இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
செங்கற்கள்,நிலக்கரி மற்றும் கல்
அவர்கள் வெறுங்காலோடு வேலைப்பார்ப்பது மட்டுமல்லாமல், தலையிலும் சூடானக் கற்களை சுமந்தபடி உழைத்து கொண்டிருக்கின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள, அந்த செங்கல் சூளையில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த பகுதியின் வெளிப்புற வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் என எரிச்சலுட்டக்கூடியதாக நிலவுகிறது. இது பெண்கள் பெரும்பாலும் உழைக்கக்கூடிய சூளையின் உலைப் பகுதியில், வெப்பநிலை இன்னும் அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு கூலியாக பெண்கள் ரூ. 10 -12 வரை பெற்று வருகின்றனர். இந்த பரிதாபகரமான நிலையை விட கொஞ்சம் கூடுதலாக ஆண்கள் ரூ. 15-20 வரை பெற்று வருகின்றனர். இந்த வேலைக்கு ஒப்பந்தகாரர்கள் முன்கூட்டியே கடனாக பணம் அளித்து புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தைக் இங்கு கூட்டி வருகின்றனர். இந்தக் கடனின் காரணமாக அவர்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு அடிபணிய வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், அவர்களை கொத்தடிமைகளாகவும் ஆகக்கூடிய நிலையை உண்டாக்குகிறது. இங்கு பணிபுரியக்கூடிய 90 சதவீதமானத் தொழிலாளர்கள் நிலமற்றவர்கள் அல்லது விளிம்புநிலையிலுள்ள விவசாயிகளே ஆகும்.
இந்தச் செங்கல் சூளையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கு எதிராக வெளிப்படையாகவே விதிமீறல் நடைபெற்றிருந்தாலும், இங்கு பணிபுரிகூடிய எந்த தொழிலாளர்களுக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை.மேலும், புலம்பெயர் தொழிலாளர்களை உள்ளடக்கிய காலாவதியான சட்டங்களினாலும் அவர்களை காப்பாற்ற இயலவில்லை. அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் அங்கு பணிபுரியக்கூடிய ஒடியாக்களுக்கு உதவும் வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறையை நிர்பந்திக்கும் வகையில் இல்லை. ஒடிசாவைச் சார்ந்த தொழிலாளர் நலவாரியங்களுக்கோ, ஆந்திர மாநிலத்தில் எவ்வித அதிகாரங்களும் இல்லை. செங்கல் சூளையில் நிலவும் கொத்தடிமைத்தனத்தின் காரணமாக இங்கு பணிபுரியும் பல பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கோட்டா பகுதியில் உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில், நிலக்கரிக்கழிவுகள் குவித்து வைக்கபடும் இடத்தின், சேறும்,சகதியுமாக உள்ள அந்தப் பகுதியின் வழியாக தனியாக ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருக்கிறார். இந்தப்பகுதியில் உள்ளப் பல பெண்களைப் போன்று, இவரும் வீட்டு எரிபொருளாக நிலக்கரிக்கழிவுகளை விற்று குறைந்த வருமானம் ஈட்டுவதற்காக, நிலக்கரிக்கழிவுகள் குவித்து வைக்கபட்டுள்ள இடத்திலிருந்து நிலக்கரிகளை அள்ளி வருகிறார். உபயோகப்படுத்த இயலாது மக்கிப் போகக்கூடிய நிலையிலுள்ள நிலக்கரிகழிவுகளைத் தான் இவரை போன்ற அந்த பகுதியில் உள்ளவர்கள் அள்ளுகின்றனர். இவர்களது இந்த வேலையால் தேசத்தின் வளம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் படி, இது குற்றச்செயலாகும்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கோட்டா பகுதியில் உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில், நிலக்கரிக்கழிவுகள் குவித்து வைக்கபடும் இடத்தின், சேறும்,சகதியுமாக உள்ள அந்தப் பகுதியின் வழியாக தனியாக ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருக்கிறார். இந்தப்பகுதியில் உள்ளப் பல பெண்களைப் போன்று, இவரும் வீட்டு எரிபொருளாக நிலக்கரிக்கழிவுகளை விற்று குறைந்த வருமானம் ஈட்டுவதற்காக, நிலக்கரிக்கழிவுகள் குவித்து வைக்கபட்டுள்ள இடத்திலிருந்து நிலக்கரிகளை அள்ளி வருகிறார். உபயோகப்படுத்த இயலாது மக்கிப் போகக்கூடிய நிலையிலுள்ள நிலக்கரிகழிவுகளைத் தான் இவரை போன்ற அந்த பகுதியில் உள்ளவர்கள் அள்ளுகின்றனர். இவர்களது இந்த வேலையால் தேசத்தின் வளம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் படி, இது குற்றச்செயலாகும்.
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த, கல் உடைக்கும் தொழிலாளர்களின் கதை தனித்துவமானது. கடந்த 1991 ஆம் ஆண்டு, மிகுந்த ஏழ்மையில் உழன்ற 4,000 பெண் தொழிலாளர்கள், அவர்கள் கொத்தடிமைகளை பணிபுரிந்த குவாரியையே கட்டுப்படுத்த அணிதிரண்டு வந்தனர். அந்த சமயத்தில் அங்கு பணிபுரிந்த அதிகாரிகள் மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கைகளாலும், இது சாத்தியமாகி இருக்கிறது. மேலும், அப்போது புதிதாகப் படித்து முடித்த பெண்களின் ஒருங்கிணைந்தச் செயல்பாடுகளாலும், இது நிஜமாகியிருக்கிறது. இதனால், குவாரியில் பணிபுரிந்தப் பெண்களின் குடும்பங்களின் நிலையும் வியத்தகு முறையில் மேம்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தினால் அரசுக்கும் கூட, அந்தக் குவாரியின் புதிய உரிமையாளர்களால் கணிசமான வருவாய் கிடைத்தது. ஆனால், இந்தப் பகுதியில் முறைகேடாகக் குவாரி நடத்தி வந்த ஒப்பந்தக்காரர்கள் கடுமையானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதிலிருந்து ,பல பெண்கள் சிறப்பான வாழ்க்கையை பெற இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கோட்டா பகுதியுள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தின் நிலக்கரிக்கழிவுகள் குவிக்கும் இடத்திலிருந்து சூரியன் மறையத்தொடங்கி பெண்கள் நிழலுருவாகத் தெரியத்தொடங்கும் போது தான் அங்கிருந்து வெளியேறுகின்றனர். பகல் நேரத்தில் தங்களால் எந்த அளவுக்கு நிலக்கரிக்கழிவுகளை அள்ள முடியுமோ அந்தளவிற்கு அள்ளுகின்றனர். இதேபோன்று, பருவமழை காலத்தில் சேறும்,சகதியிலும் சிக்கித் தவிக்காமல் இருப்பதற்காக மழைப்பொழிவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி விடுகின்றனர். சுரங்கங்களிலும்,குவாரிகளிலும் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கைக் குறித்து அரசு குறிப்பிடும் எண்ணிக்கைகள் அர்த்தமற்றவை. ஏனென்றால்,சட்டவிரோத சுரங்கங்கள் அதை சார்ந்த பகுதிகளில் அபாயகரமான பணிபுரியக்கூடிய பல பெண்களின் எண்ணிக்கை அதில் கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை . இது போன்ற எண்ணற்ற பெண்களின் நீண்ட சுவடுகளால் அந்த நிலக்கரிக்கழிவுகள் குவிக்கும் இடம் நிரம்பிக் கிடக்கிறது. ஒரு நாளின் முடிவில் அவர்களால் 10 ரூபாய் சம்பாதிக்க முடிந்தால் அவர்களே அன்றைய நாளின் பாக்கியசாலிகள்.
அதே சமயத்தில், சுரங்கத்தில் வெடிமருந்துகளால் நடத்தப்படும் வெடிப்புகள், நச்சுத்தன்மை வாய்ந்த வாயு வெளியேற்றம், பாறைத்தூசுகள் மற்றும் இதர காற்று மாசுகளால் அவர்கள் அபாயகரமான சூழலைச் சந்தித்து வருகின்றனர். சிலசமயம், 120 டன் கொள்திறன் கொண்ட வாகனங்கள் சுரங்கத்தின் விளிம்புக்கு வந்து, சுரங்கத்திலிருந்து வெளியாகும் கழிவுகளை அல்லது அகழாயப்பட்ட மேல்புற மண்ணை ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கப்பகுதியில் சமப்படுதுவதற்காக கொட்டுகின்றன. அப்போது, மிகவும் வறுமையில் உள்ள சில பெண்கள் டன் கணக்கான மண்ணில் புதைந்து விடும் அபாயத்தையும் கணக்கில் கொள்ளாமல், அந்த மண்ணிலிருந்து எதாவது நிலக்கரி கழிவுகள் கிடைக்குமா என்று போட்டிபோட்டு கொண்டு ஓடுகின்றனர்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்