“எனது சொந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இந்த இயக்கம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. இது எங்களுக்கு மரியாதை கொடுத்துள்ளது. ‘எங்கள்’ என ரஜிந்தெர் கவுர் சுட்டுவது அவரைப் போலவே, 2020 செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தில் பங்குபெற்ற பெண்களைத்தான். பஞ்சாபில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயது விவசாயியான ரஜிந்தர், அடிக்கடி சிங்குவுக்கு 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து, போராட்டக் களத்தில் உரையாற்றியிருக்கிறார்.
சொந்த கிராமமான டான் கலனில் உள்ள அவரின் பக்கத்து வீட்டுக்காரர் தில்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் 205 நாட்கள் கழித்தார். "நான் விளைவிக்காத காலம் என ஒன்று என் நினைவிலேயே இல்லை," என்று அவர் கூறுகிறார். "நான் அறுவடை செய்த ஒவ்வொரு பயிரிலும், எனக்கு வயதானது." ஹர்ஜீத் 36 ஆண்டுகளாக விவசாயியாக இருக்கிறார். “ஆனால் இதுபோன்ற ஒரு இயக்கத்தை நான் பார்த்ததும், அதில் பங்கேற்பதும் இதுவே முதல் முறை,” என்கிறார் அவர். "குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்திற்கு வருவதை நான் கண்டேன்."
நாட்டின் தலைநகரின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு, சர்ச்சைக்குரிய சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முக்கியமாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், நவம்பர் 2020 தொடங்கி ஒரு வருடத்துக்கு அங்கு முகாமிட்டிருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்றாகும்.
பஞ்சாபைச் சேர்ந்த பல பெண்கள், போராட்டத்தின் முன்னணியில் இருந்தனர். அப்போது அவர்கள் அனுபவித்த ஒற்றுமை இப்போதும் தொடர்கிறது என்றும், அங்கு அவர்கள் கண்டறிந்த தைரியமும் சுதந்திரமும் தற்போது வலுப்பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். “நான் அங்கு இருந்தபோது வீட்டில் இல்லாத உணர்வு வந்ததே இல்லை. இப்போது நான் திரும்பி வந்துவிட்டேன். போராட்டத்தை இழந்த உணர்வில் இருக்கிறேன்,” என்கிறார் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயதான குல்தீப் கவுர்.
இதற்கு முன், புத்லாடா தாலுகாவில் உள்ள ரலி கிராமத்து வீட்டில் பணிச்சுமை அவரை பாதித்திருந்தது. “இங்கே நான் எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும். அல்லது நாங்கள் விருந்தினர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அங்கே நான் சுதந்திரமாக இருந்தேன்,” என்கிறார் குல்தீப். போராட்டத் தளங்களில், சமூக சமையலறைகளில் தன்னார்வத் தொண்டு செய்தார். தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வேலை செய்திருக்க முடியும் என்கிறார். "நான் பெரியவர்களை பார்த்து, என் பெற்றோருக்கு சமைப்பதாக நினைத்துக் கொண்டேன்."
தொடக்கத்தில், விவசாயிகள் சட்டத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கியபோது, குல்தீப் எந்த விவசாயச் சங்கத்திலும் சேரவில்லை. சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு சுவரொட்டியை உருவாக்கினார். அதில், ‘கிசான் மோர்ச்சா ஜிந்தாபாத்’ (‘விவசாயிப் போராட்டம் வாழ்க’) என்ற வாசகத்தை எழுதி, அந்தச் சுவரொட்டியை சிங்குவுக்கு எடுத்துச் சென்றார். மேலும், முகாம்களில் பல பிரச்சனைகள் இருப்பதால், போராட்டக் களங்களில் இருந்த பெண்கள் வரவேண்டாம் என்று கூறியபோதும், குல்தீப் உறுதியாக இருந்தார். "நான் அங்கு வர வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன்."
அவர் சிங்குவை அடைந்தபோது, பெரிய விறகு அடுப்புகளில் பெண்கள் ரொட்டி தயாரிப்பதைக் கண்டார். “அவர்கள் என்னை வெகு தூரத்திலிருந்து அழைத்து, ‘அக்கா! ரொட்டி செய்ய எங்களுக்கு உதவுங்கள்,’ என்றனர். திக்ரியிலும் இதேதான் நடந்தது. அங்கு அவர் மான்சாவிடமிருந்து ஒரு டிராக்டர் டிராலியைக் கண்டுபிடித்து அதில் வசித்தார். ஒரு விறகு அடுப்பின் அருகே அமர்ந்திருந்த ஒரு சோர்வான பெண் அவரிடம் உதவி கேட்டார். "நான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரொட்டி செய்தேன்," குல்தீப் நினைவு கூர்கிறார். திக்ரியிலிருந்து, ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஷாஜஹான்பூரில் உள்ள முகாமுக்குச் சென்றார். "அங்கு வேலை செய்யும் ஆண்கள் என்னைப் பார்த்ததும், அவர்களுக்கும் ரொட்டி செய்யச் சொன்னார்கள்," என்று அவர் கூறுகிறார். மேலும் சிரித்தபடி, "நான் எங்கு சென்றாலும், மக்கள் சமையலுக்கு மட்டுமே உதவுமாறு என்னிடம் கேட்பார்கள். நான் ரொட்டி செய்பவள் என்று என் நெற்றியில் எழுதப்பட்டிருக்கிறதா என யோசித்தேன்!” என்கிறார்.
சொந்த ஊர் திரும்பியும், விவசாயிகள் இயக்கத்தில் குல்தீப் காட்டிய ஈடுபாடு அவரது நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது. தங்களையும் அழைத்துச் செல்லும்படி அவரிடம் அவர்கள் கூறுவார்கள். "நான் சமூக ஊடகங்களில் போடும் புகைப்படங்களைப் பார்த்து, அடுத்த முறை உடன் வர விரும்புவதாகச் சொல்வார்கள்." பங்கேற்காவிட்டால் பேரக்குழந்தைகள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்பட்டதாக ஒரு தோழி கூறினார்!
இதற்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது திரைப்படங்களைப் பார்த்ததில்லை. போராட்டத் தளங்களில் இருந்து வீட்டிற்குச் சென்ற குல்தீப் அங்கிருந்து செய்திகளுக்காக தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினார். "நான் உடல் ரீதியாக இங்கு இருந்தாலும் போராட்டம் பற்றியச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்," என்று அவர் கூறுகிறார். சூழ்நிலையின் நிச்சயமற்ற தன்மை அவரைத் தொந்தரவு செய்தது. அவரது பதட்டத்தைக் குறைக்க மருந்து கொடுக்கப்பட்டது. "என் தலை நடுங்கும்," என்று அவர் சொல்கிறார். "செய்தி பார்ப்பதை நிறுத்துமாறு மருத்துவர் என்னிடம் கூறினார்."
விவசாயிகள் இயக்கத்தைச் சேர்ந்த குல்தீப், தனக்குள் இருப்பதாக முன்பின் தெரியாத தைரியத்தைக் அடையாளம் கண்டார். கார் அல்லது டிராக்டர் தள்ளுவண்டியில் பயணம் செய்ய கொண்டிருந்த பயத்தை அவர் கடந்தார். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து தில்லிக்கு பலமுறை பயணம் செய்தார். “ஏராளமான விவசாயிகள் விபத்துகளில் இறந்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒரு விபத்தில் இறந்தால், எங்கள் வெற்றியை காண முடியாதே என்று நான் கவலைப்பட்டேன், ”என்று அவர் கூறுகிறார்.
வீட்டிற்குச் சென்ற குல்தீப் தனது சொந்த ஊரில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார். போராட்டங்களில் தவறாமல் பங்கேற்கும் ஒரு பதின்வயதுப் பையன், தன் அருகில் நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த வாகனம் அவனைக் இடித்து ஏறியது அவருக்கு நினைவிருக்கிறது. அவருக்கு அருகில் நின்ற இன்னொருவரும் இறந்தார். மேலும் ஒரு நபர் ஊனமாகிவிட்டார். “நானும் என் கணவரும் ஒரு அங்குலத்தால் மரணத்திலிருந்து தப்பினோம். அதன் பிறகு, விபத்தில் இறப்பதைப் பற்றி நான் ஒருபோதும் பயப்படவில்லை. சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நாளில், என் அருகில் அவன் [உயிரிழந்தப் பையன்] இருந்ததை நினைத்து அழுதேன்,” என்று குல்தீப் கூறுகிறார். இயக்கத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த 700 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார் அவர்.
விவசாயிகள் இயக்கத்திற்கு அவர்களின் ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் ஆதரவு இருந்தபோதிலும் பஞ்சாபின் பெண்கள் அரசியல் முடிவெடுப்பதில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறார்கள். பிப்ரவரி 20, 2022-ல் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகளால் களமிறக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கிறார்கள்
பஞ்சாபின் 2.14 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். இருப்பினும், 117 தொகுதிகளில் போட்டியிட்ட 1,304 வேட்பாளர்களில் 93 பேர் (7.13 சதவீதம்) மட்டுமே பெண்கள்.
இந்தியாவின் இரண்டாவது பழம்பெரும் அரசியல் கட்சியான சிரோமணி அகாலி தளம் 5 பெண்களை மட்டுமே களமிறக்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கியது. உத்தரபிரதேசத்தில் அதன் தேர்தல் முழக்கமான, ‘நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்’ என்பது பஞ்சாபில் தொலைதூரக் கனவாக இருந்தது. பெண் வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரஸின் எண்ணிக்கையை ஆம் ஆத்மி ஒரு வித்தியாசத்தில் தோற்கடித்தது. 12 பெண் வேட்பாளர்களை அது களமிறக்கியது. பாரதீய ஜனதா கட்சி, சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பஞ்சாப் லோக் காங்கிரஸ் - தேசிய ஜனநாயகக் கூட்டணி - 9 பெண்களை (பிஜேபியின் 6 பேர் உட்பட) களமிறக்கின.
*****
ரஜிந்தர் கவுரை நான் சந்தித்தது ஓர் ஈரமான குளிர்கால நாள். அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்; பின்னால் சுவரில் உள்ள விளக்கு பலவீனமான எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவருடைய உறுதி வலிமையானது. நான் என் கையேட்டைத் திறக்கிறேன். அவர், அவரின் இதயத்தை திறக்கிறார். பெண்களால் வழிநடத்தப்படும் புரட்சிக்கான நம்பிக்கையைப் பேசும் அவரது குரலில் அவரது கண்கள் கொண்டிருக்கும் நெருப்பு பிரதிபலிக்கிறது. அவரது வலிமிகுந்த முழங்கால்கள் ஓய்வைக் கோரின. ஆனால் விவசாயிகள் இயக்கம் தன்னை ஊக்குவித்தது என்று ரஜிந்தர் கூறுகிறார். அவர் வெளிப்படையாகப் பேசினார்.
"இப்போது நான்தான் [யாருக்கு வாக்களிக்க வேண்டும்] என்பதைத் தீர்மானிப்பேன்" என்கிறார் ரஜிந்தர். “முன்பெல்லாம் என் மாமனாரும் என் கணவரும் இந்தக் கட்சிக்கோ அந்தக் கட்சிக்கோ வாக்களிக்கச் சொல்வார்கள். ஆனால் இப்போது யாரும் என்னிடம் சொல்லத் துணியவில்லை. ரஜிந்தரின் தந்தை ஷிரோமணி அகாலி தளத்தை ஆதரித்தார். ஆனால் திருமணம் செய்து கொண்டு டான் கலான் கிராமத்திற்குச் சென்ற பிறகு, அவரது மாமியார் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க அவரிடம் சொன்னார். "நான் கைக்கு [காங்கிரஸ் கட்சிச் சின்னம்] வாக்களித்தேன். ஆனால் யாரோ என் மார்பில் சுட்டது போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது கணவர் கூற முற்பட்டபோது, ரஜிந்தர் இப்போது அவரைத் தடுக்கிறார். "நான் அவரை அமைதிப்படுத்துகிறேன்."
சிங்குவில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் அவர் நினைவுக்கு வருகிறது. அவர் மேடையில் உரை நிகழ்த்திய பிறகுதான் அது நடந்தது. "நான் என் முழங்கால்களுக்கு ஓய்வெடுக்க அருகிலுள்ள ஒரு கூடாரத்திற்குச் சென்றேன், அங்கு சமைத்துக்கொண்டிருந்த ஒரு மனிதன் என்னிடம், 'கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஒரு பெண் பேசுவதை நீங்கள் கேட்டீர்களா?' என்று கேட்டபோது கூடாரத்திற்குள் நுழைந்த மற்றொரு நபர் என்னை அடையாளம் கண்டுகொண்டார், 'ஓ! அவள் சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு பேச்சு கொடுத்தாள். அவர்கள் குறிப்பிட்டது நான்தான்!” அவள் பெருமையும் மகிழ்ச்சியும் குறையவில்லை என்கிறார்.
"மூன்று வேளாண் சட்டங்கள் எங்களை ஒன்றிணைத்தன," என்று பக்கத்து வீட்டு ஹர்ஜீத் கூறுகிறார். ஆனால் போராட்டத்தின் முடிவை அவர் விமர்சிக்கிறார். "சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். “குறைந்தபட்ச ஆதரவு விலைக்கானக் கோரிக்கை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யாமல் இயக்கம் திரும்பப் பெறப்பட்டது. மேலும், லக்கிம்பூர் கெரியில் இறந்த விவசாயிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.”
"இயக்கத்தின் போது விவசாயிகள் அமைப்புகள் ஒன்றுபட்டிருக்கலாம். ஆனால் அவை இப்போது பிளவுபட்டுள்ளன" என்கிறார் ஏமாற்றத்துடன் குல்தீப்.
2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பஞ்சாபில் பேசியபோது பெரும்பாலான மக்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. 2021 டிசம்பரில் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பகுதியாக இருந்த ஒரு சில விவசாய சங்கங்களால் உருவாக்கப்பட்ட சன்யுக்த் சமாஜ் மோர்ச்சாவைக் (SSM) கூட ஆதரிக்கவில்லை. (கட்சியின் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.) தேர்தல் மனநிலை வந்ததும், அனைத்துக் கட்சிகளின் தலைமையும் தொண்டர்களும் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இயக்கத்தில் உயிர்நீத்த தியாகிகளைப் பற்றி வாய் திறக்கவில்லை.
"எஸ்எஸ்எம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் கூட கிராமங்களில் அக்கறை காட்டவில்லை" என்று சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பென்ரா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜீவன் ஜோத் கூறினார். "[அரசியல்] கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு யார் உயிருடன் இருக்கிறார்கள், யார் இறந்துவிட்டார்கள் என்று கூடத் தெரியாது," என்று அவர் மனமுடைந்து கூறினார்.
வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் 22 வயது பள்ளி ஆசிரியையான ஜீவன் ஜோத்தின் அரசியல் கட்சிகள் மீதான கோபம், பக்கத்து வீட்டுப் பெண்ணான பூஜா பிரசவத்தின்போது இறந்தபிறகு தீவிரமடைந்தது. “எந்தக் கட்சியிலிருந்தும் எந்தத் தலைவரோ அல்லது கிராமத் தலைவரோ குடும்பத்தை ஒரு மரியாதைக்காகக் கூட அணுகவில்லை என்பது என்னைக் காயப்படுத்துகிறது.” பிறந்த குழந்தையும் மூன்று வயது குழந்தை குர்பியாரும் தினசரி கூலித் தொழிலாளியான 32 வயது தந்தை சத்பால் சிங்கின் பராமரிப்பில் இருந்ததால் ஜீவன் ஜோத் அக்குடும்பத்திற்கு உதவ முன்வந்தார்.
பென்ராவில் ஜீவன் ஜோத்தை நான் சந்தித்தபோது, குர்பியார் அருகில் அமர்ந்திருந்தார். "நான் இப்போது அவளுக்கு ஒரு தாயாக இருக்கிறேன்," என்று ஜீவன் கூறினார். "நான் அவளை தத்தெடுக்க விரும்புகிறேன். எனக்கு சொந்தமாகக் குழந்தைகள் இல்லாததால் நான் இதைச் செய்வதாக சொல்லப்படும் வதந்திகளுக்கு நான் அஞ்சவில்லை.”
விவசாயிகள் இயக்கத்தில் பெண்களின் ஈடுபாடு ஜீவன் ஜோத் போன்ற இளம் பெண்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆணாதிக்க உலகம் பெண்களை வெவ்வேறு போர்களில் ஈடுபடுத்துகிறது என்னும் அவர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் "அவர்களின் போராட்டத் தன்மையின்" தொடர்ச்சிதான் என்கிறார்.
இயக்கத்திற்காக ஒன்று சேர்ந்த பஞ்சாப் பெண்களின் வலுவான குரல்கள் இப்போது ஓரங்கட்டப்படுவதை ஏற்கவில்லை. "பெண்கள் காலங்காலமாக வீட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர்," என்கிறார் ஹர்ஜீத். அவர்கள் பெற்ற மரியாதை வரலாற்றின் வெறும் அடிக்குறிப்பாக மாறுமோ என்ற கவலை அவர்களிடம் இருக்கிறது.
இந்தக் கட்டுரைக்கு உதவிய முஷாரஃப் மற்றும் பர்கத் ஆகியோருக்கு ஆசிரியர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்