34 வயதாகும் ஜுனாலி ரிசாங், அபோங் சாராயம் செய்வதில் திறமைசாலி. “சில நாட்களில் நான் 30 லிட்டருக்கும் மேல் அபோங் தயாரிப்பதுண்டு,” என அவர் சொல்கிறார். சாராயம் தயாரிக்கும் பலர் ஒரு வாரத்தில் சில லிட்டர்கள் தயாரிப்பார்கள். மொத்த முறையையும் மனித உழைப்பில்தான் செய்ய வேண்டும்.

அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றிலுள்ள மஜுலி தீவின் கரமூர் டவுனிலுள்ள தன் மூன்று அறைகள் கொண்ட வீடும் அதன் கொல்லைப்புறமும்தான் ஜுனாலி சாராயம் தயாரிக்கும் இடம். அடிக்கடி வெள்ளப்பெருக்கு நேரும் ஆற்றினால் உருவான ஒரு சிறு குளத்துக்கருகே வீடு இருக்கிறது.

அதிகாலை 6 மணிக்கு அவரை சந்தித்தோம். அவர் வேலையில் இருந்தார். இந்தியாவின் கிழக்கில் இருக்கும் இப்பகுதியில் சூரியன் உச்சத்துக்கு வந்திருந்தது. கொல்லையில் சாராயத் தயாரிப்பை தொடங்க விறகடுப்பை தயார் செய்கிறார் ஜுனாலி. அவரின் உபகரணங்களும் பொருட்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

நொதிபானமான அபோங், அசாமின் பட்டியல் பழங்குடியான மைசிங் சமூகத்தால் தயாரிக்கப்படுகிறது. உணவுடன் பருகப்படும் பானம் அது. மைசிங் பரத் சந்தி சொல்கையில், “மைசிங் மக்களான எங்களுக்கு அபோங் இல்லாமல் எந்த விழாவும் பூஜையும் கிடையாது,” என்கிறார். கராமூர் மார்க்கெட்டில் இருக்கும் மஜுலி கிச்சனுக்கு சந்திதான் உரிமையாளர்.

இளமஞ்சள் நிற பானமான அது அரிசி மற்றும் மூலிகைகள் கொண்டு, ஜுனாலி போன்ற மைசிங் பெண்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டு கராமூரின் உணவகங்களுக்கும் கடைகளுக்கும் விற்கப்படுகிறது. “ஆண்கள் இதை செய்ய விரும்புவதில்லை. கடின உழைப்பை கோரும் வேலை என்பதாலும் மூலிகைகள் தேடுவது களைப்பு கொடுக்கும் என்பதாலும் அவர்கள் இதை செய்வதில்லை,” என்கிறார் ஜுனாலி சிரித்தபடி.

PHOTO • Priti David

அபோங் தயாரிப்பதற்கான அரிசி சமைக்க பெரும் கொப்பரையில் நீரைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் ஜுனாலி ரிசாங்

PHOTO • Priti David

ஜுனாலி நெற்கதிர்களை ஓர் உலோகத் தகடில் வைத்து வீட்டருகே எரிக்கிறார். காலை 6 மணிக்கு கொளுத்தப்படும் அது 3-4 மணி நேரங்களுக்கு எரியும். பிறகு அதன் சாம்பல் சமைக்கப்பட்ட சோற்றுடன் கலக்கப்படும்

வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கும் மார்க்கெட் பகுதியில் ஜுனாலியின் கணவர் உர்போர் ரிசாங் ஒரு கடை வைத்துள்ளார். அவர்களின் 19 வயது மகன் மிருது ரிசாங் ஜொர்ஹாட்டில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பிரம்மபுத்திராவில் படகில் ஒரு மணி நேரம் பயணித்தால் ஜோர்ஹாட்டை அடையலாம்.

ஜுனாலியின் மாமியாரான தீப்தி ரிசாங்தான் அபோங் செய்ய அவருக்குக் கற்றுக் கொடுத்தார். இரண்டு வகைகள் இருக்கின்றன. அரிசியை பிரதானமாக கொண்டிருக்கும் வகை நொங்க்சின் அபோங். எரிந்த நெற்கதிர்களின் ருசி சேர்க்கப்படும் போரா அபோங் இன்னொரு வகை. ஒரு லிட்டர் அபோங்கின் விலை ரூ.100. தயாரிப்பவருக்கு அதில் பாதி கிடைக்கும்.

பத்து வருட அனுபவத்தில், தயாரிப்பு முறை கொண்டிருக்கும் வழக்கங்கள் ஜுனாலிக்கு தற்போது அத்துப்படி. மஜுலி மாவட்டத்தின் கம்லாபாரி ஒன்றியத்திலுள்ள அவரது குக்கிராமத்தில் பாரி சந்தித்தபோது, அவர் போரோ அபோங் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் சீக்கிரமே எழுந்துவிட்டார். காலை 5.30 மணிக்கு எழுந்தார். 10-15 கிலோ காய்ந்த நெற்கதிர்களை பற்ற வைத்து கொல்லைப்புறத்தில் ஒரு தகரத்தில் புகைந்தெரிய வைத்தார். “எரிய 3-4 மணி நேரங்கள் பிடிக்கும்,” என்கிறார் அவர் சோறு சமைக்க அடுப்பை பற்ற வைத்தபடி. சில நேரங்களில் தயாரிப்பு வேலையை இன்னும் வேகமாக அவர் தொடங்கி விடுவார். இரவே கதிர்களை எரிக்கத் தொடங்கிவிடுவார்.

எரிந்து கொண்டிருக்கும் கதிர்களின் அருகே, பெரிய கொப்பரை நீரை தீயின் மேல் வைக்கிறார். அது கொதிக்கத் தொடங்கியதும், மூடியைத் திறந்து 25 கிலோ அரிசியை அதில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டுகிறார். “இந்த வேலை எனக்கு முதுகில் கொஞ்சம் வலியைக் கொடுக்கிறது,” என்கிறார் அவர்.

அசாமிய விழாக்களின்போது - மக் பிகு, போகாக் பிகு மற்றும் கடி பிகு - பெரியளவிலான பீர் மது வகை கிடைக்காதபோது, ஜுனாலி வேலையில் மும்முரமாகி விடுவார். சில நேரங்களில் நாளொன்றுக்கு இருமுறை தயாரிப்பு நடக்கும்

காணொளி: போரா அபோங் செய்தல், மைசிங் சமூகத்தின் பாரம்பரிய அரிசி மது

இரண்டு நெருப்புகள் எரிந்து கொண்டிருக்கின்றன. ஜுனாலி துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். சோறு சமைப்பதை கவனிக்கிறார். எரியும் கதிர்களை நீண்ட குச்சியால் கிண்டி சூட்டை பரப்புகிறார். 25 கிலோ அரிசியை கிண்டுவது சாதாரண வேலை அல்ல. உறுமியபடி கிண்டுகிறார் ஜுனாலி. அரிசி நியாயவிலைக்கடையில் வாங்கப்பட்டது. “நாங்களும் நெல் வளர்க்கிறோம். ஆனால் நாங்கள் சாப்பிட அதை வைத்துக் கொள்கிறோம்,” என்கிறார் அவர்.

சோறாக 30 நிமிடங்கள் ஆகும். சற்று ஆறியதும் ஜுனாலி அதை எரிந்த கதிர்களின் சாம்பலுடன் கலப்பார். இம்முறை எளிதாக தெரிந்தாலும் சூடான சாம்பலுடன் பிசைந்து மசிக்கவும் செய்ய வேண்டும். இவற்றை செய்ய வெறும் கைகளை அவர் பயன்படுத்துகிறார். மூங்கில் கூடையில் அதை பரப்புகிறார். “கூடையில் வேகமாக ஆறிவிடும். சாம்பலை அரிசி சூடாக இருக்கும்போதே கலக்க வேண்டும். இல்லையெனில் கலக்காது,” என விவரிக்கிறார் ஜுனாலி, கலத்தல் கையில் எரிச்சல் கொடுத்தாலும் முகத்தை சுளிக்காமல்.

பிசையும்போது ஜுனாலி, அபோங்குக்கு தயாரித்திருந்த மூலிகைகளை சேர்க்கிறார். “நூறு மூலிகைகளும் இலைகளும் இதில் சேர்க்கப்படுகின்றன,” என்கிறார் அவர். ரகசியங்களை சொல்ல விரும்பாமல் அவர், ரத்த கொதிப்பை குறைக்கவும் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் மைசிங் மக்கள் பயன்படுத்தும் சில இலைகளை சேர்த்தார்.

பகல் நேரத்தில் கராமூரை சுற்றி ஜுனாலி நடந்து இலைகளையும் மூலிகைகளையும் சேகரிக்கிறார்.. ”அவற்றை நான் காய வைத்து மிக்சியில் அடித்து பொடி ஆக்கி, சிறு சிறு உருண்டைகளாக்குவேன். 15-16 மூலிகைப் பொடி உருண்டைகளை என் அபோங்கில் பயன்படுத்துவேன்,” என்கிறார் அவர். மணமான வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புட்டுகி குக்கிராமத்தில் பிறந்த ஜுனாலிக்கு அப்பகுதி நன்றாக தெரியும்.

PHOTO • Priti David
PHOTO • Riya Behl

ஜுனாலி அரிசியை (இடது) நீர்க் காயும் கொப்பரையில் கொட்டுகிறார். நீண்ட குச்சி (வலது) கொண்டு அரிசியை கிண்டுகிறார்

PHOTO • Riya Behl

ஜுனாலி புகையும் கதிர்களை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சூடு பரவும். சாம்பலாகாது

மூங்கில் கூடையில் இருக்கும் கலவை ஆறியதும் பிளாஸ்டிக் பைகளில் எடுத்து ஜுனாலியின் வீட்டில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு சேமிக்கப்படும். “மணத்திலிருந்தே அது தயாராகிவிட்டதா என்பதை நான் கண்டுபிடித்துவிடுவேன்,” என்கிறார் அவர். “பிறகுதான் மது தயாரிப்பின் கடைசி கட்டம். கலவை ஒரு கூம்பு வடிவிலான கூடையில் வாழை இலையுடன் வைக்கப்பட்டு ஒரு பாத்திரத்தின்மீது தொங்கவிடப்படும். நீர் கூடையில் ஊற்றப்படும். கலவை உருவாக்கிய மது பிறகு கீழே இருக்கும் பாத்திரத்தில் சொட்டத் தொடங்கிவிடும். 25 கிலோ அரிசியிலிருந்து 30-34 லிட்டர் அபோங் கிடைக்கும்.”

அசாமிய விழாக்களின்போது - மக் பிகு, போகாக் பிகு மற்றும் கடி பிகு - பெரியளவிலான பீர் மது வகை கிடைக்காதபோது, ஜுனாலி வேலையில் மும்முரமாகி விடுவார். சில நேரங்களில் நாளொன்றுக்கு இருமுறை தயாரிப்பு நடக்கும். மைசிங் விழாவான அலி-அயே-லிகாங்கின்போதும் இப்படித்தான்.

அபோங் தயாரித்து விற்று மட்டுமே ஜுனாலி வருமானம் ஈட்டவில்லை. அருகே இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சலவை செய்கிறார். மைசிங் உணவு சமைத்து தருகிறார். 200 கோழிகளை முட்டைகளுக்காக வளர்க்கிறார். அருகே இருக்கும் சிறிய வசிப்பிடங்களுக்கு சூடான தண்ணீரை பக்கெட்டுகளில் கொடுக்கவும் செய்கிறார். அபோங் தயாரிப்பு நல்ல வருமானத்தை கொடுப்பதாக சொல்கிறார். “1,000 ரூபாய் செலவிட்டால், 3,000 ரூபாய் திரும்பிக் கிடைக்கிறது,” என்கிறார் அவர். “அதனால்தான் இதைச் செய்ய விரும்புகிறேன்.”

PHOTO • Riya Behl

சோறுடன் கலக்கப்பட்ட எரிந்த நெற்கதிர்கள் அடுத்தக்கட்டத்துக்காக இப்போது மூங்கில் கூடைக்கு மாற்றப்பட தயாராக இருக்கிறது


PHOTO • Priti David

கொப்பரையிலிருந்து சோற்றை பிரித்தெடுக்க ஓர் உலோகத்தட்டை ஜுனாலி பயன்படுத்துகிறார். பெரிய மூங்கில் தட்டுக்கு மாற்றி ஆற வைக்கிறார்


PHOTO • Priti David

சோறும் எரிந்த நெற்கதிர்களும் கலந்த கலவை தற்போது அவரின் பிரத்யேக மூலிகைப் செடிகளுடன் கலக்கப்பட தயாராக இருக்கிறது


PHOTO • Riya Behl

வெறும் கைகள் கொண்டு ஜுனாலி அரிசிக்குள் இருக்கும் கட்டிகளை உடைத்து மூலிகைகளை மசிக்கிறார்


PHOTO • Riya Behl

பரபரப்பான காலை பொழுதில் அமைதியான நேரத்தை ஜுனாலி அனுபவிக்கிறார்


PHOTO • Riya Behl

'நூறு மூலிகைகளும் இலைகளும் இதில் சேர்க்கப்படுகின்றன,' என்கிறார் ஜுனாலி அவற்றின் பெயரை வெளியிட விரும்பாமல்.


PHOTO • Riya Behl

சில இலைகள் ரத்தக்கொதிப்பை குறைக்கவும் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் மைசிங் மக்களால் பயன்படுத்தப்படுபவை


PHOTO • Priti David

‘அவற்றை (மூலிகைகள்) நான் காய வைத்து மிக்சியில் அடித்து பொடி ஆக்கி, சிறு சிறு உருண்டைகளாக்குவேன். 15-16 மூலிகைப் பொடி உருண்டைகளை என் அபோங்கில் பயன்படுத்துவேன்,' என்கிறார் அவர்


PHOTO • Priti David

மூலிகைகளும் இலைகளும் அரைத்து பிறகு அபோங்குக்கு வலிமையும் ருசியும் தருமென சொல்லப்படுகிற பொடியுடன் இடிக்கப்படுகிறது


PHOTO • Priti David

நொதிக்கப்படும் அரிசி பிறகொரு மஞ்சள் தகரத்தில் 15-20 நாட்களுக்கு வைக்கப்படுகிறது


PHOTO • Priti David

சமையலறையின் மூலையில் ஒரு கூம்பு வடிவிலான கூடை உலோக முக்காலியில் நிற்கிறது. அபோங் தயாரிக்க இதைத்தான் அவர் பயன்படுத்துகிறார்


PHOTO • Priti David
PHOTO • Priti David

கூம்பு வடிவக் கூடையின் நெருக்கமான தோற்றம் (இடது). மது சேகரிக்கப்படும் பாத்திரம் (வலது)


PHOTO • Priti David

பாரத் சந்தி மைசிங் உணவை அவரது மஜுலி கிச்சன் உணவகத்தில் போடுகிறார்


PHOTO • Priti David

அசாமின் மஜூலித் தீவிலுள்ள கராமுர் வீட்டுக்கு வெளியே ஜுனால் நிற்கிறார்


தமிழில் : ராஜசங்கீதன்

Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Photographs : Riya Behl

ریا بہل ملٹی میڈیا جرنلسٹ ہیں اور صنف اور تعلیم سے متعلق امور پر لکھتی ہیں۔ وہ پیپلز آرکائیو آف رورل انڈیا (پاری) کے لیے بطور سینئر اسسٹنٹ ایڈیٹر کام کر چکی ہیں اور پاری کی اسٹوریز کو اسکولی نصاب کا حصہ بنانے کے لیے طلباء اور اساتذہ کے ساتھ کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Riya Behl
Editor : Vinutha Mallya

ونوتا مالیہ، پیپلز آرکائیو آف رورل انڈیا کے لیے بطور کنسلٹنگ ایڈیٹر کام کرتی ہیں۔ وہ جنوری سے دسمبر ۲۰۲۲ تک پاری کی ایڈیٹوریل چیف رہ چکی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Vinutha Mallya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan