நாங்கள் ஆதிவாசிகள், காட்டின் குழந்தைகள்
மலைகளிலும் ஓடைகளிலும் வாழும் நாங்கள் கிரிஜன்கள் என அழைக்கப்படுகிறோம்
காடுகளின் செல்வத்தை நம்பி வாழ்பவர்கள் நாங்கள்...
சிக்கல்களை எதிர்கொண்டால் அதை சரி செய்து கொள்கிறோம்
இழப்புகளைச் சந்தித்தாலும் நாங்கள் உயிர்வாழ்ந்து கொள்வோம்
நீல நிற குர்தாவும், நெற்றியில் பச்சைப் பட்டையும், இடுப்பில் சிவப்பு கந்துவாவும் அணிந்த 15 வயதான கொரசா ஆதித்யா ஊர்வலத்தில் தப்படித்து பாடுகிறார். அவருக்குக் கால்களில் கொப்புளங்களும், இடது முழங்காலில் கடுமையான வலியும் உள்ளது. அது அவரைத் தடுக்காது. “நேற்று [பேரணி ஏற்பாட்டாளர்களால்] எனக்கு சில மருந்துகளும்,வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு நிலைமை கொஞ்சம் நன்றாக உள்ளது” என்கிறார் புட்டயகுடம், கணபவரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் ஆதித்யா. நெடுந்தூரமாக நடக்கும் இந்தப் பயணத்தில் பாதி வழியிலேயே செருப்பு பிய்ந்ததிலிருந்து அவர் வெறுங்காலுடன் நடந்துள்ளார்.
அவரும் கோயா மற்றும் கொண்டரெட்டி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 500 இதர ஆதிவாசிகளும் ஜூலை 10 அன்று மேற்கு கோதாவரி மாவட்டம் குக்குனூர் மண்டலத்தில் உள்ள சீரவல்லி கிராமத்திலிருந்து பேரணியைத் தொடங்கினர். ஜூலை 16ஆம் தேதி மாவட்டத் தலைநகரான ஏலூரை வந்தடைந்தபோது, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 1,500 ஆக அதிகரித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். நான் அவர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக, தெண்டுலூரிலிருந்து ஏலூருக்கு நடந்தேன். மார்ச் 2018 இல் மகாராஷ்டிரத்தில், நாசிக்கில் இருந்து மும்பை வரை நடந்த விவசாயிகளின் நீண்ட நடைபயணத்தால் , ஈர்க்கப்பட்டதாக ஊர்வலத்தில் வந்த சிலர் என்னிடம் தெரிவித்தனர்.
இந்த பேரணியை ஏஜென்சி போருயாத்ரா என ஏற்பாட்டாளர்கள் அழைத்தனர். ‘ஏஜென்சி’ என்பது ஐந்தாவது அட்டவணைப் பகுதிக்கான உள்ளூர்ச் சொல்லாகும். முக்கியமாக பழங்குடிப் பகுதிகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், வரலாற்று மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக சிறப்பு கவனம் மற்றும் உரிமைகளை வழங்குகிறது. ‘போரு’ என்றால் தெலுங்கில் ‘போர்’ என்று பொருள்.
ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஐந்தாவது அட்டவணைப் பகுதி எட்டு மண்டலங்களில் பரவியுள்ளது. இவற்றில் இரண்டு முழுமையாகவும், மற்ற ஆறு பகுதியளவும், கோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்படும் இந்திரசாகர் (போலாவரம்) பல்நோக்குத் திட்டம் மற்றும் ஜல்லேரு நீர்த்தேக்கத் திட்டத்திற்குட்பட்ட பகுதிகளாக உள்ளன. 2004-ல் தொடங்கப்பட்ட போலவரம் திட்டம் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அரசு கூறுகிறது. சிந்தலபுடி திட்டம் 2014 இல் தொடங்கப்பட்டது, இதுவரை எந்த கட்டுமானமும் தொடங்கப்படவில்லை.
போலவரம் திட்டம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சுமார் 200 கிராமங்களை மூழ்கடித்துவிடும். இதனால் 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர வேண்டியிருக்கும். ஜல்லேரு நீர்த்தேக்கம் 16 பழங்குடியின குக்கிராமங்களை முழுமையாகவும், 127 பழங்குடியின குக்கிராமங்களை பகுதியளவும் மூழ்கச் செய்யும். இந்தத் தரவுகள் ஜூன் 2017 இல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் நான் தாக்கல் செய்த மனுவுக்கு சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் வழங்கப்பட்ட பதிலாகும்.
இந்த வாரம், பல குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசிகள், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் வழியாக, சில சமயங்களில் கனமழையால் நிரம்பி வழியும் ஓடைகளைக் கடந்து மொத்தம் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர். இந்தப் பேரணியானது ஏலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றக் கூட்டம் மற்றும் தர்ணாவுடன் முடிவடைந்தது.
முழு இருளிலும், முழங்கால் மற்றும் இடுப்பளவு நீரிலும், சேற்றிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலும் வெறுங்காலுடன் நடந்தோம்
ஜூலை 16 அன்று, பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்த குழுக்களின் தலைவர்கள் - ஆந்திரப் பிரதேச கிரிஜன சங்கம் (APGS), அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், மற்றும் ஆந்திரப் பிரதேச திட்ட இடம்பெயர்ந்த மக்கள் சங்கம் - 22 கோரிக்கைகளின் பட்டியல் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கினர்.
வன உரிமைச் சட்டம் (FRA), 2006ன் படி ஆதிவாசிகளின் வன உரிமைகளை அங்கீகரித்தல், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (LARR) சட்டம், 2013 இன் படி போலவரம் அணை மற்றும் ஜல்லேரு நீர்த்தேக்கத்தால் இடம்பெயர்ந்த மக்களின் முறையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் உறுதி செய்தல் மற்றும் 1970 இன் நிலப் பரிமாற்ற ஒழுங்குமுறை (LTR) சட்டம் மற்றும் பஞ்சாயத்துகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் (PESA), 1998 ஆகியவற்றை முறையாக செயல்படுத்துதல் உள்ளிட்ட மிக முக்கியமான கோரிக்கைகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், பாரம்பரியமாக காடுகளை நம்பி வாழும் ஆதிவாசி சமூகங்களிடமிருந்து நிலம் பறிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு இழப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் FRA கூறுகிறது. வன நிலங்களில் பயிரிடுவதுடன், புளி, தேன், மூங்கில் போன்ற வனப் பொருட்களையும் அவர்கள் விற்பனை செய்கின்றனர். பழங்குடியினரின் வேளாண் நிலங்களுக்கு தனிப்பட்ட பெயர்களும், பொதுவான வன உற்பத்திப் பகுதிகளுக்கு தனிப்பெயர்களையும் வழங்குவதன் மூலம் இவர்களின் பாரம்பரிய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று FRA கூறுகிறது. LARR மற்றும் PESA ஆணை கிராம சபை (முழு கிராமக் கூட்டம்) தீர்மானங்கள் பழங்குடியினரிடமிருந்து நிலம் பறிக்கப்படுவதற்கு முன், அவர்களின் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. மேலும் ஆதிவாசிகளிடம் இருந்து பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு நிலம் வழங்குவதை LTR அங்கீகரிப்பதில்லை.
"போலவரம் திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இவை அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் பழங்குடியினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு அவர்களின் எதிர்ப்பை நசுக்க அரசாங்கம் தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறது" என்கிறார் ஒரு டஜன் வழக்குகளைப் பெற்றுள்ள ஏ.பி.ஜி.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவர் தெல்லம் ராமகிருஷ்ணா. கோயா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணாவின் கிராமம் ஜல்லேரு நீர்த்தேக்க மண்டலத்தில் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடியிருந்த சுமார் 2,000 மக்களிடையே பேசிய ராமகிருஷ்ணா “எங்கள் கொழுப்பை குறைக்க நாங்கள் நடக்கவில்லை, எங்கள் நிலங்களை மீட்பதற்காக நாங்கள் நடந்தோம்" என்று கூறுகிறார். 2006ஆம் ஆண்டு பழங்குடியினர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ரெடியா நாயக் வெளியிட்ட அறிக்கையின்படி, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் பழங்குடியினருக்கு சொந்தமான 55,000 ஏக்கர் நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது என்று ராமகிருஷ்ணா மக்களிடையே தெரிவிக்கிறார். “நிலம் எங்களின் அடிப்படை உரிமை. எங்களுடைய நிலம் எங்களுக்குத் திரும்ப வேண்டும்,” என்றபோது கூட்டத்தினர் சத்தமாக கரவொலி எழுப்புகின்றனர்.
பாதயாத்திரையின் போது, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. அவர்கள் பிளாஸ்டிக் கூடைகளையும், துணிப் பைகளில் தண்ணீர் பாட்டில்களையும், ஏற்பாட்டாளர்கள் கொடுத்த உணவுப் பொட்டலங்களையும் தங்களுக்குச் சொந்தமான மதிய உணவுப் பாத்திரங்களையும் எடுத்து வந்தனர். மொத்த தூரத்தையும் நடந்தே கடந்த ஜீலுகு மில்லி மண்டலத்தின் அங்கண்ண குடேம் கிராமத்தைச் சேர்ந்த சவரம் லட்சுமி "சில நேரங்களில், பல கிலோமீட்டர்களுக்கு எங்களிடம் தண்ணீர் இருக்காது. மற்ற இடங்களில் கனமழை பெய்யும். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து நடந்தோம்” என்று கூறினார்.
“நாங்கள் தினமும் காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை நடந்தோம்.(ஒரு நாளைக்கு சுமார் 40-50 கிலோமீட்டர்களை வரை நடந்தோம்). ஓரிரு நாட்கள், மோசமான வானிலை காரணமாக திட்டமிட்டபடி இல்லாமல் தாமதம் ஏற்பட்டதால், நாங்கள் நள்ளிரவிலும் நடந்தோம். முழு இருளிலும், முழங்கால் மற்றும் இடுப்பளவு நீரிலும், சேற்றிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலும் வெறுங்காலுடன் நடந்தோம்” என தனது கால்களில் ஏற்பட்ட கொப்புளங்களைக் காட்டியபடி தெரிவித்தார் ஜீலுகு மில்லி மண்டலத்தில் உள்ள பேரிங்கலபாடு பகுதியைச் சேர்ந்த 32 வயதான கொரசா துர்கா.
பேரணியின் முழு தூரமும் நடந்த 25 வயதான தாமரம் வெங்கயம்மா, “எங்கள் முன்னோர்கள் ஆறு ஏக்கர் வன நிலத்தில் பயிரிட்டனர். இப்போது, எந்த ஆவணமும் சட்ட உரிமையும் இல்லாமல், எங்கள் நிலத்தை இழந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா மற்றும் இழப்பீடு வேண்டும். கிராமசபையில் வன உரிமைக் குழு மூலம் பல பழங்குடியினரும் பட்டா கோரி விண்ணப்பித்திருந்தாலும், பட்டா வழங்குவதற்கு கலெக்டரின் தலைமையில் மாவட்ட அளவிலான கமிட்டியில் அதற்கான ஆவணங்கள் தரப்படுவதில் தாமதம் செய்யப்படுகிறது.
"ஆந்திர அரசுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே எழுதப்படாத ஒருமித்த கருத்து உள்ளது, எனவே, பழங்குடியினருக்கு மறுவாழ்வு அளிக்க அதிக அளவு நிலங்கள் தேவைப்படும் என்பதால், நீரில் மூழ்கும் பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை," என பழங்குடியினர் சார்பாக ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடி வரும் வழக்கறிஞர் பி.சுரேஷ் கூறுகிறார்.
ஆதிவாசிகள் ஏன் இவ்வளவு வேதனை மற்றும் கடினமான பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தனர்? “எங்கள் நிலத்தை விவசாயிகள் [பழங்குடியினர் அல்லாதவர்கள்] பறிப்பது தொடர்பாக உள்ளாட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டோம். ஆனால் யாரும் பொருட்படுத்தவில்லை. கலெக்டர் சொல்வதைக் கேட்பார் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்தோம்” என்கிறார் துர்கா.
ஆனால், களைத்துப் போயிருந்த ஆதிவாசிகளை சந்திக்க ஆட்சியர் காட்டமனேனி பாஸ்கர் வெளியில் வராமல், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சத்தியநாராயணனை அனுப்பி வைத்து, மனுவை வாங்கிக் கொண்டதுடன் போராட்டக்காரர்களிடம் எதுவும் பேசாமலும் சென்று விட்டார்.
இன்னும், துக்ரா, வெங்கயம்மா மற்றும் மற்றவர்கள் மேலும் 300 கிலோமீட்டர் நடந்தால் ஏதாவது நடக்கும் என்று நம்புகிறார்கள். சிறுவனான ஆதித்யா தனது பள்ளியிலிருந்து ஒரு வார விடுமுறை எடுத்துக்கொண்டு பேரணியில் கலந்துகொண்டார். "நம் மக்களுக்காகவும், எங்கள் வன நிலங்களுக்காகவும், எங்கள் காடுகளுக்காகவும் இதைச் செய்துள்ளேன்" என அவர் கூறுகிறார்.
தமிழில்: அன்பில் ராம்