மோட்டார் பைக் விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்த 28 வயதாகும் பிம்லேஷ் ஜெய்ஸ்வால், பன்வெலில் இருக்கும் தன்னுடைய வாடகை வீட்டிலிருந்து 1200கிமீ தூரமுள்ள சொந்த ஊரான ரேவா மாவட்டத்திற்கு ஹோண்டா ஆக்டிவா-வில் பயணம் செய்யும் துணிச்சலான முடிவை எடுத்தார். இந்த ஸ்கூட்டரில் பக்க இருக்கையும் (சைட்-கார்) உண்டு. தன்னுடைய மனைவி சுனிதா, 26 மற்றும் அவர்களின் மூன்று வயது மகள் ரூபி ஆகியோருடன் பயணத்தை தொடங்கியுள்ளார். அவரிடம் கேட்டபோது, “எனக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
பன்வெலில் வீடுகளுக்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் பிம்லேஷ். அவர் கூறுகையில், “ஒரு காலை வைத்துக்கொண்டு வேலை செய்வது கஷ்டமாக இருக்கிறது, ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்தாக வேண்டும்” என ஹினாய்தி கிராமத்திலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து என்னிடம் போனில் கூறினார். இதே உத்வேகம்தான் 40 டிகிரி வெயிலிலும் அவரது பயணத்தை தொடரச் செய்தது. இது அவரது மனஉறுதியை எடுத்துரைக்கிறது. மேலும் விரக்தியே இவரைப் போன்ற புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்குச் செல்ல வைக்கிறது.
கொரொனா நோயை கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த போது, பிம்லேஷ் போன்ற லட்சக்கணக்கான தினசரி கூலி தொழிலாளிகள் படுபாதாள நிலைக்கு தள்ளப்பட்டனர். “எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, அதனால் உணவுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எங்களுடைய வாடகை மற்றும் மின்சார கட்டணத்தையாவது செலுத்துங்கள். யாராவது நான்கு மணி நேர அறிவிப்பில் ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்துவார்களா?” என்கிறார்.
அதன்பிறகும் பன்வெலில் 50 நாட்கள் தங்கியிருந்தோம். பிம்லேஷ் கூறுகையில், “உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் உணவும் அரிசியும் வழங்கினார்கள். எப்படியோ உயிர் பிழைத்தோம். ஒவ்வொரு முறை ஊரடங்கு காலம் முடியும் போதும் நிச்சியம் இந்த முறை தளர்வு அறிவிப்பார்கள் என நம்பினோம். நான்காம் கட்ட ஊரடங்கு அறிவித்த போதுதான், இனி இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என நாங்கள் உணர்ந்தோம். மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரொனா நோய்தொற்றும் வேகமாக பரவி வந்தது. இதனால் ஹினாய்தியில் உள்ள என் குடும்பத்தாரும் மிகவும் கவலையடைந்தனர்”.
பன்வெலில் இருக்கும் தங்கள் வாடகை வீட்டை காலி செய்து மத்திய பிரதேசம் செல்வதற்கு இதுவே சரியான நேரம் என முடிவு செய்தார்கள். “வாடகை பாக்கியான 2000 ரூபாயை கேட்காமல் கனிவுடன் நடந்து கொண்டார் வீட்டு உரிமையாளர். எங்கள் விரக்தியை அவர் புரிந்துகொண்டார்” என்கிறார் பிம்லேஷ்.
பயணம் செய்யும் முடிவு இறுதியானதும், மூன்று யோசனைகள் அவர்களிடம் இருந்ததாக கூறுகிறார் சுனிதா: ஒன்று, தொழிலாளர்களுக்காக மாநில அரசு ஒருங்கிணைக்கும் ரயிலுக்காக காத்திருப்பது. “ஆனால் எப்போது நாங்கள் செல்ல முடியும் என்ற நேரமும் உறுதியும் தெளிவாக தெரியவில்லை”. அடுத்ததாக, மத்தியபிரதேசத்துக்குச் செல்லும் ஏதாவது ஒரு டிரக்கில் ஏறிச் செல்ல வேண்டும் என நினைத்தோம். “ஆனால் ஒரு சீட்டிற்கு 4000 ரூபாய் வரை ஓட்டுனர்கள் கேட்டார்கள்”.
இறுதியில், வேறு வழியின்றி ஸ்கூட்டரில் செல்லலாம் என ஜெய்ஸ்வால் முடிவு செய்தார். மே 15 அன்று கரேகோன் சுங்கச்சாவடியில் பிம்லேஷை நான் சந்தித்த போது, 1200கிமீ-ல் அவர்கள் வெறும் 40 கிமீ மட்டுமே கடந்திருந்தனர். ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தியிருந்தார். ஸ்கூட்டரில் கால் வைக்கும் பகுதியில் இரண்டு பைகள் தொங்கிக்கொண்டிருந்தன. கால் சுளுக்கு பிடித்ததால் சுனிதாவும் கீழே இறங்கி நின்றார். ரூபி அவரது தோள்களில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
பிம்லேஷின் ஊன்றுகோல் ஸ்கூட்டரில் சாய்த்து வைக்கப்படிருந்தது. “2012-ல் எனக்கு மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் எனது இடது காலை இழந்தேன். அப்போதிருந்து இந்த ஊன்றுகோலை பயன்படுத்தி வருகிறேன்” என்றார்.
விபத்து ஏற்படுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, - 2008-ம் ஆண்டு இளைஞராக வேலை தேடி மும்பைக்கு வந்தார் - கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார் பிம்லேஷ். அந்த சமயத்தில் மாதத்திற்கு 5000 – 6000 வரை சம்பாதித்துள்ளார்.
அதன்பிறகே விபத்து ஏற்பட்டது – மோட்டார் பைக்கில் பினால் அமர்ந்து சென்றபோது லார் மோதியதில் அவரது கால் நசுங்கியது. இது நடந்தது 2012-ம் ஆண்டு.
அன்றிலிருந்து, ஒப்பந்தாரருக்காக வீடுகளை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இதில் மாதத்திற்கு 3000 ரூபாய் வருமானம் பெறுகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு அவர் வாங்கிய சம்பளத்தை விட இது பாதி தொகையே. சுனிதாவும் வீட்டு வேலைக்குச் சென்று இதே சம்பளத்தை பெறுகிறார். இருவரின் வருமானமும் சேர்ந்து மாதம் 6000 ரூபாய் கிடைக்கிறது.
ரூபி பிறந்த பிறகும் சுனிதா தொடர்ந்து வேலை செய்து வந்தார். ஆனால் மார் 25-ம் தேதியிலிருந்து அவர் ஒரு பைசா கூட வருமானம் ஈட்டவில்லை. ஏனென்றால், இந்த சமயத்தில் அவரது முதலாளி எந்த சம்பளம் கொடுக்கவில்லை. மத்தியபிரதேசத்திற்கு கிளம்பும் வரை பொதுக் கழிப்பறையை பயன்படுத்திக் கொண்டு சிறிய அறையில் வாழ்ந்து வந்தனர். தாங்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை இதற்கு வாடகையாக கொடுத்தனர்.
மே 15 அன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, மாலை வெயிலில் பிம்லேஷ் அமைதியாக அமர்ந்திருந்தார். நெடுஞ்சாலையில் டெம்போ வாகனங்கள் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பறந்தன. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, மும்பையில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கிடைத்த வாகனத்தில் ஏறி பீகார், ஓடிஷா, உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த காலகட்டத்தில் மும்பை-நாசிக் நெடுஞ்சாலை பரபரப்பாக இருந்தது.
சாலையில் மோசமான விபத்துகளும் நடந்தன. அதில் ஒரு விபத்தில், அதிகமான கூட்டத்தை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து பல தொழிலாளர்கள் இறந்தனர். இத்தகைய ஆபத்தை பிம்லேஷ் நன்றாக தெரிந்து வைத்திருந்தார். “நான் பொய் சொல்லவில்லை. எனக்கும் பயமாக இருந்தது. ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் வண்டி ஓட்ட மாட்டேன் என உறுதி அளித்திருந்தேன். நான் வீட்டிற்குச் சென்றதும் உங்களிடம் கட்டாயம் போனில் பேசுவேன்” என்றார்.
ஆமாம், தன்னுடைய இரண்டாவது வாக்குறுதியை அவர் நிறைவேற்றினார். மே 19 அன்று காலை எனது போன் ஒலித்தது. “சார், இப்போதுதான் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். எங்களைப் பார்த்ததும் என் பெற்றோர் அழுதுவிட்டனர். அவர்களது பேத்தியை பார்த்ததும் பூரிப்படைந்துள்ளனர்” என பிம்லேஷ் தெரிவித்தார்.
இரவு பகலாக பயணம் செய்த இந்த நான்கு நாட்களிலும், தினமும் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கியிருப்போம், என்கிறார் பிம்லேஷ். “இடதுபக்க சாலையில் சீராக நான் ஸ்கூட்டரை ஓட்டி வந்தேன். இரவு 2 மணி வரை பயணம் செய்து காலை 5 மணிக்கு மறுபடியும் தொடர்வோம்.”
ஒவ்வொரு இரவும் மரத்தடியில் நல்ல இடமாக பார்த்து கொஞ்ச நேரம் உறங்கியுள்ளார்கள். “போர்வையை எங்களுடனே கொண்டு வந்தோம். அதை விரித்து தூங்குவோம். சாலையில் போகும் வண்டிகள் மற்றும் நாங்கள் கொண்டு வந்த பையில் பணம் இருந்த காரணத்தால் நானும் என் மனைவியும் ஒழுங்காக தூங்கவேயில்லை” என்கிறார் பிம்லேஷ்.
அப்படி பார்க்கும்போது, அவர்கள் பயணத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை. மாநில எல்லையில் கூட இவர்களது வாகனம் பரிசோதனைக்காக நிறுத்தப்படவில்லை.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நகரகங்களுக்குள் குறுகிய தூர பயணத்திற்கு மட்டுமே செல்லக்கூடிய பிம்லேஷின் கியர் இல்லாத ஸ்கூட்டர், எங்கும் பழுதடையாமல் நான்கு நாட்களும் நிற்காமல் ஓடியுள்ளது.
உணவுக்கும் எரிபொருளுக்கும் தன்னிடம் 2500 ரூபாய் வைத்திருந்தார். “சில பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன. அந்த சமயத்தில் முழுதாக பெட்ரோல் நிரப்பிக் கொண்டோம். எங்கள் மகளை நினைத்துதான் கவலையாக இருந்தது. ஆனால் ஸ்கூட்டரில் வரும்போது கடும் குளிரையும் வெயிலையும் ரூபி தாங்கிக் கொண்டாள். அவளுக்கான உணவை நாங்கள் எடுத்து வந்தோம். வழியிலும் சில நல்ல மனிதர்கள் அவளுக்கு பிஸ்கட் கொடுத்தார்கள்”.
கடந்த பத்து வருடங்களாக மும்பையை தனது சொந்த ஊராகவே கருதினார் பிம்லேஷ். ஆனால் அந்த நினைப்பு ஊரடங்கு தொடங்கும் வரைதான் இருந்தது. கடந்த சில வாரங்களாக பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன். பிரச்சனைக்குரிய சமயத்தில் உங்கள் குடும்பத்தோடுதான் இருக்க நினைப்பீர்கள். உங்கள் உறவினர்களோடு சுற்றியிருக்கதான் விரும்புவீர்கள். என்னுடைய சொந்த ஊரில் எந்த வேலையும் இல்லாததால்தான் முன்பைக்கு வந்தேன். இன்னும் அப்படிதான் நிலைமை உள்ளது.
ஹினாய்தியில் அவருக்குச் சொந்தமாக எந்த விவசாய நிலமும் இல்லை. கூலி வேலை மூலமாகதான் குடும்பத்திற்கு வருமானம் கிடைத்து வந்தது. அவர் கூறுகையில், “கூலி வேலை செய்ய முடிவெடுத்தால், எங்கு தொடர்ந்து வேலை கிடைக்குமோ அங்கு செல்லுங்கள். எல்லாம் முடிந்த பிறகு நான் திரும்பவும் மும்பைக்குச் செல்வேன். தங்கள் கிராமங்களில் வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால்தான் பல புலம்பெயர் தொழிலாளர்கள் நகரத்திற்கு வருகிறார்கள். நகரத்தில் இருக்க வேண்டும் என விரும்பி யாரும் வரவில்லை”
தமிழில்: வி கோபி மாவடிராஜா