“ நிறைய பேருக்கு அரசு வேலைகள் கிடைத்திருப்பதாகவும் அரசின் திட்டங்கள் மூலமாக அவர்களின் வாழ்க்கை நன்றாக இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்” என்கிறார் கவுரி. “டிவி விளம்பரங்களில் நான் இதைப் பார்த்தேன்”
இதெல்லாம் யாருக்கு கிடைச்சது என்பது பற்றி கவுரி வகேலாவுக்கு எதுவும் தெரியாது. விளம்பரங்கள் சொல்வது போல அவரது வேலை தொடர்பான விஷயங்களும் மாறவே செய்தன. “அரசாங்கம் கொடுத்த திறன் வளர்ப்பு பயிற்சியை நான் கற்றுக்கொண்டேன். தற்போது என்னால் தையல் மிஷினை கையாள முடியும்” என்கிறார் 19 வயதான அவர். “எனக்கு ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலையும் கிடைத்தது. எட்டு மணிநேர வேலைக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளம். ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அது இருந்தது. அதில் சம்பாதித்தது எல்லாம் போய்வருவதற்கும் சாப்பாட்டுக்குமே எல்லாம் போய்விட்டது. இரண்டு மாதங்களுக்கு அப்பறம் நான் அதனை விட்டுவிட்டேன்”. என்று சிரிக்கிறார் அவர். “இப்போ நான் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு துணி தைச்சு தர்றேன். ஒரு பீஸூக்கு 100ரூபாய் வாங்கிறேன். இங்கிருக்கிற மக்கள் இரண்டு செட் துணிகள் தைச்சா மொத்த வருடத்துக்கும் அதையே வைச்சுக்குகிறாங்க. அதனால எனக்கு போதுமான பணத்தை சம்பாதிக்க முடிவதில்லை”
பூஜ் நகரத்தின் ராம்நகரியில் உள்ள பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கியிருப்பவர்கள் வசிக்கும் இளம்பெண்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். கஜ் மாவட்டம் அது. ஏப்ரல் 23இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றி பேச்சு திரும்பியது.
கஜ் தொகுதியில் 15.34 வாக்காளர்கள் உள்ளனர். 2014 தேர்தல்களில் 9.47 வாக்காளர்கள் வாக்களித்தனர். பாஜக அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. கஜ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோத் சாவ்தா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர் தினேஷ் பார்மரை விட 2.5 லட்சம் வாக்குகளுக்கும் மேலாக பெற்று வெற்றிபெற்றார். 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99- ஐ பாஜக வென்றது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை பெற்றது.





