விஜயவாடா வழியாகச் செல்லும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இரவு 10 மணியளவில் டிராஃபிக் டிவைடரில் பழைய வினைல் பேனரை விரிக்கின்றனர் செட்டி ஸ்ரீகாந்தும், செட்டி கோபிசந்தும். அதில் தங்களின் துண்டுகளை விரித்து உறங்கச் செல்கின்றனர்.
காலை 6 மணிக்கு வேலைக்காக தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருக்கும் பென்ஸ் சர்க்கிளை நோக்கி அவர்கள் நடக்கின்றனர். தொழிலாளர்கள் கூட்டத்திற்கு மிதிவண்டியில் வந்து உணவு விற்கும் வியாபாரிகளிடம் சிலசமயம் செட்டி சகோதரர்கள் இட்லி வாங்கிக் கொள்கின்றனர். பலநேரங்களில் வெறும் வயிற்றுடன்தான் அவர்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
“விஜயவாடாவிற்கு நாங்கள் வந்து ஓராண்டு இருக்கும்,” என்கிறார் 16 வயது ஸ்ரீகாந்த். 2016ஆம் ஆண்டு விவசாயப் பேரிழப்பால் குடும்பம் பாதிக்கப்பட்டதால், அவரும், 22 வயது கோபிசந்தும் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள மடுப்பல்லே கிராமத்தைவிட்டு வெளியேறினர். அதுவரை ஓரளவு குடும்பத்தை சமாளித்து வந்தனர். “எங்கள் தந்தை ஐந்து ஏக்கர் [குத்தகை] நிலத்தில் மிளகாய், பருத்தி, மஞ்சள் பயிரிடுகிறார். ஆனால் அந்த ஆண்டு எங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. [கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியதால் அத்தொகை இப்போது ஏழு லட்சம் ரூபாய் வரை வளர்ந்துவிட்டது],” என்கிறார் ஸ்ரீகாந்த். விளைந்த மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை, பருத்தி பயிர்கள் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களால் தாக்கப்பட்டன, தரமற்ற விதைகளால் மிளகாயும் விளையவில்லை. “எங்கள் கடன்களை அடைக்க வேலைதேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்,” என்கிறார் 10ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திய ஸ்ரீகாந்த். வாகன உதிரிபாகங்களை பழுதுபார்க்கும் பயிற்சியில் இருந்துகொண்டு படித்து வந்த பாலிடெக்னிக் படிப்பை கோபிசந்த் கைவிட்டார்.
கடினமான தினக்கூலி வேலைக்காக பென்ஸ் சர்க்கிளில் செட்டி சகோதரர்களைப் போன்று தினமும் சுமார் 1000 பேர் காத்திருக்கின்றனர். பெண்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து, மாலையில் திரும்புகின்றனர். வட்டத்தின் மூன்று மைல் ஆரத்திற்குள் உள்ள டிவைடர் அல்லது பாதையில் ஆண்கள் பெரும்பாலும் உறங்கிக் கொள்கின்றனர். ஆந்திராவின் வடக்கு ஸ்ரீகாகுலம் மாவட்டம் முதல் தெற்கு கடலோரமான மாநிலத்தின் நெல்லூர் வரையிலான பல்வேறு பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்துள்ளனர்.
மற்றவர்கள் தெலங்கானாவின் கம்மம் மற்றும் நல்கொண்டா மாவட்டங்களில் இருந்து இங்கு வந்துள்ளனர். 40 வயதாகும் பனாவத் கோட்டைய்யா கம்மத்தில் உள்ள ஜமலாபுரம் கிராமத்தின் லம்படா பழங்குடியைச் சேர்ந்தவர். அவரது அரை ஏக்கர் (வன) நிலத்தில் நீண்ட காலமாக விளைச்சல் செய்ய முடியாமல் போனதால் அவர் புலம்பெயர்ந்துள்ளார். பட்டா இல்லை (அரசு அளிக்கும் ‘நில உரிமையாளர்’ ஆவணம்) என்பதால் அவரால் வங்கியில் விவசாயக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியாது. 15 ஆண்டுகளாக அவரது நிலம் தரிசாக கிடக்கிறது. அவரது மனைவி, பள்ளிச் செல்லும் இரு மகன்களை விட்டுவிட்டு அவர் இங்கு வந்துள்ளார். “நான் மாதம் ஒருமுறை வீட்டிற்கு [முதலில் ரயிலில் பிறகு பேருந்தில்] செல்வேன். குடும்பத்துடன் ஒன்று அல்லது இருநாள் இருந்துவிட்டு திரும்பிவிடுவேன்,” என்கிறார் அவர். ரூ.400 சம்பளத்திற்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கோட்டைய்யா கடுமையாக உழைக்கிறார்.
வேலையைப் பொறுத்து இந்த கூலி மாறுகிறது. தேவையைத் தாண்டி தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பதால் வேலை கொடுப்பவர்களே கூலியை முடிவு செய்கின்றனர். ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தான் அன்றைய நாளின் தொழிலாளர் தேவைக்கு ஏற்ப இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், டெம்போக்களில் பென்ஸ் வட்டத்திற்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்கின்றனர்.
“நாங்கள் அனைத்து வகையான வேலைகளையும் செய்கிறோம் - சமையல், கட்டுமானம், வீடுகளில் வேலை செய்வது, நீங்கள் சொன்னால், நாங்கள் செய்வோம்,” என்கிறார் 2003ஆம் ஆண்டு விஜயவாடாவிற்கு வந்த கிருஷ்ணா மாவட்டம் முப்பல்லா கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த கோட்ட வீரா வசந்த ராவ். “இதுபோன்ற [தொழிலாளர்] மையங்கள் நீண்ட காலமாகவே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.”
நிலமற்ற தொழிலாளியான வசந்த ராவ் தனது கிராமத்தில் நீண்ட காலமாக நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு காரணாக வயல் வேலையை விடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். விஜயவாடா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் உறங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.30 கொடுத்துள்ளார். அவரால் அந்த சிறிதளவு சவுகரியத்திற்கும் பணம் செலவழிக்க முடியாததால் வசந்த ராவ் ரயில் நிலையத்திலேயே உறங்கத் தொடங்கினார். மாநிலத்தின் புதிய தலைநகரமாக விஜயவாடா உருவெடுத்த பிறகு 2014ஆம் ஆண்டு நகரின் முதன்மை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது முதல் அவர் அங்கு தூங்கி வருகிறார். நகரத்தில் வீடற்ற இரவுகளை கழித்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு பேருந்தில் சென்று திரும்புவதன் மூலம் அக்குறை நீங்குகிறது. அவர் மீண்டும் வேலைக்காக திங்கள் காலை பென்ஸ் வட்டத்திற்கு திரும்புகிறார்.
அன்றாட கூலி வேலைகளுக்காக விஜயவாடாவில் இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட இடங்களில் கிட்டதட்ட 6000 ஆண், பெண் தொழிலாளர்கள் (என மதிப்பிடுகிறார் கிருஷ்ணா மாவட்டத்தின் இந்திய வர்த்தகச் சங்கத்தின் மையத்திற்கான பொதுச் செயலாளர் என்.சி. ஹெச். ஸ்ரீனிவாஸ்) கூடுகின்றனர். பென்ஸ் வட்டத்தைப் போன்று சத்யநாராயணாபுரம், விஜயா டாக்கீஸ், சிட்டிநகர் போன்றவையும் முக்கியமான இடங்கள்.
55 வயது பூலக்ஷ்மி பென்ஸ் வட்டத்திற்கு மூன்றாண்டுகளாக வருகிறார். 10-12 பெண்களுடன் சேர்ந்து கங்கிபாடுவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயவாடாவிற்கு ஆட்டோவில் அவர் வருகிறார். அவர் தினமும் பயணத்திற்காக மட்டும் சுமார் ரூ.100 செலவிடுகிறார்.
“எங்களுக்கு வயல்களிலோ நூறு நாள் வேலைத் திட்டத்திலோ [மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்] வேலை கிடையாது என்பதால் நாங்கள் நகரத்திற்கு வருகிறோம்,” என்கிறார் அவர். “வாரத்திற்கு தினமும் 400-500 ரூபாய் சம்பளத்தில் 2-3 நாட்களுக்கு அரிதாகவே எங்களுக்கு வேலை கிடைக்கிறது.” கட்டுமானப் பணி, சமையல் வேலைகள் போன்ற வேலைகளுக்கு பெண்கள் அழைக்கப்படுவதால் ஆண்களைவிட குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பெருந்திரளான மக்கள் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பென்ஸ் வட்டத்தில் பொறுமையாக காத்திருந்தனர். காலை 10மணிக்கு சுமார் 1000 பேரில் குறைந்தபட்சம் பாதி பேர் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாய் பாபா கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கு அன்றாடம் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
“நாளின் இறுதியில் இன்றைய வருமானம் தீர்ந்துவிடும். அடுத்த நாளுக்கு வேலை தேடாவிட்டால், அதுவரை பட்டினிதான்,” என்கிறார் செட்டி ஸ்ரீகாந்த். “அதுவரை நாங்கள் கோயிலில் மதியம் சாப்பிடுவோம். இரவுகளில் நகராட்சி குழாயில் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்புகிறோம்.” வெறும் வயிற்றுடன் அதிக நேரம் வேலை செய்வதால் சிலசமயம் இளம் ஸ்ரீகாந்திற்கு மயக்கம் ஏற்படுகிறது. “நான் தண்ணீர் குடித்துவிட்டு, சிலசமயம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் வேலையைத் தொடங்குவேன்,” என்கிறார் அவர்.
பல வாரங்களில் ஒருநாள் மட்டுமே சாப்பிட்டதால் விஜயவாடாவின் கடுமையான கோடைக் காலத்தில் மயங்கி விழுந்ததை கோட்டைய்யா நினைவுகூர்கிறார். “மருத்துவமனை செல்வதற்கு என்னிடம் பணமில்லை, அன்றைய வேலையை நான் முழுமையாக முடிக்காததால் ஒப்பந்தக்காரர் அன்று பாதி கூலிதான் கொடுத்தார். என்னுடன் வேலை செய்தவர்கள் தங்களிடம் சிறிதளவு பணம் திரட்டி அன்று மாலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,” என்கிறார் அடுத்த நாள் தீவிர தலைவலி, குமட்டல், பயங்கர காய்ச்சலுடன் கண் விழித்த கோட்டைய்யா, இரண்டு வாரங்கள் ஜமலாபுரம் சென்ற அவர் மீண்டும் விஜயவாடா திரும்பியுள்ளார். “இங்கு தங்குவதற்கு ஒரு கூரைகூட கிடையாது என்பதால் என் கிராமத்திற்குச் சென்றேன். வேலை செய்வதற்கான சக்தியும், பணமும் என்னிடம் இல்லை,” என்கிறார் அவர்.
கடினமாக உழைத்து ஈட்டியப் பணத்தை இரவு நேரங்களில் தெருக்களில் திரியும் சில திருட்டு கும்பலிடமிருந்து பாதுகாப்பதே விஜயவாடாவில் பல தொழிலாளர்களுக்கு அன்றாடம் கடுமையான போராட்டம்தான். “நேற்றுதான் ‘பிளேடு பாச்’ [கும்பல்] திருடர்களிடம் 1,500 ரூபாயை இழந்தேன். இக்கும்பல்களிடமிருந்து பணத்தை பாதுகாக்க சிலசமயம் மண்ணில் புதைத்து வைக்கிறோம்,” என்கிறார் 25 வயது குமார் (தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த அவர் விரும்புகிறார்). விஜயவாடாவிலிருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு கோதாவரி மாவட்டம் நிடாடாவோலி நகரிலிருந்து அவர் வந்துள்ளார். “எங்களுக்கு வேலை ஏதும் கிடைக்காதபோது, நாங்கள் [நாட்டு] சாராயத்தை 50 ரூபாய்க்கு வாங்குவோம். சாலையோர நடைபாதையில் குடித்துவிட்டுச் செல்வோம்.”
தெருக்களில் வசிப்பதால் அடிக்கடி காவல்துறையினரின் வன்முறையையும் சந்திக்கின்றனர். “சில முக்கிய பிரமுகர்கள் வரும்போது அல்லது நகரை தூய்மையானதாக காட்டுவதற்கு என அவர்கள் எங்களை லத்தியால் அடித்து விரட்டுவர்,” என்கிறார் குமார்.
150 பேர் தங்க கூடிய என்ஜிஓ நடத்தும் இரண்டு இரவு நேர தங்கும் விடுதிகள் மட்டுமே நகரில் உள்ளன. அவை விஜயவாடா நகராட்சி ஆணையத்தால் கட்டப்பட்டவை. மற்றொரு தொழிலாளர் அட்டா அருகே பென்ஸ் வட்டத்திற்கு அருகே, பேருந்து நிலையத்திற்கு நெருக்கமாக என பல தங்கும் விடுதிகள் நான்கு ஆண்டுகளாக ‘கட்டப்பட்டு வருகின்றன’.
“ஆனால் அவை போதாது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி [நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு உறைவிட உரிமையை அளிப்பது தொடர்பான ரிட் மனு அடிப்படையில், இந்திய ஒன்றியத்திற்கு எதிராக ஈ.ஆர். குமார் மற்றும் பிறர் தொடுத்த வழக்கில் 2016ஆண்டு நீதிமன்றம் அளித்த உத்தரவு,] ஒவ்வாரு 100,000 மக்கள் தொகைக்கும் குறைந்தது ஓர் உறைவிடம் [ஒவ்வொரு குடியிருப்பிற்கும் 50-80 பேருக்கு இடமளிக்கும்] கட்டமைக்கப்பட வேண்டும். விஜயவாடாவில் [இப்போது சுமார் 15 லட்சம் மக்கள்தொகை உள்ளது] கண்டிப்பாக [குறைந்தது] 15 குடியிருப்புகள் இருக்க வேண்டும்,” என்கிறார் தற்போதுள்ள இரவு நேர உறைவிடங்களை கவனித்து வரும் அரசு சாரா அமைப்பான கைடு அறக்கட்டளையின் முரளி கிருஷ்ணா.
“தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் [உறைவிடங்கள் கட்டுவதற்கு] போதிய நிதி உள்ளது, ஆனால் செயல்படுத்தப்படுவதில்லை. வேலைவாய்ப்புகள் குறித்த வகுப்புகளுடன் [அல்லது திறன்மேம்பாடு] இரவு நேர இலவச உணவையும் அரசு [NULM மூலமாக] வழங்க வேண்டும்,” என்கிறார் நகர்ப்புற மற்றும் பழங்குடியின வளர்ச்சி கூட்டமைப்பின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் பிரகதா ஸ்ரீனிவாசு.
இதுபோன்ற உத்தரவுகளும் தூரத்து கனவாகவே உள்ளன. உழைப்பால் விஜயவாடாவை நகர்த்தும் மக்கள் எப்போதும் நிலையற்ற வாழ்வையே வாழ்கின்றனர். அவர்களின் அடுத்த வேலை, உணவு, உறங்குவதற்கு பாதுகாப்பான வசிப்பிடத்திற்கான தேடல் தொடர்கிறது.
தமிழில்: சவிதா