“என்னை இதுவரை யாரும் பேட்டி எடுத்ததில்லை. எல்லாவற்றையும் நான் கூறுகிறேன்....”
அவர் “எல்லாவற்றையும்” என்று கூறுவது, 70 வருடங்களாக கழிப்பறையை சுத்தம் செய்தது, பெருக்குவது, துணி துவைத்தது மற்றும் மும்பையின் மேற்கு கார் பகுதியில் பல வீடுகளை சிறிய தொகைக்கு சுத்தம் செய்தது போன்றவைதான். ஓட்டுமொத்த கட்டிடத்தில் உள்ள 15-16 வீடுகளை சுத்தம் செய்வதற்கு 1980 மற்றும் 1990-களில் 50 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் பத்தேரி சரப்ஜீத் லோகத். அதோடு அவர்களின் சமயலறையில் உள்ள மீதமான உணவுகளும் அவருக்கு கிடைக்கும்.
“என் பெயர் பத்தேரி தேவி. ஹர்யானாவின் ரோதக் மாவட்டத்திலுள்ள சாங்கி கிராமம்தான் எனது சொந்த ஊர். எந்த வருடத்தில் மும்பைக்கு வந்தேன் என எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால் அப்போதுதான் எனக்கு திருமனம் ஆகியிருந்தது. உறவினர் ஒருவர் செய்து வந்த வேலையை எனக்கு பெற்று தந்தார் என் மாமியார். என் மகனுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாக இருக்கும்போது என் கனவர் (இவரும் துப்புரவு பணியாளரே) இறந்துவிட்டார். அவர் தாதரில் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து ரயிலில் வீட்டிற்கு வரும்போது மின்சார கம்பத்தில் அடிபட்டு இறந்து போனார்”.
இது நடைபெற்று பத்து வருடங்களுக்கு மேலாகியும், அவர் இதை கூறும்போது ஏற்படும் வலி நமக்கு புரிகிறது. பத்தேரி தேவி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார். மும்பை, கிழக்கு பந்த்ராவில் உள்ள வால்மிகி நகரில் இவர் வசித்து வருகிறார். அவருடைய ஆதார் கார்டில் 1932-ம் ஆண்டு பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இப்போது அவருக்கு 86 வயதாகிறது. ஆனால் அவரது சுருக்கம் விழுந்த முகத்தை பார்க்கும் போது 90 வயதிற்கு மேல் இருக்கும் என தோன்றுகிறது. அவரும் இதை ஒத்துக்கொள்கிறார். அவரது 70 வயது மகன் ஹரிஷ் இந்த வருடம் ஜூன் 30-ம் தேதி மரணம் அடைந்தார். 12 அல்லது 13 வயதாக இருக்கும்போதே பத்தேரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. அதன்பிறகு தனது கனவர் சரப்ஜீத் லோகத்தோடு மும்பை வந்தார்.
அவரது மொத்த குடும்பமும் (பெரும்பாலனவர்கள் அவரது கனவரின் உறவினர்கள்) ஹர்யானாவில் இருந்து புலம்பெயர்ந்து மும்பையில் வசிக்கின்றனர். பெரும்பாலும் அனைவரும் துப்புரவு பணியாளராக இருக்கிறார்கள். இப்பகுதியில் வாழும் பலரும் பத்தேரி போல் வால்மிகி சமூகத்தைச் சார்ந்த தலித்கள். இவர்கள் பல்வேறு காலங்களில் ஹய்ரானாவில் இருந்து மும்பைக்கு வேலை தேடி வந்தவர்கள். பத்தேரி போல், இவர்களும் தங்கள் வீடுகளில் ஹர்யான்வி மொழி பேசுகிறார்கள். மும்பையிலுள்ள பல வால்மிகி குடியிருப்புகளில் ஹர்யானாவைச் சேர்ந்த பலர் உள்ளனர். குறிப்பாக பந்துப் டேங்க் சாலை, டோம்பிவிலி, மட்டுங்கா தொழிலாளர் முகாம், விக்ரோலி மற்றும் செம்பூர்.
ஏன் துப்புரவு பணியோடு சாதி சிக்கிக்கொண்டுள்ளது? “இது விதி. எங்கள் சமூகத்திற்கு இந்த ஒரு வேலை மட்டும்தான் இருக்கிறது. இதைதான் அனைவரும் செய்கிறார்கள்” என்கிறார் பத்தேரி தேவி
குறிப்பிட்ட சாதி குழுக்களைச் சேர்ந்த மக்களின் புலம்பெயரும் வடிவங்களும் அவர்கள் வாழும் குடியிருப்புகளும் நாடு முழுவதும் ஒன்று போலவே உள்ளன. அதுபோல் சாதி அடிப்படையிலான வேலையும் சமூகத்திற்குள்ளேயே பல தலைமுறைகளை கடந்து அதன் பிடிப்பும் மும்பையிலும் நாட்டில் பிற பகுதிகளிலும் ஒன்றாகவே உள்ளன. இந்த வடிவங்கள் நகர வாழ்க்கையின் மினுமினுப்பில் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைந்துள்ளன.
வருடக்கணக்கில் செய்த கடுமையான வேலையால் பத்தேரியின் முதுகு வளைந்து விட்டது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்வதே இல்லை. மும்பையில் உள்ள அவரது வீட்டில் நாங்கள் சந்தித்தபோது, அவரது கதையை மிகவும் உற்சாகமாக கூறினார். வீட்டிலிருந்த அனைவரும் குழப்பத்தோடு பார்த்தனர். ஏனென்றால் தன்னைப் பற்றி பத்தேரி யாரிடமும் இவ்வுளவு வெளிப்படையாக பேசி அவர்கள் பார்த்ததில்லை. அப்போதுதான் தன்னை இதுவரை யாரும் பேட்டி கண்டதில்லை என கூறினார். அதனாலேயே அவர் எங்களிடம் பேச விரும்பினார்.
தன் கனவர் இறப்பு குறித்து கூறுகையில்: “என் வாழ்க்கையில் அதுதான் கடினமான நேரம். மூத்த மற்றும் இளைய கொழுந்தனார்களும் ஒரே வீட்டில் அப்போது வசித்து வந்தார்கள். அந்த சமயத்தில் நான் வருமானம் ஈட்டி வந்தேன். என் கனவரின் தம்பியில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை வற்புறுத்தினர். நான் முடியாது என மறுத்தேன். என் மகனோடு நேரத்தை செலவழித்தேன். இருவரில் யாராவது ஒருவரை நான் திருமனம் செய்தால், என்னை ஒருவரும் மதிக்க மாட்டார்கள் என்பதை தெரிந்தே வைத்திருந்தேன். எனக்காகவும், என் மகனை வளர்க்கவும், எனது கௌரவத்திற்காகவும் சம்பாதிக்க தொடங்கினேன். என் வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”. (சில சாதி குழுக்கள் அல்லது சமூகங்களில், கனவனை இழந்த விதவை, கனவனின் மூத்த அல்லது இளைய சகோதரரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது)
“எனக்கு திருமணம் ஆனதும், என் கனவர், அவருடைய பெற்றோர்கள் மற்றும் இளைய கொழுந்தனாரோடு நான் இங்கு வந்தேன். ஆரம்பத்தில் காதிக் மக்கள் (தலித் சமூகத்தினர்) வசித்த பகுதியான காரில் குடியிருந்தோம்.
“என் வாழ்க்கை முழுவதும் கார் பகுதியில்தான் பணியாற்றினேன். முன்பெல்லாம் ஒரு சில கட்டிடங்களே இருந்தன. மும்பை நகரமே திறந்தவெளியாக காலியாக இருந்தது”. தான் பணியாற்றிய காலத்தில் எவ்வுளவு சம்பாதித்தோம் என பத்தேரியால் நினைவு கூற முடியவில்லை. நகரத்திற்கு முதல் முறையாக வந்தபோது இருந்த வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு அல்லது துணிகளின் விலைகளை அவரால் நினைவுகூற முடியவில்லை. பொருட்கள் வாங்குவதிலிருந்து அவரது சம்பளத்தை பெறுவது என எல்லாம் பத்தேரியின் மாமியார் கட்டுப்பாட்டில் இருந்தது. பத்தேரியின் கையில் ஒருபோதும் பணம் இருக்காது.
மும்பையில் இருந்த நாட்கள் முழுவதும் மேற்கு கார் பகுதியில் உள்ள கட்டிடங்களில்தான் வேலை நிமித்தமாக சுற்றி திரிந்துள்ளார் பத்தேரி. இங்குதான் அவர் கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் துப்புரவு பணியை தொடங்கினார். 80 வயதான பிறகும் தான் செய்து வந்த வேலையை அவர் நிறுத்தவில்லை. அவரது பேரனின் மனைவி தனு லோகத், 37, கூறுகையில், “பல சண்டை சச்சரவுகளுக்குப் பிறகு, அவரது வேலை வேறு ஒருவருக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இன்றும்கூட, மேற்கு கார் பகுதியில் உள்ள மக்களை சந்திக்க அவர் சென்று வருகிறார்”.
கொஞ்ச காலம் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார் சஞ்சய். ஆனால் கல்லீரல் நோய் காரணமாக அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். இந்த கட்டுரையாளர் பத்தேரியை சந்தித்த போது, அப்போதுதான் சிகிச்சை முடிந்து மருத்துவமணையிலிருந்து வீடு திரும்பியிருந்தார் சஞ்சய். அடுத்த இரண்டு மாதத்திற்குள் நோய் முற்றி தனது 40-வது வயதில் மரணம் அடைந்தார். சஞ்சய் ஜாலியான நபர். “என் பாட்டி துப்புரவு பணி செய்வதையும் சாக்கடையை சுத்தம் செய்வதையும் சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன். நாம் எல்லாம் இன்று வாழ்ந்து வருவதற்கு அவர்தான் காரணம். இந்த அசிங்கத்திலிருந்து தள்ளிவைத்து நம்மை வளர்த்து ஆளாக்கியவர் அவரே. ஆரம்பத்திலிருந்தே அவர் கடுமையான உழைப்பாளி” என தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார் சஞ்சய்.
“என் தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டினார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தார். அதன்பிறகு மாநில தலைமை செயலகத்தில் துப்புரவாளராக அவருக்கு பணி கிடைத்தது. ஆனால் சாதி தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. சிலர் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டனர். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை, வீட்டில்தான் இருந்தார்”.
“ஏழு மாடி கட்டிடத்திற்கும் சுத்தம் செய்வதற்கு தனக்கு 50 ரூபாய் மட்டுமே கிடைக்கும் என நான் சிறுவனாக இருக்கும்போது பாட்டி கூறியிருக்கிறார். அந்த கட்டிடத்தில் உள்ள 15-16 வீடுகளை சுத்தம் செய்வதற்கே இந்த தொகை. எப்படி எங்கள் வீட்டுச் செலவை சமாளித்தோம் என்பதையும் நான் கூறுகிறேன். அவர் பணியாற்றும் வீடுகளில், மீதமுள்ள உணவுகளை கொடுப்பார்கள். பல நாட்கள் அந்த உணவை மட்டும்தான் உண்டு நாங்கள் வாழ்ந்தோம். சமீபத்தில்தான் பாட்டிக்கு மாதம் 4000 ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது”.
இந்த வருடம் பத்தேரிக்கு துயரம் நிறைந்ததாக அமைந்துள்ளது. சஞ்சயும் அவரது தந்தையும் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இது பத்தேரிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தான் வேலை செய்த நாட்களைப் பற்றி மகிழ்ச்சியோடு பேச விரும்புகிறார். “என் மனது முழுவதும் வேலை செய்வதில்தான் இருக்கும். உடன் பணியாற்றும் அனைவரும் ஒன்றாக பேசியும், தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டும், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாகவும் இருப்போம். வீட்டுச் சச்சரவுகளிலிருந்து ஒதுங்கி இருப்போம். இது விடுமுறை இல்லாத பணி என்பதால், ஒருபோதும் எனது கிராமத்திற்குச் சென்றதில்லை. ஆனால் நான் அங்கிருந்து கொண்டு வந்த உடைகளைதான் இதுவரை உடுத்தியுள்ளேன்”. இப்போதும் கூட அவரது பேச்சிலும் உடையிலும், முற்றிலும் ஹர்யானா பெண் போலவே உள்ளார்.
தனது வாழ்நாள் முழுதும் மற்றவர்களுக்கு வீட்டு வேலை செய்தே ஓய்ந்த பத்தேரிக்கு, யாரை குறை சொல்வதென தெரியவில்லை. தனது கோபத்தை அவர் யாரிடமும் காடியதும் இல்லை. “இது விதி என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் சமூகத்திற்கு இந்த ஒரு வேலைதான் இருக்கிறது. எல்லாரும் இதையே செய்கிறார்கள்”. பத்தேரி போன்ற லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த மனிததன்மையற்ற வேலையே வாழ்வாதாரமாக இருக்கிறது. சாதி, ஒரு மறைமுக சுவராக அவர்களை எந்நேரமும் நசுக்குகிறது.
பின் ஏன் அவரது சாதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து இந்த அருவருக்கதக்க வேலையில் சிக்கி தவிக்கிறார்கள்? பத்தேரி வெகுளியாக பதில் அளிக்கிறார்: “எனக்கு பதில் தெரியவில்லை. எங்கள் மக்கள் அனைவரும் இதை செய்கிறார்கள், அதனால் நானும் செய்தேன். தொடர்ந்து துடைப்பத்தை இறுக்கமாக பிடித்திருப்பதால் என் மணிக்கட்டு வளைந்துவிட்டது. ஆனால் எனக்கு எந்த ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. ஏழை மக்களுக்கான ரேஷன் கார்டும் என்னிடம் கிடையாது”.
“ஆனால் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். சாப்பிடுவதற்கு நல்ல உணவு கிடைக்கிறது. வீட்டிற்கு வெளியே நான் சுதந்திரத்தை சுவாசிக்கிறேன். வெளியே சுற்றுவது எனக்கு பிடிக்கும். உயிர் உள்ளவரை வேலை செய்வதையும் பீடி குடிப்பதையும் நிறுத்த மாட்டேன்.
அவர் சிரிக்கிறார். பல்லில்லாத அந்த சிரிப்பு அவரது அத்தனை துயரத்தையும் விரட்டி விடும்.
இந்தி மொழிபெயர்ப்பு: நமிதா வைக்கர்
தமிழில்: வி கோபி மாவடிராஜா