க கொல்ஹாப்பூர் சென்றனர்.
ஜாங்க்ளேக்கள் ஒரு குடிசையில் மின்சாரமின்றி வாழ்கின்றனர். தற்போது குடும்பத்துக்கு சாப்பிட ஒன்றுமில்லை. அவர்களைப் போலவே மழையால் பாதித்து வறுமையில் இருக்கும் அண்டை வீட்டார் உதவி செய்கின்றனர்.
“ஏழைகளை எப்படி ஏமாற்றுவதென இந்த நாட்டுக்குத் தெரியும்,” என்கிறார் உள்ளூர் பத்திரிகையாளரும் விவசாயியுமான மொய்னுதின் சவுதாகர். சம்பட்டின் தற்கொலையை முதலில் செய்தியாக்கியவர் அவர்தான். துருபதாவுக்கு சொற்பமான 2000 ரூபாய் உதவி அளித்த உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் செய்கையை பெரும் அவமதிப்பு எனக் குறிப்பிட்டு காத்திரமான செய்தியை எழுதினார்.
“முதலில் யாரும் விளைவிக்க விரும்பாத ஆழமற்ற, பாறைகள் நிறைந்த, வளமற்ற நிலங்களை அவர்களுக்கு கொடுக்கிறோம். பிறகு அவர்களுக்கு ஆதரவாக நிற்க மறுக்கிறோம்,” என்கிறார் மொய்னுதின். தந்தையிடமிருந்து சம்பட்டுக்குக் கிடைத்த நிலம், நில உச்சவரம்புச் சட்டத்தின்படி நடந்த நில விநியோகத்தில் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் தர நிலம் என்கிறார் அவர்.
“கடந்த பல பத்தாண்டுகளில் இந்த ஆண்களும் பெண்களும் தங்களின் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி இம்மண்ணை வளமாக்கி, தங்களுக்கு தேவையானவற்றை விளைவித்தனர்,” என்கிறார் மொய்னுதின். பகுதியிலேயே நிங்கனூர் கிராமம்தான் ஏழ்மையில் இருக்கும் கிராமம். பெரும்பாலும் அங்கு அந்த் பழங்குடி குடும்பங்களும் கோண்ட்களும் வசிப்பதாகக் கூறுகிறார் அவர்.
பெரும்பாலான அந்த் விவசாயிகள், இந்த வருடம் வந்த காலநிலை பாதிப்பு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாதளவுக்கு ஏழைகள் என்கிறார் மொய்னுதின். அந்த் என்றாலே கஷ்டமும் கடுமையான உழைப்பும் பசியும் வறுமையும்தான் என்கிறார்.
இறந்த நேரத்தில் சம்பட்டுக்கு நிறைய கடன்கள் இருந்தன. அதிகம் வற்புறுத்திய பிறகு நான்கு லட்ச ரூபாய் கடன் என்கிறார் துருபதா. “கடந்த வருடம் திருமணத்துக்காக கடன்கள் வாங்கினோம். இந்த வருடம் விவசாயத்துக்காகவும் வீட்டுச் செலவுக்கும் உறவினர்களிடமிருந்து கடன் வாங்கினோம்,” என்கிறார் அவர். “கடனை அடைக்கும் நிலையில் நாங்கள் இல்லை.”
குடும்பத்தின் நிச்சயமற்ற எதிர்காலத்தினூடாக, சமீபத்தில் நோயுற்றிருக்கும் காளையைப் பற்றி அவர் கவலைபப்டுகிறார். “உரிமையாளர் உலகை விட்டுப் போன கவலையில் எங்கள் காளையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது.”
தமிழில் : ராஜசங்கீதன்