அரசு அலுவலர்கள் தவிர மற்ற அனைவரின் பெயர்களும் அவர்களின் அடையாளத்தை தவிர்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன. இதேக் காரணத்தால் தான் கிராமங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இரண்டு பகுதியாக எழுதப்பட்ட கட்டுரையில் இது முதல் பகுதியாகும்.
மாலை 5 மணி இருக்கும், வானில் கொஞ்சம் வெளிச்சம் இருந்த போது 16 வயது விவேக் சிங் பிஷ்ட் மற்றும் சிலர் சட்பரில் உள்ள தங்களின் முகாமிற்குத் திரும்பினர். “இன்னும் நிறைய கீடா ஜடியை பறிப்பதற்காக மேலும் 10 நாட்களுக்கு நாங்கள் இங்கு இருப்போம். இந்தப் பருவம் எங்களுக்கு சிறப்பானதாக இல்லை,” எனும் அவர் என்னிடம் அன்று சேகரித்த 26 துண்டு பூஞ்சைகளைக் காட்டுகிறார்.
கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில் உள்ள சட்பர் புல்வெளி பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு பனிக் காற்றுக்கு இடையே 35 தார்ப்பாய்க் கூடாரங்கள் கட்டப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ள விவேக் போன்ற பூஞ்சை வேட்டையர்கள் மே மாத மத்தியில் இந்த கூடாரங்களுக்கு வந்து தங்குகின்றனர். இந்தியா – நேபாள எல்லையிலிருந்து மேற்கில் சில கிலோமீட்டர் தொலைவில் பித்தோராகர் மாவட்ட தர்ச்சுலா வட்டாரத்தில் சட்பர் உள்ளது.
நல்ல நாட்களில் ஒருவர் 40 வரை எடுப்பார்கள். மோசமான நாட்களில் 10 தான் கிடைக்கும். உத்தராகண்டில் ஜூன் மத்தியில் பருவமழை தொடங்கும்போது லாபகரமான கம்பளிப் புழு வேட்டை கிட்டத்தட்ட முடிந்துவிடுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் விவேக்கின் பெற்றோர், தாத்தா, பாட்டி, அவரது எட்டு வயது சகோதரி ஆகியோர் 900 துண்டுகளுடன் கிராமத்திற்குத் திரும்பினர். ஒவ்வொரு துண்டும் அரை கிராமிற்கும் குறைவான எடையைக் கொண்டிருக்கும். ஒரு துண்டை ரூ.150-200 வரை இக்குடும்பம் விற்கும்.
கீடா ஜடி அல்லது ‘கம்பளிப் பூச்சி பூஞ்சை’ அறுவடை நேபாள – இந்திய எல்லையில் உள்ள திபெத்திய பீடபூமியின் கிராமங்களைச் சேர்ந்த பல ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக (இக்கட்டுரையின் இரண்டாவது பாகத்தில் மேலும் இது குறித்து பார்க்கலாம்) நல்ல லாபத்தை தரும் தொழிலாக மாறியுள்ளது. குறிப்பாக பித்தோராகர், சமோலி போன்ற உயரமான எல்லை மாவட்டங்களில் இது ஒரு தொழிலாக உள்ளது. பூஞ்சை வேட்டை தொழில் வளர்வதற்கு முன் கிராமத்தினர் விவசாயம், தினக்கூலியை முதன்மையாக சார்ந்திருந்தனர். தரம் மற்றும் அளவின் அடிப்படையில் இப்போது ஒவ்வொரு கிலோ பூஞ்சையும் ரூ.50,000 முதல் ரூ.12 லட்சம் வரை விற்பனையாகிறது. குறைந்த விலை கிடைத்தால் கூட கிராம குடும்பங்களின் ஒரு மாத வருவாய் ஆகிறது.
சீனாவில் உள்ள வியாபாரிகள் மற்றும் நுகர்வோருக்கு இந்திய அல்லது நேபாள முகவர்கள் மொத்தமாக அவற்றை விற்கின்றனர். உத்தராகண்ட் வருவாய்த் துறை, வனத்துறை, மாநில காவல்துறையிடம் சிக்காமல் தப்புவதற்காக நேபாள எல்லை வழியாக சீனாவிற்கு தொலைவில் உள்ள மலைப்பாதை வழியாக கடத்துகின்றனர்.
இப்பூஞ்சையை கார்டிசெப்ஸ் மஷ்ரூம் என்றும் அழைக்கின்றனர், இதன் அறிவியல் பெயர் ஓபியோகார்டிசெப்ஸ் சினன்சிஸ். ‘பேய் அந்துப்பூச்சி’ கம்பளிப் பூச்சியின் லார்வாவில் ஒட்டுண்ணியாக வளர்வதால் இது 'கம்பளிப் பூச்சி பூஞ்சை' என்று அழைக்கப்படுகிறது. அது அதன் முன்தொகுப்பைக் கொன்று கெட்டியாக்கி, அதை மஞ்சள்–பழுப்பு நிற உறையில் மூடுகிறது. பின்னர், குளிர்காலம் தொடங்கி மண் உறைவதற்கு சற்று முன்பு, ஒரு சிறிய மொட்டு உருவாகி கம்பளிப் பூச்சியின் தலையிலிருந்து வெளியே தள்ளப்படுகிறது. மே மாத இளவேனிற் காலத்தில் பனி உருகத் தொடங்கும்போது மண்ணின் மீது பழுப்புநிற தோற்றத்தில் காளான்களைப் போன்று அவை மேலெழுகின்றன.
இதுவே கீடா ஜடி எனப்படுகிறது. ‘புற்களின் புழு’ என்று உத்தராகண்டிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் நேபாளத்தில் யர்சகும்பா என்றும், சீனாவில் டோங் சோங் சியா காவ் என்றும் சொல்லப்படுகிறது. ‘கோடைப் புல்லின் மீதான குளிர்காலப் புழு’ என்றே சீனா, திபெத், நேபாள நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பாலுணர்வைத் தூண்டும் பண்புகளால் இப்பூஞ்சைக்கு அதிக விலை கிடைக்கிறது. இதனால் ‘இமாலய வயாக்ரா’ என்றும் இது அறியப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் மதிப்புமிக்க உட்பொருளாக இது உள்ளது. இப்பூஞ்சையில் செய்த சக்தியூட்டியை மூன்று சீன தடகள வீரர்கள் தொடர்ந்து குடித்து 1993ஆம் ஆண்டு பீஜிங் தேசிய போட்டிகளில் பங்கேற்று ஐந்து உலக சாதனைகளை முறியடித்த சம்பவத்திற்குப் பிறகு யர்சகும்பாவிற்கான தேவை அதிகரித்தது.
சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இப்பூஞ்சை பறிப்பு தொடங்கியது. “2000ஆம் ஆண்டுகளில் [தொடக்கத்தில்], திபெத்திய கம்பா பழங்குடியினர் இந்திய எல்லைப் பக்கமுள்ள புல்வெளிகளில் இப்பூஞ்சையைத் தேடினர். திபெத்திய பகுதிகளில் மிக அரிதாகவே அது கிடைத்தது. அவர்கள் பழக்கப்படாத இந்திய பகுதிகளுக்குள் வந்து எங்களிடம் உதவி கேட்டனர்,” என்கிறார் கிருஷ்ணா சிங். அப்போது கீடா ஜடிக்கான சந்தை விலையை கணிக்க முடியவில்லை. 2007ஆம் ஆண்டு வாக்கில் இந்த வர்த்தகம் லாபகரமானதால் மேலும் பல வேட்டையர்களை ஈர்த்தது.
“பறித்தல், வாங்குதல், விற்றல் என இப்போது அனைத்தும் சட்டவிரோதமானது,” என்கிறார் உத்தராகண்டின் வன பாதுகாப்புத் தலைவர் ரஞ்சன் மிஷ்ரா. “இந்தியச் சந்தையில் கீடா ஜடியின் சந்தை மதிப்பை நம்மால் ஒருபோதும் அறிய முடியாது.”
சட்டவிரோத வணிகத்தை முறைப்படுத்தும் விதமாக 2002ஆம் ஆண்டு உத்தராகண்ட் அரசின் முயற்சியால் அதிகாரப்பூர்வ வன ஊராட்சிகள் – வன குழுக்கள் அமைக்கப்பட்டு, கிராம சமூகங்களால் நிர்வகிக்கப்பட்டது. இது ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் பூஞ்சை பறிக்க உள்ளூர் மக்களுக்கு உரிமம் வழங்கியது. வன ஊராட்சிகளை தாண்டி வேறு யாருக்கும் பூஞ்சையை உரிமம் பெற்றவர்கள் விற்பது சட்டவிரோதம் என்றது. 2005ஆம் ஆண்டு மாநில அரசு இக்கொள்கையை காகிதத்தில் மேலும் மெருகேற்றியது. அல்பைன் புல்வெளிகளில் சில வன ஊராட்சிகளுக்கு மட்டுமே நிர்வாகம் இருந்தது. ஆனால் இக்கொள்கையை கிராமத்தினரோ, ஊராட்சி உறுப்பினர்களோ பின்பற்றவில்லை.
கைதுகளும் அரிதாகவே செய்யப்படுகின்றன. “பூஞ்சையைக் கடத்த ஆளரவமற்ற பகுதிகளைப் பயன்படுத்துவதால் குற்றவாளிகளைப் பிடிப்பது சாத்தியமல்ல,” என்கிறார் பித்ரோகரின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரான அஜய் ஜோஷி. “கடந்த ஓராண்டில் நாங்கள் கீடா ஜடிக்காக எந்த கைதும் செய்யவில்லை,” என்கிறார் அவர்.
காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறைகளுக்கு இடையேயான அதிகார வரம்புகளும் மற்றொரு பின்னடைவு. “பெரும்பாலான பகுதி வருவாய்த் துறையின் கீழ் வருகிறது. அது வனத்துறையுடன் சேர்ந்து சட்டவிரோத கீடா ஜடி வழக்குகளை கையாளுகிறது,” என்கிறார் ஜோஷி.
தர்ச்சுலா துணைப் பிரிவு நீதிபதி ஆர்.கே. பாண்டே, “காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் கூட்டு செயல்பாடாக இருக்க வேண்டும். வருவாய்த் துறையால் தனியாக கீடா ஜடியை பிடிக்க முடியாது. ஓராண்டில் நாங்கள் யாரையும் பிடிக்கவில்லை” என்கிறார்.
கீடா ஜடியை பத்திரமாகச் சுற்றி பொட்டலமாக்கி கிராமத்தினர் காற்று புகாத ஜாடிகளில் அடைத்து பாதுகாக்கின்றனர் – காவல்துறை அல்லது பிற அதிகாரிகள் அவற்றை கைப்பற்றும்போது சோதிக்க திறக்க வேண்டி உள்ளது. அது வேகமாக இறந்துவிடும் பூஞ்சை என்பதால் இரண்டு வழிகளில் காவல்துறையினர் அவற்றை ஒப்படைக்க வேண்டும். வனத்துறையிடம் ஏலத்திற்கு கொடுக்க வேண்டும் அல்லது டெராடூனில் உள்ள ஆயுஷ் (மரபு மருத்துவம்) துறையினர் அல்லது மாவட்டத்தில் உள்ள துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இது அரிதாகவே நிகழ்வதால் பூஞ்சைகள் இறந்துவிடுகின்றன.
2017ஆம் ஆண்டு பத்ரிநாத் வனச் சரகத்திடம் இரண்டு கிலோ கீடா ஜடியை சமோலி காவல்துறையினர் கொடுத்தனர். ஆனால் பூஞ்சை ஏற்கனவே இறந்துவிட்டதால் ஏலத்திற்கு விட முடியவில்லை என்று பத்ரிநாத் சரக வன அலுவலர் என்னிடம் தெரிவித்தார்.
பாலுணர்வைத் தூண்டும் குணங்கள் உள்ளதாக கூறப்படுவதால் இப்பூஞ்சைக்கு அதிக விலை கிடைக்கிறது... பாரம்பரிய சீன மருத்துவத்தில் மதிப்புமிக்க உட்பொருளாகவும் இது உள்ளது
மே-ஜூன் மாதங்களில் கிராமத்தினர் வேறு எந்த வேலையையும் இந்த பூஞ்சை வேட்டை செய்யவிடுவதில்லை. “அரசு வேலைகளில் உள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு ‘மருத்துவ விடுப்பு’ எடுத்துக் கொண்டு தங்களின் குடும்பத்துடன் இந்த வேட்டையில் இணைகின்றனர்,” என்கிறார் ராஜூ சிங். “குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமான கீடா ஜடி துண்டுகளை சேகரிக்க முடியும். அதிக கீடா ஜடி என்றால் அதிக வருவாய்.” மோசமான வெப்பநிலைகள், செங்குத்தான பாதையில் ஏறுவது வயதானவர்கள், நோயாளிகளால் முடிவதில்லை என்பதால் அவர்கள் வீட்டில் இருந்து கொள்கின்றனர்.
ஆறு அல்லது ஏழு வயதானதும் குழந்தைகளால் அல்பைன் புல்வெளிகளில் நிலவும் கடும் குளிரையும் சமாளிக்க முடிவதால் அவர்களும் பூஞ்சை வேட்டையில் இணைந்து பெரும் அறுவடையாளர்கள் ஆகின்றனர். “எங்களுக்கு பெரியவர்களைவிட கண்பார்வைத் திறன் அதிகம். பகலில் எங்களால் 40 துண்டுகளை கண்டறிந்து சேகரித்துவிட முடியும். அதுவே பெரியவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் கண்டறிவார்கள். சில சமயம் அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் 16 வயது விவேக்.
மே மாதங்களில் உத்தராகண்டில் பெரும்பாலும் பள்ளிகள் மூடியே இருப்பதால் பிள்ளைகள் குடும்பத்துடன் இமாலய புல்வெளிகளுக்கு ஏறிச் செல்கின்றனர். ஏழு வயதிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக விவேக் தொடர்ந்து வருகிறார். அவரது பள்ளிப் படிப்பு பாதிக்கப்படுவதில்லை. அவர் அண்மையில் 82 சதவீத மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தார். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் சிந்திக்க உள்ளார்.
“குடும்பத்தில் ஒவ்வொருவரும் இந்த வேட்டையில் இணைந்து கொள்கின்றனர். தவழ்ந்து பறிக்க முடியாவிட்டால் கூட குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு தண்ணீர் கொண்டுவருவது, சமைப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். சாட்பர் பகுதியைச் சுற்றியுள்ள ஒன்பது கிராமங்களும் மே மாதத்தில் காலியாகிவிடுகிறது. ஒட்டுமொத்த குடும்பங்களும் கீடா ஜடி காலத்தின் போது [அல்ஃபைன் புல்வெளிகளுக்கு] செல்கின்றனர்.”
மலையடிவார கிராமத்தினர் கீடா ஜடி பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தங்கள் கிராமங்களுக்கும், அருகமை பகுதிகளுக்கும் வந்து செல்பவர்களை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ‘தங்கள் பகுதியில்’ வெளியாட்கள் வந்து பூஞ்சை பறிப்பதை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனினும் அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களை மட்டும் கிராமத்தினர் அனுமதிக்கின்றனர். ஒரு செய்தியாளராக என்னை அப்பகுதிகளில் (பதற்றம் நிறைந்த எல்லை மண்டலங்கள்) அலுவலர்களும், பிறரும் அனுமதிக்க வேண்டும் என்றும், தேவைப்படும் உதவியை செய்து தர வேண்டும் என்றும் பித்தோராகர் மாவட்ட நீதிபதி அனுமதி கடிதம் கொடுத்திருந்ததால் அவர்கள் என்னை உள்ளே அனுமதித்தனர்.
செங்குத்தான பகுதிகள் வழியாக 12 மணி நேரத்திற்கு மேல் 25 கிலோமீட்டர் தட்டுதடுமாறி பயணித்து எனது வழிகாட்டியின் (அவர் பெயரும் வெளியிடப்படவில்லை) உதவியோடு கோவேறு கழுதை பயணிக்கும் பாதையில் முகாமிற்குச் வந்தேன். பூஞ்சை வேட்டை காலத்தில் புல்வெளிக்குச் செல்லும்போது தேவைப்படும் பொருட்களை கழுதைகளின் உதவியோடு அவர்கள் ஏற்றிச் செல்கின்றனர். “ஏப்ரல் மாதமே எங்கள் கோவேறு கழுதைகளின் மீது சுமார் 25 கிலோ அரிசி, 10 கிலோ பருப்பு, வெங்காயம், பூண்டு, மசாலா போன்றவற்றை சாட்பருக்கு நாங்கள் அனுப்பி வைக்கத் தொடங்குகிறோம்,” என்கிறார் ராஜூ.
அடர்ந்த வனங்கள், வேகமான மலை நீரோடைகளைக் கடந்து செல்லும் இப்பாதை சிறுத்தைகள், கரடிகள் அதிகமுள்ள பகுதி. முகாமிற்குச் செல்லும் மக்கள் மலையேற்றங்களின் போது விலங்குகளின் தாக்குதல்களைத் தடுக்க அடிப்படை கத்திகள் மற்றும் கம்புகள் வைத்துக் கொள்கின்றனர்.
பயணத்தில் இந்த ஆபத்தை மட்டும் அவர்கள் சந்திப்பதில்லை. கம்பளிப்பூச்சி பூஞ்சை சேகரிப்பு தீங்கானது, கடும் குளிரிலும் செங்குத்தான, குறுகலான மலைகளில் ஏறுவதே கடுமையான உழைப்புதான். இதற்கு புல்வெளியில் படுத்தபடி தவழ வேண்டும். கை முட்டி, முழங்கால்களைக் கொண்டு பனியை தோண்ட வேண்டும். மூட்டு வலி, பனிக் குருடு, சுவாச பிரச்னை போன்றவை வீடு திரும்பும் கிராமத்தினருக்கு ஏற்படும் பொதுவான தொந்தரவுகள் ஆகும்.
2017ஆம் ஆண்டு சாட்பரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் பித்தோராகரில் உள்ள மற்றொரு அல்ஃபைன் புல்வெளி மலைச்சரிவில் பூஞ்சை வேட்டையின் போது இருவர் கீழே விழுந்து உயிரிழந்தனர். 2018 ஏப்ரல் மாதம் கீடா ஜடி காலத்தின் போது ரேஷன் பொருட்களைக் கொண்டு வந்த மற்றொருவர் மலைச்சரிவிலிருந்து விழுந்து உயிரிழந்தார். பூஞ்சையில் நல்ல வருவாய் கிடைப்பதால், மரணங்களும், கடுமையான உழைப்பும் கிராமத்தினரை ஒருபோதும் தடுப்பதில்லை.
தமிழில்: சவிதா