ஹதானேவில் இருக்கும் அரசு மருத்துவமனையின் வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவில், ஒரு பெண் மயங்கி விழுந்து கொண்டிருந்தார். இன்னொருவர் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு, ”என்னை விட்டு எங்கே போய்விட்டாய் அன்பே?” என கதறிக் கொண்டிருந்தார். எல்லா திசைகளிலிருந்தும் ஓலங்கள். சில குடும்பங்கள் ஆவணங்களை சரிபார்க்க குழுக்களாய் கூடியிருந்தனர். இன்னும் சிலர் வேறு மருத்துவமனையில் படுக்கை கிடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
மே மாத தொடக்கத்தின் ஒரு வெப்பம் நிறைந்த திங்கட்கிழமையின் மதிய நேரம் அது. பல்கர் மாவட்டத்தின் ஹதானே கிராமத்திலிருக்கும் ரெவேரா மருத்துவமனைக்கு வெளியே குழப்பம் நிலவிக் கொண்டிருந்தது.
மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே ஒரு மரத்தடி சிமெண்ட் நடைமேடையில் அமர்ந்திருந்த குரு சவுத்ரி தொடர்ந்து பலரை தொலைபேசியில் அழைப்புத்துக் கொண்டிருந்தார். சகோதரியின் கணவர் இறந்துபோன தகவலை சொல்லிக் கொண்டிருந்தார். “நேற்று இரவு இறந்துவிட்டார்”, என தொலைபேசியில் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார். ”அவர் எனக்கு சகோதரர் போல” என கடுகடுப்புடனும் துயரத்துடனும் என்னிடம் சொல்லத் தொடங்கினார். “இந்த காணொளியை பாருங்கள். இதில் நன்றாக இருக்கிறார். என் சகோதரி அவருடன் மருத்துவமனைக்குள் இருந்தார். அவருடைய ஆக்ஸிஜன் குடுவையிலிருந்து கசிந்து கொண்டிருந்தது… மருத்துவரை வந்த அவரை பரிசோதிக்குமாறு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்…”
குருவின் மைத்துனரான 35 வயது வாமன் டிகாவை ஏப்ரல் 23ம் தேதி ரெவேராவுக்கு கொண்டு வருவதற்கு முன் கிராமத்துக்கு அருகே இருந்த இரு சிறு மருத்துவமனைகளுக்கு அவரின் குடும்பம் கொண்டு சென்றது. “அவரால் மூச்சு விட முடியவில்லை. சில நாட்களாக காய்ச்சலும் அதிகமாக இருந்தது. நாங்கள் பயந்துபோய் அவரை பரிசோதனைக்கு கொண்டு செல்வதென முடிவெடுத்தோம்,” என்கிறார் குரு. “அவருக்கு நிமோனியா இருப்பதாகவும் கோவிட் இருக்கலாம் என்றும் சொன்னார் மருத்துவர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். அருகே இருந்த மருத்துவமனைகள் எவற்றிலும் படுக்கை இல்லை. ஆக்சிஜனும் இல்லை.”
மொக்காடா தாலுகாவில் இருக்கும் அவர்களின் தக்படா கிராமத்திலிருந்து விக்ரம்கட் தாலுகாவில் இருக்கும் அரசின் ரெவெரா மருத்துவமனைக்கு அக்குடும்பம் 60 கிலோமீட்டர்கள் ஆம்பலன்சில் பயணிக்க வேண்டும். கோவிட்டுக்கு மட்டுமென தாலுகாவில் ஒதுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது மட்டும்தான். 200 கோவிட் படுக்கைகள் (அவற்றில் பாதி தனிமை படுக்கைகள். பிறவை ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள் அல்லது தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள். மாவட்ட இணையதளத்தில் இதை பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளில் தெளிவு இல்லை) இருந்தன.
“மூன்று முறை கோவிட் இல்லை என பரிசோதனை முடிவு வந்தபோது கூட அவர் கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டார். படுக்கைகளில் போர்வைகளும் தலையணைகளும் இல்லை. சூடான குடிநீர் கூட அவர்களிடம் இல்லை. பத்து நாட்களுக்கு அவர் வார்டில் இருந்தார். இறப்பதற்கு ஒருநாள் முன், அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவருடைய நிலைமை திடீரனெ மோசமடைந்தது. என்னுடைய சகோதரி மருத்துவர்களிடம் சொல்ல முயன்றார். ஆனால் அவர்கள் மிகுதியான பணிகள் கொண்டிருந்ததால் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் குரு.
தக்படா கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாமன் வேலை பார்த்தார். தாகூர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த அவரின் குடும்பத்தில் 8 மற்றும் 6 வயதுகளில் இரு மகன்களும் 31 வயது மனைவி மலட்டி டிகாவும் இருந்தனர். வாமனின் பெற்றோருடன் மலட்டி டிகாவும் சேர்ந்து அவர்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில் வேலை பார்த்தார். காய்கறிகளும் தானியங்களும் அரிசியும் விளைவித்தனர். “மருத்துவர்களை அழைத்து நான் சோர்ந்து போய்விட்டேன். ஆக்சிஜன் வைத்தும் அவரால சரியாக சுவாசிக்க முடியவில்லை. உள்ளே மிகவும் அசுத்தமாக இருந்தது. சரியான கவனிக்கப்பட்டிருந்தால் அவர் சரியாகி இருப்பார். ஆனால் நாங்கள் அவரை இழந்துவிட்டோம்,” என்கிறார் மலட்டி அழுதபடி.
மருத்துவமனையில் சுகாதார கண்காணிப்பாளர் சொல்கையில், “நோயாளிகளின் உறவினர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். அவர்களை நீங்கள் நம்பக் கூடாது. உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது,” என்றார்.
மருத்துவமனைக்கு வெளியே மற்றொரு மூலையில் மினா பாகி தரையில் கிடந்தார். சிலர் அவரை உட்கார வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவரும் எழ முயன்றார். முடியவில்லை. சற்று நேரம் கழித்து அவரால் உட்கார முடிந்தது. ஆனால் அசைவில்லை. “காலை முதல் இவர் இங்கிருந்து நகரவே இல்லை. இவரின் கணவர் இறந்துவிட்டார். நான்கு மகள்கள் இருக்கின்றனர்,” என்கிறார் குடும்ப நண்பரான விவசாயி ஷிவ்ராம் முக்னே.
மே 1ம் தேதி, 48 வயது மங்கேஷ்ஷும் 45 வயது மினாவும் மங்கேஷ்ஷுக்கு நெஞ்சு வலி வந்ததால் ஆம்புலன்ஸ்ஸில் ரெவெரா மருத்துவமனைக்கு வந்தனர். அதற்கு முன்னால் மங்கேஷ், விக்ரம்கட் தாலுகாவில் இருக்கும் அவரின் கோஷ்டே கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றதாக ஷிவ்ராம் கூறுகிறார். மினா அவருடைன் பைக்கில் வந்திருக்கிறார். அச்சமயத்தில் அவருக்கும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்திருக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து, மே 3ம் தேதி, மங்கேஷ் உயிரிழந்தார்.
“அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் ரெவேராவில் சேரும்படி அவரிடம் கூறினார்கள். ஒரு கடிதம் கொடுத்து அவருக்கு ஒரு ஆம்புலன்ஸ்ஸும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பல மணி நேரங்களுக்கு பிறகு, அவருக்கு ரெவேராவில் படுக்கை கிடைத்தது,” என்கிறார் ஷிவ்ராம். “அவருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாக அவரின் மனைவி என்னிடம் கூறினார். ஆக்சிஜன் கொடுக்கப்பட்டபிறகு அவர் சரியாக இருந்தார். மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்துவிட்டு அவரை கோவிட் மையத்தில் சேர்த்துக் கொண்டனர். அங்கு இரண்டு நாட்களில் 10-12 ஊசிகளை அவருக்கு செலுத்தினர். ஒவ்வொரு ஊசிக்கு பிறகும் அவரின் நிலை மோசமடைந்தது. எனவே அவரை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். ஆனால் நள்ளிரவுக்கு (மே 3) பிறகு, அவர் நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். இரண்டு மணி நேரங்களில் அவரின் மனைவியிடம் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை.
மங்கேஷ் பாகி ஏழு பேர் கொண்டு குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அவரின் பெற்றோர், மினா,19, 17, 11 மற்றும் 7 வயதாகும் நான்கு மகள்கள் குடும்பத்தில் இருக்கின்றனர். அவர் விவசாயியாக இருந்தார். அரிசி, கோதுமை, கம்பு முதலியவற்றை குடும்பத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விளைவித்து வாழ்ந்து வந்தார். கட்காரி பழங்குடி சமூகத்தை சேர்ந்த குடும்பம் தற்போது மினாவின் வருமானத்தை சார்ந்திருக்கிறது. அருகே இருக்கும் நிலங்களில் வேலை பார்த்து 150-200 ரூபாய் நாட்கூலி பெறுகிறார் அவர். “எங்களின் கிராமத்தில் இரண்டு மாதங்களாக (பொதுமுடக்கத்தால்) வேலை ஏதும் இல்லை. பணத்துக்காக ஏற்கனவே அவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை,” என்கிறார் ஷிவ்ராம்.
வாமனுக்கும் மங்கேஷ்ஷுக்கும் மருத்துவமனை படுக்கைகளேனும் கிடைத்தது. ஷியாம் மாடிக்கு அது கூட கிடைக்கவில்லை. ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் விக்ரம்காட் தாலுகாவின் யஷ்வந்த்நகர் கிராமத்தில் அவரின் வீட்டில் இருந்தபோது 28 வயது ஷியாமுக்கு காய்ச்சல் வந்தது. “அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு சரியானார். சில பரிசோதனைகளை செய்யுமாறு மருத்துவர் கூறினார். ஆனால் விக்ரம்காடில் இருக்கும் ஒரே பரிசோதனை நிலையம் மூடப்பட்டுவிட்டது. சில நாட்கள் கழித்து ஓரிரவு, அதிகாலை 3 மணி அளவில், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது,” என்கிறார் மகேஷ் மொராகா. ஏப்ரல் 26ம் தேதி அதிகாலையில் மனைவி சுமிதாவின் சகோதரருக்கு என்ன நேர்ந்தது என நினைவுகூர்கிறார்.
“அவரை முதலில் இன்னொரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர்கள் எங்களை கோவிட் மையத்துக்கு கொண்டு செல்ல சொன்னார்கள். அவருக்கு மூச்சு விட முடியவில்லை. தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ்ஸை ஏற்பாடு செய்ய முடிந்தது. அதில் கொஞ்சம் ஆக்சிஜன் இருந்தது. ஆனால் அவருக்கு ரெவேரா மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை. நாங்கள் கெஞ்சினோம். ஆனால் மருத்துவமனை நிறைந்துவிட்டதென மருத்துவர்கள் கூறினார்கள்,” என்கிறார் மகேஷ். ரெவேரா மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்கான இந்த முதல் முயற்சி காலை 8 மணிக்கு நடந்தது.
பல்கார் மாவட்டத்தின் தகானும், ஜவ்ஹர், மொகடா, பல்கார், தலசாரி, வசை, விக்ரம்காட், வடா ஆகிய எட்டு தாலுகாக்களில் வசிக்கும் 30 லட்சம் பேருக்கு ஹதானே கிராமத்தில் இருக்கும் ரெவெரா மருத்துவமனையோடு சேர்த்து 12 கோவிட் மருத்துவமனைகள் இருக்கின்றன. மொத்தமாக 2284 தனிமை படுக்கைகளும் 599 ஆக்சிஜன் படுக்கைகளும் 42 தீவிர சிகிச்சை படுக்கைகளும் 75 வெண்டிலேட்டர்களும் இருக்கின்றன. கிட்டத்தட்ட பாதி அளவு தனிபடுக்கைகளும் 73 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரப்பப்படாமல் இருப்பதாக மே 12ம் தேதி அரசு இணையதளம் காட்டியது.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சம் (99539) கோவிட் பாதிப்புகளும் 1792 மரணங்களும் பதிவாகி இருக்கின்றன.
ஷியாமுக்கு படுக்கையை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தபோது, ஷியாமின் இன்னொரு சகோதரியான பூஜாவை மணம் முடித்திருந்த உள்ளூர் சிபிஎம் செயற்பாட்டாளரான பங்கஜ் பட்கர் வடா, டவுனில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தார். ”ஆம்புலன்ஸ்ஸில் இருந்த ஆக்சிஜன் தீரவிருந்தது. இன்னொரு சிலிண்டரை வைத்துக் கொண்டுதான் நாங்கள் சென்று சேர்ந்தோம்,” என்கிறார் பங்கஜ் என்னிடம் தொலைபேசியில். “அவரை பொய்சாரில் (40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்) இருக்கும் கோவிட் மையத்துக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் சிடி ஸ்கேன் எடுத்தார்கள். ஆனால் அங்கும் எங்களுக்கு படுக்கை கிடைக்கவில்லை. பிவாண்டி மற்றும் தானே ஆகிய இடங்களில் கூட படுக்கை ஏற்பாடு செய்ய நாங்கள் கடுமையாக முயன்றோம்.” விக்ரம்காடின் 100 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நகரங்கள் இருக்கின்றன.
“ஆனால் எங்களால் கையாள முடியவில்லை. அவரை மீண்டும் ரெவேரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்,” என்கிறார் பங்கஜ். ரெவேரா மருத்துவமனையில் படுக்கை தேடும் இந்த இரண்டாம் முயற்சி, முதல் முயற்சிக்கு ஏழு மணி நேரங்கள் கழித்து, பிற்பகல் 3 மணி அளவில் நடந்தது. ஆம்புலன்ஸ் செலவான 8000 ரூபாய் பணத்தை தாகூர் பழங்குடி சமூகத்தை அந்த குடும்பம் உறவினர்களிடம் வாங்கி கொடுத்தது.
“அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்களிடம் நாங்கள் கெஞ்சிக் கொண்டிருந்தபோது, ஷியாம் தன் கடைசி மூச்சை விட்டார்,” என்கிறார் பங்கஜ்.
“அவரால் சுவாசிக்க முடியவில்லை,” என்கிறார் ஷியாமின் சகோதரி சுமித்ரா. “பல மருத்துவமனைகளுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஒருவரும் அவருக்கு படுக்கை கொடுக்கவில்லை. ஒருவரும் அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கவில்லை. என் சகோதரரால் சுவாசிக்க முடியவில்லை. அவரின் புது மனைவி உணவு உண்டு பல நாட்களாகி விட்டன. அவரை போய் பாருங்கள். அவர் அதிர்ச்சியில் இருக்கிறார்.”
உள்ளூர் வாகன நிறுவனத்தில் பணிபுரிந்த ஷியாம் இரண்டு மாதங்களுக்கு முன் மணம் முடித்திருந்தார். யஷ்வந்த்நகர் கிராமத்தில் பெற்றோர் வீட்டில் இருக்கும் அவரின் புது மனைவியான 24 வயது ருபாளி வராண்டாவில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரின் சகோதரி அவரை கீழே விழாமல் பார்த்துக் கொண்டார். கணவர் இறந்தபிறகு அவர் சாப்பிடவே இல்லை. கோபத்துடன் அவர், “ஆக்சிஜனுக்காக நாங்கள் கெஞ்சிக் கொண்டே இருந்தோம். அவருக்கு ஆக்சிஜன் மட்டும்தான் தேவையாக இருந்தது. உங்களுக்கு எதாவது ஆனால் உங்களின் மும்பை நகரத்தில் பெரிய மருத்துவமனைகள் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் எங்களுக்கு யார் ஆக்சிஜன் கொடுப்பார்கள்?” என்றார்.
தமிழில் : ராஜசங்கீதன்