“மிகப் பெரிய பவளப்பாறையின் மீது தான் நம் தீவே உள்ளது என நான் சிறுவனாக இருந்தபோது சொல்லக் கேட்டிருக்கிறேன். பவளப்பாறை நீருக்கடியில் இருந்துகொண்டு தீவை பிடித்து வைத்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள கழிமுகம் கடல் உள்ளுக்குள் வந்துவிடாமல் நம்மை காக்கிறது,“ என்கிறார் பித்ரா தீவில் வசிக்கும் 60 வயதான பி. ஹைதர்.
“என் சிறுவயதில் அலைகள் குறைவாக இருக்கும்போது பவளப் பாறைகளை பார்க்க முடிந்தது,“ என்கிறார் பித்ராவைச் சேர்ந்த மற்றொரு மீனவரான 60 வயதாகும் அப்துல் காதர். “அவை அழகாக இருந்தன. இப்போது எதுவுமே இல்லை. பெரிய அலைகள் அண்டாமல் இருப்பதற்கு நமக்கு பவளப் பாறைகள் தேவை.“
லட்சத்தீவு கூட்டங்களின் சுற்றுச்சூழல், அங்குள்ள மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள், கற்பனைகள், கதைகள் என அனைத்தும் பவளப் பாறைகளைச் சுற்றியே பின்னியுள்ளன – அத்தகைய பவளப்பாறைகள் இப்போது பல மாற்றங்களால் மெல்ல மறைந்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
”இயற்கை மாறிவிட்டது. இதுவே யதார்த்தம்,” என விளக்குகிறார் அகாட்டி தீவில் 22 வயது முதல் மீன்பிடித் தொழில் செய்து வரும் 61 வயதான முனியாமின் கே.கே. “அப்போதெல்லாம் மழைக்காலம் சரியான நேரத்திற்கு [ஜூனில்] வந்துவிடும், இப்போதெல்லாம் எப்போது வரும் என்று சொல்ல முடிவதில்லை. மீன்களும் இப்போது குறைவாகவே கிடைக்கின்றன. மீன்பிடிக்க நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்காது. இப்போது அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் மக்கள் சில வாரங்கள், நாட்கள் என மீன் தேடி செல்கின்றனர்.“
இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாக, கேரளாவின் கடலோரம் அரேபியக் கடலில் அமைந்துள்ள லட்சத்தீவுகளின் திறன்மிக்க மீனவர்கள் சிலர் படகில் சென்றால் ஏழு மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள அகட்டி, பித்ராவில் வசிக்கின்றனர். மலையாளம், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் ‘லட்சத்தீவு‘ என்றால் நூறாயிரம் தீவுகள் என்றுப் பொருள். நம் காலத்தில் தற்போது வெறும் 36 தீவுகள் தான் உள்ளன. அவை தோராயமாக 32 சதுர கிலோமீட்டர் உள்ளன. தீவுக்கூட்டங்களில் 400,000 சதுர கிலோ மீட்டருக்கு நீர் பரவியுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள், வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
யூனியன் பிரதேசத்தின் இந்த ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஏழாவது நபரும் மீனவர் - 64,500 மக்கள்தொகை (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) கொண்ட இங்கு 9,000க்கும் அதிகமானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
மழைக்காலத்தின் வருகையைக் கொண்டு நாட்காட்டிகளை அமைத்துவிடுவோம் என இத்தீவுகளின் பெரியவர்கள் எங்களிடம் கூறுவார்கள். “இப்போது எல்லா நேரமும் கடல் சீற்றத்துடன் உள்ளது - முன்பை போல இப்போது இல்லை,“ என்கிறார் நாற்பது ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வரும் 70 வயது யு.பி. கோயா. “நான் 5ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என நினைக்கிறேன். அப்போது மினிகாய் தீவிலிருந்து வந்த சிலர் [சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது] எங்களுக்கு தூண்டில் போட்டு மீன் பிடிப்பதைக் கற்றுத் தந்தனர். அப்போதிலிருந்து லட்சத்தீவுகளில் நாங்கள் இம்முறையை மட்டுமே கடைபிடிக்கிறோம் - வலைகள் வீசினால் பவளப் பாறைகள் மீது சிக்கி அவற்றை உடைத்துவிடும் என்று நாங்கள் பயன்படுத்துவதில்லை. பறவைகள், எங்களிடம் உள்ள திசைகாட்டிகள் போன்றவற்றின் மூலம் எங்களால் மீன்களை கண்டறிய முடியும்.“
தூண்டில் முறையில் மீனவர்கள் தங்களின் படகுகளில் தனியாக ஒரு தளம் அமைத்து அல்லது உயரத்தில் வரிசையாக நின்றபடி வலுவான கொக்கியை கடலில் வீசி கழியை கையில் பிடித்துக் கொள்வார்கள். அவை பெரும்பாலும் கண்ணாடி இழைகளால் ஆனவை. அதிக தற்சார்பு கொண்ட மீன்பிடி முறை இது. ஆழம் குறைந்த கடற்பரப்பில் கிடைக்கும் கானாங்கெளுத்தி வகையினத்தைச் சேர்ந்த சூரை மீன்களைப் பிடிக்க தூண்டில் முறை சிறந்தது. அகாட்டி மற்றும் பிற லட்சத்தீவுகளில் தேங்காயும், மீனுமே – பெரும்பாலும் சூரை மீன்கள் - முதன்மை உணவுகள் ஆகும்.
12 தீவு கூட்டங்களில் 0.105 சதுர கிலோமீட்டர் அல்லது சுமார் 10 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பித்ரா தீவுதான் மிகச் சிறியது. மென்மையான, வெண்மணல் கடற்கரைகள், தென்னை மரங்கள், நீலம், நீலப்பச்சை, வெளிர்நீலம், கடல் பச்சை ஆகிய நான்கு நிறவகை கடல்நீரால் இத்தீவு சூழப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை; இங்கு வந்தால் எங்கும் நடந்தே செல்ல வேண்டும். கார்கள், இருசக்கர வாகனங்கள் கிடையாது. மிதிவண்டிகள் கூட அரிதாகவே உள்ளன. பித்ராவில் 271 பேர் மட்டுமே வசிப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 சொல்கிறது.
இந்த யூனியன் பிரதேசத்தின் மிகப்பெரிய காயல் இதுவே- கிட்டதட்ட 47 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பித்ரா மற்றும் பிற லட்சத்தீவுகள் மட்டுமே இந்தியாவின் பவளப் பாறை தீவுகள். மக்கள் வசிக்கும் இப்பகுதியே பவள அணுக்கள் தான். பவளப் பாறைகளில் இருந்து தான் இங்கு மணல் வந்துள்ளது.
பவளப்பாறை எனும் உயிரினம் தான் திட்டுகளை உருவாக்கி கடல்வாழ் உயிரினங்களுக்கு குறிப்பாக மீன்களுக்கு உகந்த சுற்றுச்சூழலைக் கொடுக்கிறது. கடல்நீர் புகாமல் பவளப் பாறைகளின் திட்டுகள் தடுத்து இயற்கை அரணாக பாதுகாக்கின்றன. உப்பு நீரை உள்ளுக்குள் அனுமதிக்காமல் குறிப்பிடத்தக்க அளவில் நன்னீரை கிடைக்கச் செய்கின்றன.
கண்மூடித்தனமாக மீன்பிடிப்பது, வலைகளைக் கொண்ட பெரிய இயந்திர படகுகளைக் கொண்டு கீழே பயணிப்பது போன்றவற்றால், தூண்டில் மீன்கள் குறைகின்றன
சூரை மீன்களை பிடிக்க உதவும் சிறிய வகை மீன்கள், ஏராளமான கழிமுக மீன் வகையினங்களின் உறைவிடமாக இத்திட்டுகள் உள்ளன. இங்குள்ள நன்னீர் மற்றும் திட்டுகள், இந்தியாவிற்கான 25 சதவீத மீன்பிடிப்பை தருவதாக 2012 UNDP பருவநிலை மாற்றம் குறித்த லட்சத்தீவுகள் செயல் திட்டத்தின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரை மீன்களை பிடிக்க உதவும் சிறிய வகை மீன்களின் மையமாகவும் இப்பகுதி திகழ்கிறது.
“மீன்கள் முட்டைகளை அடைகாத்த பிறகுதான் நாங்கள் சிறியவகை மீன்களைப் பிடிப்போம். இப்போதெல்லாம் எல்லா நேரத்திலும் மக்கள் அவற்றை பிடிக்கின்றனர்,“ என்கிறார் பித்ராவிலிருந்து சுமார் 122 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவராட்டியின் மாவட்ட தலைநகரத்தில் 30ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அப்துல் ரஹ்மான். “படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆனால் மீன் கிடைப்பது குறைந்துவிட்டது.“ கண்மூடித்தனமான மீன்பிடிப்பது, இயந்திரப் படகுகளின் மூலம் வலைகளை நீருக்கடியில் தரைவரைக்கும் விரித்து மீன்களை அள்ளிவிடுவது போன்றவற்றால், சிறிய வகை மீன்கள் அருகி வருகின்றன. பவளப் பாறைகள் மற்றும் அவை தொடர்புடைய பல்லுயிர் பெருக்கத்தையும் இச்செயல் பாதிக்கிறது
இது பிரச்னையின் ஒரு பகுதி தான்.
எல் நினோ போன்ற பல்வேறு பருவநிலை மாற்றங்களால் கடல் மட்டத்தின் வெப்பநிலை அதிகரித்து பவளப் பாறைகள் வெளிறிப் போகின்றன - அவற்றின் உயிர்த்தன்மையையும், நிறத்தையும் பறிக்கின்றன. தீவுகளை காக்கும் அவற்றின் திறனையும் குறைக்கின்றன. 1998, 2010, 2016 என மூன்று முறை லட்சத்தீவுகளில் பவளப்பாறைகள் வெளிறிப் போவது நிகழ்ந்துள்ளது. மைசூரைச் சேர்ந்த லாப நோக்கமற்ற வனஉயிரின பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (NCF), இந்த பவளப் பாறைத் திட்டுகள் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. 1998ஆம் ஆண்டு 51.6 சதவீதம் இருந்த லட்சத்தீவுகளின் பவளப் பாறைகள் 2017ஆம் ஆண்டு – அதாவது, 20 ஆண்டுகளில் - 11 சதவீதமாக சரிந்துள்ளன.
பித்ரா பகுதி மீனவரான 37 வயதாகும் அப்துல் கோயா சொல்கிறார்: “எங்களுக்கு 4 அல்லது 5 வயது இருக்கும்போது, கடலோரத்தில் அவை கரை ஒதுங்கியிருப்பதை பார்த்திருக்கிறோம். நாங்கள் அதில் வீடு கட்டி விளையாடியிருக்கிறோம்.“
கவராட்டியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி டாக்டர் கே.கே. இத்ரீஸ் பாபு, பவளப் பாறைகளின் சரிவு குறித்து விளக்குகிறார்: “கடலின் மேற்பரப்பு வெப்பநிலைக்கும், பவளப்பாறைகளின் திட்டுகளுக்கும் தொடர்பு உண்டு. 2016ஆம் ஆண்டில் கடலின் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாக இருந்தது. இப்போது இன்னும் அதிகரித்துவிட்டது!“ அண்மையில் 2005ஆம் ஆண்டு திட்டுப்பகுதிகளில் வெப்பநிலை 28.9 டிகிரி செல்சியசாக இருந்தது. 1985ஆம் ஆண்டு 28.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. வெப்பநிலை உயர்வதும், தீவுகளின் நீர்மட்டம் உயர்வதும் கவலை அளிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1-2 மீட்டர் உயரத்தில் தீவுகள் இருக்கின்றன.
53 அடி நீளமுள்ள மிகப்பெரிய படகின் உரிமையாளரான கவராட்டியின் 45 வயதாகும் நிஜாமுதீனும் இந்த மாற்றங்களை உணர்கிறார். மரபு சார்ந்த அறிவை மக்கள் இழந்ததும் இதற்கு காரணம் என்கிறார்: “எந்த இடத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்பதை [அந்தத் தலைமுறை] மீனவரான என் தந்தை அறிந்து வைத்திருப்பார். அந்த அறிவை இழந்துவிட்டு FADs [மீன்களை திரட்டும் கருவிகளை] சார்ந்திருக்கிறோம். சூரை மீன்கள் கிடைக்காதபோது நாங்கள் கழிமுகத்தில் உள்ள மீன்களை தேடிச் செல்கிறோம்.” FADs என்பது ஒலி எழுப்பும் உயர் தொழில்நுட்ப கருவி என்பதன் சுருக்கம், அது நீரில் மிதக்கும் மரத்துண்டைப் போன்றது – அக்கருவி ஒலி எழுப்பி மீன்களை ஈர்த்து, ஓரிடத்தில் பெருமளவில் திரட்டுகிறது.
“இப்போதும், வாய்ப்பு உள்ளது,” என்கிறார் கடல்வாழ் உயிரியலாளரும், விஞ்ஞானியுமான டாக்டர் ரோஹன் ஆர்த்தர். அவர் 20 ஆண்டுகளாக லட்சத்தீவு பகுதிகளில் வேலை செய்து வருகிறார். ”பாறைகளின் பல்லுயிர் குறித்து நான் மிகவும் கவலைப்படவில்லை, ஆனால் அவற்றின் செயல்பாட்டு தேவை நமக்கு அவசியமானது. மக்களின் வாழ்வாதாரம் அதை நம்பித்தான் இருக்கிறது. பாறைகள் என்பது வெறும் பவளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்குகிறது. காடுகள் என்றால் மரங்கள் மட்டுமல்ல, கடல் அடியில் உள்ளவற்றை காடுகளாக சிந்தித்துப் பாருங்கள்.”
என்சிஎஃப்பில் பெருங்கடல் மற்றும் கடலோரத் திட்டங்களின் தலைவராக உள்ள டாக்டர் ஆர்த்தர், கவராட்டியில் நம்மிடம் பேசுகையில், “லட்சத்தீவு பாறைகள் பின்னடைவின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் பருவநிலை மாற்ற நிகழ்வுகளின் வேகத்திற்கு அவற்றின் தற்போதைய மீட்பு விகிதங்களை ஒப்பிட முடியாது. அதிகப்படியான மீன்பிடித்தல் போன்ற மானுடவியல் அழுத்தங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஒப்பிடவே முடியாது.“
பாறைகளை வெளிறச் செய்வதோடு பருவநிலை மாற்றங்களும் நிகழ்வுகளும் பல்வேறு தாக்கங்களைச் செலுத்துகின்றன. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மேக் புயல், 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயல் ஆகியவை லட்சத்தீவுகளை புரட்டிப்போட்டுவிட்டன. 2016ஆம் ஆண்டு கிட்டதட்ட 24,000 டன் வரை இருந்த (அனைத்தும் சூரை மீன் வகைகள்), 2017ஆம் ஆண்டு 14,000 டன் என 40 சதவீதம் குறைந்துவிட்டதாக மீன்வளத்துறையின் மீன்பிடி தொடர்பான தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டில் 24,000 டன் என இருந்தது 2019ஆம் ஆண்டு மேலும் 19,500 டன் என சரிந்துள்ளது. வரும் காலங்களில் சில ஆண்டுகளில் அதிகளவு மீன் கிடைக்கலாம். ஆனால் இவை ஒழுங்கற்ற, கணிக்க முடியாத அளவிற்கு மாறிவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பத்தாண்டுகளில் பவளப்பாறைகளில் வாழும் மீன்களுக்கு உலகளவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது, களவாய் மீன்கள் அல்லது மிகப்பெரிய வேட்டையாடும் மீன்களை மீனவர்கள் அதிகம் தேடிச் செல்கின்றனர். இவ்வகை பெரிய மீன்களை சம்மம்ஸ் என்று உள்ளூரில் அழைக்கின்றனர்.
அகாட்டித் தீவைச் சேர்ந்த 39 வயதாகும் உம்மர் 15 ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலையும், படகு கட்டும் தொழிலையும் செய்து வருகிறார் - களவாய் மீன்களை அதிகம் பிடிப்பதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். “கழிமுகம் அருகே ஏராளமான சூரை மீன்கள் முன்பெல்லாம் இருக்கும், இப்போதெல்லாம் அவற்றை தேடி 40-45 மைல் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. பிற தீவுகளுக்கு அவற்றைத் தேடிச் சென்றால் இரண்டு வாரங்கள் கூட ஆகும். அந்த சமயத்தில் நான் சம்மம்ஸ் மீன்களை பிடித்துவிடுவேன். அவற்றிற்கு சந்தையில் வரவேற்பு உள்ளது. ஆனால் அதுவும் சுலபமல்ல. ஒரு மீனை பிடிப்பதற்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.”
இத்துறையில் ஏற்படும் வளர்ச்சிகளை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானி ருச்சா கர்கரே பித்ராவில் நம்மிடம் பேசுகையில், “சில ஆண்டுகளாக களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கும் பவளப் பாறைகள் சீர்கேடு அடைந்ததற்கும் தொடர்புள்ளது. பருவநிலை மாற்றம், நிச்சயமற்ற தன்மை போன்றவற்றால் மீனவர்கள் சூரை மீன் கிடைக்காத போது பாறைக்கு அடியில் உள்ள மீன்களை தேடிச் செல்வதால் அவற்றின் எண்ணிக்கை மேலும் சரிகிறது. மீன்கள் குஞ்சுபொரிப்பதற்கு கால அவகாசம் தேவை என்பதால் மாதத்தில் ஐந்து நாட்கள் மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.”
பித்ரா மீனவர்கள் சில நாட்களுக்கு மீன்பிடித்தலை நிறுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் அதற்கு தயாராக இருப்பதில்லை.
“கில்டான் தீவுகளில் இருந்து வரும் சிறுவர்கள் இரவு நேரத்தில் பித்ராவில் மீன் பிடிக்க வருகின்றனர்,“ என்கிறார் கருவாட்டை காய வைத்துக் கொண்டே நம்மிடம் பேசிய அப்துல் கோயா. “இதை அனுமதிக்கக் கூடாது… ஆனால் அடிக்கடி இப்படி செய்கின்றனர். இதனால் தூண்டில் மீன்கள், பாறை மீன்கள், சூரை மீன்களின் எண்ணிக்கை சரிகிறது.“
“அருகிலிருக்கும் கடலோரப் பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், பெரிய படகுகளில் பெரிய பெரிய வலைகளுடன் மீன்பிடிக்க வருகின்றனர்,“ என்கிறார் பித்ரா ஊராட்சி மன்றத் தலைவர் பி. ஹைதர். “எங்களுடைய சிறிய படகுகளில் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை.“
அத்துடன் வானிலையும், பருவநிலை மாற்றங்களும் இப்போதெல்லாம் ஒழுங்கற்று காணப்படுகின்றன. “40 வயது வரை எனக்கு தெரிந்து இரண்டு புயல்களை தான் கண்டிருக்கிறேன்,“ என்கிறார் ஹைதர். “ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக புயல்கள் வந்து பாறைகளை உடைக்கின்றன.“
புயலின் தாக்கம் குறித்து கவராட்டியில் பேசிய அப்துல் ரஹ்மான் “பாறைகளுக்கு அருகே வரிச்சூரை வகை மீன்களை முன்பெல்லாம் பார்க்கலாம். ஒக்கி புயலுக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது. 1990களில், கடலில் 3-4 மணி நேரம் செலவிட்டால் போதும். எங்களிடம் எவ்வித இயந்திர கருவிகளும் இருக்காது. ஆனால் அதிகளவு மீன்களை வேகமாக பிடித்துவிடுவோம். இப்போதெல்லாம் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் ஆகிவிடுகிறது. பவளப் பாறைகளில் உள்ள மீன்களை பிடிக்க நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் சூரை மீன்கள் கிடைக்காதபோது அவற்றை தேட வேண்டி உள்ளது.”
ரஹ்மான் சொல்கிறார், படகுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது- பெரிய படகுகள் நிறைய வந்துவிட்டன. ஆனால் மீன்கள் குறைவாக கிடைக்கின்றன. எங்களுக்கு இதற்கு ஆகும் செலவும் அதிகரித்துள்ளது.”
மீனவர்களின் வருமானத்தை மதிப்பீடு செய்வது எளிதல்ல. மாதந்தோறும் அது வேறுபடும் என்கிறார் டாக்டர் ஆர்த்தர். ”பலரும் வேறு வேலைகளையும் செய்கின்றனர், மீன்பிடியிலிருந்து என்ன கிடைக்கிறது என பிரித்து எதையும் சொல்லிவிட முடியாது.” ஆனால் உண்மையில், ”கடந்த பத்தாண்டுகளில் மீன்பிடித் தொழில் வருவாயில் பெருமளவுக்கு நிலையற்ற தன்மை இருப்பதைக் காண முடிகிறது.”
லட்சத்தீவுகள் குறித்து பேசும் அவர், ”ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன, ஒன்று பருவநிலை மாற்றத்தால் பவளப் பாறைகள் அழிந்து மீன்களின் வரத்தை குறைத்துள்ளன. இன்னொன்று, இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளை ‘ஒளிர் வட்டம்‘ என்றழைப்போம். கடல்வாழ் உயிரினங்களின் சுழலை பாதுகாத்து பவளப் பாறைகள் மீள உதவினால், அவற்றை நம்மால் நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும்.”
கவராட்டியில் பேசிய கே. நிஜாமுதீன், “20 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய மீன்கள் இருக்கும். 4 அல்லது 5 மணி நேரத்தில் நிறைய பிடிப்போம், இப்போதெல்லாம் படகுகளை நிரப்ப சில நாட்கள் தேவைப்படுகிறது. மழைக்காலமும் மாறிவிட்டது. மழை எப்போது வரும் என எதிர்பார்க்க முடியவில்லை. மீன்பிடி காலத்தில்கூட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரைக்கு படகை முழுவதுமாக எடுத்துவர வேண்டி உள்ளது - இது மிகவும் கடினமான பணி- ஜூன் மாதங்களில் மழைக்காலம் வந்துவிடும். அடுத்த மாதமும் சிலசமயம் மழை பெய்யும்! அப்போது எங்கள் படகுகள் கரையில் சிக்கிக் கொள்ளும், காத்திருப்பதா அல்லது படகை எடுத்துச் செல்வதா என நமக்குத் தெரியாது. நாம் சிக்கிக் கொள்வோம்“ என முணுமுணுக்கிறார்.
எளிய மக்களின் குரல்கள், வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பருவநிலை மாற்றம் குறித்து தேசிய அளவில் செய்தி சேகரிக்கும் திட்டத்தை UNDP ஆதரவுடன் பாரி செய்து வருகிறது.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா?
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள்.
[email protected]
என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா