தொடர் அழைப்புகளால்தான் ப்ரொமோத் குமார் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார். “உங்கள் ஆதார் எண்ணை கொடுங்கள் அல்லது உங்கள் எண் இல்லாமலாகிவிடும்,” என்றார் அலைபேசியில் தொடர்பு கொண்டவர்.
2018ம் ஆண்டின் முதல் பாதியிலிருந்து இத்தகைய அழைப்புகள் குமாரின் தேதியோரா கிராமத்தில் வரத் தொடங்கின. மூன்று வருடங்களாக அடையாள ஆவணம் தேவைப்படாமல் அலைபேசி எண்ணை பயன்படுத்தியிருந்தாலும் ஒருநாள் அவர் சைக்கிள் மிதித்து நான்கு கிலோமீட்டர் பயணித்து பர்சாதா சந்தையிலிருந்து ஒரு சிம் கார்டு கடைக்கு சென்றார். “எந்த கேள்விகளும் கேட்கவில்லை. கடைக்காரர் என்னுடைய ஆதாரை வாங்கிக் கொண்டு, ஒரு சிறு கறுப்பு இயந்திரத்தில் ஒரு பொத்தானை இரு முறை அழுத்த சொன்னார். என்னுடைய புகைப்படம் கணிணி திரையில் வந்தது. என்னுடைய சிம் கார்டு முன்பை போல் வேலை செய்யும் என அவர் கூறினார்,” என சம்பவத்தை நினைவுகூருகிறார் குமார்.
எளிமையாக நடந்த அந்த வேலைக்கு பிறகு, குமாரின் ஊதியம் காணாமல் போனது.
தொலைத்தொடர்பு துறை 2005ம் ஆண்டில், சிம் கார்ட் உரிமையாளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் ‘இல்லையெனில் பாதுகாப்பு பிரச்சினைகள் நேரலாம்’ என்றும் கூறியிருந்தது. 2014ம் ஆண்டில் தொலைத்தொடர்பு துறை இன்னும் மாற்றங்களை சேர்த்து ஒரு வாடிக்கையாளர் இப்போது ஆதார் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்கிற நிலையை ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக 2017 ஜனவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் கட்டணம் செலுத்தும் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தியது. ‘ஒவ்வொரு இந்தியரும் சமமான, பயனுள்ள, நம்பிக்கையான வங்கி அனுபவத்துக்கான வாய்ப்பை பெற்றிருப்பதாக’ அந்த நிறுவனத்தின் இணையதளம் உறுதியளிக்கிறது.
சீதாப்பூர் மாவட்டத்தின் கிராமத்தில் இந்த வளர்ச்சி, குமார் என்ற ஒரு 33 வயது சிறு விவசாயத் தொழிலாளியின் வாழ்க்கையை தலைகீழாக்கி போட்டிருக்கிறது. அவரும் அவர் கிராமத்தின் பலரும் ஏர்டெல் சிம் கார்டுகள் பயன்படுத்தியிருக்கின்றனர்.





