விமல் தாக்ரே, வாங்கனி நகரில், தனது இரண்டு அறை உள்ள வீட்டின் சிறிய குளியல் அறையில், துணிகளை துவைத்துக்கொண்டிந்தார். புடவைகள், சட்டைகள் மற்றும் மற்ற துணிகளுக்கு பச்சை நிற குவளையில் இருந்த தண்ணீரை ஊற்றி, தனது பலவீனமான கைகளால், சோப்பு போட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் துவைத்து, அலசிய ஒவ்வொரு துணியையும் தனது மூக்கிற்கு அருகில் வைத்து பலமுறை முகர்ந்து பார்த்து, அவை நன்றாக சுத்தமாகிவிட்டதா என்று சோதித்துக்கொண்டிருந்தார். பின்னர், சரியான பாதையில் செல்கிறோமா என்பதற்காக, அருகில் இருந்த சுவரை பிடித்து, தொடக்கத்தில் தடுமாறி, கதவை தொட்டுக்கொண்டே, குளியலறையில் இருந்து வெளியே வருகிறார். என்னிடம் பேசுவற்காக அந்த அறையில் உள்ள படுக்கையில் அமர்ந்தார்.
“நாங்கள் தொடுவதன் மூலமே எங்கள் உலகை காண்கிறோம். தொடுவதன் மூலமே எங்கள் சுற்றத்தை உணர்கிறோம்” என்கிறார் 62 வயதான விமல். அவரும், அவரது கணவர் நரேசும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள். அவர்கள் மும்பை வடக்கு ரயில் நிலையத்தில் சர்ச்கேட் முதல் போரிவளி வரை கைக்குட்டை விற்பவர்கள். கோவிட் – 19 தேசியளவிலான ஊரடங்கையொட்டி, நகரின் உள்ளூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, மார்ச் 25ம் தேதி முதல் அந்த வேலையும் தடைபட்டுவிட்டது.
மூம்பையின் உள்ளூர் கூட்ட நெரிசலில், சிக்கி, போராடி இருவரும் நாளொன்றுக்கு ரூ.250 வரை சம்பாதித்துவிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓய்வெடுப்பதற்காக பணிக்கு செல்ல மாட்டார்கள். தெற்கு மும்பையில் உள்ள மஸ்ஜித் பண்டரில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் கைக்குட்டைகளை வாங்குவார்கள். அதுபோல் ஒவ்வொரு முறையும் ஆயிரம் கைக்குட்டைகள் வாங்குவார்கள். ஊரடங்கிற்கு முன்னால், தினமும், 20 முதல் 25 கைக்குட்டைகள் வரை ஒன்று ரூ.10க்கு விற்பனை செய்துவந்தார்கள்.
அவர்களுடன் வசிக்கும், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள, அவர்களின் 31 வயது மகன் சாகர், ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் கிடங்கில், ஊரடங்கு துவங்குவதற்கு முன்பு வரை வேலை செய்து வந்தார். அவரும், வீட்டு வேலை செய்யும், அவரது மனைவி மஞ்சுவும் சேர்ந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை குடும்பத்தின் மாத வருமானத்திற்கு பங்களித்து வந்தனர். அவர்களின் 3 வயது மகள் சாக்ஷியுடன் தாக்ரே குடும்பத்தின் 5 நபர்களும், இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். தற்போது, வீட்டு வாடகை ரூ.3 ஆயிரத்துடன், மளிகை, மருந்துப்பொருட்கள், அவ்வப்போது ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிப்பது மிகக்கடினமாக உள்ளதாக நரேஷ் கூறுகிறார்.
ஊரடங்கால், ஒட்டுமொத்த குடும்பத்தின் வருமானமும் பாதிக்கப்பட்டு விட்டது. சாகரும், மஞ்சுவும் விரைவில் வேலைக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், விமலும், நரேசும் எப்போது பணிக்கு செல்வார்கள் என்பது தெரியவில்லை. “நாங்கள் முன்புபோல் இப்போது, ரயில்களில் கைக்குட்டைகள் விற்க முடியுமா? மக்கள் முன்புபோல், அதை வாங்குவார்களா?” என்று விமல் கேட்கிறார்.
“நாங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை பொருட்களை தொடவேண்டும். பொருட்கள், இடம், பணம், பொது கழிவறையின் சுவர், கதவுகள் என்று அனைத்தையும் நாங்கள் தொட்டுப்பார்த்துதான் உணர முடியும். அதனால், நாங்கள் தொடும் பொருட்களுக்கு அளவே இல்லை. எதிர்புறத்தில் வரும் நபர்களை நாங்கள் பார்க்க முடியாது. அவர்கள் மீது மோதிவிடுவோம். இவற்றையெல்லாம் நாங்கள் எவ்வாறு தவிர்க்க முடியும். நாங்கள் போதிய இடைவெளிவிடுவதை எவ்வாறு கடைபிடிக்க முடியும்?” என்று பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் 65 வயதான நரேஷ் கேட்கிறார். அவர் விற்கும் கைகுட்டைகளில் ஒரு ரோஸ் நிற கைக்குட்டையையே மாஸ்காக முகத்தில் அணிந்திருக்கிறார்.
அவர்கள் குடும்பம் கோண்ட் கோவாரி என்ற பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் தன்னார்வ குழுவினர் வழங்கும் கூடுதல் ரேஷன் பொருட்களை பெற்றுள்ளனர். நிறைய அரசு சாரா நிறுவனங்கள், எங்கள் காலனியில், அரிசி, பருப்பு, எண்ணெய், டீத்தூள், சர்க்கரை போன்றவற்றை வழங்கினார்கள் என்று விமல் கூறினார். ஆனால், எங்கள் வாடகை மற்றும் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு யாராவது தயாராக இருக்கிறார்களா? சமையல் காஸ் பெறுவதற்கு என்ன செய்வோம்? அவர்களின் வீட்டு வாடகை மார்ச் மாதம் முதல் செலுத்தப்படாமல் உள்ளது.
விமலுக்கு, கார்னியல் புண் காரணமாக பார்வை பறிபோனபோது வயது 7. தீவிர பாக்டீரியா தொற்றால், நரேஷ் 4 வயதில் தனது பார்வையை இழந்தார் என்று அவரது மருத்துவ அறிக்கை கூறுகிறது. என் கண்ணில் கட்டி ஏற்பட்டது. எனது கிராமத்தில் இருந்த வைத்தியர் குணப்படுத்துவதற்காக எதையோ என் கண்ணில் ஊற்றினார். ஆனால் எனது பார்வை போய்விட்டது என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் உள்ள 5 மில்லியன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில் விமலும், நரேசும் அடங்குவர். 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இதில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 131 பேர் விளிம்பு நிலை தொழிலாளர்கள். அதாவது ஆண்டு 183 நாட்கள் கூட வேலை செய்யாதவர்கள். பெரும்பாலானோர் விமல் மற்றும் நரேசை போன்று சிறு பொருள் விற்பனையாளர்கள்.
அவர்கள் வசிக்கும் தானே மாவட்டத்தில் உள்ள வாங்கனி நகரில், உள்ள 12 ஆயிரத்து 628 பேர், தோராயமாக 350 குடும்பங்கள் உள்ளன. அதில் குறைந்தது ஒருவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருப்பார். மும்பை நகரைவிட இங்கு வாடகை குறைவு. 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால், அமராவதி, ஔரங்காபாத், ஜால்னா, நாக்பூர் மற்றும் யாவாட்மாலைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் குடும்பத்தினர் 1980 முதல் இங்கு தங்குகிறார்கள். வாடகையும் குறைவு, கழிவறையும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் என்று விமல் கூறுகிறார்.
அவரும், நரேசும், இங்கு 1985ம் ஆண்டு, உம்ரெட் தாலுகாவில் உள்ள உம்ரி கிராமத்தில் இருந்து வந்தவர்கள். எனது தந்தைக்கு விவசாய நிலம் உள்ளது. ஆனால், நான் அதில் எவ்வாறு வேலை செய்வது? எங்களைப்போன்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளர்களுக்கு வேறு வேலையும் இல்லை. எனவேதான் நாங்கள் மும்பை வந்தோம் என்று நரேஷ் கூறுகிறார். அப்போது முதல், ஊரடங்கு துவங்குவதற்கு முன்பு வரை அவர்கள் கைக்குட்டைகள் விற்று வந்தார்கள். யாசித்து வாழ்வதைவிட, இது மிகவும், கவுரவமானது என்று அவர் மேலும் கூறுகிறார்.
வாங்கனி மட்டுமல்ல, மும்பையின் பல்வேறு பகுதிகள் மற்றும் அருகில் உள்ள நகரப்பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தினமும் உபயோகப்படும் பல்வேறு பொருட்களை, நகரின் மேற்கு, துறைமுகம் மற்றும் மத்திய ரயில் நிலையங்களில் விற்பனை செய்வார்கள். இனத்தின் அடிப்படையிலான மறுவாழ்வு மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியின் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் 272 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் கூற்றுப்படி, 44 சதவீதத்தினர் தினசரி பயன்படும் பொருட்களான பூட்டு, சாவிகள், பொம்மைகள், கார்ட் வைக்கும் பைகள் உள்ளிட்டவற்றை விற்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மும்பை உள்ளூர் ரயில்களில் 19 சதவீதத்தினர் வேலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் மற்றும் 11 சதவீதத்தினர் யாசகம் செய்கிறார்கள்.
அவர்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு தேவைகள் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் மற்றும் ஊரடங்கும் அவர்கள் நிலையை மேலும் மோசமடையச் செய்துவிட்டது.
2016ம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு, ஏற்கனவே இருந்ததைவிட சம வாய்ப்பு, பாதுகாப்பு உரிமை மற்றும் முழு பங்கேற்பு போன்றவற்றை உறுதிபடுத்திக் கொடுத்தது. இந்தியாவின் 26.8 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்காக, கிராமம் மற்றும் நகரம் என பொது இடங்களில் அவர்கள் உபயோகிக்கக் கூடிய வசதிகளை மேம்படுத்துவதை சட்டம் 1995, பிரிவு 40 உறுதிப்படுத்துகிறது.
2015ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற துறை மாற்றுத்திறனாளிகள் அனைத்து இடங்களையும் உபயோகிக்கக்கூடிய வசதியை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை துவக்கியது. அதன் ஒரு நோக்கம், ரயில் நிலையங்களை 2016ம் ஆண்டுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளான சறுக்கு பாதை, தடையில்லாத நுழைவு, லிப்ட் வசதி மற்றும் பிரைலி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வசதிகள் உள்ளிட்ட மேலும் பல வசதிகளை செய்து தருவது என்பதாகும். அந்தப்பணிகள் தாமதமாக நடந்து வந்ததால், அவை 2020 மார்ச் மாதம் வரை விரிவாக்கப்பட்டது.
ஆனால், அந்த அனைத்து சட்டங்களும் எங்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை என்று 68 வயதான ஆல்கா ஜிவாரே கூறுகிறார். அவரும் தாக்ரே குடும்பத்தினரைப்போல் அப்பகுதியில் வசிப்பவர். ரயில் நிலையங்களில், நான் படிகட்டுகள், கதவு, ரயில் மற்றும் பொது கழிவறை என எங்கு செல்ல வேண்டுமானாலும் மற்றவர்களின் உதவியை நாடவேண்டும். சிலர் உதவுவார்கள். பலர் எங்களை கண்டுகொள்ளமாட்டார்கள். பல ரயில் நிலையங்களில் பிளாட்பார்மிற்கும், ரயிலுக்கும் இடையேயான அகலம் அதிகம் இருப்பதால், எனது கால்கள் நிறைய நேரங்களில் மாட்டிக்கொள்ளும், நான் அதை கஷ்டப்பட்டு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மும்பை நகர வீதிகளிலும், வெள்ளை மற்றும் சிவப்பு கேனை கையில் சுமந்துகொண்டு நடந்துசெல்வது அல்காவிற்கு மிகச்சிரமமான ஒன்றாக இருக்கும். சில நேரங்களில் சாக்கடை, நாய் கழிவு அல்லது குழியில் கால் இடறிவிடும் என்று அவர் கூறுகிறார். பெரும்பாலான நேரங்களில் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வானங்களில் எனது மூக்கு, முட்டி, கால் விரல்களில் இடித்துக்கொள்ள நேரிடும். யாராவது எச்சரிக்கை செய்யாவிடில் எங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.
பாதசாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் இச்சிறு உதவிகள் இனி கிடைக்காது என்று ஆல்கா கவலைப்படுகிறார். “இந்த வைரசால், நாம்தான் கவனமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு இனி யாராவது சாலையை கடப்பதற்கும், ரயிலில் ஏறி இறங்குவதற்கும் உதவுவார்களா?” என்று அவர் கேட்கிறார். ஆல்கா மாடாங் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், 2010ம் ஆண்டு அவரது கணவர் பீமா இறந்த பின்னர், அவரது தம்பி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அவர்கள் தெலுங்கானாவில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் இருந்து வாங்கினியில் 1985ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார்கள். அவர்களின் 25 வயது மகள் சுஷ்மாவிற்கு திருமணமாகிவிட்டது. அவர் வீட்டு வேலைகள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.
“நீங்கள் கைகளை கழுவ வேண்டும் அல்லது கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்த வேண்டும்” என்று ஆல்கா கூறுகிறார். “நாங்கள் தொடர்ந்து தொட்டுதான் வேலைகளை செய்ய வேண்டியுள்ளதால், அந்த திரவத்தை அடிக்கடி உபயோகிக்க வேண்டியுள்ளது. அதனால், அது விரைவில் தீர்ந்துவிடுகிறது. 100 மில்லிலிட்டர், ரூ.50 வருகிறது. இதற்கு நாங்கள் பணம் செலவழிப்பதா அல்லது எங்களின் அடிப்படை தேவையான தினசரி இரண்டு வேளை உணவை உறுதி செய்துகொள்வதா?” என்று அவர் கேட்கிறார்.
வாங்கினி முதல் மஸ்ஜித் பண்டர் வரை உள்ள ரயில் நிலையங்களில், ஆல்கா தினமும், நகவெட்டிகள், ஊக்குகள், கைக்குட்டைகள், கொண்டை ஊசிகள் போன்றவற்றை விற்பனை செய்து மாதம் ரூ.4 ஆயிரம் வரை சம்பாதித்து வந்தார். நான் எனது சகோதரருடன் வசித்து வருகிறேன். அவர்களுக்கு சுமையாக இருந்து விடக்கூடாது. நான் சம்பாதிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
1989 ரயில்வே சட்டத்தின் பிரிவு 144ன்படி ரயில் நிலையங்களில் கூவி விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், அடிக்கடி அபராதம் கட்ட நேரிடுகிறது. மாதத்தில் ஒருமுறையேனும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடுகிறது. இங்கு விற்கக்கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் வீதிகளில் விற்க முற்பட்டால், மற்ற சிறு வியாபாரிகளை எங்களை அங்கும் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். பின்னர் நாங்கள் எங்கு செல்வோம். எங்களுக்கு வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலை ஏதாவது கொடுத்து உதவுங்கள் என்கிறார்.
அல்காவின் வீட்டிற்கு அடுத்தது, ஒற்றை அறை வீடு, தியானேஸ்வர் ஜராரேயுடையது. அவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி, அவரது செல்போனில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார். அவரது மனைவி கீதா, ஓரளவு பார்வையற்ற மாற்றுத்திறனாளி, இல்லத்தரசியாக உள்ளார். மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்தார்.
31 வயதாகும் தியானேஸ்வர் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மேற்கு பாந்தராவில் ஒரு மசாஜ் நிலையத்தில் மாதச்சம்பளம் ரூ.10 ஆயிரத்திற்கு பணி செய்யத்துவங்கியிருந்தார். “நான் ஒரு நல்ல சம்பளத்தில் வேலை செய்ய துவங்கி ஓராண்டு கூட முழுமையாக ஆகவில்லை, ஊரடங்கால் எனது வேலை பாதிக்கப்பட்டது” என்று அவர் கூறுகிறார். முன்னர், மேற்கு ரயில் நிலையங்களில், பைல்கள், கார்டு வைக்கும் பைகள் விற்றுக்கொண்டிருந்தார். “எங்கள் வாயை மூடிக்கொள்வோம், கைகளை சுத்திகரித்துக்கொள்வோம், கையுறைகளை அணிந்துகொள்வோம்” என அவர் கூறுகிறார். “ஆனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் எங்களுக்கு உணவளிக்காது. எங்கள் வாழ்வாதாரம் தொடர வேண்டும். மற்றவர்களைவிட ஒரு வேலை கிடைப்பது எங்களுக்கு மிகக் கடினமான ஒன்று.“
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதற்காக, 1997ம் ஆண்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் வழங்கல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சி மையத்தை நிறுவியது. 2018-19ல் அம்மையம் 15 ஆயிரத்து 786 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல், எம்ராய்டரி, டேட்டா என்ட்ரி வேலைகள், தொலைக்காட்சிப்பெட்டி சரிசெய்யும் தொழிநுட்ப வேலைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கற்றுக்கொடுத்தது. ஒரு லட்சத்து 65 ஆயிரத்து, 337 மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறு வியாபாரங்கள் துவங்க சலுகைக்கடன் வழங்கியது.
ஆனால், மும்பையைச்சேர்ந்த தன்னார்வ நிறுவனமான திரிஷ்டியின் திட்ட இயக்குனர் கிஷோர் கோலி, கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கிவிட்டு, எத்தனை பேருக்கு பயிற்சி அளித்தோம் என்று கணக்கு காட்டுவது மட்டும் போதாது. பார்வையற்ற, நடக்க இயலாத, காதுகேளாத என அத்தனை வகை மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றனர். ஆனால், அவர்களுக்கு வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதன் விளைவாக, அவர்கள் அன்றாடம் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை ரயில்களிலும், தெருக்களிலும் விற்பனை செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள்.” கோலியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளர்தான். அவரின் நிறுவனம் மாற்றுத்திறனாளர்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு உதவுகிறது.
மார்ச் 24ம் தேதி, சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் வழங்கல் துறை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கோவிட் – 19 தொடர்பான அனைத்து தகவல்களையும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தொற்று காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரைலி முறையிலும், ஆடியோ டேப்களாகவும், துணை தலைப்புகள் உள்ள வீடியோக்களாகவும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“யாரும் எங்களிடம் வந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறவில்லை. நாங்கள் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டோம்” என்று விமல் கூறுகிறார். இது மதிய வேளை, அவரின் காலை வேலைகள் முடிந்து, மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். சில நேரங்களில் உணவு அதிக உப்பாக இருக்கும் அல்லது அதிக காரமாக இருக்கும். இது உங்களுக்கும் நடக்கும் என்று அவர் புன்னகைத்துக்கொண்டே கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.