“ஹுர்…
ஹிஹிஹிஹி...ஹோ…ஹிஹிஹிஹி…ஹோ...”
பழத்தோட்டத்துக்கு மேலுள்ள வானில்
திடீரென எண்ணற்ற பறவைகள் தோன்றின. அவற்றை விரட்ட சுராஜ் எழுப்பிய சத்தங்களால் பயந்து
அவை பறந்தன. பேரிக்காய் பழத் தோட்டத்தை பராமரிப்பவராக அவருக்கு, பழுக்கும் பழங்களிலிருந்து
பசி கொண்ட பறவைகளை விரட்டுவதுதான் வேலை. அவற்றை பயமுறுத்தி விரட்ட அவர் சத்தமாக கத்துகிறார்.
உண்டிவில்லில் களிமண் உருண்டைகள் எறிகிறார்.
வட மேற்கு பஞ்சாபின் தர்ன் தரான் மாவட்டத்தின் ஓரங்களில் அமைந்திருக்கும் பட்டி பழத் தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. புலம்பெயர் தொழிலாளர்கள் வருடந்தோறும் பேரிக்காய்களையும் பேரிக்காய் பழங்களையும் பராமரிக்க வருவார்கள். பழங்களை கொத்தவும் பறிக்கவும் எந்த நேரமும் இறங்கும் பறவைகளை விரட்டுவதுதான் அவர்களது வேலை. இப்பழத்தோட்டங்களை காக்கும் சுராஜ் போன்றவர்கள் ரக்கேகள் என அழைக்கப்படுகின்றனர்.
சுராஜ் பகர்தர் பார்த்துக் கொள்ளும் பழத்தோட்டத்தில் கிட்டத்தட்ட 144 பேரிக்காய் மரங்கள் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில் இருக்கின்றன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான பழம் பழுக்கும் காலம் மொத்தத்துக்கும் 15 வயது இளைஞர்தான் ஒரே காவலர். உரிமையாளர்களால் மாதந்தோறும் 8,000 ரூபாய் ஊதியம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.
“மரங்கள் பூக்க ஆரம்பித்ததும் நிலவுரிமையாளர்கள் பழத் தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்து விடுவார்கள். குத்தகைக்கு எடுப்பவர்கள் ரக்கேகளை நியமிப்பார்கள்,” என்கிறார் சுராஜ். பெரும்பாலான ரக்கேகள் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
சுராஜ் பிகாரை சேர்ந்தவர். பழத்தோட்ட வேலைக்காக 2000 கிலோமீட்டர் தொலைவு பயணித்து வந்திருக்கிறார். இங்கு வருவதற்கான அவரது பயணம் பிகாரின் அராரிய மாவட்டத்திலுள்ள அவரது கிராமம் பக்பர்வாஹாவிலிருந்து பெரிய டவுனான சகர்சாவுக்கு வருவதிலிருந்து தொடங்குகிறது. பிறகு அவர் ஒரு ரயிலேறி 1,732 கிலோமீட்டர் பயணித்து பஞ்சாபின் அமிர்தசரஸ்ஸுக்கு வருகிறார். அவரைப் போன்ற தொழிலாளர்கள் ஒரு மணி நேரத் தொலைவில் இருக்கும் பட்டிக்கு வரவைக்க குத்தகைதாரர்கள் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்திருப்பார்கள்.
*****
பிகாரின் மிகவும் பிற்படுத்தப்பட பிரிவில் பட்டியலிடப்பட்டிருக்கும் பகர்தர் சமூகத்தை சேர்ந்தவர் சுராஜ். பெற்றோரின் நலிந்து கொண்டிருந்த பொருளாதார நிலையால் படிப்பை நிறுத்தியபோது அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். “எனக்கு வேறு வழியிருக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு நான் திரும்பியதும் என் சம்பாத்தியத்தை கொண்டு பள்ளிக்கு மீண்டும் செல்வேன்,” என்கிறார் அவர்.
பஞ்சாபின் மஜா ஷேத்ரா பகுதியில் இருக்கும் பட்டி டவுன் தர்ன் தரன் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பாகிஸ்தானின் லாகூர் ஒரு மணி நேரத் தொலைவில் இருக்கிறது. இப்பகுதியின் பெரும்பாலான பழத்தோட்டங்களின் சொந்தக்காரர்களாக ஜாட் போன்ற ஆதிக்க சாதியினர் இருக்கின்றனர். பழத்தோட்டங்கள் தாண்டி உணவுப் பயிரை விளைவிக்கும் நிலமும் அவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது.
பேரிக்காய், குழிப்பேரி தோட்டங்கள் போலல்லாமல், கொய்யா தோட்டங்களுக்கு ரக்கேகளை வருடத்துக்கு இருமுறை பணிக்கமர்த்த வேண்டும். சில நேரங்களில் உள்ளூர்காரர்கள் கூட மரங்கள் காக்கும் வேலைக்கு பணியமர்த்தப்படுவதுண்டு. அல்லது அப்பகுதியில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை குத்தகைதாரர்கள் பணிக்கமர்த்துவர்.
பிகாரிலிருந்து இந்த வேலைக்காக புலம்பெயரும் தொழிலாளர்கள் வழக்கமாக சுராஜை விட மூத்த வயதில் இருப்பார்கள். ஒரு பழத்தோட்டத்தில் இத்தகைய இளைஞர் வேலை பார்ப்பது வழக்கமான விஷயமல்ல. பதின்வயது நிரம்பிய அவர் பறவைகள் விரட்டுவதை பார்க்கலலம். பிற நேரங்களில் சமையல் செய்வார். துணி காய வைப்பார். வீட்டு வேலைகள் செய்வார். தன்னை வீடு சுத்தப்படுத்தும் வேளைக்கும் மளிகை மற்றும் வீட்டு சாமான்கள் வாங்கி வரும் வேலைக்கும் உரிமையாளர்கள் பயன்படுத்துவதாக சுராஜ் சொல்கிறார். “தோட்டத்தை பராமரிக்கும் பெயரில் பல வேலைகள் சுமத்தப்படும் எனத் தெரிந்திருந்தால், நான் வேலைக்கு சென்றிருக்கவே மாட்டேன்,” என்கிறார் அவர் பிகாருக்கு திரும்பிய பிறகு செல்பேசியில்.
பட்டியின் பழத்தோட்டங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும் ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய தொடங்கி விடுவார்கள். பழங்கள் பறிக்கப்படும் ஆகஸ்டு மாதம் வரை பணியிலிருப்பார்கள். மொத்த ஐந்து மாதங்களையும் அவர்கள் தலைக்கு மேல் ஒரு கற்கூரை இன்றி பழத்தோட்டத்தில் கழிப்பார்கள். மரங்களுக்கு நடுவே தார்ப்பாய் கூரைகள் கொண்ட மூங்கில் குடில்கள் அமைப்பார்கள். கோடை சூடும் மழைக்கால ஈரப்பதமும் விஷ பாம்புகளையும் பிற பிராணிகளையும் அழைத்து வரும்.
”ஆபத்தான ஊர்வனங்கள் மீதான பயம் கூட, சம்பாதிக்க வேண்டிய அவசியத்துக்கு முன் காணாமல் போய்விடுகிறது,” என்கிறார் சூரஜ். வெளியே போய்விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்ப முடியாது.
*****
பட்டியின் ஷிங்காரா சிங் மூன்று ஏக்கர் கொய்யா பழத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறார். அவரும் அவரது மனைவி பரம்ஜித் கவுரும் ரக்கேகளாக தோட்டத்தை பார்த்துக் கொள்கின்றனர். 49 வயது ஷிங்காரா மேரா சிங் சமூகத்தை சேர்ந்தவர். பஞ்சாபில் அது பிற்படுத்தப்பட்ட சமூகம். 2 வருடக் குத்தகைக்காக அவர்கள் 1.1 லட்ச ரூபாய் கொடுத்திருக்கின்றனர். “மலிவான விலையில் எனக்கு தோட்டம் கிடைத்த காரணம், தோட்டத்தின் மொத்த பகுதிக்கு பதிலாக மரங்களின் எண்ணிக்கை கொண்டு உரிமையாளர் குத்தகை பணம் நிர்ணயித்ததே,” என்கிறார் ஷிங்காரா சிங்.
பெரும்பாலானோர் ஒரு 55, 56 கொய்யா
மரங்களை ஒரு ஏக்கரில் நடுவார்கள் என்கிறார் அவர். ஆனால் இங்கு மொத்த தோட்டத்திலுமே
60 மரங்கள்தான் இருக்கின்றன. பழங்களை மண்டியில் விற்று சிங் 50,000லிருந்து 55,000
ரூபாய் வரை பெறுகிறார். வருமானம் குறைவாக இருப்பதால் ரக்கேவாக இன்னொருவரை சேர்க்க வாய்ப்பில்லை
என்கிறார் அவர்.
“அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த நிலம் எங்களுக்குதான். குளிர்காலத்தில் கொய்யா மரங்களுக்கு இடையே உள்ள பரப்புகளில் காய்கறிகளை விளைவித்து மண்டியில் விற்கிறோம்,” என்கிறார் ஷிங்காரா. “கோடைகாலத்தில் எங்களின் வருமானம் தோட்டத்தில் உள்ள பழங்களை சார்ந்து மட்டுமே இருக்கும்.”
தோட்டத்தை காவல் காப்பதில் இருக்கும் சவால்கள் குறித்து குறிப்பிடுகையில், “பறவைகளிலேயே கிளிகள்தாம் எங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் பறவைகள். கொய்யா அவற்றுக்கு பிடித்த பழம். முழு பழத்தை தின்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவை விதைகளை மட்டுமே விரும்பும். கொய்யாவின் மிச்சப் பகுதியைக் கடித்து ஒதுக்கி விடும்,” என்கிறார்.
கிளிகளுக்கும் வில்லன்கள் உண்டு என்கிறார் சிங். “கிளிகளிலேயே பெரிய பச்சைக்கிளி வகைதான் பெரும் சேதத்தை விளைவிக்கும். ஒரு பெரும் கூட்டம் பழத்தோட்டத்துக்கு வந்தமர்ந்தால், நீங்களோ நானோ அந்த பழத்தோட்டத்தை கைவிட்டுவிடலாம்,” என்கிறார். அத்தகைய நேரங்களில், பராமரிப்பவர்கள் சுராஜ் போல கூச்சல் போட்டு விரட்டும் பாணியைதான் கடைப்பிடிக்கின்றனர்.
சுராஜ்
போன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உள்ளூர் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவதை காட்டிலும்
குறைவாகவே ஊதியம் கொடுக்கப்படுகிறது. “உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் தொழிலாளர்கள்
குறைந்த ஊதியத்துக்கு பணிபுரிய ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களை பதிவு செய்ய வேண்டிய
கட்டாயமும் ஒப்பந்ததாரர்களுக்கு இல்லை,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ஷிங்காரா.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசமும் பிகாரும் பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்களை கொண்டிருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள். ஆலைகள், நிலங்கள், செங்கல் சூளைகள் மற்றும் பழத்தோட்டங்கள் போன்றவற்றில் அவர்கள் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். ஆச்சரியகரமாக அவர்களை பற்றிய ஆவணம் ஏதுமில்லை. தொழிலாளர்களுடன் இயங்கும் தொழிற்சங்களும் பிற அமைப்புகளும் விரிவான தகவல்களை கொண்டிருக்கும் வசதி இல்லாததால் அவற்றை கொண்டிருக்கவில்லை.
சமூக செயற்பாட்டாளரான கன்வல்ஜித் சிங் கூறுகையில்,” புலம்பெயர் தொழிலாளர்கள் இருவித பிரச்சினைகளை சந்திக்கின்றனர். பணி கொடுப்பவர்களுடன் சேர்த்து தொழிலாளர்களும் பதிவு செய்யப்படுதல் கட்டாயமென மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் சட்டம் கூறுகிறது. ஆனால் இச்சட்டத்தை எவரும் பின்பற்றவில்லை,” என்கிறார். சிங், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆவார். “விளைவாக இங்கு வந்து பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர் பற்றி எந்தத் தரவும் இல்லை. மேலும் அவர்களுக்கான நலத்திட்டங்களும் பலன்களும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது,” என்கிறார் அவர்.
*****
இந்த பழத்தோட்டத்தில் கிட்டத்தட்ட 144 பேரிக்காய் மரங்கள் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில் இருக்கின்றன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான பழம் பழுக்கும் காலம் மொத்தத்துக்கும் 15 வயது இளைஞர்தான் ஒரே காவலர். உரிமையாளர்களால் மாதந்தோறும் 8,000 ரூபாய் ஊதியம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது
பக்பர்வகா மாவட்டத்தின் அராரி கிராமத்திலுள்ள சுராஜின் வீட்டில் அவரது தந்தை அனிருத்தா பகர்தர் ஊர்த்தலைவருக்கு உதவியாளராக இருக்கிறார். 12,000 ரூபாய் மாதத்துக்கு சம்பாதிக்கிறார். நிலமற்ற அவர் குடும்பத்துக்கு அது ஒன்றுதான் நிலையான வருமானம். நெடுதூரம் பயணித்து பணிபுரிய அப்பா விரும்பவில்லை என்றாலும் அது மட்டுமே குடும்பத்துக்கு இருந்த வழி என்கிறார் சுராஜ். “இங்கு அதிகமாக பணமீட்ட முடியுமென ஒரு உறவினர் சொல்லக் கேட்டிருக்கிறேன்,” என்கிறார் சுராஜ். அப்படித்தான் அவர் பஞ்சாபிற்கு வந்து சேர்ந்தார்.
ஆறு பேரு கொண்ட குடும்பம் ஓடுகளை கொண்ட மண் வீட்டில் வசிக்கிறது. அவரின் தாய் சுர்தி தேவி சொல்கையில், “மழைக்காலத்தில் மழை நீர் உள்ளே வந்து விடுகிறது. கிராமத்திலுள்ள எல்லா குடிசைகளும் மண்சுவர்களால் கட்டப்பட்டவை. சிலவற்றுக்கு மட்டும்தான் தகரக் கூரை உண்டு,” என்கிறார். பஞ்சாபில் சுராஜ் சம்பாதித்த பணத்தில் வீடு பழுதுபார்க்கப்பட்டது. அவர் விரும்பியது போல கல்விக்கு அப்பணம் செலவழிக்கப்படவில்லை. “விரும்பாவிட்டாலும் பஞ்சாபுக்கு நான் மீண்டும் வர வேண்டுமென நினைக்கிறேன்,” என்கிறார் அவர் வீடு திரும்பிய பிறகு தொலைபேசியில்.
35 வயது சுர்தி தேவி வீட்டுவேலையை
பார்த்துக் கொண்டு, தேவை வந்தால் தினக்கூலியாகவும் வேலை பார்க்கிறார். சுராஜின் மூன்று
தம்பிகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர். 13 வயது நீரஜ் 6ம் வகுப்பும், 11 வயது பிபின்
4ம் வகுப்பும் 6 வயது ஆஷிஷ் பாலர் பள்ளியிலும் படிக்கின்றனர். குடும்பத்துக்கு சொந்தமாக
நிலமேதும் இல்லை. 2.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். அதில் 1.5 ஏக்கரில்
ஒரு குளம் வெட்டி மீன் வளர்க்கின்றனர். மிச்சமுள்ள ஒரு ஏக்கரில் நெல்லும் காய்கறிகளும்
விளைவிக்கின்றனர். வீட்டிலிருக்கும்போது காய்கறிகளை மண்டியில் விற்க சுராஜ் எடுத்து
செல்வார். இந்த வழியில் குடும்பத்துக்கு வருடத்தில் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஆனால் அது நிலையான வருமானம் இல்லை.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என சுராஜுக்கு தெரியவில்லை. சம்பாதிக்க மீண்டும் அவர் பஞ்சாபுக்கு திரும்ப வேண்டி வரலாம். அவரின் மனமோ படிப்பையே விரும்புகிறது: “பிற சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதை பார்க்கும்போது எனக்கும் போக வேண்டுமென ஏக்கம் தோன்றும்.”
தமிழில் : ராஜசங்கீதன்